Tamiloviam
ஜூலை 31 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : மத்திய அரசில் ஆடு புலி ஆட்டம்
- மீனா [feedback@tamiloviam.com]
  Printable version | URL |

சினிமாவில் வரும் காட்சிகளைப் போல நடந்து முடிந்துவிட்டது மன்மோகன்சிங் அரசு மீதான நம்பிக்கைத் தீர்மானம். இடதுசாரிகள் எதற்காக ஆதரவை வாபாஸ் பெற்றார்கள்? மாயாவதி அவர்களுடன் திடீரென்று சேர்ந்து கொண்டது எவ்வாறு ? அணுசக்தி ஒப்பந்தம் எப்படி முஸ்லீம்களுக்கு எதிராக மாறியது?? எலியும் பூனையுமாக இருந்த சமாஜ்வாடி கட்சி ஏன் காங்கிரஸ் அரசைப் பாதுகாக்க அத்தனை முயற்சிகளை மேற்கொண்டது? இதற்கெல்லாம் சிகரம் வைத்ததைப் போல பா.ஜனதா மற்றும் சிவசேனை உள்ளிட்ட கட்சி எம்.பி.கள் ஏன் கட்சி மாறி ஓட்டு போட்டார்கள் போன்ற பல கேள்விகள் நம்மிடையே உலவுகின்றன.

அத்தனை கேள்விகளுக்குமான பதில் ஒன்றே ஒன்றுதான் - பணத்தாசை.. பதவியாசை... தங்களுடைய அரசைக் காப்பாற்றிக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்யத் தயார் என்ற நிலைக்குச் சென்றுவிட்ட காங்கிரஸ் பல எம்.பி.க்களுக்கு 25 கோடி வரை பேரம் பேசி பணம் கைமாறியது சிலர் மூலமாக தற்போது அம்பலத்திற்கு வந்துவிட்டாலும் இக்குற்றம் நிரூபிக்கப்படும் என்று தோன்றவில்லை.. அப்படியே நிரூபிக்கப்பட்டாலும் அதற்குள் ஆளும் காங்கிரஸ் அரசு காலாவதியாகியிருக்கும்.. பல ஆண்டுகளாக ஜெயிலிருந்தபடியே உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த சிபுசோரன் மீண்டும் மந்திரியாகப்போகிறார் என்று தோன்றுகிறது. அவரைப் போலவே ஆதரித்த கட்சிகளைச் சேர்ந்த மற்ற சிலரும் மந்திரிகளாகலாம் - முக்கியமாக முலாம் கட்சி ஆட்கள்.

அமெரிக்க உறவு வலுப்படக்கூடாது என்பதற்காக இடதுசாரிகளும், காங்கிரஸ் கொண்டுவந்த ஒப்பந்தம் - அதனால் எதிர்க்கிறோம் என்று பா.ஜனதாவும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து தங்களுடைய வறட்டுத்தனத்தையும் விவேகமற்ற புத்தியையும் காட்டியுள்ளார்கள். தற்காலிகமாக ஏற்பட்ட இந்த நெருக்கடியால் யாருக்கு என்ன லாபம்  என்று பார்த்தால் - கட்சி கட்டுப்பாடுகளை மீறி ஓட்டுப்போட்ட எம்.பி.க்களுக்கு கிடைத்த கோடிக்கணக்கான பணமும் எந்த ஒரு தகுதியுமே இல்லாத பலருக்கும் தற்போது கிடைக்கப்போகும் மந்திரிப் பதவிகளும் தான்..

இதில் மன்மோகன் மற்றும் அவரது தலைவி கவனிக்க வேண்டிய விஷயம் - அனில் மற்றும் முகேஷ் அம்பானி இடையே நடந்துவரும் குடும்ப சண்டையில் அனிலை வெளிப்படையாக ஆதரிக்கும் சமாஜ்வாடி கட்சி முகேஷ் அம்பானிக்கு அடுத்தடுத்து தொல்லைகள் தர நிச்சயம் மத்திய அரசை நிர்பந்திக்கப்போகிறது.. இன்னும் என்னென்ன நிர்பந்தம் விதிக்கப்போகிறார்களோ தெரியாது.. ஆனால் நிச்சயம் இடதுசாரிகள் செய்துவந்த குடைச்சல் பணியை சமாஜ்வாடி கட்சியும் செவ்வனே செய்யும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

அரசுக்கு வந்த ஆபத்து தற்காலிகமாக நீங்கியுள்ள இந்நிலையில் பிரதமர் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் காட்டும் வேகத்தை நாட்டு பாதுகாப்பிலும் காட்டவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.. தொடர்சியாக பெங்களூருவிலும் அகமதாபாத்திலும் நடந்துள்ள குண்டுவெடிப்புகள் நாட்டின் ஸ்திரமற்றத் தன்மையை பயன்படுத்திக்கொண்டு அந்நிய சக்திகள் நாட்டினுள் ஊடுருவி பாதுகாப்பை கேள்விக்குறியாக்க முயல்கிறார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.. இதில் எந்த பயங்கரவாத இயக்கம் சம்மந்தப்படுள்ளது என்பதை ஆராய மணிக்கணக்கில் கூட்டம் போடுவதை தவிர்த்து உருப்படியான - பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்து பயங்கரவாதிகளிடமிருந்து மக்களை அரசு காப்பற்ற வேண்டும்.. செய்வார்களா?

oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |