Tamiloviam
ஆகஸ்ட் 08 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : ரெயில்வே இணை அமைச்சர் வேலுவின் பொறுப்பற்ற செயல்
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

 

சென்னை-புறநகர் ரெயில் போக்குவரத்தில் சமீபத்தில் செய்யப்பட்டுள்ள கால அட்டவணை மாற்றங்கள், ரெயில் பயணிகளைப் பெரிதும் பாதித்துள்ளன. போதுமான அளவிற்கு ரெயில் வசதி இன்றி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்துள்ள இம்மக்களுக்கு தற்போது புறநகர் ரெயில்களின் கால நேரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களும், ரெயில்களின் எண்ணிக்கை குறைவும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பழைய கால அட்டவணையிலேயே புறநகர் ரெயில்களை இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரி வந்துள்ளனர். காலதாமதம் மற்றும் இதர சிரமங்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பயணிகள் ஜனநாயக முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொட்டதற்கெல்லாம் தாங்கள் தான் மறியல் செய்யவேண்டும் என்ற நினைப்பில் உள்ள அரசியல்வாதிகளில் ஒருவரான மத்திய ரெயில்வே இணை அமைச்சர் வேலு பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளைக் களைவதை விட்டுவிட்டு அவர்களை கைது செய்து பிரச்சனையை மேலும் சிக்கலாக்கியுள்ளார். ஜனநாயக முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முற்பட்ட புறநகர் ரெயில் பயணிகளை ரெயில்வே போலீஸ் கைது செய்து, பெண்கள், முதியோர் உள்பட பலரை சிறைப்படுத்தியுள்ளது மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

பயணிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, புறநகர் ரெயில் போக்குவரத்து கால அட்டவணையை முன்பிருந்த நிலைக்கு மாற்றி இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகத்திற்கு ரெயில்வே இணை மந்திரி வேலு உத்தரவிடுவதை விட்டுவிட்டு இதை ஒரு கவுரவ பிரச்சினையாகக் கருதி, பயணிகளுக்கு எதிராக ரெயில்வே போலீசின் மூலம் கைது நடவடிக்கைகளைத் தொடருவது நிச்சயம் எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கும்.

சரக்குப் போக்குவரத்திலும், எக்ஸ்பிரஸ், மெயில் ரயில்களிலும்தான் ரயில்வேதுறைக்கு லாபம், புறநகர் ரயில்களால் நஷ்டம் என்று வேறு ரயில்வேதுறையில் உள்ள சில அதிகாரிகள் கூறுவது உண்மைக்கு புறம்பானது. உண்மையிலேயே புறநகர் மின்சார ரயில் பயணிகளிடமிருந்து கிடைக்கும் வருவாயையும் அவர்களுக்கு ரயில்வே செய்யும் செலவுகளையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் அதிலும் கோடிக்கணக்கில் ரயில்வேக்கு லாபம் வருவது தெரியும்.

கடமையைச் செய்யாமல் தடுத்தது, போக்குவரத்தைத் தடுத்து தாமதப்படுத்தியது, பொது அமைதியைக் குலைத்தது என்றெல்லாம் மறியல் செய்த பயணிகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார்கள். ஆனால் உண்மையில், அன்றாடம் பொறுப்பற்ற முறையில் புறநகர் ரயில்களை இயக்கி வேலைக்குச் செல்லும் பயணிகளை ரயிலில் ஏற முடியாமல் தாமதப்படுத்துவது, அவர்களை வேலைக்கே போக முடியாமல் வீட்டுக்குத் திரும்பவைப்பது, பள்ளி-கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், சொந்தத் தொழில் செய்வோர், வியாபாரிகள் ஆகியோருக்கு அன்றாடம் மன உளைச்சலை ஏற்படுத்தி அவர்களின் மன அமைதியைக் குலைப்பது ஆகிய பாதகங்களைச் செய்து கொண்டிருப்பது ரயில்வேதுறைதான்.

நியாயமாகப் பார்த்தால், இப்படி ஒரு வழக்கை தெற்கு ரயில்வே பொது மேலாளர், கோட்ட ரயில்வே அதிகாரி, இன்ன பிற அதிகாரிகளின் மீது தாங்கள் தாமதாகப் போவதால் எத்தனை நாள் ஊதியத்தை இழக்கிறார்களோ - அதையெல்லாம் இந்த ரயில்வே நிர்வாகம்தான் ஈடு கட்ட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் தான் நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்க வேண்டும். அமெரிக்கா உள்ளிட நாடுகளாக இருந்திருந்தால் அம்மக்கள் நிச்சயம் இதைத் தான் செய்திருப்பார்கள். மேலும் சென்னையில் மட்டும் அல்லாது, கோவையில், மயிலாடுதுறையில், மேட்டூரில், சேலத்தில் என்று பல ஊர்களிலும் அன்றாட ரயில் சேவையில் ஏற்படும் காலதாமதத்தால் பயணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் பெயர் பத்திரிக்கைகளில் வர வேண்டும் என்பதற்காகவும் ஆட்சிபீடம் ஏறவேண்டும் என்பதற்காகவும் அரசியல்வாதிகள் தான் தேவையற்ற மறியலில் ஈடுபடுவார்களே தவிர சாதாரண பொதுஜனம் அல்ல என்பதை ரயில்வே நிர்வாகமும் வேலுவும் எப்போது புரிந்துகொள்ளப்போகிறார்களோ தெரியவில்லை.

பாழ்பட்டு கிடந்த ரயில்வே துறையை சீர்தூக்கிய பெருமை லல்லுவிற்கு உண்டு - வேலுவைப் போல மனிதாபிமானம் இல்லாமல் லல்லுவாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லது செய்வார் என்று நம்புவோம். இல்லாவிட்டால் தமிழகத்தில் ரயில்வேக்கு எதிராக பொதுமக்கள் நடத்தப்போகும் புரட்சி தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடும்.

 

|
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |