ஆகஸ்ட் 24 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறப்பு ஆசிரியர் : சமையல் - ஒரு குறிப்பு
- பொன்ஸ்
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

உணவு மட்டுமல்ல, பெண்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் இதைப் பொறுத்திப் பார்க்கலாம்.

சமையல் செய்வது ஒரு கலை. எல்லாவற்றையும் போல, நான் இதிலும் அரைகுறை தான். சமையலையும் அதி வேகமாகச் செய்துவிட்டு அப்புறம் டைனிங் டேபிள் மீது வைத்து உப்பு பார்ப்பதில் எனக்கு நிகர் நான் தான்.

அம்மாவிடமும், சமைத்துப் பார் புத்தகங்களுடனும் முட்டி மோதியதை விட, கையில் கிடைத்த எல்லா காயையும், மசாலாக்களையும் போட்டு இஷ்டத்துக்குச் சமைத்துவிட்டுப் பின்னர் சாப்பிட்டுப் பார்த்து பெயர் வைப்பது என் வழக்கமான வழக்கம். இப்படிப்பட்ட என்னைத் தவிர, சமையலைப் பற்றிய சிறுகுறிப்பை, யாரால் நன்றாக எழுத முடியும்?
பெண்கள் பொதுவாக சமையல் செய்வது பிறருக்காகத் தான் என்பது காலம் காலமாக நம் கலாச்சாரத்தில் கலந்துவிட்ட ஒரு வழக்கம். என் அம்மா முதல் என் அறைத் தோழிகள் வரை, தனியாக தனக்காக மட்டும் சமைக்க நேரும் நாட்களில், சமையல் செய்ததை விட இருக்கும் பொடி, ஊறுகாய் வகையறாக்களை வைத்து சமைத்ததாக பேர் பண்ணியது தான் அதிகம் பார்த்திருக்கிறேன்.

"ஏம்மா இந்தக் கீரையைக் கூட்டா செய்திருக்க? சாம்பார் வச்சா தானே உனக்குப் பிடிக்கும்"  என்றால், "அப்பாவுக்கு இப்படித் தான் பிடிக்கும்டீ" என்பதிலிருந்து, அப்பாவுக்கு, பாட்டிக்கு, "எங்க பம்மிக்கு வெண்டைக்காய் பொறியல் ஆகவே ஆகாது" என்று சொல்லிச் சொல்லி பழக்குவதில், எப்போதும் சமையல் பொறுப்பில் இருக்கும்  வீட்டுத் தலைவிக்கும், பிடிக்கக் கூடிய உணவு என்று ஒன்று இருக்கக்கூடும் என்பதும், எல்லாருக்கும் பார்த்துப் பார்த்துச் செய்யும் இல்லத்தலைவியின் உணவுப் பழக்கத்தையும் யாராவது கண்காணிக்க வேண்டும் என்னும் உணர்வோ இல்லாமலே போய்விடுகிறது.

எனக்குத் தெரிந்த ஒரு கூட்டுக் குடும்பத்தின் முதல் மருமகள், அந்த வீட்டின் அச்சாணி. 'சின்ன மச்சினனுக்கு இது பிடிக்கும்', 'பெரிய மச்சினனின் மகன் மால்டோவாவில் அதிக சக்கரை போட்டுக் கொள்வான்' என்பதில் இருந்து வீட்டின் நாய், பூனை வரை யாருக்கு என்ன வேண்டும் என்று அந்தந்த நேரத்துக்கு எடுத்துக் கொடுப்பவர் அவர். ஓரிரு நாள் தங்கிய எனக்கே காப்பி கொஞ்சம் அதிக கலருடன் இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து செய்து கொடுத்தவர். ரொம்ப சின்ன வயதில் மூளையில் ஏதோ பிரச்சனையாகி, பெயர் தெரியாத ஒரு நோயில், நோயின் அறிகுறிகளே புலப்படாத நிலையில் திடீர் மரணத்தைத் தழுவினார்.

இறந்த பின் பொறுமையாக வந்தன காரணங்கள்.. ஒரு வருடத்துக்கு முன்னேயே, பெங்களூரில் ஏதோ கல்யாணத்தில் கலந்து கொள்ளப் போயிருந்த காலத்தில் மயங்கி விழுந்ததாகவும், சமாளித்து எழுந்துவிட்டதால் வீட்டினரிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்னதாகவும் மாமியார் சொல்ல, தினசரி காலை உணவே சாப்பிடாமல், மதியம் இரண்டு மணிக்கு மேல் கணவனுடன் உட்கார்ந்து சாப்பிடுவது தான் முதல் க்ளாஸ் பச்சைத் தண்ணி என்று மகன் தன் புதுக் கண்டுபிடிப்பைச் சொல்ல, 'எல்லாவற்றுக்கும் காரணம் தானே' என்று அந்தக் குடும்பத்தின் மூத்த மகன் வருத்தமாகி கிட்டத் தட்ட தேவதாஸ் நிலைக்குப் போய்விட, இன்று கவனிக்க யாருமில்லாமல், தாயை இழந்த கிட்டத்தட்ட தந்தையையும் இழந்த நிலையில் அவர்கள் மகன்!

இதற்கு யார் காரணம் என்றால், எனக்குத் தெரிந்து அந்தப் பெண் தான். குடும்பத்தைக் கவனிக்கிறேன் என்றால், தன்னைக் கவனிக்காமல் விடுவது என்று சொல்லிக் கொடுத்தவர்களை முதலில் நிற்க வைத்து உதைக்க வேண்டும். பாசத்துக்கும் அன்புக்கும் ஆதாரமே தியாகம் தான் என்று சொல்லும் நம் புராணங்களையும் பழங்கதைகளையும் கூட இன்றைய இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணம் என்று சொல்லலாம்.

சாப்பிடுவதற்கு ஒரு ஆள் இல்லை என்றால், சமைக்கக் கூடாதா என்ன?  மற்ற நேரங்களை விட, "இது தான் சாப்பிடுவேன், அது பிடிக்காது" என்று சொல்லும் நண்பர்கள்/ உறவினர்கள் இல்லாத நாட்களில் தனக்குப் பிடித்ததை, பிடித்த வகையில் சமைத்து நிம்மதியாகச் சாப்பிடலாமே!  பிறருக்காக சமைக்கும் போதும், தனக்குப் பிடித்த, அவர்களுக்குப் பிடிக்காத உணவு வகைகளையும் செய்து,  தான் மட்டும் சாப்பிடுவதால் என்ன பாசம் குறையப் போகிறது?

உணவு மட்டுமல்ல, பெண்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் இதைப் பொறுத்திப் பார்க்கலாம். குடும்பத்தைப் பேணுவது பெண்ணின் தலையாய கடமை என்றால், தன்னைப் பேணுவதும் அதில் அடக்கம் தான். முதலில் தன்னைப் பார்த்து தன்னை நல்ல படியாக வைத்திருக்கும் பெண் தான் பிறரையும் நல்லபடியாகப் பேணிப் பராமரிக்க முடியும்.

இன்றைய சூழ்நிலையில் வேலைக்குப் போகும் பெண்கள் தன்னையும் கவனித்துத் தயாராகிப் பிறரையும் கவனிக்கும் போது, இந்த தியாக மனப்பான்மையை ஒத்திவைத்து விட்டு ஓரளவுக்கு திருந்திவிட்ட போதும், உடன் பணி புரியும் ஒரு சில தோழிகளைப் பார்க்கும் போது இது விஷயத்தில் நாம் மாற வேண்டியது இன்னும் மிக மிக அதிகம் என்றே தோன்றுகிறது.


| | |
oooOooo
பொன்ஸ் அவர்களின் இதர படைப்புகள்.   சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |