பாடல் 35
பெரிய வலையொன்றினுள் சிக்கிக்கொண்ட மீன்கள், எல்லாப் பக்கங்களிலும் விரைந்து ஓடி, அலைக்கழியும், எப்படியாவது அந்த வலையிலிருந்து தப்பிவிடவேண்டும் என்று போராடும்.
இயல்பான இந்தக் காட்சியை, ஒரு அழகான காதல் விவரிப்புக்கு உவமையாய்ப் பயன்படுத்துகிறது இந்தப் பாடல்.
ஒளி பொருந்திய, இலைபோன்ற வேலைக் கையிலேந்தியபடி, 'பாடலம்' என்ற கம்பீரமான குதிரையின்மேல் ஏறி, சோழன் உலா வருகிறான்.
சோழனைப் பார்ப்பதற்காக, சாலையெங்கும் மக்கள் கூடியிருக்கிறார்கள். அவனைக் கண்டதும், பலவிதமான வாழ்த்துகளை கோஷங்களாய் எழுப்பி, தங்களின் அரசனைப் போற்றுகிறார்கள்.
ஆனால், அந்த ஊரிலுள்ள பருவப் பெண்கள் எல்லோரும், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியாமல் தவிக்கிறார்கள்.
'தொடி' எனும் (வளையல்) ஆபரணத்தைக் கையில் அணிந்த அந்தப் பெண்களுக்கு, சோழனைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது - ஆனால் அதேசமயம், எல்லோர்முன்னாலும் அவனைப் பார்த்தால், காதல் மயக்கத்தில் ஏதேனும் உளறிக்கொட்டி, ஊராரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகிவிடுவோமோ என்றும் பயப்படுகிறார்கள்.
மேலும் சில தைரியசாலிப் பெண்கள், இதற்கும் துணிந்து, சாலைக்கு வருகிறார்கள் - ஆனால், அவர்களின் வேகத்தைக் கண்டு, பயந்துபோன அவர்களின் பெற்றோர், அவர்களைப் பிடித்து இழுத்து, வீட்டினுள் அடைத்துவிட்டார்கள், 'சோழனின் உலா முடிந்தபிறகுதான் உங்களுக்கு விடுதலை.', என்று அவர்களை அதட்டிவைத்திருக்கிறார்கள் அவர்கள்.
இந்தக் காரணத்தால், சோழன் உலா வரும்போது, வீதியில் இளம்பெண்கள் யாருமே இல்லை.
ஆனால், இந்தப் பெண்கள் எல்லோருமே, அவரவர் வீட்டு ஜன்னல்களுக்குப் பக்கத்தில் காத்திருக்கிறார்கள், துயரம் படர்ந்த அவர்களின் கண்கள், 'சோழன் எங்கே ? சோழன் எங்கே ?', என்று ஆவலுடன் தேடி அலைபாய்கின்றன.
இந்தக் காட்சியைக் கண்ட கவிஞர், 'வலையினுள் கெண்டை மீன்கள் துள்ளுவதுபோல், ஜன்னல் வழியே, அந்தப் பெண்களின் விழிகள் அங்குமிங்கும் அலைக்கழிந்து, சோழனைத் தேடுகின்றன.', என்று வர்ணிக்கிறார்.
சுடர்இலைவேல் சோழன்தன் பாடலம் ஏறி படர்தந்தான் பைந்தொடியார் காண தொடர்புடைய நீலவலையில் கயல்போல் பிறழுமே சாலேக வாயில்தொறும் கண்.
(இலை வேல் - இலைபோன்ற வேல் பாடலம் - குதிரை படர் - துன்பம் பைந்தொடி - பசிய வளையல்கள் கயல் - கெண்டை மீன் பிறழும் - துள்ளும் சாலேகம் - சாளரம் / சன்னல்)
பாடல் 36
கலீல் கிப்ரனின் கதை ஒன்று -
அமாவாசை நாளில், ஊரெல்லாம் மை பூசியதுபோல நன்றாக இருட்டியிருந்தது.
அப்போது, திருடன் ஒருவன், அந்த இருட்டைப் பயன்படுத்திக்கொண்டு, ஒரு கடையினுள் நுழைந்து, பணம் திருடத் தீர்மானித்தான். ஆனால், சுவரில் ஊர்ந்து, ஜன்னல் வழியே எகிறிக் குதித்தபோது, இருட்டில் வழி தவறி, பக்கத்திலிருந்த வேறொரு கடைக்குள் சென்றுவிட்டான் அந்தத் திருடன்.
அந்தக் கடை, ஒரு நெசவாளிக்குச் சொந்தமானது, அங்கே இருந்த ஒரு தறியில் இந்தத் திருடன் எக்குத்தப்பாய் மாட்டிக்கொண்டான் - இந்தக் களேபரத்தில், அந்தத் தறி, அவனுடைய ஒரு கண்ணைப் பிடுங்கிவிட்டது.
'ஐயோ, ஐயோ', என்று கத்திக்கொண்டு, அந்த நாட்டு அரசனின் சபைக்கு ஓடினான் அந்தத் திருடன், 'அநியாயமாய் என்னுடைய கண்ணைப் பறித்துவிட்டான் இந்த நெசவாளி.', என்று முறையிட்டான்.
விநோதமான இந்த வழக்கை நிதானமாய்க் கேட்ட அரசன், நெசவாளி செய்தது தவறுதான் என்று தீர்மானித்தான், 'இதற்கு தண்டனையாக, அந்த நெசவாளியின் ஒரு கண்ணைப் பிடுங்கிவிடுங்கள்.', என்று ஆணையிட்டான்.
இதைக் கேட்ட நெசவாளி, கொஞ்சமும் அதிர்ச்சியடையவில்லை. மாறாக, 'பேரரசே, இதுதான் சரியான தீர்ப்பு.', என்று வாழ்த்திப் பேசினான் அவன், 'அந்தத் திருடனுடைய ஒரு கண் பறிபோனதற்கு பதிலாக, என்னுடைய கண்ணும் போகவேண்டும் என்பதுதான் நியாயம்.' என்றான் அவன், 'ஆனால் அரசே, நான் நெய்கிற துணியில் இரண்டு பக்கங்கள் இருக்கிறதே, அந்த இரண்டு பக்கங்களையும் பார்த்து வேலை செய்வதற்கு, எனக்கு இரண்டு கண்கள் தேவைப்படுமே.'
'ஓஹோ', தாடையில் கை வைத்துக்கொண்டு யோசித்தான் அரசன், 'அதுவும் நியாயம்தான், அப்படியானால், நாம் என்ன செய்யலாம் ?'
இதற்கான யோசனையையும், அந்த நெசவாளியே சொன்னான், 'அரசே, என்னுடைய பக்கத்து வீட்டில் ஒருவன், கோவில் வாசலில் செருப்புத் தைத்துக்கொண்டிருக்கிறான் - செருப்பில் ஒரு பக்கம்தானே எப்போதும் தைக்கப்படுகிறது ? ஆகவே, அவனுக்கு ஒரு கண்ணே போதும்.'
'ஆஹா, நல்ல செய்தி' என்று உரக்கக் கூவிய அரசன், எந்தக் குற்றமும் செய்யாத அந்த செருப்புத் தைப்பவனை இழுத்துவந்து, அவனுடைய ஒரு கண்ணைப் பிடுங்கிவிட்டான்.
இப்படியாக, அந்த தேசத்தில் நீதி நிலைநாட்டப்பட்டது.
இந்தக் கதையில் சொல்வதுபோல், பல நேரங்களில், இப்படிதான் - தவறு செய்பவர்கள் யாரோ, அதற்காக தண்டனை அனுபவிக்கிறவர்கள் வேறு யாரோ என்கிற நிலைமை ஏற்பட்டுவிடுகிறது.
இங்கே பாருங்கள் - சோழனைக் கண்டு, காதல் கொண்ட ஒரு பெண், அவன் அவளைப் பிரிந்து சென்றதைத் தாளமுடியாமல், தனக்குள்ளேயும், தன் தோழிகளிடமும் பலவிதமாய்ப் புலம்பிக்கொண்டிருக்கிறாள்.
அவளுடைய பெரிய, மென்மையான தோள்கள், இப்போது மெலிந்து வாடியிருக்கின்றன, அந்தத் தோள்களை ஏக்கமாய்ப் பார்த்தபடி அவள் தனக்குள் பேசுகிறாள், 'என் காதலனாகிய உறையூர்த் தலைவன் சோழன், வீதியில் உலா வரும்போது, என்னுடைய கண்கள்தான் முதன்முதலில் அவனைப் பார்த்தன, பின்னர், என்னுடைய நல்ல நெஞ்சம் அவனோடு ஒன்றாய்க் கலந்தது.'
ஒரு நீண்ட பெருமூச்சுடன் அந்தப் பெண் தொடர்ந்து பேசுகிறாள், 'ஆனால், இப்போது அவன் என்னைப் பிரிந்து செல்லும்போது, அதற்கான தண்டனைமட்டும், என்னுடைய இந்தத் தோள்களுக்குதான் கிடைக்கிறது. என் கண்களும், நெஞ்சமும் அப்படியே இருக்க, என் தோள்கள்தான் அவனை எண்ணி, வருந்தி, மெலிந்துபோகின்றன.'
- இப்படிச் சொல்லிவிட்டு, அவள் தனது முக்கியமான சந்தேகத்தை எழுப்புகிறாள், 'என் அன்புக்குரிய தோழி, தவறு செய்த என் கண்களையும், நெஞ்சத்தையும் தண்டிக்காமல், எந்தப் பிழையும் செய்யாத என்னுடைய தோள்களை வாட்டி வருத்துவதுதான் இந்த ஊர் நியாயமா ?'
கண்டன உண்கண், கலந்தன நல்நெஞ்சம் தண்டப் படுவ தடமென்தோள் கண்டாய் உலாஅ மறுகில் உறையூர் வளவற்(கு) எலாஅம் முறைகிடந்த வாறு.
(உண் கண் - (மை) உண்ட கண்கள் தண்டப்படுவ - தண்டிக்கப்படுபவை தடமென் தோள் - பெரிய, மென்மையான தோள்கள் உலாஅ - உலா வருகின்ற மறுகு - வீதி எலா - நண்பர்களை அழைக்கும் சொல் முறை - நீதி (முறை) கிடந்தவாறு - இப்படிதான் (நீதி) நிலைநிறுத்தப்படுகிறதா ?)
|