ஆகஸ்ட் 26 2004
தராசு
வேர்கள்
காந்தீய விழுமியங்கள்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
க. கண்டுக்கொண்டேன்
முத்தொள்ளாயிரம்
வானவில்
திரையோவியம்
சிறுகதை
கட்டுரை
கோடம்பாக்கம்
பேட்டி
பெண்ணோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  சிறுகதை : சாஸ்வதா
  - சரசுராம்
  | Printable version |

  (சற்றே பெரிய) சிறுகதை

  தம்பிதான் லெட்டரை என் புத்தக ஷெல்பிலிருந்து எடுத்தது. லவ் லெட்டர். கெளதம் எனக்கு அன்புடன் எழுதின கடிதம். உயிரே... அன்பே... ஐ லவ் யூ... போதுமே! அவன் வயதுக்கு அத்தனையும் கெட்ட வார்த்தைகள். யோசிக்காமல் ஒழுக்கம் காப்பாற்ற அப்படியே அப்பாவிடம் நீட்டினான். அப்பா படித்த பேப்பரை விட்டெறிந்தார். கடிதம் படித்தார். அதன் தலைப்புச் செய்தி சொன்னார். அம்மா அரிசி புடைப்பதை நிறுத்திப் பார்த்தாள். அக்கா ஸ்வெட்டர் பின்னியதை எடுத்து வைத்தாள். வீடே கூடியது. பாட்டி வாய் விட்டு அழுதது. அப்பா எழுந்து வேகமாய் வந்தார். என் ஷெல்பிலிருந்து மற்ற புத்தகங்களை இழுத்து வீசினார். நான் பாத்திரம் கழுவின சோப்புக் கையோடு அதிர்ந்து நின்றேன். மற்ற கடிதங்கள் கைப்பற்றப் பட்டன.

  வேகமாய் என்னிடம் வந்தார். முகம் சிவந்த அப்பாவை முதல் முறையாய்ப் பார்க்கிறேன். கேள்வி கேட்காமல் ஒரு அறை விட்டார். அப்பாவிடமிருந்து கிடைத்த பலமான முதல் அடி. அதிர்ச்சிகளின் கலவையில் நான் ஒரு மூலையில் போய் விழுந்தேன். வேகம் குறையாமல் மீண்டும் உதைக்க வந்தார். அம்மா வேகமாய்க் குறுக்கே வர... அம்மாவுக்கு அந்த உதை விழுந்தது. ''பொண்ணை வளர்த்திருக்கிற லட்சணத்தைப் பார்...' என்று அம்மாவுக்கு விழுந்த உதை. பிரச்சினையின் திருப்பத்தில் இருவருக்கும் அடி விழ தம்பி திடுமென அழுதான். பாட்டி உதவிக்குக் கடவுளைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். அப்பா ஆத்திரமாய் அம்மாவை அடிக்கப் போக, அக்கா வந்து தடுத்தாள். அக்காவுக்கு நிறைமாத நேரம். வயிற்றைத் தூக்கிக் கொண்டு குறுக்கே நின்றாள். இன்னும் இரண்டு நாளில் கையில் குழந்தையோடு நிற்கப் போகிறவள். அப்பாவுக்கு கை தளர்ந்தது. கோபம் சட்டென இருபது டிகிரி வெப்பம் குறைந்தது. அம்மா அழுகையோடு உட்கார்ந்திருந்தாள். எனக்கு ஒரு அழுத்தமான அதிர்ச்சி மட்டுமே இருந்தது. அழுகை இல்லை. அப்பா துண்டை உதறி முகம் துடைத்துக் கொண்டார். வியர்த்த பனியனைக் கழற்றி எறிந்தார். மீண்டும் என்னருகில் வந்தார். பாட்டியும் தம்பியும் அழுகையை நிறுத்திப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

  ''யாரவன்... கெளதம்?'' என்றார்.

  எனக்கு பதில் சொல்ல வரவில்லை. கொஞ்சமும் அதிர்ச்சி குறையாமல் எப்படி அடையாளம் சொல்வது?

  ''சொல்லு...'' என்றார்.

  ''அப்பா.. அப்றம் கேட்டுக்கலாம். வாங்கப்பா..'' அக்கா இழுத்தாள்.

  ''விடு... அவ சொல்லுவா.. சொல்லுடி...''

  இறுதிக் கட்டம். மறைப்பதற்கு என்ன இருக்கிறது. மறைத்தும் என்ன பலன். எது நடந்தாலும் இன்றே முடியட்டும்.

  ''கெளதம்... நம்ம சுசீலா மாமி பையன் கெளதம்''

  அந்த ஒற்றைத் தகவலில் அப்பா வேகமாய்ப் போனார். வேட்டியை இறுக்கிக் கொண்டார். சட்டையை மாட்டினார். வேகமாய் வெளியே நகர - எழுந்து போய் அம்மா தடுத்தாள்.

  ''ஆத்திரத்தில் போய் வார்த்தைகளைக் கொட்டிட வேண்டாம். தப்பாயிடும். முதல்ல நம்ம கிட்ட இருக்கிற தப்ப யோசிப்போம்...''

  ''ஆமாப்பா... கொஞ்சம் அமைதியா இருங்க. எதுனாலும் அப்றம் பேசிக்கலாம்'' என்றாள் அக்கா.

  அப்பாவுக்கு எதையும் வீட்டோடு கலந்தே முடிவெடுத்த பழக்கம். அம்மாவின் கருத்து, பாட்டியின் அபிப்பிராயம் இணைந்ததே அப்பாவின் செயலாய் இருக்கும். இப்போது அக்காவும் அம்மாவும் நிறுத்த அப்பா நின்று யோசித்தார். அப்பாவின் சட்டை மீண்டும் ஆணிக்குப் போனது. வீடே அமைதியாய் இருந்தது. பிறகு யாரும் என்னிடம் பேசவில்லை. அப்பா சேரில் போய் சாய்ந்து கொண்டார். அம்மா புடைத்த அரிசியோடு சமையலறைக்குள் போனாள். அக்கா ஸ்வெட்டரை மேலும் தொடர்ந்தாள். தம்பி சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே போனான். பாட்டி மட்டும் என்னருகில் வந்தாள். நான் அப்பா அடித்துப் போட்ட இடத்தில்தான் இருந்தேன்.

  ''சாஸ்வதா'' என்றாள் பாட்டி.

  சாஸ்வதா... அழிவில்லாதவள். நிலையானவள். நிரந்தரி. என் பெயரின் அர்த்தம் இனி இந்த வீட்டில் சிரிப்பைத் தரலாம். சேகரித்த நூறு பெயரில் அப்பாவுக்குப் பிடித்த பெயர். அப்பாவின் ரசனை வெளிப்பாடு. எதிலும் வித்தியாசம் தேடுகிற குணம். காதலைப் புரிந்து கொள்ளாமல் என்ன வெட்டியாய் வித்தியாச குணம். அப்பாவை முதல் முறையில் என் பார்வையில் விமர்சிக்கிறேன். பாட்டி என்னைக் கூப்பிட்டதற்கு நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை நான்.

  ''சாஸ்வதா...'' மீண்டும் பாட்டி கூப்பிட்டாள்.

  ''ஏய், கிழவி... பேசாம இங்க வர மாட்டே?'' அப்பா கிழவியக் கூப்பிடுங்கப்பா!'' அக்கா கத்தினாள்.

  ''நீ பேசாம உன் வேலையைக் கவனிடி...'' பாட்டி திருப்பிக் கத்தினாள்.

  அப்பா எதுவும் பேசாமல் யோசனையோடு உட்கார்ந்திருந்தார். அம்மா சமையலறையிலிருந்து முகத்தை ஒற்றிக் கொண்டு பார்த்தாள்.

  ''நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையாடி. இதையெல்லாம் விட்டுட்டு படிக்கிற வழியைப் பாருடி. இன்னும் ஒரு வருஷம் பாக்கியிருக்கு. அப்றம் வேண்டியதைச் செய்து உங்கக்கா மாதிரியே உனக்கு நல்ல இடத்தில கட்டி கொடுக்காமலா போயிருவோம்?''    

  பிறகு நான் அக்காவோடு ஒப்பிடப்பட்டேன். தராசுத் தட்டில் நான் மிக மிக எடை தாழ்ந்திருந்தேன். அக்கா ஒழுங்காகப் படித்தாள். வகுப்பில் முதல் மாணவி. தொடர்ந்து கல்லூரிப் படிப்பு. ஆண்களும் படித்த கல்லூரிதான். என்றாலும் எவனும் பாதித்ததாய் இவளிடம் கதை இல்லை. பிறகு படிப்பு முடிந்ததும் வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்குக் கல்யாணம். இப்போது ஒரு குழந்தைக்குத் தாயாகிற அடுத்த ஸ்தானம். அக்கா குடும்பம் வரைந்த நேர்கோட்டில் நகர்ந்த பெண். நான் எனக்குப் பிடித்த நேர்கோட்டை நானே வரைந்திருக்கிறேன். யாருக்குப் பிடிக்கும்? என் மனசெல்லாம் கெளதமை உடனே பார்க்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டது.


  Àì¸õ 2 >>

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |