ஆகஸ்ட் 03 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : ஆன்மீகப் பார்வையில் அடிபடும் ஜோதிடம் - 1
- ஜடாயு
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

அறிவியல் பார்வையில் மட்டுமல்ல, ஆன்மீகப் பார்வையிலும் அடிபடும் ஜோதிடம்.

மிகுந்த சமய, ஆன்மீகப் பற்றுள்ள, ஆனால் ஜோதிடத்தை சிறிதும் நம்பாத (சொல்லப் போனால் ஜோதிடத்தை எதிர்க்கும்) ஆள் நான் என்றால் யாரும் நம்பவும் ஏற்றுக் கொள்ளவும் மறுக்கிறார்கள்.  "என்ன சார், இவ்வளவு அழகா விபூதி குங்குமம் வெச்சுருக்கீங்க, ஜோதிடம் எல்லாம் பொய்யினு இப்படி நாத்திகர் மாதிரி பேசறீங்களே!" என்பது ஒரு வகை.  "நீ ஜோசியத்தை நம்பாமல் கேலி பேசுவதால் உன் ஆன்மீக சாதனைகள் எல்லாமே வீணாய்ப் போகும்" போன்ற சில  "பெரியவர்களின்’ சாபங்கள் இன்னொரு வகை.  தளையற்ற சிந்தனைகளிலும் உணர்வுகளிலும் முகிழ்த்த நம் சமய, ஆன்மீக மரபுகளைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்பவர்கள்  இப்படி முரண் போலத் தோன்றுகின்ற சில சின்ன விஷயங்களைக் கூட ஜீரணிக்கத் தயங்குவது ஆச்சரியமான முரண்பாடு தான்.

முதலில் வரலாற்றுப் பார்வையில் ஜோதிடம் பற்றிச் சில விஷயங்கள். 

"ஜ்யோதிஷம்" என்கிற மூலச் சொல்லுக்குப் பொருள் "ஒளி பற்றிய அறிவு" என்பது. ஒளிரும் பொருள்களான சூரியன், சந்திரன் மற்றும் கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சியையும், அறிவையும் குறிப்பதற்காக வேத இலக்கியத்தில் இந்தச் சொல் பயன்பட்டது, ஒரு வகையில் பண்டைய வான சாஸ்திரம் எனலாம். இது பற்றியே வேத வித்யையின் ஆறு அங்கங்களில் ஒன்றாக ஜோதிடம் அறியப் பட்டது.  வேத காலத்திலிருந்து இந்த அறிவு விரிவாக்கம் பெற்று வளர்ச்சியடைந்த கால கட்டங்களில் முக்கியமான ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று விஷயங்கள் பற்றிய  சிந்தனை வளர்ச்சியை இந்தத் துறை உள்ளடக்கியது -

வானியல் : வெளியில் தோன்றும் கிரகங்கள் மற்றும்  நட்சத்திரங்களை இனம் கண்டு வகைப் படுத்துவது. அவற்றின் இயக்கம் மற்றும் சுழற்சி பற்றி அறிவது, தட்பவெப்ப நிலை மாற்றங்களில் வான் பொருட்களின் (celestial objects) தாக்கம், கிரகணங்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவற்றைப் புரிந்து கொள்ளுதல் முதலியவை.

கணிதம் :  வான் பொருட்களின் இடம் மற்றும் இயக்கம் பற்றிய அறிவை முன்னெடுத்துச் செல்ல அடிப்படை ஜியோமிதி மற்றும் முக்கோணவியல் (Trignometry) அத்தியாவசியமாயிற்று. "கணிதம்’ என்பதும் ஆறு வேத அங்கங்களில் ஒன்றாக அறியப்பட்டுத் தனித் துறையாக வளர்ந்து வந்தது. எனவே,  ஜோதிடத்திலும் கணித அறிவின் பல கூறுகள் பயன்படுத்தப் பட்டன.

கால அளவு முறைகள் :  எல்லா பண்டைய நாகரீகங்களின் வளர்ச்சியிலும் காலக் கணக்கு முறைகள் இயற்கை நிகழ்வுகளின் அடிப்படையிலேயே உண்டாயின.  பன்னிரண்டு ராசிகள்,  சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை சுழற்சியைக் கொண்டு நாட்களை அளவிடுதல் போன்றவை.  பிறப்பு, இறப்பு நாட்கள், பருவங்கள், பண்டிகைகள் இவை அனைத்தும் இந்தக் கால அளவு முறையிலேயே குறித்து வைக்கப் பட்டன.  ஆவணி மாதம் வளர்பிறையில் அஷ்டமியும் ரோகிணியும் கூடியிருந்த நாளில் கண்ணன் பிறந்தான் என்பது போல. பஞ்சாங்கம் என்பது அடிப்படையில் ஒரு காலக் கணக்குக் காட்டி என்பதாகவே உருவாயிற்று.  

Planetary Positionsமேற்சொன்ன வானியல் அறிவும், கணித அறிவும், பல நூற்றாண்டுகளாகத் திரட்டப் பட்ட பிரபஞ்ச நிகழ்வுகள் (cosmic events) பற்றிய பதிவுகளும் (recordings)  ஒன்றிணைந்து  இத் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தின.  எந்தத் தொலைநோக்குக் கருவியின் உதவியுமின்றி கிரகணங்களைத் துல்லியமாகக் கணிப்பது போன்ற அரிய நுட்பங்கள் இதனால் உருவாயின.  ஜ்யோதிஷம் என்று முதலில் அறியப் பட்ட அறிவுத் துறை இது வரை தான்.

இதே கால கட்டத்தில் தான்  கர்மம், ஊழ், வினைப்பயன், மறுபிறவி, பிரபஞ்சவியல் போன்ற கருத்துகளும் வளர்ந்தன. ஒவ்வொரு உயிரின் செயல்பாடுகளும் அதன் கர்ம வினைப் படியே நடந்தேறும்,  ஒரு ஜீவனின் சுழற்சியை முற்றுமாகத் தீர்மானிப்பது அதன் கர்மமே என்ற அடிப்படை சமய உண்மையும் வலுப்பெற்றது. "அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது",  பிரபஞ்சம் முழுவதும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பொருட்களால் ஆனது போல் தோன்றினாலும், அடிப்படையில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய, சொல்லப் போனால் ஒன்றேயான பொருளால் ஆனது  என்னும் வேதாந்த சிந்தனையும் இதனூடாக முளைத்தது.

பல்வேறு பட்ட இந்த சமய, அறிவியல் தத்துவங்களின் தாக்கங்களினால் "வான வெளியில் சுழலும் கிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையிலும்  புகுந்து, ஓரளவு கர்ம வினைகள் மற்றும் அதன் பயன்களையும் தீர்மானிக்கிறது"  என்பதாக ஒரு கருத்து உருவாகியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. இதுவே இன்று நாம் ஜோதிடம் என்று அழைக்கும் விஷயமாக வளர்ந்திருக்கிறது. நாளடைவில் இந்தக் கருத்தை  ஏற்றுக்கொண்டவர்கள்  இதில் "ஓரளவு" என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக  "எல்லாவற்றையுமே" கிரக சஞ்சாரங்கள் தான் தீர்மானிக்கின்றன என்பதாக வளர்த்தெடுத்திருக்கலாம். ஏற்கனவே புழக்கத்திலிருந்த சகுனம் பார்த்தல், பறவைகள் மற்றும் விலங்குகளின்  சேஷ்டைகள் இயற்கை நிகழ்வுகளை முன்னறிவிக்கும் போன்ற  நம்பிக்கைகள் எல்லாம் கலந்து, இன்று அஸ்ட்ராலஜி மட்டுமல்லாமல் நியூமெராலஜி,  ஜெம்மாலஜி,  "சும்மா’லஜி என்று  அப்பாவி மக்களையும், பல படித்த முட்டாள்களையும் பைத்தியம் பிடிக்க வைத்துக் கொண்டிருக்கும் நிலைமைக்கு வந்திருக்கலாம்.

Vivekanandaசுவாமி விவேகானந்தர் "மனிதனின் விதிக்கு அவனே பொறுப்பாளி" என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவில்  ஜோதிடம் பற்றிய தமது கருத்துக்களைத் தெளிவாகக் கூறியிருக்கிறார்.  "ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற அரசவம்சங்களில் தோன்றியவர்களின் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகங்கள் கணிக்கப்பட்டு எதிர்காலம் பற்றிய யூகங்கள் கூறப்பட்டன, இந்த ஊகங்கள் பிறகு நடந்த உண்மை சம்பவங்களுடன் ஒப்பு நோக்கப்பட்டன.  இப்படியே ஒரு ஆயிரம் வருடங்கள் ஜோதிடர்களின் வம்சாவளிகள் இதை செய்து வந்தன.  இந்தப் போக்கில் பல யூகங்கள் "பொது விதிகளாக" அறியப்பட்டு ஜோதிடப் புத்தகங்கள் உருவாகியிருக்கலாம்" என்று சுவாமிஜி கூறுகிறார். "பண்டைய இந்துக்களிடமிருந்து வான சாஸ்திரத்தைக் கற்றுக்கொண்ட கிரேக்கர்கள், தங்கள் கலாசாரத்தில் பிரபலமாக இருந்த ஜோதிடக் கலையை இந்துக்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கலாம்" என்றும் சுவாமிஜி கூறுகிறார். இதன்படி பார்த்தால் இன்றைய ஜோதிடக் கலையின் மூலம் வேத கலாசாரமே இல்லை என்றாகிறது!  "ஜோதிடத்தின் சிறு சிறு நுட்பங்களிலும் அளவுக்கு அதிகமான கவனம் செலுத்தத் தூண்டிய மூடநம்பிக்கைகள் காலப் போக்கில் இந்துக்களுக்குப் பெரும் தீங்கையே விளைவித்திருக்கின்றன" என்றும் அவர் மதிப்பிடுகிறார்.

அவர் மேலும் கூறுகிறார் - "வேதாந்த தத்துவத்தின் படி ஒரு பொருளின் சகல பரிணாமங்களும் அதன் இயற்கையிலேயே இருக்கின்றனவே அன்றி அதற்கு வெளியில் இல்லை (மரம் முழுவதும் விதைக்குள் அடங்கியிருப்பது போல).. என்னுடைய இப்போதைய நிலை முழுவதையும் விளக்குவதற்கு என் கர்ம வினையே போதுமானது, கிரகங்களும் நட்சத்திரங்களும் தேவையில்லை!.. (போதிசத்வரான) புத்தர் மறுபடியும் மறுபடியும் பற்பல மிருகங்களாகவும் பறவைகளாகவும் பிறந்து, ஒவ்வொரு முறையும் இறுதியில் புத்த நிலையை அடைகிறார்.  இதில் நட்சத்திரங்களுக்கு என்ன வேலை? அவற்றின் தாக்கம் மிகச் சிறிதளவு இருக்கலாம், ஆனால் நம் கடமை அவற்றை ஒதுக்கித் தள்ளுவது தானே தவிர, அவற்றை எண்ணி மறுகிக் கவலையுறுவதல்ல.. என் போதனையின் முதல் உபதேசம் இது தான் – உடலையோ, மனத்தையோ, ஆன்மாவையோ பலவீனப் படுத்துவது எதுவாயினும், அதைக் கால் தூசுக்கு சமானமாகக் கூடக் கருதாதீர்கள்! மனிதனில் இயல்பாக உறையும் ஆன்ம சக்தியை வெளிக்கொணர்வதே உண்மையான சமய தத்துவம்" 

ஒரு பழைய கதை. ஒரு ஜோதிடர் அரசரிடம் வந்து "இன்னும் ஆறு மாத்தில் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும், என் கணக்கு என்றும் பொய்யாகாது" என்று சொன்னார். இந்த மரண பயத்திலேயே அரசருக்குப் பாதி உயிர் போய்விடும்போலிருந்தது.  இது பொறுக்க முடியாத அறிவாளி அமைச்சர் ஜோதிடரைக் கூப்பிட்டு  "தங்கள் கணக்குப் படி, தங்களின் ஆயுட்காலம் எவ்வளவோ?" என்று கேட்டார். "பன்னிரண்டு வருஷத்திற்கு எனக்கு ஒரு கண்டமும் கிடையாது. இது நிச்சயம்" என்று சத்தியம் செய்தார் ஜோதிடர்.  அடுத்த கணம் அமைச்சர் வாளை உருவினார்.  ஜோதிடரின் தலை தரையில் கிடந்தது. "இந்தப் பொய்யன் சொன்னதை இன்னும் நம்புகிறீர்களா?" என்று அரசரைத் தெளிவித்தார் அமைச்சர்.

இந்தக் கதையைக் கூறிய சுவாமிஜி, மேலும் சொல்லுக்கிறார் - "(கடந்த காலம் பற்றிய) பல ஆச்சரியகரமான விஷயங்கள் ஜோதிடர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால், அவை அனைத்தையும் கிரக  நட்சத்திரக் கணக்குகளைக் கொண்டு அவர்கள் சொல்லுகிறார்கள் என்று நம்புவதற்குக் காரண அறிவு இடம் கொடுக்கவில்லை. பெரும்பாலும் மனதைப் படித்து (mind reading) சொல்லப்படுபவையே இவையெல்லாம்… உண்மையான சமய தத்துவம் உங்களை உறுதியாக்கி குருட்டு நம்பிக்கைகளினின்று விடுவிக்கும்… மிக மிக உயர்வானவை அனைத்தும் (ஆன்மாகிய) உன் காலடியில் கிடக்கின்றன. நீ நினைத்தால் நட்சத்திரங்களையும் கையில் அள்ளி விழுங்கி விடலாம்.   ஆன்மாவாகிய உன் உண்மை இயல்பு இந்தப் பெரும் சக்தியே.." 

சென்ற நூற்றாண்டின் ஈடு இணையற்ற ஆன்மீக குருவாகவும், சிந்தனையாளராகவும் திகழ்ந்த சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் இவை.  சீர்திருத்தவாதியான சுவாமிஜியின் கருத்துக்கள் இப்படிப் புரட்சிகரமாக இருப்பதில் வியப்பில்லை.  ஆனால் காலம் காலமாக வந்த சமய, ஆன்மீக மரபுகள் என்ன சொல்லுகின்றன? அதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

| | | |
oooOooo
ஜடாயு அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |