ஆகஸ்ட் 19 2004
தராசு
பருந்துப் பார்வை
மேட்ச் பிக்சிங்
பேட்டி
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
வானவில்
பெண்ணோவியம்
வேர்கள்
க. கண்டுக்கொண்டேன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
கோடம்பாக்கம்
திரைவிமர்சனம்
ஹாலிவுட் படங்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  பருந்துப் பார்வை : நண்டு விடு தூது
  - மதுரபாரதி
  | Printable version |

  'எட்டுக் கால் இருந்தாலும் நண்டு நேராக நடக்காது'

  எங்கள் ஊரில் 'நண்டுபிடிச்சான் குளம்' என்று ஒரு குளம் உண்டு. ஒரு குளம் என்ன, ஊரைச் சுற்றிக் குளங்கள் தாம். ஊர்ப் பெருமை அப்புறம் §பசலாம். குளத்தைப் பார்ப்போம். இந்தக் குளத்துக்கு வரும் தண்ணீர் கனடியன் கால்வாய் வழியே வரவேண்டும். வருடத்தில் சில மாதங்கள்தான் இதில் தண்ணீர் இருக்கும். அந்த நாட்களில் ஆடுமாடுகளும் மனிதர்களும் காலைவேலைகளில் திரண்டு வந்து குளத்தைக் குட்டைப்புழுதி செய்துவிடுவார்கள். ஆளரவம் இல்லாத மதியப் பொழுதில் போய்ப் பார்த்தால் குளத்தின் கரையில் இருக்கும் பாறைகளின் மேல் வெள்ளைவெளேரென்ற நாரைகள் உட்கார்ந்து சாவகாசமாக நண்டு தின்பதைப் பார்க்கலாம். குளக்கரையின் வலது பக்கம் கண்ணுக்கெட்டிய தூரம் வயல்கள். வரப்பின்மேல் நடந்து போனாலும் நம் காலில் மிதிபடாமல் அவசரமாகப் பெரிய நண்டுகள் ஓடி வளைகளில் ஒளிவதைப் பார்க்கலாம்.

  வயல்புறத்தில் பார்க்கும் நண்டுகள் பெரிதாக, உறுதியான ஓடுகளோடு, சிவப்பின் நிறங்களும், புள்ளிகளும் கொண்டதாகவும் இருக்கும். இதை வரப்புக்கடா என்று அழைத்திருக்கின்றனர் முன்னோர். அதுவே கடற்கரையில் அலைவந்து மீண்டதும் வெகுவேகமாக ஓடி வளைக்குள் ஒளியும் நண்டுகள் கண்ணாடியால் செய்ததுபோலவும் மிகச் சிறியனவாகவும் இருக்கும். வயல்நண்டு, கழனிநண்டு, கடல்நண்டு என்று பலவகைகள் உண்டு.

  'எட்டுக் கால் இருந்தாலும் நண்டு நேராக நடக்காது' என்று சொல்வார்கள். நண்டு நகரும்போது கவனித்தால் விநோதமாக இருக்கும். முன்நோக்கி அது போகாது. வலப்பக்கமோ, இடப்பக்கமோதான் விரைந்து அகலும். எவ்வளவு அறிவாற்றலும், செல்வமும் இருந்தாலும் நேர்வழியில் போகாத மனிதனுக்கு இது உவமையாகச் சொல்லப்படுகிறது. அதன் முன்பக்கம் இருக்கும் வலுவான, ரம்பம்போன்ற இரண்டு கைகள் எதிரியைக் கிடுக்கிப் பிடி போட உதவும். நண்டுக்குத் தலை இருப்பது நமக்குத் தெரியாது. அதனால் அதைத் தலையிலி, சிரமிலி என்ற பெயர்களாலும் அழைத்திருக்கிறார்கள்.

  ஒரு குழாயின் நுனியில் பொருத்தப்பட்டதுபோன்ற, நாலாபுறமும் திரும்பக்கூடிய 'பெரிஸ்கோப்பு' போன்ற கண்கள் நண்டின் சிறப்பு அம்சமாகும். கிர¡மப்புறங்களில் நொச்சிமரம் பார்த்திருக்கலாம். அதன் அரும்புகள் நண்டின் கண்போல இருப்பதாகச் சொல்கிறது மதுரைக் கண்ணங்கூத்தனார் எழுதிய 'கார்நாற்பது':

  அலவன் கண் ஏய்ப்ப அரும்பு ஈன்று அவிழ்ந்த
  கருங் குரல் நொச்சி

  சரி, நொச்சியை விடுங்கள். வீணை, தம்புரா ஆகியவற்றின் ஒரு கோடியில் நரம்புகளை முறுக்கேற்றும் ஆணிகளைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா?.

  அதுவும் நண்டின் கண் போல அமைந்திருப்பதாகப் பொருநராற்றுப் படை வர்ணிக்கிறது:

  அளை வாழ் அலவன் கண் கண்டன்ன
  துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி

  (பொருநராற்றுப் படை: 10)

  [அளை - வளை; அலவன் - நண்டு]

  வீணையைப் போன்ற நரம்புக் கருவியான பாலை யாழின் வருணனையில் இது வருகிறது. இந்த விவரணை முழுதாகப் படிக்க மிகச் சுவையானது.

  நான் இங்கே நண்டைப் பார்த்துத்தான் ரசிக்கிறேன். ஆனால் நண்டைச் சாப்பிட்டு ரசிப்பவர்களும் நிறையப்பேர் இருக்கிறார்கள். சிலசமயம் சிங்கப்பூர் போன்ற நாட்டின் உணவு வகைகளைக் காட்டும் படங்களில் செம்மஞ்சளான நண்டை அப்படியே தட்டில் இலைதழைகளோடு அலங்கரித்து ¨வத்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

  சங்க காலத்தில் நண்டு விருந்தைப் பற்றிச் சொல்கிறது சிறுபாணாற்றுப்படை. "நீ ஆமூருக்குப் போனால் அங்கே இருக்கும் உழவர்கள் இருப்பிடத்துக்குப் போவாய். அங்கே பெண்யானையின் துதிக்கை போல கனத்த பின்னல் தமது கழுத்துப்புறம் தொங்கும், வளை அணிந்த கையை உடைய உழப்பெண்கள் பெரிய இரும்புலக்கைகளால் குத்திய வெள்ளைவெளேர் அரிசியைச் சோறாக்கிக் குவிப்பார்கள். பிளந்த கால்களையுடைய நண்டின் பிரட்டலோடு அதைக் கொடுக்க நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்" என்று ஆசைகாட்டுகிறான் பாணன்.

  பிடிக்கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்து
  தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப
  இருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்த்த
  அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு
  கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர்

  (சிறுபாணாற்றுப்படை - 195)

  [சிறுபுறம் - கழுத்துப் புறம்; மகடூஉ - பெண்கள்; அமலை - குவியல்]

  கடலுணவுப் பிரியர்களுக்கு இதைப் படித்தாலே எச்சில் ஊறுமே. இது மட்டுமல்ல, இன்னும் பல உணவு வகைகளையும் பல சங்கநூல்கள் சுவையாக விவரிக்கின்றன. அவற்றைப் பின்னொருதரம் பார்ப்போம். இந்த முறை நண்டுமட்டும்தான்.

  பள்ளிக்கூடத்தில் நாரைவிடு தூது படித்திருக்கிறோம். பனங்கிழங்கைப் பிளந்ததுபோல இருக்கிறது நாரையின் அலகு (பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக்கூர்வாய்) என்று சொன்ன அந்த உவமையை யாரால் மறக்கமுடியும்! நண்டுவிடு தூது படித்ததுண்டா? அகநானூறில் வருகிறது.

  காதலன் இவளுடன் இன்பம் துய்த்துவிட்டுப் போய்விட்டான். எங்கே போனான் தெரியுமா? "பெரிய உப்பங்கழிகளில் விரிந்த கண்களைப்போல நெய்தல் மலர் பூத்திருக்கிறது. அப்பூவின் வாசனையே அமிர்தம் என்று விரும்பி வண்டுகள் அவற்றின் தேனைக்குடித்துவிட்டுத் தமது சிறகுகளை அடித்து மயங்கும் ஊரில் இருக்கிறான்". யார் கண்டது, வண்டைப் போல அங்கே அவன் வேறு பெண்களிடம் இன்பம் நுகர்ந்துகொண்டிருக்கிறானோ என்னமோ, தெரியவில்லை.

  இதை நான் யாரிடம் சொல்வது? அவனுடன் நான் இன்பமாக இருந்த கடற்கரைச் சோலை சொல்லாது. உப்பங்கழியும் போய்ச் சொல்லாது. புன்னை மலர்களும் சொல்லமாட்டா. ஆகவே நண்டே, உன்னை விட்டால் எனக்கு வேறு யாரும் இல்லை.

  கானலும் கழறாது; கழியும் கூறாது;
  தேன் இமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது;
  ஒருநின் அல்லது பிறிதுயாது இலனே;
  இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல்
  கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ
  தண்தாது ஊதிய வண்டின களி சிறந்து
  பறைஇய தளரும் துறைவனை, நீயே
  சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால்
  கைதை அம் படுசினை எவ்வமொடு அசாஅம்
  கடற்சிறு காக்கை காமர் பேடையொடு
  கோட்டு மீன் வழங்கும் வேட்டமடி பறப்பின்
  வெள் இறாக் கனவு நள்ளென் யாமத்து
  நின்னுறு விழுமம் களைந்தோள்
  தன்னுறு விழுமம் நீந்துமோ எனவே!

  (அகநானூறு: பாடல்: 170)

  "சுறாமீன்கள் உலவுகின்ற இந்தக் கடலில் யாரும் மீன்பிடிக்கவும் வரவில்லை. அதற்கு அஞ்சிய கடற்காகம் தன் ஜோடியோடு தாழைமரத்தின் தாழ்ந்த கிளையில் உட்கார்ந்துகொண்டு இரண்டுமாக வெள்ளை இறால் தின்றால் எப்படி இருக்கும் என்று கனவு காண்கிறது. அப்படிப்பட்ட நடு இரவு இது.

  அவனுக்குக் காமநோயால் துன்பம் ஏற்பட்டபோது நான் தணித்தேன். இப்போது என் தனிமைத் துன்பத்தைத் தீர்க்க நீ வருவாயா என்று நண்டே! நீ கேட்டுச் சொல்" என்கிறாள் அந்தப் பெண்.

  ஞெண்டு, தலையிலி, அலவன், கவைத்தாள், நீலக்காலி என்று எத்தனையோ பெயர்களால் நண்டை அழைத்திருக்கிறார்கள். ஆனாலும் அதை ஏன் 'வானரப்பகை' என்ற பெயரால் அழைத்தார்கள் என்ற காரணம் யாருக்காவது தெரியுமா ?

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |