ஆகஸ்ட் 12 2004
தராசு
வேர்கள்
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
முத்தொள்ளாயிரம்
நியுஜெர்சி ரவுண்டப்
க. கண்டுக்கொண்டேன்
கட்டுரை
காந்தீய விழுமியங்கள்
பேட்டி
3D கதைகள்
கவிதை
புதிய தொடர்
திரையோவியம்
கோடம்பாக்கம்
இசை உலா
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  வேர்கள் : ஓடிப் போனானா ? - பகுதி 4
  - ஹரிகிருஷ்ணன்
  | Printable version |

  'இந்தியா பத்திரிகையின் ஆசிரியரைக் கைது செய்ய வாரண்டும் பிறந்தது. போலீஸார் 'இந்தியா' பத்திரிகையின் காரியாலயத்துள் பிரவேசித்து பாரதியாருக்கு வாரண்டைக் காண்பித்தனர்.

  பிடி வாரண்டும் பிடிபடாத உண்மையும்

  'இந்தியா' பத்திரிகையின் தோற்றத்தைப் பற்றியும், பாரதி அந்தப் பத்திரிகையில் ஏற்றிருந்த பங்கைப் பற்றியும் நாம் இது வரை கண்டதன் சாரம்சத்தைக் கீழே தருகிறேன்.

  1) 'இந்தியா' பத்திரிகையின் உரிமையாளர்கள் மண்டயம் குடும்பத்தைச் சேர்ந்த சில வைணவ இளைஞர்கள்.

  2) பத்திரிகை தொடங்கப்பட்டு சுமார் ஒரு மாத காலத்துக்குப் பின்னாலேயே பாரதியின் எழுத்து அந்தப் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. 

  3) மேற்படி இரண்டு கருத்துகளும் காட்டுவது எதையென்றால், பாரதி அந்தப் பத்திரிகையில் மாதச் சம்பளம் பெறும் ஊழியனாகத்தான் பணியாற்றினான் என்பது ஒன்று.  'இந்தியா' பத்திரிகையைத் தொடங்கியதில், மற்றும் நிர்வகித்ததில் பாரதிக்குப் பங்கு ஏதும் இருந்திருக்கவில்லை என்பது இன்னொன்று. 

  4)  மேற்படி இதழுக்கு அதிகார பூர்வமான, பதிவு செய்யப்பட்ட ஆசிரியராக பாரதி பணியாற்றிய காலம் இரண்டு மாதங்களும், கூடுதலாகச் சில நாளும்.  அவ்வளவே. 

  5) அதிகார பூர்வமற்ற ஆசிரியராகச் செயல்பட்ட போதிலும், ஒரு பத்திரிகையில் ஆசிரியரின் பணி என்பது வேறு; நிர்வாகியின் பணி என்பது வேறு.  பத்திரிகை ஆசிரியராக யார் பெயரைப் பதிவு செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் முழு உரிமையும் பத்திரிகையை முதல்போட்டு நடத்துகிற முதலாளியைச் சேர்ந்த ஒன்று.  எனவே, பத்திரிகைக்கு மு. சீனிவாசன் ஏன் ஆசிரியராக பதிவு செய்யப்பட்டார் என்பது, பத்திரிகையின் உரிமையாளர்களுக்கும், அவ்வாறு பதிவு செய்ய ஒப்புக் கொண்ட முரப்பாக்கம் சீனிவாசனுக்கும் இடையில் நடந்திருக்கும் ஒன்று.  சாதாரணமான ஓர் எழுத்தாளனாக மட்டுமே செயல்பட்ட, இந்தியா பத்திரிகையின் ஆசிரியர் என்று பலராலும் <b>கருதப்பட்ட</b> பாரதி இந்த விஷயத்தில் தீர்மானிக்கவோ, அபிப்பிராயப்படவோ ஏதும் இல்லை.  'என்னை அதிகார பூர்வமான ஆசிரியராக நியமிக்க வேண்டும்,' என்று வேண்டுமானால் அவன் கேட்டுப் பெற்றிருக்க முடியும்.  அவனுக்கு இதில் விருப்பம் இருந்திருக்கவில்லை.  பின்னால் புதுச்சேரியில் இந்தியா பத்திரிகை நடந்த போது ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளின் போது பாரதி சொன்ன, செய்த செயல்களை இதனை உறுதிப்படுத்துகின்றன.  இந்த நிகழ்ச்சிகளைப் பிறகு காண்போம்.

  சரி.  கட்டுரையின் மையப்புள்ளியாக விளங்கக் கூடிய அந்தக் குற்றச்சாட்டுக்கு இப்போது வருவோம்.  என்ன குற்றச்சாட்டு?  முதலிலேயே சொன்னோம்.  'தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டுத் தாம் தூரப் போய்விட்டமை பாரதியாரின் சரித்திரத்தில் ஒரு பெரிய களங்கமேயாகும்,' என்ற - பாரதியின் நண்பரான எஸ். ஜி. இராமனுஜலு நாயுடு அவர்களின் - குற்றச்சாட்டு.  'இந்தியா' பத்திரிகையின் ஆசிரியர் கைது செய்யப்பட்ட காட்சியைப் பின்வருமாறு சித்திரிக்கிறார் இராமானுஜலு நாயுடு. 

  'இந்தியா பத்திரிகையின் ஆசிரியரைக் கைது செய்ய வாரண்டும் பிறந்தது.  போலீஸார் 'இந்தியா' பத்திரிகையின் காரியாலயத்துள் பிரவேசித்து பாரதியாருக்கு வாரண்டைக் காண்பித்தனர்.  தாம் ஆசிரியரல்லவென்றும், தமது பெயர் வாரண்டிலில்லை என்றும் கூறிக்கொண்டிருக்கையில், 'இந்தியா' பத்திரிகையை வெளியிடுபவரான ஸ்ரீனிவாசன் என்பவர் அங்குற்று, 'என்ன?' என்றார்.  போலீஸார் அவரே ஆசிரியராகப் பதிவு செய்யப் பெற்றவரென்ற அறிந்து அவரைக் கைது செய்தனர்.' (பெ. சு. மணி அவர்கள் 'பத்திரிகையாளர் பாரதியார்' என்ற நூலில் மேற்கோள் காட்டியுள்ளபடி.)

  இந்தக் காட்சிக்குக் கொஞ்சம் வீர சாகச வண்ணம் தீட்டுகிறது, ரா. அ. பத்மநாபன் அவர்களுடைய 'சித்திர பாரதி.'  சித்திர பாரதி என்பது, பாரதியின் வாழ்க்கை வரலாறு என்பதனை அவன் அன்பர்கள் அறிவார்கள்.  மிகச் சிறந்த முறையில், ஏராளமான புகைப்படங்களையும், சான்றுகளையும் கொண்டு பதிப்பிக்கப்பட்ட மிகப் பெரும்பான்மையும் கூர்மையான பார்வையுடனும், சில இடங்களில் வேண்டுமென்றே அமுக்கி வாசிக்கப்பட்ட வாக்கியங்களுடனும் (எடுத்துக் காட்டாக ஏ வி மெய்யப்ப செட்டியாரும் பாரதி எழுத்துகளும் பற்றிய குறிப்புகளைச் சொல்லலாம்.  'பாரதியும் ஏவிஎம்மும்' என்ற தலைப்பில் இதைக் குறித்த நீண்ட கட்டுரை ஒன்றை நான் இணையத்தில் இதற்கு முன்னர் சி·பி.காமில் எழுதியிருக்கிறேன்.) செய்யப்பட்ட அருமையான பதிவு.  மிக நல்ல, தரமான எழுத்து என்பதிலோ, வரலாற்றுப் பதிவு என்பதிலோ எந்தவிதமான ஐயமுமில்லை.  ஆனால், வரலாற்றுப் பதிவுகளைச் செய்வோர் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கும் எடுத்துக் காட்டாக 'சித்திர பாரதி'யில், பாரதியின் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான சம்பவம் பற்றிய விவரிப்பு அமைந்துவிட்டது என்பது வருந்தத் தக்கது.  நாடகப் பாங்கில் செய்ய வேண்டும் என்றும், எழுத்தில் சுவையைக் கூட்ட வேண்டும் என்றும், சாகசக்காரர்கள் வரிசையில் பாரதியைக் கொண்டு போய் வைத்துக் காட்ட வேண்டும் என்றும் சற்றே மிகைப்படுத்தப்பட்ட ஒரு சித்திரம், இன்று பாரதியின் மீது வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டுக்குத் துணையாக நிற்கிறது என்பதுதான் வருத்தத்துக்குக் காரணம்.

  'சித்திர பாரதியில்,' ரா. அ. பத்மநாபன் அவர்கள் இந்தக் காட்சியை விவரித்திருக்கும் விதத்தை அப்படியே எடுத்துத் தருகிறேன்:

  'போலீஸ்காரன் ஒருவன் இந்த வாரண்டுடன் பிராட்வேயில் 'இந்தியா' பத்திரிகைக் காரியாலயத்துக்கு வந்தான்... ... ... ... காரியாலயம் மாடியில்.  பாரதி அப்போதுதான் படியில் இறங்கி வந்துகொண்டிருந்தார்.  போலீஸ்காரன் அவரிடம் வாரண்டை நீட்டினான்.  பாரதி படித்துப் பார்த்தார்.  வாரண்டு 'இந்தியா' ஆசிரியருக்கென இருந்ததைக் கவனித்தார்.  'ஆசிரியர்தானே?  நான் இல்லை,' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.'

  சித்திரம் அழகாக இருக்கிறது.  சமயோசிதமாகவும், சாதுரியமாகவும் பாரதி செயல்பட்டுவிட்டதைப் போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.  என்ன செய்ய!  ஆனந்த விகடனில் நீண்ட காலம் உதவியாசிரியராகப் பணியாற்றிய அனுபவமிக்க எழுத்தாளர், தவறானதும், ரசக் குறைவானதும்,  சொல்லப் போனால் நடந்திருக்க முடியவே முடியாத ஒரு காட்சியை எழுதி வைத்துவிட்டார்.  இந்த 'வீர தீர சாகச' விவரிப்பில் பாரதியின் பெயருக்கு எப்படிப்பட்ட ஒரு சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை உணரத் தவறிவிட்டார். 

  நாடகப் பாங்கில் சொல்லப்படும் விவரமும், உண்மைக்கு அணுக்கமாகத்தான் இருந்தாக வேண்டும்.  சிறிய அளவில் பிறழ்வு ஏற்பட்டாலும் பெரிய விபரீதங்களுக்கு அது வழி வகுத்துவிடும்.  பல வரலாற்றுப் பதிவுகளில் இத்தகைய கவனக் குறைவான எழுத்துகளால் தவறான முடிவுகள் எடுக்கப்பட வழி ஏற்பட்டிருக்கின்றது.   ஒன்றைக்கருத்தில் கொள்ள வேண்டும்.  நிகழ்ச்சி நடந்தது 1908-ல்.  ரா. அ. ப. அவர்கள் பாரதிக்கு நெருங்கிய பலரிடம் கேட்டும், பல தகவல்களைத் திரட்டியும் பதிவு செய்ததோ, 1957-ல்.  அதாவது, சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து.  இவ்வளவு பெரிய கால இடைவெளிக்குப் பிறகு எழுதப்படும் பதிவுகளில் விவரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் சற்று விறுவிறுப்பு சேர்ப்பதற்கான மசாலையைக் கலக்கும்போது நெஞ்செரிச்சல் உண்டாகும் அளவுக்குக் காரம் கூடிவிட்டது. 

  நான் இப்படிச் சொல்கிறேன் என்றால், அது பத்மநாபன் அவர்களுடைய ஒட்டுமொத்தப் பதிவின் மீதோ, உழைப்பின் மீதோ, பாரதி பக்தியின் மீதோ நான் வைக்கும் விமரிசனமாகாது அது.  பத்மநாபன் அவர்களுடைய கடுமையான முயற்சியால்தான், உழைப்பினால்தான் பாரதியின் பல எழுத்துகளை நாம் இன்று வாசிக்கிறோம்.  'மண் வெட்டிக் கூலி தின்னலாச்சே,' என்ற பாரதியின் பாடல் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை.  எல்லாப் பதிப்புகளிலும் ஏராளமான புள்ளிகளுக்கு நடுவில் சில சொற்களாகத்தான் அந்தப் பாடல் காட்சி தருகிறது.  வாஞ்சிநாதன் கலெக்டர் ஆஷைக் கொன்றுவிட்டு, தன்னைத் தானே சுட்டுக்கொண்ட சமயத்தில் அவனுடைய சட்டைப் பையில் இருந்த காகிதங்களில் ஒன்று, பாரதியின் 'மண்வெட்டிக் கூலி தின்னலாச்சே,' கவிதையும்.  அவனுடைய சட்டைப் பையிலிருந்து எடுத்துக் காவல் துறை பத்திரப்படுத்தியிருந்த அந்த மிக அரிய காகிதத்தைத் தோண்டித் துருவிக் கண்டெடுத்து, அந்தக் கவிதையின் முழு வடிவத்தையும் கொண்டு வந்திருக்கும் காரியம் ஒன்றே போதும், பத்மனாபன் அவர்களின் சலியாத முயற்சிக்குச் சான்று சொல்ல.  'பாரதி புதையல்,' என்ற தலைப்பில் ஏராளமான பாரதி எழுத்துகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் ரா. அ. ப.  அவரைப் பற்றி நான் கருதாமல் ஏதும் சொல்வேனாயின், நீசனாகக் கடவேன்.

  என்னுடைய ஆதங்கமெல்லாம் இந்தக் குறிப்பிட்ட பகுதியைப் பற்றியது மட்டும்தான்.  'வாரண்டு 'இந்தியா' ஆசிரியருக்கென இருந்ததைக் கவனித்தார்.  'ஆசிரியர்தானே?  நான் இல்லை,' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்,' என்ற ரா அ ப வாசகங்களும், எஸ் ஜி ராமானுஜலு நாயுடு அவர்களுடைய (மேற்காணும்) சித்திரிப்பும், பாரதி 'தன்னையே நம்பியிருந்த ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டு, தான் தப்பி ஓடிவிட்டான்,' என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன.

  ஐயா பெரியவர்களே!  எந்த ஊரிலாவது வாரண்டு பதவிப் பெயரில் பிறப்பிக்கப்படுவதைக் கண்டிருக்கிறீர்களா?  எப்போதும் நபரின் பெயரில்தான் வாரண்டு பிறப்பிக்கப்படும்.  பதவிப் பெயர் கூடவே குறிக்கப் படலாம்; குறிக்கப்படாமலும் போகலாம்.  'இன்ன நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கைது செய்யப்படுகிறார்,' என்று எந்த ஊரிலாவது வாரண்டு பிறப்பிப்பார்களோ?  'இன்னாரின் புதல்வரான, இத்தனை வயது மதிக்கத்தக்க, இன்னார், இன்ன பதவியில் இருப்பவர், கைது செய்யப்படுகிறார்,' என்றல்லவா மிக மிகத் தெளிவாகக் குறிப்பிடுவார்கள்?  பிறகு அதென்ன, வாரண்டு 'இந்தியா' ஆசிரியருக்கென இருந்ததைக் கவனித்தார்.  'ஆசிரியர்தானே?  நான் இல்லை,' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்' என்றொரு வாக்கியம்? 

  இதற்குப் பின்னால் எழுதியவர்கள் இன்னும் பெரிய கூத்தெல்லாம் அடித்திருக்கிறார்கள்.  'நான் இல்லை.  இதோ இந்த சீமாச்சுதான் பத்திரிகை ஆசிரியர்.  இவரைக் கைது பண்ணு,' என்று சொல்லிவிட்டு நம்மாள் போயிட்டாராம்.  உச்ச கட்டக் காட்சியில் கதாநாயகனும் வில்லனும் கட்டிப் புரண்டு கொண்டிருப்பார்கள்.  திடீரென்று அங்கே காவல் படை வரும்.  அந்தப் படையின் அணிவகுப்பின் முன்னால், இது வரை வில்லனோடு கை கோத்துக்கொண்டிருந்த,  - அனேகமாக கதாநாயகனின் வருங்கால மாமனார் - காவல் துறை அதிகாரியின் பக்கம் திரும்புவார்.  'இன்ஸ்பெக்டர்!  அரெஸ்ட் ஹிம்!' என்று கம்பீரமாக 'உத்திரவிடுவார்.'  அதை அப்படியே சிரமேற்கொண்டு, இன்ஸ்பெக்டர் உடனே ஓடிப் போய் வில்லனைக் கைது செய்வார். 

  இப்படியெல்லாம் காட்சிகளைப் பார்க்க வேண்டும் என்றால் தமிழ் சினிமாவுக்குப் போக வேண்டும்.  (சினிமா காதலர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம்.  வேண்டுமானால், கன்னட, தெலுங்கு, இந்தி, மலையாள என்று எல்லா இந்திய மொழிகளையும் 'தமிழ்' என்ற சொல் இருக்கும் இடத்தில் இட்டு நிரப்பிக் கொள்ளலாம்.)  ஆனால், உண்மையில் காவல் துறை அப்படிச் செயல் படுவதில்லை.  வாரண்டு யார் பெயருக்குத்தான் இருந்தது?  அடுத்த வாரம் வாரண்டின் நகலைப் பார்ப்போம்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |