அன்பான நண்பர்களே,
காகிதத்தளத்தை விட இணையத்தளம் மிக விரிவானது. அதன் எல்லையில்லாத சாத்தியங்களை நாம் இன்னும் முழுமையாய்ப் பயன்படுத்தவில்லை. நான் அச்சிலிருந்து இங்கே எழுத வந்த போது இந்தத் தளத்துக்கே உரிய அம்சங்களோடு படைப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணினேன்.
அதன் சின்ன ஆரம்பமாகத்தான் என்னுடைய வலைப்பதிவில் சில கதைகளுக்கு க்ளைமாக்ஸ் வந்தவுடன் நிறுத்தாமல் பாப்-அப் பெட்டியில் ஆன்ட்டி க்ளைமாக்ஸ் கொடுத்துப் பார்த்தேன். பாரா உட்பட பலரும் அதை ரசித்துப் பாராட்டினார்கள்.
இப்போது அடுத்த கட்டப் பரிசோதனையில் இறங்கி, இணையத்தில் கதை என்பதன் வீச்சு எப்படியெல்லாம் காகிதத் தளத்தினின்றும் வித்தியாசப்படும் என சிந்தித்தேன். விளைவு 3D கதைகள். சில ரெகுலர் கதைகளுக்கு இணைய சவுகரியத்தைப் பயன்படுத்தி மூன்றாம் பரிமாணம் கொடுத்துப் பார்க்கலாம் என்பதே அது. அதன் முதல் கட்டமாக உருவாக்கினது Story Morphism.
சாக்ரட்டிஸம், சர்ரியலிஸம், மேஜிகல் ரியலிஸம் எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதென்னது புதுசா என்று கேட்பவர்கள் அடுத்த வாரம் நான் எழுதப் போகும் "கறுப்பு வெள்ளை கனவுகள்" என்ற கதையை அவசியம் படியுங்கள். ஒரே கதையை ஐந்தாறு விதமாக வாசிக்க முடிகிற புதிய அநுபவத்தை ஹைப்பர் லிங்க் தாவல்கள் சாத்தியமாக்கியுள்ளது.
இது ஒரு ஆரம்பம்தான். 3D கதைகள் வரிசையில் இன்னும் நிறைய புதுமைகள் பண்ணிக் காட்ட உத்தேசம் இருக்கிறது. எல்லாம் உங்கள் வரவேற்பைப் பொறுத்ததே.
படித்து விட்டுச் சொல்லுங்கள்.
அன்புடன், - சத்யராஜ்குமார்
|