Tamiloviam
ஆகஸ்ட் 07 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : குற்றால சீசன்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
  Printable version | URL |

 

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குற்றாலம் ஜீலை மாதம் பிறந்து விட்டாலே கலைகட்டத் தொடங்கிவிடுகிறது. சுமார் 50 கிலோ மீட்டர் துரத்திற்கு முன்பே குற்றால சீசனை உணரலாம். குற்றாலத்தின் அருகே நெருங்க, நெருங்க விடாது பொழியும் சாரல் மழை, மெல்லியதாக வருடிச் செல்லும் தென்றல் காற்று, பிரமாண்டமாய் விழுந்து ஆர்ப்பரிக்கும் அருவிகள், நுரைகள் பொங்கிச் செல்லும் தண்ணீர், அவ்வப்பொழுது அடிக்கும் குளிர் காற்று என பலவித ரசனையான சூழ்நிலையை தன்னகத்தே கொண்டுள்ள குற்றாலத்தின் சுகத்தை அனுபவிக்க இந்தியாவின் பல பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

Kutralamவருடங்கள், காலங்கள், நேரங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.மனித இனங்களும் கூடவே ஓடிக்கொண்டிருக்கிறது. அதோடு சேர்ந்து குற்றால சீசனும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கும் ஓர் நீண்ட வரலாறு இருக்கிறது. அந்த வரலாறு பெரும்பாலும் யாருக்கும் தெரியாது என்று ஆச்சர்யக்குறியோடு ஆரம்பிக்கும் குற்றாலம் பராசக்தி கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியை, லட்சுமி சொல்வதைக் கேட்கும் பொழுது வியப்பாக இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் குற்றாலத்தில் பொதுமக்கள் குளித்து மகிழ மெயின் அருவி, ஜந்தருவி, செண்பகா அருவி, தேனருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் என பல இடங்கள் இருக்கின்றன. இவையில் தேனருவியைத்தவிர அனைத்து அருவிகளிலும் பொது மக்கள் அனைவரும் குளித்து மகிழலாம். ஆனால் வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது தான் குற்றால அருவியில் குளிக்கலாம் என திட்டமிட்டு அதற்கான இடத்தை தேர்வு செய்து குளிக்க ஆரம்பித்தனர். அந்த இடம் தான் தற்பொழுதுள்ள பழைய குற்றாலம். அப்பொழுது எல்லாம் இன்று போல் அனைவரும் குளிப்பது போல் அருவியில் யாரும் குளிக்க முடியாது. குற்றால அருவியில் ஆங்கிலேயர்கள் மட்டுமே குளிக்க வேண்டும் என்ற சட்டமே இருந்தது. பிற மக்கள் ஆற்றில்செல்லும் தண்ணீரில் குளித்துக் கொள்ளலாம். அதுவும் சில மைல் தொலைவில் செல்லும் நீரில் தான் குளிக்க வேண்டும். இந்த சலுகை உயர்ஜாதியினருக்கு மட்டுமே. அடிமட்;டத்தில் இருக்கும் மக்கள் குற்றால அருவி நீரில் குளிப்பது என்பது பல மைல் தொலைவில் வரும் நீரில் வேண்டுமானால் குளித்துக் கொள்ளலாம். ஆங்கிலேயர்கள் அருவியில் குளிப்பதை இந்திய மக்களால் வேடிக்கை கூட பார்க்க முடியாது. அவ்வளவு பாதுகாப்போடு குளியல் நடக்கும். இந்தியாவில் பதவி வகிக்கும் ஆங்கிலேயர்கள், அவர்களின் குடும்பத்தினர்,ஆங்கிலேய பணியாளர்கள் மட்டுமே குற்றால அருவியில் குளித்து வந்தனர். இந்த அருவில் பலவிதமான மூலிகைகள் கலந்து வருவதால் முக்கிய பதவியில் இருக்கும் ஆங்கிலேயர்கள் குற்றால சீசனில் முழுக்காலமும் தங்கி விடுவர். பின் இந்தியாவில் சுதந்திர  போராட்டம் தீவிரமாக நடக்க ஆரம்பித்ததில் ஆங்கிலேயர்கள் உயர்ஜாதியினரை முதலில் குற்றால அருவியில் குளிக்க அனுமதித்தனர். பின்பு பிற்பட்ட மக்களை அருவியில் குளிக்க அனுமதித்தனர். ஒவ்வொரு பிரிவினருக்கு ஒரு நாளை நிர்ணயித்து குளிக்க அனுமதித்தனர். குற்றால அருவியில் குளிக்க தலித்களுக்கு மட்டும் அனுமதியே இல்லாமல் இருந்தது. இதன் பின் ஏற்பட்ட காலமாற்றத்தில் தலித்களும் அனுமதிக்கப்பட்டனர். குற்றால அருவியில் அனைவரையும் குளிக்க அனுமதித்தாலும் அவர்கள் முழு ஆடைகள் அணிந்து தான் குளிக்க வேண்டும் என ஆங்கிலேயர்கள் உத்தரவிட்டனர். இப்படி அனைவரையும் அனுமதித்தாலும் ஒவ்வொருவருக்கும், அதாவது ஒவ்வொரு ஜாதியினருக்கும் ஒரு நாளை நிர்ணயித்து குளிக்க அனுமதிக்கப்பட்டாலும் இதில் பெண்களுக்கு அனுமதியே கிடையாது. குற்றாலத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு  தான் பெண்கள் குற்றால அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்தியா சுதந்திரம் அடையும் வரை எந்த பிரிவு பெண்களும் குற்றாலத்தில் குளித்ததாக வரலாறு இல்லை. அப்படி குளித்திருந்தால் அது அங்கிலேயர்களைச் சார்ந்த பெண்களாகத் தான் இருந்திருப்பார்கள். இப்படி வளர்ந்த குற்றால அருவியின் வரலாறு இன்று பரபரப்பான வாழ்க்கை, அதிபயங்கர தகவல் தொடர்பு, நாகரீகம், மக்களின் வாழ்க்கை தர உயர்வு என உருமாறி குற்றால சீசன் ஒரு சுற்றுலாவாக மாறி இருக்கிறது என்கிறார்.

குற்றாலத்தில் குளிப்பதால் உடம்புக்குள் ஒரு வித புத்துணர்ச்சி ஏற்படுவதாக சொல்லும் சென்னையைச் சேர்ந்த சேகரன் குற்றால அருவியில் குளிப்பதே பெரிய பாக்கியம் தான். மலை உச்சியில் இருந்து  வேகமாக விழும் அருவியின் துளிகள் மேல் படும் பொழுது அடிப்பது போல் இருக்கும். இப்படி அடிவிழுவது போல் அருவி விழுவதால் மனித உடம்பில் ஒரு அழுக்கு கூட தங்குவதில்லை. அத்தோடு 7மலைகளில் தண்ணீர் உருண்டு ஓடி வருவதால் பலவித மூலிகைகள் குற்றால அருவியில் கலந்து இருப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. சென்னை போன்ற பெருநகரத்தில் புகைகளுக்கு மத்தியிலேயே வாழ்க்கை என ஆகிவிட்டது. அப்படிபட்ட வாழ்க்கையில் உடலை பாதுகாக்க குற்றால அருவியில் ஒரு குளியல் போடுவது நல்லது என சொல்கிறார்.

குற்றால அருவியில் குளிக்க சுமார் ஒரு கோடி பேர் வருவதாக சுற்றுலா கழகத்தினர் சொல்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொண்டு குற்றாலத்தில் வியாபார உலகம் கொடிகட்டிப் பறக்கிறது. ஒரு கப் டீ 6 ரூபாய் என விற்கிறார்கள். தங்கும் விடுதிகளில் வாடகை ஒரு மணி நேரத்திற்கு 15 ரூபாய் வரை வசூல் நடக்கிறது. குற்றாலத்தில் இவை தவிர குற்றாலத்தில் மட்டுமே கிடைக்கும் பழ வகைகளுக்கும் பெரிய வரவேற்பு இருக்கிறது.

குற்றால சீசனை எப்படி  பார்க்கிறீர்கள் என காவல் துறையை சேர்ந்த ஓர் அதிகாரியிடம் கேட்ட பொழுது குற்றால சீசன் ஆரம்பித்த பின்பு யாருக்குஅதிகமான வேலை இருக்கிறதோ இல்லையோ காவல் துறையினருக்கு அதிகமான வேலைகள். மக்களை ஒழுங்குபடுத்துவது, சட்ட ஒழுங்கை பாதுகாப்பது, திருட்டை தடுப்பது என்பன முக்கியமானவை. முன்பு எல்லாம் குற்றாலம் வருபவர்கள் குடும்பத்தோடு வருபவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். இப்பொழுதும் அது இருந்தாலும் நண்பர்கள் கூட்டம் அதிகமாக வருவது சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. கடந்த 10 வருடமாக குற்றால சீசனை பார்த்து வருகையில் அதிகஅளவில் மது குடித்து விட்டு குளிப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களை பிடித்து விசாரிக்கும் பொழுது மது குடிக்காமல் குளித்தால் குளிரை தாங்கிக் கொள்ள முடியாது என்கிறார்கள். மது அதிகமாக குடித்துவிட்டு அருவியில் குளிக்கும் பொழுது மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்படி மாரடைப்பு வந்து வருடத்திற்கு சிலர் இறக்கிறார்கள். சமீபகாலமாக உயர்தர, படித்த  இளம் பெண்களும் மது அருந்திவிட்டு அருவியில் குளிப்பதை அறிகிறோம். மகளிர் போலீஸ் மூலம் அவர்களுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வருகிறோம். இவை தவிர பெண்கள் குளிப்பதை பெண்களை விட்டே வீடியோ எடுக்கும் கும்பல்கள் புதிதாக திரிகிறார்கள். அவர்களையும் பிடித்திருக்கிறோம். அவை தவிர திருட்டு தான் இங்கு அதிகம். அதனையும் தடுத்து  வருகிறோம்  என்கிறார் கடமை உணர்வோடு.

குற்றால சீசனில் தமிழக சுற்றுலா துறைக்கு பல கோடி, வியாபாரிகளுக்கு வியாபராத்தில் பல கோடி, அரசு போக்குவரத்து கழகத்திற்கு பல கோடி என வெளியே தெரிந்தாலும், இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது மற்றொரு தொழில். அது தான் விபச்சாரம். இதன் மூலம் பல கோடி புலங்குவதாக மஜாஸ் செய்பவர்கள் சொல்கிறார்கள். காவல் துறையின் கடுமையான கட்டுப்பாடுகளையும் தாண்டி இங்குள்ள மஜாஸ் கிளப்புகளின் வழியே விபச்சார பெண்களிடம் ஆட்களை அனுப்பப்படுவதாக சொல்கிறார்கள்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றால சீசனை வேறு பார்வையில் பாhக்கிறார்கள். குற்றால சீசனில் குற்றாலமும், சுற்றுப்புற பகுதிகளும் அதிகளவு மாசுபடுகிறது. குறிப்பாக மலைப்பகுதிகளில் அதிகளவு  மலம், சிறுநீர் கழிக்கிறார்கள். மலையில் நடந்து செல்லும் பொழுது வழி நெடுகிலும் மலம் பரவிக் கிடக்கிறது. மழை பெய்யும் பொழுது அது அருவியோடு கலந்து குளிப்பவரின் தலையில் விழுந்து தான் செல்கிறது. இதனை யாரும் கண்டு கொள்வதில்லை. யாருக்கும் தெரிவதில்லை. பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.அதனை கண்ட இடத்தில் மக்கள் போட்டுவிட்டு செல்கின்றனர். இவைகளை எடுத்துச் சாப்பிடும் ஒரு சில குரங்குகள் இறந்திருக்கின்றன என்கிறார்கள்.

எதிலும் குறைகள், நிறைகள் இருக்கத் தான் செய்கின்றன. ரம்மியமான சாரல் மழை பொழியும் பொழுது, ஆர்பரித்துவிழும் குற்றால அருவிகளில் ஒரு குளியல் போடுவது சாதாரணமான ஒன்றல்ல. அது அற்புதமான ஒரு மூலிகை குளியல். அதனை அனைவரும் அனுபவிக்க வேண்டும். உள்நாட்டில் இருநதாலும்; சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி.

oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |