ஆகஸ்ட் 11 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
பாலிவுட்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
புதிய தொடர்
கவிதை
இந்து மதம் என்ன சொல்கிறது ?
கட்டுரை
அமெரிக்க மேட்டர்ஸ்
திரைவிமர்சனம்
அறிவிப்பு
தொடர்கள்
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உள்ளங்கையில் உலகம் : பொதுப்பொட்டல வானலைச் சேவை (GPRS) - 2
- எழில்
| Printable version | URL |

இணைய வேகத்தினை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியான "குறியீட்டுத்தகவல்கள் குறைத்தல்" பற்றி சென்ற வாரம் கண்டோம் . ஒன்றுக்கு மேற்பட்ட நேரத்துண்டுகளை ஒரு செல்பேசிக்கு வழங்கி இணைய வேகத்தை இன்னும் அதிகப்படுத்தலாம். பேச்சுத்தடத்திற்கு ஒரு நேரத்துண்டு போதுமானது . தரவு அனுப்பப்பட வேண்டுமெனில், சற்றே அதிக அளவு பட்டை (bandwidth) தேவைப்படும்.

எனவே, ஒரு தள நிலையத்தில் , ஒரு குறித்த நேரத்தில் உள்ள எட்டு நேரத்துண்டுகளில் ( பேசுவதற்கு தற்போது பயன்படுத்தப்படும் நேரத்துண்டுகள் தவிர) எஞ்சியுள்ள நேரத்துண்டுகளை ஒரே செல்பேசிக்கு வழங்கலாம். அதிக பட்சம் ஒரு நேரத்துண்டில் நொடிக்கு (குறியீட்டுத்தகவல்களை ஒதுக்கி ) 21.4 கிலோபிட்ஸ் வரை அனுப்பலாம் என்று பார்த்தோம் அல்லவா? ஒரே நேரத்தில் இரு நேரத்துண்டுகளை ஒரு செல்பேசிக்கு வழங்கினால் 2X21.4= 42.8 கிலோபிட்ஸ் அளவு தரவு அனுப்பலாம். மூன்று நேரத்துண்டுகளை ஒரு செல்பேசிக்கு ஒதுக்கித்தரவு அனுப்பினால் 3X21.4=64.2 கிலோபிட்ஸ் தரவுப் பரிமாற முடியும். இப்படியாய் ஒரு நேரத்தில் உள்ள எட்டு நேரத்துண்டுகளையும் ஒரே செல்பேசிக்கு வழங்கிப் பின் தரவுப் பரிமாற்றம் செய்தால் ? 8X21.4=171.2 கிலோபிட்ஸ் வேகத்தில் இணைய வேகம் ஏற்படுத்திக்கொடுக்கலாம். 170 கிலோபிட்ஸ் வேகம் என்பது உண்மையிலேயே சற்று வேகமான இணைய இணைப்புதான் என்கிறீர்களா? சரிதான். ஆனால் ஒரே நேரத்தில் எட்டு நேரத்துண்டுகளையும் ஒரு செல்பேசிக்கு வழங்குவது செயல்முறையாய் இயலாத காரியம் (ஒரு நேரத்தில் எல்லா நேரத்துண்டுகளும் பயன்படுத்தப்படாமல் இருப்பதில்லை ) . எனினும் , கோட்பாட்டுப்படி (theoretically) , பொட்டல வானலைச்சேவையின் வேகம் 171.2 கிலோபிட்ஸ் எனக்கொள்ளலாம்.

ஆக, இந்தப்பொட்டல சேவையின் சிறப்புக்களைச் சுருங்கக்கூறின்,

1. இணைய இணைப்பின் வேக அதிகரிப்பு

2. இணைப்பு இருக்கும் நேரம் வரை கட்டணம் வசூலிப்பது போய், எவ்வளவு தரவு அனுப்பப்பட்டுள்ளதோ அதற்கேற்றாற்போல் கட்டணம் (Volume based Billing)

3. வலையமைப்பிலுள்ள வானலை வளத்தை (Radio Resoure), அதாவது ஒலிபரப்பியின் பயன்பாட்டை அதிகரித்து , சரியான விதத்தில் பயன்படுத்தி நிறையப் பயன்களைப் பெறுதல்

4. செல்பேசி, இணைய இணைப்பு ஏற்படுத்த எடுத்துக்கொள்ளும் காலத்தை வெகுவாய்க் குறைத்தல் .

சரி, இந்த பொதுப்பொட்டல வானலைச்சேவைக்கான வரன்முறைகள் (Specifications) எப்போது வகுக்கப்பட்டன ? ஜி எஸ் எம் வரன்முறைகளை வகுக்கும் போதே இந்த பொதுப்பொட்டல வானலைச்சேவையின் வரன்முறைகளும் (1990 களிலேயே) முடிவாயின. எனினும் அப்போதே இந்தச் சேவைகள் செயலாக்கப்படவில்லை. இந்தக்கம்பியில்லாத் தொலைத்தொடர்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டு மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்று உலகளாவிய வெற்றியைப் பெற்றபின் , இந்த ஜி எஸ் எம் சேவைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல பொதுப் பொட்டல வானலைச்சேவை அறிமுகமானது. ஒப்புமை (Analog) வகைக் கம்பியில்லாத் தொலைத்தொடர்பு முறைகள் முதலாம் தலைமுறை என்றும் , அடுத்து அறிமுகமான ஜி எஸ் எம் , ஸி டி எம் ஏ போன்றவை இரண்டாந்தலைமுறை என்றும் அழைக்கப்பட்டது போல், பொதுப்பொட்டல வானலைச்சேவை அறிமுகமான காலம் முதல் இரண்டரைத்தலைமுறை (2.5 Generation, 2.5G) என்றறியப்படுகிறது .

ஜி எஸ் எம் சேவை வழங்கிக் கொண்டிருக்கும் வலையமைப்பிலும், செல்பேசிகளிலும் பொதுப்பொட்டல வானலைச்சேவை வசதியை எவ்வாறு ஏற்படுத்துவது ? ஏற்கனவே அறிமுகமான செல்பேசிகளில் இவ்வசதியை ஏற்படுத்தல் கடினம். ஏனெனில் செல்பேசிகளிலுள்ள செலுத்தி/ பெறுனர் (Transmitter/Receiver) போன்றவை ஒரு நேரத்துண்டில் செயல்படவே , அதாவது ஒரு நேரத்துண்டில் தகவல் அனுப்பவோ பெறவோ வடிவமைக்கப்பட்டவை. பொதுப்பொட்டல வானலைச்சேவையை ஏற்படுத்த வேண்டுமெனில் ஒன்றிற்கு மேற்பட்ட நேரத்துண்டுகளில் தகவல் அனுப்பவோ பெறவோ வேண்டும் . இதற்கேற்றாற்போல் செல்பேசியின் செலுத்தி/பெறுனர் போன்றவை மாற்றியமைக்கப்பட வேண்டும் . எனவே இச்சேவைகளை வழங்க புதுவகைச் செல்பேசிகள் தயாரிக்கப்பட வேண்டும். அது போலவே , 2001-ல் முதல் ஜி பி ஆர் எஸ் செல்பேசியை எரிக்ஸன் அறிமுகப்படுத்தியது.

வலையமைப்புக்கு இப்போது வருவோம். ஜி பி ஆர் எஸ் சேவை வழங்க , வலையமைப்பில் என்னென்ன மாறுதல்கள் செய்ய் வேண்டும்? தள நிலையத்தின் செலுத்தி/பெறுனர் , ஒன்றுக்கு மேற்பட்ட நேரத்துண்டுகளை ஒரு நேரத்தில் குறிப்பிட்ட செல்பேசிக்கு தகவல் அனுப்ப/பெறப்படும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஒரு அழைப்பு ஏற்பட்டால் அது பேச்சிற்காகவா அல்லது தரவுப் பரிமாற்றம் செய்யவா என்று தெளிந்து அதற்கேற்றாற்போல் செயல் பட வேண்டும்.

செல்பேசி வலையமைப்பின் கூறுகளை ஏற்கனவே விளக்கியிருக்கிறோம். ஜி பி ஆர் எஸ் சேவை வழங்க வேண்டுமெனில் இன்னும் இரு கூறுகளை வலையமைப்போடு இணைக்க வேண்டும். ஒன்று: சேவை வழங்கும் ஜி பி ஆர் எஸ் துணைக்கணு (Serving GPRS Support Node, SGSN) ; மற்றொன்று: நுழைவாயில் ஜி பி ஆர் எஸ் துணைக்கணு ( Gateway GPRS Support Node , GGSN).

GPRS

படத்தில் காட்டப்பட்டுள்ளபடி இந்த இரு கூறுகளும் செல்பேசி வலையமைப்பில் இணைக்கப்பட வேண்டும்.சேவை வழங்கும் ஜி பி ஆர் எஸ் துணைக்கணு, தளக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் வேலை என்ன? செல்பேசியிலிருந்து வரும் தரவுப்பொட்டலங்களைப் பெறுவதும், செல்பேசிக்கு வரும் தரவுப்பொட்டலங்களை சரியான படி சேர்ப்பித்தலும் இதன் பணிகள். ஒவ்வொரு செல்பேசியையும் இயக்கியவுடன் எவ்வாறு தள நிலையத்துடன் தங்களை இணைத்துப் பதிவு செய்து கொள்கின்றனவோ, அதேபோல் ஜி பி ஆர் எஸ் சேவையைப் பயன்படுத்த இந்த சேவை வழங்கும் ஜி பி ஆர் எஸ் துணைக்கூறில் (SGSN) செல்பேசிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஒரு செல்பேசிக்கு ஏதேனும் தரவு வருகையில் அந்தச் செல்பேசி எங்கே இருக்கிறது என்று வருகை இருபிடப்பதிவேட்டில் விசாரித்து, அந்தத்தரவுத்தகவலைச் சரியான செல்பேசிக்கு அனுப்புவதும் இதன் வேலை. எவ்வளவு தரவுப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்று கணக்கிட்டு அதற்கேற்ப கட்டணம் கணக்கிடுவதும் இந்தக் கணுதான்.

ஒரு புறத்தில் தளக்கட்டுப்பாடு நிலையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் சேவை வழங்கும் ஜி பி ஆர் எஸ் துணைக்கணு (SGSN), மறுபுறத்தில் நுழைவாயில் ஜி பி ஆர் எஸ் துணைக்கணுவுடன் (GGSN) இணைக்கப்பட்டுள்ளது. நுழைவாயில் என்றவுடன், புரிந்திருக்க வேண்டுமே! இணையத்தை செல்பேசி வலையமைப்புடன் சேர்ப்பது இந்தக் கணுதான், செல்பேசி வலையமைப்பிலிருந்து வரும் தரவுத் தகவல்கள் இணையத்தை அடைய இந்த நுழைவாயில் துணைக்கணு உதவு செய்கிறது. ஆக இது இணையத்துக்கும், செல்பேசி வலையமைப்புக்கும் இது ஒரு இடைமுகம் ( interface). செல்பேசியிலிருந்து வரும் தரவுப்பொட்டலங்களை பொட்டலத் தரவு வரைமுறையைப் (Packet Data Prtocol, PDP) பயன்படுத்தி இணையத்திற்கு அனுப்புவதும், இணையத்திலிருந்து வரும் தரவுப்பொட்டலங்களைச் செல்பேசி புரிந்து கொள்ளும் பொட்டலங்களாக மாற்றுவதும் இதன் வேலை.

மேலும் சில தகவல்களை அடுத்த வாரம் காண்போம்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |