ஆகஸ்ட் 24 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பாடல்களால் ஒரு பாலம் : வசந்தங்கள் வாழ்த்த
- அபுல் கலாம் ஆசாத் [azad_ak@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

தமிழில்.

திரைப்படம்: நினத்ததை முடிப்பவன்
பாடலாசிரியர்: புலமைப்பித்தன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
திரையில்: எம்.ஜி.ஆர்.

இந்தியில்.

திரைப்படம்: சச்சா ஜூட்டா
பாடலாசிரியர்: இந்தீவர்
இசை: கல்யாண்ஜி ஆனந்த்ஜி
பாடியவர்: கிஷோர் குமார்
திரையில்: ராஜேஷ் கன்னா

MSVசென்னை அண்ணா சாலையில் அண்ணா சிலையின் தென்புறமாக ஒரு குறுகிய சாலை பிரியும். எல்லீஸ் சாலை என்பது அதன் பெயர். அதில் திருமண ஊர்வல பேண்ட் (Band) கோஷ்டிகளின் கடைகள் வரிசையாக இருக்கும். ஸ்டார் பேண்ட், குலாப் பேண்ட், பஞ்சாப் குலாப் பேண்ட் என கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் விளம்பரப் பலகை எழுதிவைத்திருப்பார்கள். அழுத்தமான வண்ணத்தில் அவர்கள் அணியும் சீருடைகள் திரைப்படங்களில் வரும் வெள்ளைக்கார சிப்பாய்களை நினைவுபடுத்தும். மாப்பிள்ளை ஊர்வலத்தில் வாசிக்கும் பாடல்கள் பெரும்பாலும் பிரபலமான இந்திப் பாடல்களாகவே இருக்கும்.

அந்த வாத்தியக் கோஷ்டிகளுக்கு வரப்பிரசாதமாக ஓர் இந்திப் பாடல் வந்ததென்றால் அது 'மேரி ப்யாரி பெஹனியா பனேகி துல்ஹனியா'தான். இந்தப் பாடல் வெளியான நாள்முதலாக இன்றுவரையில் எல்லா மாப்பிள்ளை ஊர்வலங்களிலும் இதனை வாசிப்பதை சம்பிரதாயமாக ஆக்கிவைத்திருக்கிறார்கள்.

அதற்கு முக்கியமான காரணங்கள், பாடலின் இசையமைப்பும் பின்னணியும். திரைப்படத்தில் பாடலின் இசை வடக்கே 'பாராத்' என்றழைக்கப்படும் திருமண ஊர்வலங்களில் வாசிக்கப்படும் இசைக்கருவிகளைக் கொண்டு அமைக்கப்பட்டது. க்ளாரினெட் பிரதானமான வாத்தியமாக உபயோகிக்கப்பட்டு, உடன்வரும் பின்னணி இசையில் கெட்டில் ட்ரம்மின் (kettle drum) ஒலி கூடுதலாக இருக்கும். பாடலின் மெட்டையே அவர்கள் வாசித்தபோதும் கேட்போர் மனதில் தானாக வரிகள் ஓடுகின்ற அளவிற்கு பாடல் பிரபலமாகி இருந்தது.


தங்கையின் திருமணச் செலவுகளுக்காகப் பணம் சேர்க்க தனது ஊரைவிட்டு பட்டணத்திற்கு பிழைப்புக்காக வருகிரான் அண்ணன். அண்ணனுக்குத் தெரிந்ததெல்லாம் திருமண ஊர்வலத்தில் இசைக்கருவி வாசிப்பதுதான். பட்டணத்திற்கு வந்து நாள்களாகியும் எங்கும் வேலை கிடைக்காமல் சுற்றியலைகிறான். அந்த வேளையில் திருமண ஊர்வலம் ஒன்றைப் பார்க்கிறான். மணமகனும் மணமகளும் அருகருகே அமர்ந்திருக்க ஊர்வலம் அவனைக் கடந்து போகின்றது.

எப்பொழுதும் தங்கையின் திருமணத்தையே நினைத்துக்கொண்டிருக்கும் அண்ணனுக்கு ஊர்வலத்தில் மணமகளாக அமர்ந்திருக்கும் பெண்ணைத் தன் தங்கையாக நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. ஒரு நிமிடம் தங்கையின் மணக்கோலம் கற்பனையில் தோன்ற, ஊர்வலத்தில் தான் பாடத்துவங்குகின்றான்.

மேரி ப்யாரி பெஹனியா பனேகி துல்ஹனியா
சஜ்கே ஆயேகா தூலே ராஜா
பையா ராஜா பஜாயேகா பாஜா

அன்புத் தங்கை இப்போது மணப்பெண்ணாகும் நேரம்
ஒரு ராஜாதி ராஜன் வரும் நேரம்
அண்ணன் பாடும் சங்கீதத்தில் பாசம்

அண்ணன் தங்க பாசத்தில் பிறந்த திரைப்பாடல்கள் நம்மிடையே பல உண்டு. மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாளில் (பாசமலர்) துவங்கி, கல்யாண சாப்பாடு போடவா (மேஜர் சந்திரகாந்த்) வந்து, பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலியைச் சொல்லி (நெஞ்சிருக்கும் வரை), ஒரு தங்கரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு (தர்ம யுத்தம்) வழியாக, கிழக்குச் சீமை வரையில் பல பாடல்களை உதாரணமாகக் காட்டலாம்.

புலமைப்பித்தனின் வரிகளில், டி.எம்.எஸ்சின் குரலில், எம்.எஸ்.வியின் இசையமைப்பில் கல்யாண ஊர்வலத்தை நடத்திக் காட்டும் இந்தப் பாடலின் இசையமைப்பும் இந்தியைப் போலவே பாராத்தில் (ஊர்வலத்தில்) ஒலிக்கும் இசைக் கருவிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். இந்தியிலிருந்து தமிழுக்கு மாற்றப்பட்ட போதும் தன்மை மாறாமல் ஒலித்த பாடல்களுள் இதுவும் ஒன்று.

எம்.ஜி.ஆரின் பாடல் வரிகள் பெரும்பாலும் கதாபாத்திரத்தின் தன்மைக்கும் வெளியே சென்று அவரது பொதுவாழ்வை உரத்து ஒலிக்கும் வரிகளாக அமையும். அண்ணன் தங்கை பாசத்தைச் சொல்லும் இந்தப் பாடலும் அதற்கு விதிவிலக்கன்று. 'என் அண்ணாவை ஒரு நாளும்' என்ற வரிகளை மட்டும் இரண்டுமுறை பாடவைத்திருப்பார்கள். மற்ற சரணங்களில் இதற்கு இணையான வரிகளான 'தோழி அத்தானைப் பாரென்று', 'ஒரு பதினாறும்தான் பெற்று' ஆகிய இரண்டும் ஒருமுறைதான் பாடப்படும். 

பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது - எழில்
பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில்
குங்குமம் சிரிக்கின்றது - மங்கல
குங்குமம் சிரிக்கின்றது

கச்சேரி மேளங்கள் வேடிக்கை வாணங்கள்
ஊரெங்கும் கொண்டாட்டமா - உனைக்
கண்டோர்கள் கண்பட்டு போகின்ற எழிலோடு
சிங்காரத் தேரோட்டமா
தோழி அத்தானைப் பாரென்று உனைக் கிள்ள
முகம் நாணத்தில் செந்தூர நிறங்கொள்ள!

(பூமழை)

வெண்சங்குக் கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட
நான் கண்ட பொருள் கூறவா - என்
அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது
என்றாடும் இதமல்லவா-
நீ வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே
என உனைக்கொண்ட மணவாளன் தினம் பாட!

(பூமழை)

கால்பட்ட இடமெல்லாம் மலராக கைபட்ட
பொருளெல்லாம் பொன்னாகணும் - உன்
கண்பட்டு வழிகின்ற நீரெல்லாம் ஆனந்தக்
கண்ணீரே என்றாகணும்
ஒரு பதினாறும்தான் பெற்று நீ வாழ
அதைப் பார்க்கின்ற என்னுள்ளம் தாயாக!

இந்திப் பதிப்பில் இருப்பதைப் போலவே தமிழிலும் பாடல் வரிகளில் மணப்பெண்ணின் அலங்காரத்தையும் அண்ணனின் பாசத்தையும் பாடும். ஆனால் இந்தியில் கூடுதலாக அண்ணனின் உழைப்பைச் சொல்லி, மாப்பிள்ளை இலட்சத்தில் ஒருவரென்று புகழ்ந்து முதல் சரணம் அமைந்திருக்கும்.

அப்னே பசீனேகோ மோத்தி கர்தூங்கா
மோத்தியோன்ஸே பெஹனாகி மாங் பர்தூங்கா
ஆயேகி பாராத் தேக்கேகி சாரி துனியா
ஹோங்கே லாக்கோன்மே ஏக் தூலே ராஜா
பையா ராஜா பஜாயேகா பாஜா

வேர்வைத் துளியால் நான் முத்து சேர்த்து வைப்பேன்
சேர்த்து வைத்த முத்துக்களால் மணமாலை தொடுப்பேன்
ஊரெல்லாம் வியக்க ஊர்வலம் நடக்கும்
கோடியிலே ஒன்றாக ராஜன் வரும் நேரம்
அண்ணன் பாடும் சங்கீதத்தில் பாசம்!

பாசத்தை வடித்துக்கொடுத்த புலமைப்பித்தன், எம்.ஜி.ஆர். பாடலுக்க்காக பக்தியையும் வடித்துக்கொடுத்த பாடலை அடுத்த வாரம் பார்க்கலாம்.

| | |
oooOooo
அபுல் கலாம் ஆசாத் அவர்களின் இதர படைப்புகள்.   பாடல்களால் ஒரு பாலம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |