இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
கட்டுரை
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
கேள்விக்கென்ன பதில் ?
திரைவிமர்சனம்
அடடே !!
சிறுகதை
இந்து மதம் என்ன சொல்கிறது ?
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
முச்சந்தி : விலகல்
- என். சொக்கன் [nchokkan@gmail.com]
| Printable version | URL |
"'இந்த வலி போதும். இனிமேல் நான் சம்பளக்காரனாகவே இருந்துவிடுகிறேன்'"

அந்தக் கூட்டம் சற்றே சிநேகமற்ற சூழலில் தொடங்கியது.

நிச்சயம் வருவதாகச் சொல்லியிருந்தவர்களில் பாதிப் பேர் தாமதம், அவர்கள் வருவதற்குள், மீதியிருந்தவர்கள் பானி பூரியும், பெசரெட்டுமாகத் தின்றுமுடித்து ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தார்கள்.

மிச்சமிருப்பவர்கள் வந்து சேர்ந்ததும், மீண்டும் ஒரு சுற்று குளிர்பானங்களுக்கும், நொறுக்குத் தீனிகளுக்கும் சொன்னோம். அவரவர்களுடைய சமீபத்திய பணி அழுத்தங்கள், சொந்த அனுபவங்கள், திருமணம் நிச்சயமாகியிருந்த ஒருவனைச் சீண்டல் ஆகியவற்றால் நிரம்பிய அந்தக் கூட்டம், என்னில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்கிற பாசாங்கினுள் ஒளிந்துகொண்டிருந்தது.

உண்மையில் அன்று விவாதிக்கப்படவிருந்த விஷயம், அந்த மேஜையிலிருந்த எல்லோருடைய எதிர்காலத்தையும் தீர்மானிக்கக்கூடியது. ஆனால், அதுபற்றிப் பேசுவதற்கு யாரும் விரும்பவில்லை. ஆகவே, யாரும் அந்தப் பேச்சைத் தொடங்கவில்லை.

எங்களுடைய சிறிய நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரர்களில் ஒருவர், மூத்த மேலாளர் அடுத்த மாதம் விலகுகிறார். அதுபற்றிப் பேசுவதற்காகதான் இந்தக் கூட்டம். அலுவலகத்தில் பேசினால், அந்த இறுக்கம் சரிப்படாது என்றுதான் வெளியே ஒரு பிரபல உணவகத்தில் கூடியிருந்தோம்.

விலகுவதாக முடிவெடுத்திருந்தவர், ஓர நாற்காலியில் சிரித்தபடி அமர்ந்திருந்தார், உண்மையில், எங்கள் அனைவரையும் இந்த நிறுவனத்தில் ஒன்றுசேர்த்தவர் அவர்தான். ஆகவே, அவர் விலகவிருக்கிறார் என்னும் முடிவு, எங்களுக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சியையும், பிறகு ஆத்திரத்தையும் மூட்டியிருந்தது.

காரணம், இன்றைய தேதிக்கு, திறமையுள்ள ஓர் இளைஞன், இதுபோன்ற ஒன்றரையணா கம்பெனியில் வேலை செய்யவேண்டிய அவசியமே எதுவும் இல்லை. பெப்பெரிய நிறுவனங்கள், இதைவிட அதிக சம்பளத்துக்கு வெற்றிலை பாக்கு வைத்துக் கூப்பிடத் தயாராக இருக்கிறார்கள்.

ஆனாலும், நாங்கள் எல்லோரும் இவர் ஒருவரை நம்பிதான் இந்த நிறுவனத்தில் சேர்ந்திருந்தோம். அவரது தொலைநோக்குப் பார்வை, வழிநடத்துதலில் இந்த நிறுவனத்தோடு நாங்களும் வளர்வோம் என்கிற நம்பிக்கை இருந்தது, இருக்கிறது.

இப்போது, அவர் விலகத் தீர்மானித்திருந்தார். அதற்கான காரணங்களாக அவர் பட்டியலிட்டிருப்பவை யாவும், அர்த்தமற்ற பூசி மெழுகும் முயற்சிகளாகவே எங்களுக்குத் தோன்றின.

இதனால், எங்களுக்குள் ஒரு சந்தேகம் பரவியிருந்தது. சமீபத்தில் எங்கள் நிறுவனம் சார்பாக, மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்தார் அவர். இப்போது, அந்தக் கம்பெனியிலேயே அதிக சம்பளம் கொடுத்து அவரை அழைக்கிறார்கள், அதனால்தான் எங்களை அந்தரத்தில் விட்டுச் சென்றுவிடப்போகிறார் என்பதாக வதந்தி.

ஒருவரையொருவர் நன்கு அறிந்த சிறு குழுக்களில்கூட இதுபோன்ற வதந்திகளைத் தவிர்க்கமுடிவதில்லை. ஆகவே, எது உண்மை என்பதையும், அவருடைய விலகல் முடிவை மாற்றுவதற்கு எங்களால் என்ன செய்யமுடியும் என்பதையும் தெரிந்துகொள்ள அன்று கூடியிருந்தோம்.

ஆனால், நாங்கள் பேசத் தொடங்கி, சுமார் ஒரு மணி நேரம்வரை, பொதுவான உற்சாகப் பேச்சுகள்தான் உலவின. யாரும் அந்தக் குறிப்பிட்ட விஷயத்தைப் பேசத் தொடங்கவில்லை.

ஒருவழியாக, எல்லோரும் சாப்பிட்டு முடித்து, கைகளைக் காகிதத் துவாலையில் துடைத்துக்கொண்டானபின், யாரோ தொண்டையைச் செருமியபடி, அவரிடம் இதுபற்றிக் கேட்டார்கள்.

அவர் முன்பு எங்களிடம் சொன்ன அதே வார்த்தைகளை மீண்டும் சொன்னார், 'நான் விலகுவது என்னுடைய சொந்த முடிவு. இந்த நிறுவனத்தின் இப்போதைய பொருளாதார நிலைமையும், லாப நஷ்டக் கணக்கும் நன்றாகவே இருக்கிறது. ஆகவே, நான் பயந்து ஓடுகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்'

இந்த விளக்கத்தில் எங்களுக்குத் திருப்தி ஏற்படவில்லை. எங்களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்த அவருக்கு, இந்த விஷயத்தில் கூடுதல் பொறுப்பு இருக்கவேண்டும் என்று வாதிட்டோம். 'உங்களை நம்பியே நாங்கள் இங்கே வந்தோம், இப்போது நீங்கள் விலகுவதானால், நாங்களும் எங்காவது போய்விடுவதாக உத்தேசம்' என்று உணர்ச்சிவேகத்தில் சொன்னான் ஒருவன்.

நாங்கள் அவரை தர்மசங்கடப்படுத்துவதாகவும், குற்றவுணர்ச்சியினுள் தள்ளுவதாகவும் அவர் வருந்திச் சொன்னார், 'இரண்டு வருடங்களுக்குமுன், உங்களை இங்கே அழைத்தபோது இருந்த சூழ்நிலை வேறு. இப்போது உள்ள சூழ்நிலை வேறு', என்றார்.

இதுவும் மழுப்பலான பதில்தான் என்று சிலர் நேரடியாகச் சொன்னார்கள். அவருக்கு என்ன பிரச்சனை என்று தெளிவாகத் தெரிந்தாலொழிய, இந்த விஷயத்தில் அவர் எடுத்திருக்கும் முடிவை நாங்கள் முழுமனதோடு ஏற்பதற்கில்லை என்றேன் நான்.

அவர் சிறிது நேரம் மௌனமாகத் தட்டில் ஐஸ்க்ரீமைக் கிளறிக்கொண்டிருந்தார். தன்னால் வேலைக்குச் சேர்க்கப்பட்டு, தனக்குக் கீழே பணிபுரிந்தவர்கள், இப்போது தன்னை உட்காரவைத்துக் கேள்வி கேட்கிறார்களே என்கிற வேதனை அவருக்கு இருந்திருக்கலாம். ஆனால், இதுபோன்ற சிறிய நிறுவனத்துக்கு எங்களை வற்புறுத்தி அழைத்தவர் என்றமுறையில், இந்தக் கேள்விகளை உதறிவிட்டு வெளியேறிவிடுவது அவரால் முடியாது. ஏனெனில், இயல்பில் அவர் ரொம்ப நல்ல, பண்பான மனிதர்.

ஆகவே, அவர் இப்படி திடீரென்று விலகுகிறாரே என்கிற கோபத்தையும் தாண்டி, அவருடைய பிரச்சனை என்ன என்று தெரிந்துகொள்கிற அக்கறையும், அதற்கு எங்களால் முடிந்ததைச் செய்து, அவரை இங்கேயே தொடரச்செய்யவேண்டும் என்கிற ஆர்வமும் எங்கள் எல்லோருக்கும் இருந்தது.

இதற்கு முக்கியமான காரணம், அவரை முன்னோடியாக அல்லது வழிகாட்டியாக நினைத்துப் பின்னால் சென்றுகொண்டிருந்த எங்களுக்கு, அவர் இல்லாத அலுவலகமொன்றைக் கற்பனையிலும் பார்க்கமுடியவில்லை. அதற்காக வேறு கம்பெனிக்கு மாறிவிடலாம் என்றால், அது சுலபமான விஷயம்தான். ஆனால், மீண்டும் ஒருவர்முன் சென்று நின்று பல்லிளித்து, திறமைகளை, அனுபவங்களை நிரூபித்து, எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து தொடங்குவது சலிப்பாக இருக்கிறது.

இப்போது நாங்கள் பணிபுரிவது சின்ன நிறுவனம்தான். என்றாலும், செய்துகொண்டிருக்கிற பணிகள் சவாலானவை, திருப்தியளிக்கக்கூடியவை. எங்கள் பலம், பலவீனங்களைப் புரிந்துகொண்ட மேலாளர், குறைவில்லாத சம்பளம். ஆகவே, இப்படி வளர்வதுதான் எங்களுக்குப் பிடித்திருந்தது.

அந்த ஒழுங்கில் கல்லெறிந்ததுபோல், இப்போது இவர் விலகுவதாக முடிவெடுத்திருக்கிறார். அதற்கு ஏதேனும் ஒரு நியாயமான காரணம் இருக்கவேண்டும். இல்லாவிட்டால், அவர் விலகக்கூடாது என்பதில் நாங்கள் பிடிவாதமாக இருந்தோம்.

திருமண மந்திரங்களில் சொல்வதுபோல், இந்தச் சிறு நிறுவனப் பயணத்தில் கஷ்டமோ, நஷ்டமோ எல்லோரும் சேர்ந்து போகலாம் என்று முடிவெடுத்திருந்தபின், அவர்மட்டும் இப்படிப் பாதியில் விலகுவதை எங்களால் ஏற்கமுடியவில்லை. நான் உள்பட, எங்களில் பலரும், வேறு நல்ல வேலைகள் தேடி வந்தபோதுகூட, வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்திருக்கிறோம். அதற்குக் காரணம், இது எங்களுடைய நிறுவனம் என்பதாக உள்ளெழுந்திருந்த இயல்பான உணர்வுதான்.

இந்த விஷயங்கள் எல்லாம் அவருக்கும் தெரிந்ததுதான். இருந்தும், அவர் இப்படியொரு முடிவு எடுத்திருக்கிறார் என்றால், கண்டிப்பாக, எங்களிடம் சொல்லமுடியாத ஒரு விஷயம் அவர் மனதில் இருக்கிறது என்று எனக்குள் தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனால், அதை நான் வெளிப்படையாகச் சொல்வதற்கில்லை.

நெடுநேர மௌனத்துக்குப்பின் அவர் மீண்டும் பேசினார். எங்கள் நிறுவனத்தில் அதிக அளவு முதலீடு செய்திருக்கும் இன்னொருவருடன் அவருக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால்தான் இப்போது விலகுகிறேன் என்றும் சொன்னார்.

நாங்கள் சலனமில்லாமல் கேட்டுக்கொண்டிருக்க, அவர் தொடர்ந்து பேசினார். அந்த 'இன்னொரு' பங்குதாரர், இவருடைய கருத்துகளை ஏற்க மறுப்பதாகவும், அவருடைய கருத்துகளை இவர் ஏற்கவேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் சொன்னார். பல சந்தர்ப்பங்களில், அவருடைய பல முடிவுகளை இவர் எதிர்த்தபோது, கேவலமாக அவமானப்படுத்தப்பட்டேன் என்றார்.

'அதையெல்லாம் நான் ஒவ்வொன்றாகச் சொல்ல விரும்பவில்லை. சொன்னால், எனக்குதான் கேவலம்', என்றார் இறுதியாக, 'அவருக்கும், எனக்கும் ஒத்துப்போகவில்லை. அவருடைய முதலீடு வேண்டாம் என்று வெளியேறச் சொல்வதானால், அந்தப் பள்ளத்தை நிரம்பும் அளவுக்கு என்னிடம் சேமிப்பு இல்லை. அதற்காக, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றும் சேவகனாக இருக்கவும் நான் விரும்பவில்லை. ஆகவேதான், விலகிவிடுவதாக முடிவெடுத்திருக்கிறேன்'

இந்த நிறுவனத்தின் பெயரைப் பதிவு செய்ததில் தொடங்கி, ஒவ்வொரு வேலையையும் தானே பார்த்துப் பார்த்துச் செய்ததாகவும், எங்களையெல்லாம் விட, இது தன்னுடைய நிறுவனம் என்கிற உணர்வு அவருக்குதான் அதிகம் என்றும், அதனால், இங்கிருந்து விலகும் முடிவில் அதிக அளவு வலியை அனுபவிப்பதும் அவர்தான் என்றும் அவர் மென்மையான ஆங்கிலத்தில் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.

நாங்கள் மௌனமாக லஸ்ஸி உறிஞ்சிக்கொண்டிருந்தோம். சிறிது நேரத்துக்குப்பின், 'இப்போது நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு புதிய நிறுவனம் ஆரம்பித்தால் என்ன ?', என்று ஒருவன் யோசனை சொன்னான்.

'வேண்டாம்', என்றார் அவர், 'இந்த வலி போதும். இனிமேல் நான் சம்பளக்காரனாகவே இருந்துவிடுகிறேன்'

அத்துடன் அந்தக் கூட்டம் முடிந்தது. எட்டு வருடமாக உடன் பணிபுரிந்த அவரை மறந்தாலும், கடைசியாக அவர் சொன்ன அந்த வார்த்தை, காலத்துக்கும் மறக்காது.

Sneha


இந்த வார ஆச்சரியம் :

சன் டிவியில் பார்த்த வஸந்தின் 'ஏய், நீ ரொம்ப அழகாயிருக்கே' திரைப்படம்.

ஏய், இந்தப் படம் ரொம்ப அழகா(தானே)யிருக்கு ? ஆனாலும், படுதோல்வியாமே. ஏன் ?


 

 

இந்த வார நகைச்சுவை :

'காக்க காக்க
கம்ப்யூட்டர் காக்க !
அடியேன் சிஸ்டம்
அழகுவேல் காக்க !
விண்டோவைக் காக்க
வேலவன் வருக !
கனெக்ஷன் கொடுத்து
கனகவேல் காக்க !
இன் டர்நெட் தன்னை
இனியவேல் காக்க !
பன்னிரு விழியால்
பாஸ்வேர்ட் காக்க !
செப்பிய வால்யூம்
செவ்வேல் காக்க !
வீடியோ ஆடியோ
வெற்றிவேல் காக்க !
முப்பத்திரு ·பைல்
முனைவேல் காக்க !'

- கந்தர் 'சிஸ்ட' கவசத்தின் முதல் சில வரிகள்

('பீரோவுக்குப் பின்னால்' நகைச்சுவைக் கட்டுரைத் தொகுப்பிலிருந்து - பாக்கியம் ராமசாமி - பூம்புகார் பதிப்பகம் - ரூ 46/-)

 

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |