ஆகஸ்ட் 11 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
பாலிவுட்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
புதிய தொடர்
கவிதை
இந்து மதம் என்ன சொல்கிறது ?
கட்டுரை
அமெரிக்க மேட்டர்ஸ்
திரைவிமர்சனம்
அறிவிப்பு
தொடர்கள்
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
முச்சந்தி : கத்ரி கோபால்நாத்
- என். சொக்கன் [nchokkan@gmail.com]
| Printable version | URL |
"கத்ரியின் வாத்தியம் ஓர் அதிசயம். பார்ப்பதற்கே ஏதோ தேர்தல் கூட்டணிபோல குழப்பமாக நுழைந்து வளைந்து வருகிற அதை எப்படிப் பிடித்து, படித்து வாசிக்கிறாரோ தெரியவில்லை."

வீட்டிலிருந்து கிளம்பும்போதே அரை மணி நேரத் தாமதம். இந்த லட்சணத்தில் கச்சேரி எங்கே நடக்கிறது என்பதும் சரியாகத் தெரியாது. தேடிக் கண்டுபிடித்துப் போவதற்குள், இன்னும் அரை மணி நேரமாவது ஆகிவிடும்.

என்றாலும், இதுபோன்ற அற்ப உலகியல் காரணங்களுக்காக கத்ரி கோபால்நாத்தின் கச்சேரியைத் தவறவிடவே முடியாது என்பதால், அரை விநாடியானாலும் காதாரக் கேட்டுவிட்டு வந்துவிடலாம் என்று கிளம்பினேன்.

கொஞ்சம் அலைந்தாலும், நான் நினைத்ததைவிட சுலபமாகவே ராம சேவா மண்டலி கண்ணில் பட்டது, இனி வரப்போகிற நிகழ்ச்சிகளின் பட்டியலும் கிடைத்தது. ஆனால், கத்ரியாரைதான் காணவில்லை. சாக்ஸ் இசைமட்டும் காற்றில் கலந்து ஒலித்துக்கொண்டிருந்தது.

மண்டலி கொஞ்சம் குழப்பமான அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. வாசலிலேயே ஷாமியானாவும் பிளாஸ்டிக் சேர்களும் போட்டு நிறைய பேர் உட்கார்ந்திருக்க, கட்டைச் சுவர்மேல் வழக்கம்போல் இளைஞர்கள், ஆனால், தலையாட்டி, தொடைகளில் தாளம் போட்டு ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு எதிரே தேடினாலும் கத்ரியைக் காணோம், மலைத்தேனில் செய்த இயற்கை ஜாம்(??) என்று ஏதோ டேபிள் போட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள். ஜாம் விளம்பரத்துக்குக் கத்ரி இசையமைத்திருக்கிறாரோ என்று அபத்தமாக யோசித்தேன்.

அந்த ஆர்வலர்களைக் கடந்து, எங்கோ ஒரு இருள் வராண்டாவின் மூலையில் ஒளித்துவைக்கப்பட்டிருந்த மண்டலியின் வாசலைத் தேடிக் கண்டுபிடித்து, செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தால், ஏகப்பட்ட மக்கள் கூட்டம். எல்லோரும் ஒருமனதாகத் தலையாட்டி ரசித்துக்கொண்டிருக்க, நேர் பார்வையில் கருநிற மேனியனாக ராமன், லட்சுமண, சீதா சகிதம் அருள்பாலித்துக்கொண்டிருக்க, சுற்றி மலர் அலங்காரங்களும், சிமிட் சிமிட் விளக்குகளும். ஓரமாக ஒரு சின்ன மேடை போட்டு அதில் கத்ரியும், பிறரும்.

Kadri Gopalnathகத்ரி கோபால்நாத் அந்தக் காலப் பாகவதர்போல இருக்கிறார். தலையின் முன்பகுதி மொத்தமாக வழுக்கையாகியிருக்க, பின்பக்கம் இருபுறமும் முடிக் கொத்துகள், அதை அலையலையாகப் பரவவிட்டிருக்கிறார், அவருடைய கண்ணாடியும் சரி, சாக்ஸ·போனும் சரி, பொன் வண்ணத்தில் மின்னுகிறது. அடிக்கடி சிரித்துக்கொண்டு தெலுங்கு படக் கதாநாயகியின் அப்பாமாதிரி இருக்கிறார். அவருக்குப் பக்கத்தில் ஒரு பெண்மணி (கன்யாகுமாரி ?) பாய்-கட் அடித்த தலையோடு வயலின் வாசித்துக்கொண்டிருக்கிறார். மிக ஓரமாக ஒரு தவில் (மிருதங்கம் இல்லை), இந்த ஓரத்தில் ஒரு கடம், கத்ரிக்கு மிகப் பக்கத்தில் ஆஜானுபாகுவாக ஒரு மோர்சிங்.

கத்ரியின் வாத்தியம் ஓர் அதிசயம். பார்ப்பதற்கே ஏதோ தேர்தல் கூட்டணிபோல குழப்பமாக நுழைந்து வளைந்து வருகிற அதை எப்படிப் பிடித்து, படித்து வாசிக்கிறாரோ தெரியவில்லை.

ஆனால், இந்தக் கவலையெல்லாம் அவர் வாசிக்கத் தொடங்கும்வரையில்தான். ஆரம்பித்துவிட்டாலோ, தேன்தான். வேறு வார்த்தைகளே இல்லை வர்ணிக்க.

சாதாரணமாகவே பெரிதாக சத்தம் போடுகிற வாத்தியம், இங்கே மைக், ஸ்பீக்கர் என்று அரங்கம் முழுக்க நிறைத்திருக்க, கத்ரியின் கம்பீரம் உருவத்தில்மட்டுமில்லாது வாசிப்பிலும் நன்றாகவே தெரிகிறது. கொஞ்சம் நாதஸ்வரம் (உண்மையில் நாதஸ்வரத்தின் சீவாளி போல இதிலும் ஏதோ சமாச்சாரம் இருக்கிறது, ஒரு ஸ்க்ரூவை முடுக்கிவிடுகிறார், சில இழைகளைப் பிரித்து எடுத்துவிட்டு வேறு சில இழைகளை இணைக்கிறார்), கொஞ்சம் வயலின், கொஞ்சம் புல்லாங்குழல் என்று கரைந்து உருகுகிற வாக்கியத்தில், மகுடியும் லேசாகக் கலந்திருக்கிறதா என்று நான் யோசித்து, பிறகு அதை நிராகரித்தேன். (ஆனால், கச்சேரியின் பிற்பகுதியில், 'நாதர் முடி மேலிருக்கும்' பாடலை வாசித்து, மகுடியை நேரடியாக சாக்ஸில் கொண்டுவந்தார் !)

சாக்ஸ·போன் கர்நாடக சங்கீத மேடைகளுக்குப் பொருந்திவருமா என்கிற சந்தேகம் ரொம்ப நாள் முன்பிருந்தே இருக்கிறது. ஆரம்பத்தில் பொருந்தியிருக்காது என்றுதான் தோன்றுகிறது, ஆனால், கத்ரி அதை மிகவும் சிரமப்பட்டு மேடைக்குப் பொருந்தச்செய்திருக்கிறார்.

அவர் சாக்ஸ் வாசிக்கிறபோது, மேற்சொன்ன எல்லா வாத்தியங்களும் அதில் கலந்திருப்பதுபோல் தெரிந்தாலும், அந்த வாத்தியம் தனித்துவத்தோடுதான் ஒலிக்கிறது. இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளவேண்டுமானால், சாக்ஸ் - தவில், வயலின் - கடம் என்று தனித்தனி கூட்டணியில் மாற்றி மாற்றி வாசிக்கிறார்களே (இதற்கு ஒரு பெயர் இருக்கவேண்டும், எனக்குதான் தெரியவில்லை) அப்போது பார்க்கவேண்டும் - வயலின் கர்நாடக சங்கீதத்தை நினைவுபடுத்துகிறது. ஆனால், சாக்ஸ் வரும்போது அப்படித் தெரியவில்லை.

ஆனால், கத்ரியின் புத்திசாலித்தனம் அவர் வாத்தியங்களை மாற்றி மாற்றி உபயோகப்படுத்துவதில் இருக்கிறது, வயலின் எப்போதும் சாக்ஸ·போனோடு ஒலிக்கிறது, தவில் ஆக்ரோஷமாகச் சப்தமிடுகிறது - ஆனால், மாமியாரின் முன்னால் எடுபடாத மருமகள் குரலாகிப்போகிறது. கடம் பரவாயில்லை, ஆனால் தனிஆவர்த்தனத்தின்போதுமட்டும்தான் காதில் கேட்கிறது, மோர்சிங் பல நேரத்தில் சாக்ஸ·போனுக்குள் மயங்கி விழுந்துவிடுகிறது. இப்படி சுற்றியிருக்கிற எல்லா வாத்தியங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டு, அதேசமயம் அந்த வாத்தியங்களோடு சேர்ந்து ஒலிப்பதாலேயே சாக்ஸ·போனுக்கு கர்நாடக சங்கீத கௌரவமும் பெற்றுக்கொண்டுவிடுகிறார் கத்ரி.

எந்தப் பாட்டாக இருந்தாலும், அவருடைய வாத்தியம் வாசிக்கிறது. 'நகுமோ' பாடலுக்கு ஆபேரியில் ராக ஆலாபனையாக இருக்கட்டும், 'தம்பூரி மீட்டிதவா' என்று துக்கடாவாக இருக்கட்டும் - எதுவானாலும் சாக்ஸ·போனில் ஒரு பிசிறு இல்லாமல் கொண்டுவருகிறார் - வாய்ப்பாட்டில்கூட இத்தனை துல்லியமாகப் பாடலை நினைவுக்குக் கொண்டுவரமுடியாது என்று தோன்றுமளவு அற்புதமான வாசிப்பு, அரங்கத்தில் இருந்த எல்லோரும் மயங்கிப்போயிருந்தோம் என்றால் அது மிகையே இல்லை.

கச்சேரியில் தமிழுக்குச் சம மரியாதை கொடுத்து இரண்டு தமிழ்ப் பாடல்கள் துக்கடாவுக்கு முன்னாலேயே வாசித்தார். அதுவும் 'குறையொன்றும் இல்லை, மறைமூர்த்தி கண்ணா' என்று அவர் இழைகிறபோது, நிஜத்தில் குறை இருப்பவர்கள்கூட, 'குறையொன்றும் இல்லை' என்று ஒப்புக்கொண்டு சரணடைந்துவிடுவார்கள்போலிருந்தது.

தனது கலையை அனுபவித்துச் செய்கிறார் மனிதர். எந்தப் பாடலை வாசிப்புக்கு எடுத்துக்கொண்டாலும், பதினைந்து அல்லது இருபது நிமிடங்களுக்குமேல் அதை விரிவாகவும், ரசிக்கும்படியும் வாசித்து, ஆலாபனைகள் செய்து, இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் செய்து, ஒரு முழுமையான விருந்தை ரசிகர்களுக்குக் கொடுத்தபிறகுதான் முடிக்கிறார். ஆகவே, கைதட்டலை நிறைவோடு செய்யமுடிகிறது.

இதற்குமேல் கச்சேரியை நுணுக்கமாக வர்ணிக்குமளவு எனக்கு ஞானம் போதாது என்பதால், சில கவனிப்புகளைமட்டும் சொல்லி முடித்துவிடுகிறேன்.

1. பாதியைத் தான் வாசித்துவிட்டு, மீதியை வயலினில் வாசிக்கவிடுகிற உத்தியை அடிக்கடி உபயோகிக்கிறார் - டூயட் படத்தில், 'நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ' என்று பாடுகிற ரமேஷ் அரவிந்த், அதன்பின்னே பாட முடியாமல் அமைதியாகிவிட, பிரபு சாக்ஸில் 'ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய் ?' என்று வாசித்து முடிப்பார், அதுபோல !

2. கத்ரியின் வாத்தியத்துக்கு இணையாக, அவருடைய ஒலிவாங்கி(மைக்)யும் பெரிதாகச் சப்தமிட்டுக்கொண்டிருக்க, கடைசிவரை, மைக் காரனிடம் 'எல்லோர் மைக்கையும் சேர்த்து என் மைக்ல கனெக்ட் பண்ணிட்டியா ராஜா ?' என்பதுபோல கெஞ்சிக் கொண்டிருந்தார்

3. ஒவ்வொரு பாடலின் முடிவிலும் கையை உயர்த்தி அசைத்து பாடல் முடிந்ததை அறிவிக்கிறார் - கல்யாணத்தில் கெட்டிமேளம் சொல்வதுபோல.

4. அவருக்குக் கடம் வாசித்தவர், விக்கு விநாயக்ராம் பாணியில் கடத்தைத் தூக்கி மேலே போட்டுப் பிடிக்க முயன்றார். ஆனால், சரியாக வரவில்லை, கடம் விழுந்து உடைந்துவிடப்போகிறதே என்கிற பயத்தோடு, மிக கவனமாகக் கைகளை விரித்து அவர் கடத்தைப் பிடித்தது இயல்பாக இல்லை, சிரிப்புதான் வந்தது.

5. முக்கியமாக, பாடலோடு நாட்டியமும் பார்ப்பதுபோல, சாக்ஸ·போன் நடுவில் இருக்க, அதைச் சுற்றி மனிதர் இடுப்பை அசைத்து பாடலுக்கேற்ப அபிநயம் செய்கிற லாவகம், நேரில் பார்த்து ரசிக்கவேண்டிய ஒரு விஷயம் !இந்த வார 'அச்சச்சோ'

தபால் ஆபீசில் உள்ள இந்தி எழுத்தை அழிக்கத் தார்ச்சட்டியோடு வந்தார்கள்.

கீழே நின்று கூட்டம் முழக்கம் செய்துகொணிருக்க, தார்ச்சட்டியோடு மேலே ஏறியவர் கீழே பார்த்துக் கேட்டார், 'ஏண்ணே இதுல எது இந்தி எழுத்து ?'

- ச. தமிழ்ச்செல்வன் எழுதிய 'இருளும், ஒளியும்' அறிவொளி இயக்க அனுபவ நூலிலிருந்து. (புதியபார்வை ஜுலை 1 - 15, 2005 இதழின் 'சு. ரா. குறிப்புகள்' தொடரில் வாசித்த மேற்கோள்.)


இந்த வார வாசகம் :

தினசரி காலை பேருந்துக்குக் காத்திருக்கும்போது, அந்தக் காட்சியைப் பார்க்கிறேன். நவீனமான தோற்றத்துடன் ஒரு பேருந்து வருகிறது. அதன்மீது 'Mico Bosch' என்று பெரிதாக எழுதி, ஏகப்பட்ட உபகரணங்களின் படம் வரைந்திருக்கிறது. அதன் முதுகில், 'இந்த வண்டி Mico Bosch தொழிலாளர்களுக்குமட்டுமே' என்று கம்பீரமாக அறிவித்திருக்கிறது.

ஆனால், தினந்தோறும் நான் பார்க்கும்போதெல்லாம் 'காமாக்யா, கத்ரிகுப்தா' என்று கத்திக்கொண்டு பொதுமக்களைமட்டுமே ஏற்றிச்செல்கிறது அந்தப் பேருந்து. 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்' என்பதுபோல, எல்லோரும் அந்நிறுவனத் தொழிலாளர்களோ என்னவோ !

வம்பு வளர்த்ததுபோக, நிஜமாகவே 'இந்த வார வாசகம்', அந்தப் பேருந்தின் முதுகில் வாசித்ததுதான்.

"Licence to Drill"

தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள், 'Bosch' நிறுவனத்தின் டிரில்லிங் மெஷின் விளம்பரம் அது !

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |