ஆகஸ்ட் 19 2004
தராசு
பருந்துப் பார்வை
மேட்ச் பிக்சிங்
பேட்டி
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
வானவில்
பெண்ணோவியம்
வேர்கள்
க. கண்டுக்கொண்டேன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
கோடம்பாக்கம்
திரைவிமர்சனம்
ஹாலிவுட் படங்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள் : நேரில் நின்று பேசும் தெய்வம் !
  - ஜெயந்தி சங்கர்
  | Printable version |


  1950 மற்றும் 1960 களில் சிங்கப்பூரின் மக்கட்தொகை எக்குத்தப்பாக ஏறியது. இதன் காரணமாக வேலையில்லாத்திண்டாட்டம், வீடமைப்புப்பேட்டையில் நெருக்கடி, சுகாதார மற்றும் கல்விச் சேவைகளில் தொய்வு என்று இயற்கை வளம் குறைந்த சிங்கப்பூரில் பிரச்சனைகள் முளைத்தன. இதனைக்கட்டுப் படுத்த அரசாங்கம் இரண்டே குழந்தைகளைக்கொண்ட சிறுகுடும்பத்தை ஊக்குவித்தது. பிறப்பு விகிதத்தைக் குறைக்கப் பல
  குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டங்களை ஏற்படுத்தியது. எடுத்துக்காட்டாக நான்காவது மற்றும் அதற்கடுத்த குழந்தைப் பிறப்புச் செலவுகளுக்கு வருமானவரிக் கழிவு மறுக்கப்பட்டது. ஒவ்வொரு குழந்தைக்கும் பிரசவச் செலவைக் கூட்டிக்கொண்டே போனது. 1970களின் நடுவே இதனால், மக்கட் தொகைகட்டுப்பாட்டில் வந்தது. 1980 களிலோ இந்தப்போக்கு மனிதவளம் குறையக் காரணமானது. சுகாதாரச் சேவைகள் மேம்படமேம்பட இறப்புவிகிதம் பிறப்பு விகிதத்தைப்போலவே குறைந்து வந்தது.

  ஆகவே, சிங்கப்பூரின் வயாதானோரின் எண்ணிக்கை அதிகரித்து மொத்த மக்கட்தொகைக்கே வயாதாக ஆரம்பித்து விட்டது. வயதாகும் சிங்கப்பூரை மீண்டும் இளமையடையச்செய்ய அரசாங்கம் பலமுயற்சிகள் மேற்கொள்ள ஆரம்பித்தது. ஒரே தாய் தன் பத்து பிள்ளைகளைப் பராமரிக்க முடியும்போது, ஏன் அந்தப்பத்து பிள்ளைகள் ஒரே தாயைப் பராமரிக்கமுடியாது போகிறது? இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் சுவாரஸ்யமான இந்தச் சுவாரஸ்யமான கேள்வி சிங்கப்பூரில் எழுப்பப்பட்டது.

  தாய்தந்தை அல்லது மாமனார் மாமியார் போன்ற பெரியவர்களையும் பார்த்துக்கொண்டு தன் குழந்தைகுடும்பம் என்று கவனம் செலுத்துவது பெண்களின் தலையாய சவாலாகியிருக்கிறது. இவ்வாறு 'சான்விச்' போல ஆபீஸ் வீடு என்று அல்லாடும் பெண்களுக்கு ஆபீஸில் லீவெடுப்பது என்பது தவிர்க்கமுடிவதில்லை.

  இதனால் நிறுவனத்தின் உற்பத்தி பாதிக்கிறது. முதலாளிகளோ மாற்று ஏற்பாடுகள் செய்யத் திண்டாடுகிறார்கள். பிரசவவிடுப்பு எடுக்கும் பெண்பணிகளுக்கோ கேட்கவே வேண்டாம். நீண்ட விடுப்பு அத்தியாவசியமாகிறது. இதெல்லாம் ஆண்களுக்கு இல்லையா என்றால், இருக்கும். ஆனால், பெண்களுக்கு அதிகம் இருக்கிறது. இந்தத் திண்டாட்டங்களில் சிக்கித் தவிக்கும் பெண்மணிகளைப்பார்க்கும்போது இளம்பெண்கள் திருமணம் செய்தாலும் பிள்ளைபெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போடவே பார்க்கிறார்கள்.

  குழனினிது யாழினிது என்றார் வள்ளுவர். ஆனால், குழலையும் யாழையும் பார்க்கவோ கேட்கவோ சிங்கையின் பெரும்பான்மையான மக்களுக்கு நேரமிருப்பதில்லை. மழலைச்சொல் கேட்கவும் தான். பிறகல்லவோ ஒப்பிட்டுப்பார்க்கவும் 'தம் மக்கள்' மழலைச்சொல்லா, பிறன் மக்கள் மழலைச்சொல்லா என்றெல்லாம் ஆராயவும் முடியும். ஓட்டம், ஓட்டம், ஓட்டம் ஒரே ஓட்டம்,.. பொருள் தேடியோடிக்கொண்டே இருக்கிறார்கள். தேடிச்சேர்த்த பொருளைப் பொருள்படவாழ உபயோகிப்பவர் மிகக் குறைவு. ஒரு மாற்றம் தேவையானால், நாய் வளர்க்கத்துணியும் இந்தமக்கள் குழந்தைபெற்றுக்கொள்ளத்துணிவது இல்லை. அதற்குக்காரணங்கள் ஏராளம் இவர்களிடத்தில். நாளிதழின் மன்றத்தில் ஓர் ஆண், குழந்தை பெறவிருக்கும் யோசனையைத் தான் தள்ளிப்போடுவதற்குக் கூறும் காரணம் என்ன தெரியுமா?! அவரது வீடிருக்கும் புதிய பேட்டையில் உணவகங்கள் (Hawker Centres) 10-15 நிமிடத்தொலைவில் இருக்கிறதாம். தம்பதியர் இருவருக்கும் சமைக்கத்தெரியாதாம். ஆகவே பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போட்டிருக்கிறார்களாம். இதைச்சிலர் மறுத்தும் இசைந்தும் எழுதித்தள்ளினர் 2004 ஜூன் மாதத்தொடக்கத்தில்.

  இவ்வருடம் மே மாதம் அரசாங்கம் அறிவித்தது : How to have more babies: a practical guide for Singapore soon! சிரிப்புவருகிறதா?! இளம் குடும்பங்கள் மேலும் உருவாக குடிமக்களுக்கு என்னென்ன தேவையோ அத்தனையும் அடங்கிய பரிந்துரைகள் சீக்கிரமே கொடுக்கப்படவுள்ளன. வேலைக்குப்போகும் இளம்தாய் குழந்தைக்கும் குடும்பத்துக்கும் வேலையின் நடுவே தன் நேரத்தை எப்படிச் சமாளிப்பது, வளரும் குழந்தையைப் பராமரிக்க உதவி, அவனின் கல்விக்கும் உதவி, என்று நீண்ட பட்டியல். பிரசவ விடுப்பு பற்றிய கவலைமட்டுமில்லாமல் பெண்களுக்கு அதன் பின் வரும் சிலவருடங்களின் கவலை அதிகமாக இருக்கிறது. வேலையை விடத்துணியாமல் பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போட்டுவிடுகிறார்கள். இதுமட்டுமல்ல, சிலர் தங்கள் வயதான பெற்றோரை உடன் வைத்துக்கொண்டு குழந்தைகளைப் பராமரிக்கிறார்கள். மற்ற சிலரோ அவர்களை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு குழந்தைகளைக்காப்பகங்களில் விட்டுவிட்டு வேலைக்குப் போகிறார்கள்.

  வசதியிருப்போர் பணிப்பெண் அமர்த்திக்கொள்கிறார்கள். பணிப்பெண்ணால் வரும் பிரச்சனைகளைத் தவிர்க்க நினைப்பவரும் இருக்கிறார்கள். எங்கள் வட்டாரத்தில் இருக்கும் ஒரு சீனக்குடும்பத்தில் நான்கு வருடங்கள் ஒரே பணிப்பெண் இருந்தாள். அவர்களது இளையமகன் பிறந்தபோது வந்தவள், சிறுவன் தாய் ஆபீஸ் போகும் போது அழுததேயில்லை. இவள் வேலை அனுமதிமுடிந்துபோகிறாள் என்றபோது நாள் கணக்கில் அழுதிருக்கிறான். அதுமட்டுமல்ல, இருந்தால் அவளே இருக்கட்டும் இல்லையென்றால் நீ வேலையைவிட்டுவிட்டு வீட்டில் இரு என்றே வேறு எந்தப்பணிப்பெண்ணுடனும் இருக்க மாட்டேன் என்று ஒரே அடம். மனமேயில்லாமல் தன் வேலையை விட்டார் அந்தத்தாய். தாத்தாபாட்டி வீட்டிற்கு வாரநாட்களிலும் பெற்றோர் வீட்டிற்கு வாரயிறுதிலும் சென்றுதிரும்பும் பிள்ளைகளும் நிறையபேர்.

  இவ்வருடம் ஜூலை 20தான் தேதி வந்த நாளிதழ்செய்தியின்படி சிறந்த குழந்தைக்காப்பகச் சேவை, சிறு குழந்தைகளின் வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு சம்பளத்துடனான விடுப்பெடுக்கும் வசதிகள், வேலைநேரத்தில் சிற்சில மாற்றங்கள் தவிர குழந்தை தத்தெடுக்கும் விதிமுறைகளை இலகுவாக்கும் மாற்றங்கள் கூட மக்கட்தொகையில் ஏற்றத்தைக் கொண்டுவரமுடியும் என்று பெண்களுக்கான AWARE என்ற தொண்டுநிறுவன மேலாளர் யோசனை கூறியுள்ளார்.

  இதற்கிடையில், ஜூன் 12ஆம் தேதி நடந்த ஒரு சம்பவம் முற்றிலும் முரணானது. சிலதினங்களிலேயே நிர்வாகிகள் உடனடி நடவடிக்கையாக மன்னிப்பும் உற்சாகவார்த்தைகளும் தெரிவித்தனரென்றாலும் நடந்த விஷயம் சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டது உண்மை. இவ்வட்டாரத்தின் பழங்களின் ராணியைத்தெரியுமா?

  அதுதான் டுரியான்! பலாப்பழத்தைப்போல முட்களோடு சற்றே சிறிய சைசில் உள்ளே பலாச்சுளைகளைவிடப்பெரிய இளம் மஞ்சள் சுளைகளோடு இருக்கும்.

  சிலருக்கு அதன் வாசனை பிடிக்கவே பிடிக்காது. அதைப்பொறுத்துக்கொண்டு ஒரு சுளை சாப்பிட்டுவிட்டால்,  அந்தச்சுவைக்கு அடிமையாகி விடுவோம் என்று சொல்வார்கள். தென்கிழக்காசியா வட்டாரத்தில் பிரபலமாக இருக்கும் 'டுரியான்' பழவடிவில் 'எஸ்ப்லனேட்' என்ற பெரிய கட்டடம் ஒன்று சமீபத்தில்தான் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. அங்கு பகட்டான அரங்குகள் பலவுண்டு. கலைவிழா நடந்தது. அங்காடிகளும் இருக்கின்றன. ஒரு கிளை நூலகம் வேறு.

  ஒரு பெண்மணி தன் மூன்று மாத மகளுடன் அந்த வளாகத்தில் நவீன பொம்மலாட்டம் ஒன்றைக்கண்டுகளித்துவிட்டு நான்கு மணியளவில் குழந்தைக்குப் பால் கொடுக்கவென்று ஒரு தனித்தமூலையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்திருக்கிறார். அவர் குழந்தைக்குப்பாலூட்டவென்றே பிரத்யேக உடையணிந்துசென்றிருந்தார்.

  குழந்தையோடு அப்படியே ஒரு சிறு போர்வைகொண்டு போர்த்திக்கொண்டார் கடந்துசென்றவர்களும் அவரவர் வேலைப்பார்த்துக்கொண்டு போனபடியிருந்தனர். இருந்தாலும் செக்யூரிட்டி கார்ட் ஒருவர் அப்போது திடீரென்று ஆஜராகி 'மற்ற நுகர்வோர்களின் அசௌகரியம் கருதி' அங்கிருந்து அந்தப்பெண்ணை அகற்ற முயன்றாராம். கட்டடத்தின் வெளியே சென்று பாலூட்டச்சொன்னாராம். அவர் அவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தபோது தான் கடந்துசென்றவர்கள் கூட நின்று பார்த்திருக்கிறார்கள் அவர்களது உரையாடலை. அந்தப் பெண்மணி ஒரு மருத்துவர். அவர் குழந்தையின் பசியடங்கும் வரை அங்கேயேயிருந்தாராம். பிறகுதான் இடத்தை விட்டகன்றிருக்கிறார். இத்தக்கைய தாய்மார்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த நர்சரி அன்று வேறு ஏதோ நடவடிக்கைக்கு உபயோகித்திருக்கின்றனர்.

  பொருமித்தீர்த்துவிட்டார் நாளிதழ் மன்றத்தில். உச்சத்தவிர மிச்சத்தையெல்லாம் ரயிலிலும் பொதுவிடங்களிலும் ஜோடிகள் செயலிலறியமுயலும்போதும், அரைமீட்டர் ஆடையணிந்து நடமாடும்போதும் மற்றவர் 'கவனத்தை' ஈர்க்கவில்லையோ? எதிர்கால இளம்தாய்மார்களும்கூட தாய்ப்பால்கொடுக்க யோசிக்கவைக்கும் இத்தகைய செயல்கள் தாய்மையைக் கொச்சைப்படுத்துகிறது. அந்த மருத்துவரின் ஆதங்கம் குழந்தை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படும் அதே நேரத்தில் தாய்சேய் இருவருக்குமான அடிப்படைத் தேவைகளுக்கும் பராமரிப்புக்கும் இடையூறு செய்யும் இத்தகைய செயல்களும் நடக்கின்றதே என்பதுதான்.

  நியாயம் தானே!

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |