ஆகஸ்ட் 26 2004
தராசு
வேர்கள்
காந்தீய விழுமியங்கள்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
க. கண்டுக்கொண்டேன்
முத்தொள்ளாயிரம்
வானவில்
திரையோவியம்
சிறுகதை
கட்டுரை
கோடம்பாக்கம்
பேட்டி
பெண்ணோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  கட்டுரை : அல்பேனியாவைத் தேடி
  - கௌரி ராம்நாராயண்
  | Printable version |

  போகிற போக்கில் ஒருநாள் நண்பரிடம் கேட்டேன். ''அல்பேனியா தேசம் எங்கே இருக்கிறது?"

  "ஆப்பிரிக்காவில் இருக்கிறது. எழுத்தாளர் ஆல்பேர் காம்யூ பிறந்த இடம் இல்லையா?" என்று சொல்லி முடிப்பதற்குள் அவரே அவசரமாக அதை மறுத்து, "அது அல்ஜீரியா". அல்பேனியா எங்கிருக்கிறது என்று சட்டென்று நினைவுக்கு வரவில்லையே" என்றார்.

  அன்று மாலை அதே கேள்வியை ஒரு பள்ளிச் சிறுமியிடம் கேட்டேன். "ஓ தெரியுமே! அல்பேனியாவில்தான் ஹாரிபாட்டரின் எதிரி வோல்ட் மார்ட் ஒளிந்து கொண்டிருந்தான். பெர்தா என்ற பெண்ணைப் பிடித்து சித்திரவதை செய்தான்" என்று பளிச்சென்ற பதில் வந்தது. ஆனால் சித்திரவதை தெரிந்ததே தவிர அந்த நாடு எங்கே இருக்கிறது என்று அவளுக்குத் தெரியவில்லை. பரவாயில்லையே, அல்பேனியா என்றவுடன் எல்லோருக்கும் கதை - கதாபாத்திரம் - கலைஞன் என்று நினைவுக்கு வருகிறதே என்று வியந்தேன். சந்தோஷப்பட்டேன்.

  மறுநாள் காலை புறநகர் பகுதி வீட்டின் நிசப்தம். ஞாயிற்றுக்கிழமைக்கே உரிய உற்சாகத்துடன் போண்டா மோர்க்குழம்பு கொத்தவரங்காய், பருப்பு உசிலியின் நாசி மணக்கும் பின்னணியில் அப்பளம் பொரித்துக் கொண்டிருந்தேன் கூடவே மிக உல்லாசமாக வெண்ணிலாக் கண்ணியை வாய் முனகியது.

  சச்சிதானந்தக் கடலில் வெண்ணிலாவே நானும்
  தாழ்ந்து விழ வேண்டுகின்றேன் வெண்ணிலாவே...
  இராப்பகல் இல்லா இடத்தில் வெண்ணிலாவே நானும்
  இருக்க எண்ணி வாழுகின்றேன் வெண்ணிலாவே!

  மகன் ஓடிவந்து தலைப்பைப் பிடித்து இழுக்கிறான். "அம்மா! அம்மா! கொல்லைப் பக்கத்துல ஒரு பெ-ரீ-ய்ய பறவை வந்து மரத்துல ஒக்காந்திண்டிருக்கு. வெள்ளையா புசுபுசுன்னு இருக்கு. வந்து பாரேன்!"

  டவ்! டவ்! டவ்!... தாத்தாவின் பெண்டுல கடிகாரம் பத்துமணி அடிக்கிறது. குழந்தையின் கற்பனை பறவை என்று எண்ணிக் கொண்டே அவனுடன் நகருகிறேன் ஒருவேளை வெண்புறாவாக இருக்குமோ! பிஞ்சுக் கண்ணுக்கு அது பெரிதுதானே. கொய்யாமரத்தைக் கண்டதும் பிரமிப்பு. மரமே சின்னதாகி விட்டதுபோல ஒரு ராட்சத பறவை அதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. முசேல் என்ற கிளைமேல் பனிக்கட்டியால் செய்த சிலைபோல அசையாமல் வீற்றிருக்கிறது. ஒளிரும் வெண்மை. சிறு சிறகுகள் காற்றில் அலையாவிட்டால் உயிருள்ள பட்சி என்றே தோன்றியிருக்காது.


  இந்தப் பிரம்மாண்டமான ஆந்தை இங்கே எப்படி வந்து சேர்ந்தது? நிச்சயமாக துருவங்களின் அண்டை நிலங்களில் வாழும் பட்சி. திசை தப்பி வந்துவிட்டது. கண் தெரியவில்லை பகலில். இதோ, மேலே காகங்கள் கூடி கரைகின்றன. ஆந்தை தப்பிக்குமோ- காகங்கள் அதைக் கொத்திக் கொன்று விடுமோ? கனவோ நினைவோ என்று பார்த்துக் கொண்டே நிற்கும்போது திடீரென்று ஆந்தை நுரைவாங்குவது போல சிலிர்த்து அடங்குகிறது. பிறகு ஜிவ்வென்று பறந்து செல்கிறது.

  மறுநாள் செய்தித் தாளில் வெள்ளை ஆந்தையின் புகைப்படம் கனடாவின் பனிப்பகுதியைச் சேர்ந்த பறவை சென்னை திருவான்மியூர் கடற்கரைக்கு வந்த அதிசயத்தைப் பற்றி தகவல்கள். புகைப்படம் எடுத்த சில மணிகளுக்குப் பிறகு காகங்களால் துரத்திக் கொத்தப்பட்ட கனேடிய ஆந்தை தரையில் விழுகிறது. நரிக்குறவர்களால் பட்சிக்கப்படுகிறது. அன்று மாலை ஒரு நரிக்குறத்தி அடையார் பேருந்து நிலையத்தின் அருகே அதிர்ஷ்டம் தரவல்ல அபூர்வ ஆந்தைச் சிறகுகளை விற்பனை செய்கிறாள். அவளுடைய அள்ளிச் சொருகிய முடியின்மேல் ஒரு வெள்ளைச் சிறகு படபடக்கிறது. அல்பேனியாவின் பனிச் சிகரங்களுக்கருகே வெள்ளை ஆந்தைகள் உண்டோ. இது என்ன. மனம் அல்பேனியாவை விட்டு நகரமாட்டேன் என்கிறதே, ஏன்?

  கடிகாரமுள் சீராக நொடி - விநாடி - மணி என்று சுழலுகிறது இல்லையா? ஒருநாள் ஏதோ காரணத்தால் நின்று விடுகிறது. இரண்டுமணி நேரத்திற்குப் பின் நாம் அதைச் சரி செய்கிறோம். முள்ளை இரண்டு எண் தாண்டி சரியான இடத்தில், சரியான நேரத்தில் பொருத்துகிறோம். மீண்டும் தொடர்கிறது முள்ளின் பயணம்.

  ஆனால் அந்த இரண்டு மணி நேர இடைவெளி! அப்போது முள் எங்கே இருந்தது? எந்தக் காலத்தில் இருந்தது? காலத்தைக் கடந்த காலத்தில் இருந்ததா?

  ஆனால் பாருங்கள். நின்ற முள்ளிடம் எல்லோருக்குமே ஒரு சிநேக பாவம். கடந்த காலமே இல்லாத நிலையை அனுபவித்த தோழனாக, அந்த நிலை எட்டக் கூடியதே என்பதற்கு சாட்சியாக முள் நம்மைப் பார்த்து ஒரு கணம், ஒரே ஒரு கணம் முறுவலிக்கிறது. பிறகு தன் கடமையைத் தொடர்கிறது.

  ஒருநாள் கணிப்பொறியில் ஏதோ வேலை சம்பந்தமான குறிப்புகளைத் தேடிக் கொண்டிருந்தேன். மும்முரமாக. நமக்குத்தான் தெரியுமே, செயல்பாடுகளில் இம்மி பிசகினாலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் வலைகள் பிரவாஹிக்கும். அப்படி ஏதோ மாறாட்டம் நேர்ந்து விட்டது. கணித்திரையில் ஒரு மின்னல். இதென்ன! கவிதைமயமான வலை பிரதேசங்கள் அணிவகுத்து நிற்கின்றனவே! கண்ணா! இதோ வில்லை கீழே எறிந்துவிட்டேன். திரையில் சிறிய வட்டம் பெரிதாகிவிட்டது. தலைப்புக்கள் ஒளிர்ந்தன. வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்துக் கொண்டே அந்தத் தலைப்புகளை வட்டமிட்டன. யார் இவ்வளவு கலை உணர்வோடு ,தை வகுத்திருப்பார்கள் என்று எண்ணமிட்டுக் கொண்டே மேலெழுந்தவாரியாக பார்க்கத் தொடங்கினேன். அல்பேனிய கவிதைகள் கண்முன் விரிந்தன.

  நமக்கோ மொழிபெயர்ப்பு என்றாலே அலர்ஜி. ஏ.கே. ராமானுஜன் நீங்கலாக மொழிமாற்றத்தில் எதை இழந்து விடுகிறோமோ அதுவே கவிதை என்று நம்பும் கட்சியைச் சேர்ந்தவன். ஒருவேளை அல்பேனியாவுக்கு பதிலாக அலாஸ்கா, அர்ஜெண்டினா, அங்கோலா என்றிருந்திருந்தால் கவிதை உலகை சுருட்டி எறிந்துவிட்டு வேலைக்குத் திரும்பி இருப்பேனோ என்னவோ! அல்பேனியா என்ற சொல்லுக்கு ஒரு மந்திர சக்தி. படிக்கத் தூண்டியது.
  உன்னை நேசிக்கிறேன்

  அல்பேனிய மண்ணே!
  அசுரத்தனமாக
  ஆவேசமாக

  ஓநாய் காட்டுடன்
  அலை அலையுடன்
  சேறு சேறுடன்
  சேரும் தொந்தமுடன்

  முழங்கால் வரை
  உன்னுள் அமிழ்ந்தேன்.
  உன்னுள் பிறந்தேன்
  என் தந்தையர் போல
  அவர் எந்தையர் போல
  மேலும் முந்தையர் போல
  உன்னை நேசிக்கிறேன்
  அல்பேனிய மண்ணே!
  என் இடை புதையும் வரை
  இன்னும் மேலே! மேலே!...

  பாரதியார் மண்ணில் புரண்டாராம். அதே ஸ்தூல படிமம் என்னை இந்த வரிகளில் கட்டிப் போட்டது. பேசாமல் அல்பேனிய என்ற சொல்லை எடுத்துவிட்டு 'இந்திய' என்று போட்டுவிட்டால் அல்லது தமிழ் என்றே போட்டுவிட்டால் கவிதை என்னுடையதாகி விடுமே! (அப்படி போட்டு படித்தும் பார்த்தேன்!)

  அல்பேனியா என்ற சொல்லுக்கு என்ன மந்திரசக்தி? அதுதான் தொலைந்துபோன காலத்தின் எதிரொலி. அந்தப் பெயரைக் கண்டதும் மறந்துபோன பசுமைகள் சூழ்ந்துகொண்டு அரவணைத்தன.

  நான் பத்து வயதுச் சிறுமியாக இருந்தபோது என் பெற்றோர் சென்னையிலிருந்து மும்பை பெயர்ந்தனா. அடையார் பள்ளியில் தமிழ் படிவத்தின் துள்ளல் எல்லாம் போய் ஆங்கிலச் சிறையில் அடைக்கப்பட்டேன். பாவாடை சட்டைக்குப் பதில் மூச்சுமுட்டும் கான்வென்ட் சீருடை. அதில் ஒரு பச்சை டை வேறு! சுதந்திரப் பாதங்களுக்கு வேர்த்து விறுவிறுக்க காலனி, காலுறை. பாட்டி அருமையாக

  என் செல்லம் பெத்த செல்லமே
  அன்பு பெத்த குஞ்சலமே
  ஆசை பெத்த மணியே
  மணி பெத்த மகுடமே
  மகுடத்தின் சிகரமே
  என் எல்லையில்லா இன்பமே

  என்றெல்லாம் கொஞ்சிக் கொண்டே குஞ்சலம் வைத்துப் பின்னும் நீள்முடி இப்போது இரட்டைப் பின்னலாக மாறி காதிற்கு மேல் ஊஞ்சலாகத் தூக்கிக் கட்டப்பட்டு தலைவலியாக உருவெடுத்தது. அழுகைக்கெல்லாம் அப்பாற்பட்ட துக்கம். ஆகாச கங்கை சிவன் சடையில் வெறியோடு வெள்ளமாய் பாய்வது இந்த மும்பை மழைதானே?

  குருவிக்கூட்டம் போல நண்பர்களுடன் திரிந்து பறந்து கொண்டிருந்த நான் இப்போது மெளன உலகில் தள்ளப்பட்டேன். மொழி தெரியவில்லை. கலாசாரம் புரியவில்லை. எப்போதும் எல்லோரும் என்னையே பார்த்துக் கேலியாக சிரிப்பது போல உணர்வு.

  ஒருநாள் பெற்றோர்கள் பழைய நண்பர் ஒருவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அவருடைய பெண் கல்லூரி மாணவி. ஸல்வார் கமீஸ் அணிந்து காதில் பெரிய வளையங்கள் ஆட ஆட அவள் ஆங்கிலத்தில் பொறிந்து கொட்டியதைக் கேட்டு நான் பயந்தே போய்விட்டேன். என்னை அவள் கேலி செய்யவில்லை என்று புரிவதற்கே ரொம்ப நேரமாயிற்று. ஓரத்தில் பொம்மையாக என்னை உட்கார விடவில்லை அவள். தன் அறைக்கு அழைத்துச் சென்று ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தாள். நடுவில் செல்லமாக கன்னத்தைக் கிள்ளினாள்.

  அதற்குப் பிறகு எப்போது நந்தினி வீட்டிற்குப் போகலாம் என்று ஏங்கலானேன். அவள் காட்டிய பிரியம் மயிலிறகால் வருடுவதுபோல இருந்தது. ஒருநாள் அவள் என் பாடம் பள்ளி - பொழுதுபோக்கு என்று விசாரித்தபோது மொழி தெரியாமல் நான் படும் பாட்டை திக்கித் திணறி எடுத்துச் சொன்னேன்.

  நந்தினி கொஞ்சம் யோசனை செய்தாள். பிறகு ''உனக்கு கதை படிப்பது என்றால் உயிர். ஆங்கிலம் மட்டும் கற்றுக் கொண்டுவிட்டால் முடிவில்லாமல் புத்தகம் படிக்கலாம் - ஆங்கிலத்தில் உள்ளதுபோல் எந்த மொழியிலும் புத்தகங்கள் கிடையாது" என்று ஆசை காட்டினாள். அம்மா அப்பா சொன்ன புத்திமதிகள் சிறிதும் ஒட்டவில்லை. ஆனால் நந்தினியின் வார்த்தைகள் ஈரமண்ணில் விழுந்தன. ஆங்கில பயம் ஆங்கில ஆர்வமாக மாறியது. சீக்கிரமே வகுப்பில் மதர் மேரி மார்கரட்டா நடத்திய பாடம் புரிந்தது. சக மாணவியர் பேசியது ஒலிகளாக இல்லாமல் மொழியாக மாறிவிட்டது.

  ஒரு வருடம் ஓடியது தெரியாமல் தேர்வு நாளும் வந்தது. நிறைய மதிப்பெண்கள். ஆங்கிலத்திலோ வகுப்பிலேயே முதலிடம். மலர்ந்த முகத்துடன் நந்தினி எங்கள் வீட்டிற்கு வந்து என் கையில் ஒரு பொட்டலத்தை திணித்தாள். பிரித்தால் - ஸபானின் கவிதைகள்! நந்தினிக்கு ஸபான் என்றால் உயிர். ஜார்ஜ் கார்டன் நோயல், லார்ட் ஸபான் என்று முழு பெயரையும் நீட்டி முழக்குவதில் மோகம். அவர் கவிதைகள் மனப்பாடம். அன்று அந்த புதுக் காகிதம் மணக்கும் புத்தகத்தைப் பிரித்து அவள் படித்துக் காட்டிய வரிகள்... "சந்திரன் உதிக்கிறான். அல்பேனியாவின் கடுமையான மலைகள்" என்று தொடங்கும் அந்தக் கவிதையின் கம்பீரம் என்ன! மலைத் தொடர்களில் ஓநாய்கள் அலைந்தன. விண்வெளியில் கழுகுகள் மிதந்தன. காட்டு மனிதர்கள் சுதந்திரமாகத் திரிந்தனர். இடி இடித்தது. நதி பாய்ந்தது.

  இப்படி அல்பேனியா என் இளமனதில் வேர் விட்டது. நிஜ அல்பேனியா தெரியாவிட்டாலும் ஒரு கற்பனை அல்பேனியா கவித்துவத்துடன் பதிந்து விட்டது.

  மாறுதல்களே வாழ்க்கை என்ற தத்துவங்களெல்லாம் புரிவதற்கு முன்பே நந்தினி திருமணம் செய்துகொண்டு ஏழு சமுத்திரங்களுக்கப்பால் எங்கோ சென்று மறைந்து விட்டாள்.

  யுகயுகாந்திரங்களுக்குப் பின் கட்டுக் கதைகளில் வருமே, அதுபோன்ற சினிமாத்தனமான ஒரு சந்திப்பு. அப்போது நானே இரு குழந்தைகளுக்குத் தாய். வேலை நிமித்தமாக லண்டன் செல்ல நேர்ந்தபோது ஒருநாள் பாதாள ரயிலில் ஏறியவுடன்... அதோ! மேலே தொங்கும் வாரைப் பிடித்துக்கொண்டு நிற்பது யார்? மூன்று மடங்கு பெருத்ததுபோல பனிகால உடையில் வெற்றுப் பார்வையுடன் நின்ற பெண்ணின் அருகே சென்று "நந்தினி!" என்றதும் அசுவாரசியமாக என்னைப் பார்த்தாள். பிறகு நிதானித்து, "நீயா?" என்று முகமெல்லாம் தாமரையாக மலர்ந்தாள். கட்டிக்கொண்டு புளகித்தாள். கட்டாயம் வீட்டிற்கு வரவேண்டும் என்று சொல்லி முகவரி கொடுத்துவிட்டு, வியப்பு நீங்காத விழிகளோடு இறங்கிச் சென்றாள்.

  மறுநாளே ஆவலுடன் அவள் வீட்டைக் கண்டுபிடித்தேன். வைரத்தோடு மூக்குத்தியணிந்த நந்தினியை கீரை மசியல், கத்தரிக்காய் சாம்பார், உருளைக்கிழங்கு ரோஸ்ட், பச்சடி பாயசம் மணக்கும் பின்னணியில் கண்டேன். மயிலாப்பூர்வாசி போன்ற கணவர், ஆங்கில வாடைத் தமிழ் செப்பும் புதல்வன். மேசையைச் சுற்றி நாங்கள் அமர நந்தினி பரிமாறினாள். "அம்மா, ரசம்!" "அப்பளம் பொரிக்கவில்லையா?" இதைக் கேட்டு முடிப்பதற்குள் அவள் எண்ணெயில் அப்பளங்களை சீற வைத்துத் தட்டிலும் போட்டு விட்டாள்) பிறகு பாதாம் கீரா, பால் பாயசமா?" என்ற விசாரிப்புக்கள். கடைசியில் தட்டில் எதோ அள்ளிப் போட்டுக் கொண்டு நந்தினியும் சாப்பிட்டு முடித்தாள். நாம் இருவரும் எங்கேயாவது வெளியே போகலாமா என்று நான் கேட்டதும் கணவர் அனுமதியுடன் (மூன்று மணிக்குள் வந்துவிடு) புறப்பட்டாள். அருகிலேயே இருந்த ஆங்கில கவிஞன் ஜான் கீட்ஸ் வீட்டைச் சென்று பார்க்கலாம் என்றதும் சரி என்றாள். கீட்ஸ் ஸபானின் சமகால கவிஞனல்லவா? நண்பனும்கூட.

  தெரு முழுவதும் பவள - தங்க - தாமிர இலைகள் உதிர்ந்து கிடந்தன. அவற்றின் மேல் நடக்கும் சரசரப்பு சுகம். பேச்சுக்கிடமேதடி? பனிபடர்ந்த இலையுதிர்காலத்தை கீட்ஸ் வர்ணித்த வரிகள் - நந்தினி ஏதோ ஒரு திரேதாயுகத்தில் எனக்குப் படித்து உருகிய வரிகள் - காட்சிகளாக கண்முன் விரிந்தன. நந்தினியோ ஏதோ கிறக்கத்திலாழ்ந்தவன் போல கவிஞன் வீட்டில் புகுந்தாள். கண்ணாடிப் பேழைகளில் பாதுகாக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் வெறித்துப் பார்த்தவள். கருவளையமிட்ட கண்களில் மின்மினிகள். கவிஞனின் ஓவியங்கள், கையெழுத்துப் பிரதிகள், அவள் உபயோகித்த சிறு சாமான்கள், காதலியின் கேசம் பின்னப்பட்ட மோதிரம், சிறிய கட்டில், நாற்காலி. கீட்ஸ் அந்த வீட்டின் ஜன்னல் அருகே நாற்காலியில் அமர்ந்து மனோலோகத்தில் சஞ்சாரம் செய்யும் தோற்றம் ஓவியமாக தீட்டப்பட்டிருந்தது. அத்துடன் அதே நாற்காலி, அதே ஜன்னல் அருகே தனிமையில் தவம் கிடந்தது.

  நேரம் போனதே தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். வெளியே வரும்போது இதோ அழப்போகிறேன் என்று பயம் காட்டும் மேகத்திரை பூண்ட வானம் பெருமூச்சு விட்டது. இலைகள் நிறமிழந்து கிடந்தன.

  பேருந்து நிலையத்தில் "உன்னால் கிடைத்தது. எல்லாம் மறந்துவிட்டது." என்று கம்மிய குரலில் நந்தினி சொன்னாள். அணைத்து, கலங்கி பிரிந்தோம். பிறகு சந்திக்கவே இல்லை.

  பத்தாண்டுகள் ஓடிவிட்டன. நந்தினி! நீ இப்போது எங்கே இருக்கிறாய்? தெரியவில்லை. ஆனால் இதோ, இந்தக் கவிதையை படிக்கும்போது என் எதிரே நிற்கிறாயே! வைரத்தோடணிந்த அப்பளம் பொரிக்கும் லண்டன் நந்தினியைச் சொல்லவில்லை. காதில் பெரிய வளையங்கள் விளையாட, வெள்ளைக் கட்டம் போட்ட கருப்புப் புடவை, பச்சைக் கரை மிளிர கஞ்சி மொடமொடக்க ரோஜா அத்தர் வாசனை வீச, யுவதியாக என் எதிரே வந்துவிட்டாயே! இழப்பும், ஏமாற்றமும், எதிர்பார்ப்பும் வாழ்வின் அடிநாதம் என்று அடிக்கடி சொல்வாயே, நிச்சயமாக இந்த வரிகள் உனக்குத்தான், உனக்கேதான். எப்போதும் நீ படிப்பாய், நான் கேட்டுக் கொண்டிருப்பேன். இன்று நான் படிக்கிறேன், கேள்!

  விரித்த சிறகுகளாக காத்திருக்கும் கரங்கள்
  இன்னும் நீ வரவில்லை.
  ஆறு ஒன்று ஆகியும் நீ வரவில்லை.
  ஆறு இரண்டுடன் வந்தது தனிமை
  ஆறு மூன்று வரை என்னுடனே தங்கியது
  ஆறு நான்கில் நிலைமை நீடித்தது.
  ஆறு ஐந்து, ஆறு ஆறு. இரு கண்ணீர்த் துளிகள்.
  ஆறு ஏழு, ஆறு எட்டு, ஆறு ஒன்பது, ஆறு பத்து
  நீ வரப் போவதில்லை
  வரப் போவதில்லை
  நீ வரப் போவதில்லை
  ஆறு பதினைந்தானதும் மணிக்கூட்டிடம்
  ஒரு பார்வை வீசினேன்
  தொங்கும் கரங்கள்
  ஒரு நம்பத்தகாத பறவையின்
  இரு ஒடிந்த சிறகுகள்.
  நானும் உடைந்து இழந்து
  அகன்றேன்.

  என் குடும்பம் மும்பை வாசத்தை முடித்துக்கொண்டு மீண்டும் சென்னைக்கு வந்து சேர்ந்தது. கல்லூரி செல்லும் பருவம் எனக்கு. நந்தினி அறிமுகப்படுத்திய கீட்ஸ், ஷெல்லி, பைரன் மூவரும் எனக்கு மும்மூர்த்திகள். காதல் கவிதையில் மிதக்கும் வயது வேறே.

  மற்றொரு பிறந்தநாள். சென்னையில். எனக்கு பதினாறு வயது. அக்காவுக்கு நல்ல பரிசு கொடுக்க வேண்டும் என்று தம்பிக்கு ஆசை. அவனுக்கு அப்போது வகுப்பிற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வெய்யிலை வீணாக்காமல் திரியும் பருவம். இப்படி அலைந்து திரிந்து பவனி வரும்போது எதோ ஒரு தெரு ஓரமாக கிடந்த படங்கள் அவன் ஓவியங்கள் - மோனா லீசா, வீணஸின் பிறப்பு, மேரியின் பரிதவிப்பு, மோனேயின் அல்லிமலர்கள் என்று புரட்டிப் பார்க்கையில் - யுரேகா! - ஸபானின் முகம் சிக்கியது.

  கீச்சுக்குரலில் பேரம் பேசி, சில்லறைகளைத் திரட்டி படத்தை வாங்கியாயிற்று. பஸ்ஸக்கு மிஞ்சாததால் பொடி நடையாகவே வீட்டிற்கு வந்தாயிற்று. ஆனால் படத்தை சட்டம் போட வேண்டாமா? காசு? பாடப்புத்தகத்தை தொலைத்து விட்டேன், புதிதாக வாங்கி வகுப்புக்கு எடுத்து செல்லாவிட்டால் ஆசிரியர் முதுகுத்தோலை உரித்துவிடுவார், அம்மாவிடம் சொல்ல பயமாயிருக்கிறது, அப்பா அப்படியே பொசுக்கி விடுவார் என்றெல்லாம் புருடா விட்டு பாட்டியின் சிறுவாணியிலிருந்து ஐந்து ரூபாய் கழட்டியாயிற்று.

  தம்பி மறுபடியும் தெருவுக்கு ஓடுகிறான். பெட்டி போன்ற நடைபாதை கடையில் சட்டம் போடுங்க என்றார் கடைக்காரர். மேலும் கீழும் பார்க்கிறார். படம் எங்கே என்று கேட்கிறார். இதுதான் படம் என்று தம்பி கையில் கொடுத்ததை அலட்சியமாகப் பார்த்து, "ஏலே! விளையாடுரீகளா? இதைப் போயி பிரேம் போடுவாங்களா?" என்று வெற்றிலைச் சாற்றைத் துப்பிவிட்டு சிரிக்கிறார். அவரைச் சுற்றி இருந்த கண்ணாடிச் சட்டங்களில் புதைந்திருந்தவர்களோ லஷ்மி, சரஸ்வதி, ராமர், கிருஷ்ணர், கணபதி, முருகர், ஆஞ்சநேயர் மேலும் சாயிபாபா, காந்தி, விவேகானந்தர்...." வீட்டுக்குப் போய் கேட்டு சரியான படத்தைக் கொண்டாப்பா!" என்று வாயைத் துடைத்துக் கொண்டே சொல்லுகிறார்.

  தம்பி எப்பாடு பட்டு அவரை இணங்க வைத்தாரோ தெரியவில்லை - அந்த தெய்வமும் அல்லாத, அவதார புருஷனும் அல்லாத மகாத்மாவும் அல்லாத ஆசாமியை ராஜா தேசிங்கா?" என்ற கேள்வியுடன் கண்ணாடிக்குப் பின் பொருத்தி, டின் ஷீட்டால் அடிகொடுத்து, மரச்சட்டம் கட்டி, ஆணியில் மாட்ட ஒரு வளையமும் பூட்டி கையில் கொடுத்துவிட்டாள். விலை நான்கே முக்கால் ரூபாய். கால் ரூபாய் கமர்கட்டாக தம்பி பல்லிடுக்கில்.
  மறுநாள் புத்தம்புது ஹிந்து பத்திரிகையில் சுற்றி எங்கேடா இன்னித்தது ஹிந்து என்ற அப்பாவின் அலறல் முழங்க, கசங்கிய நிஜாரில், சட்டையைத் தேட மனமில்லாமல், பல் தேய்க்காத அவசரத்துடன் தம்பி அக்காளுக்குக் கொடுத்த பரிசு.

  முப்பது ஆண்டுகளாக தம்பி அமெரிக்காவில் அக்கா இந்தியாவிலேயே இரண்டு நகரங்களில் பத்து வீடு மாறியாயிற்று. அவளுக்கே இப்போது அக்கா-தம்பி என்று இரண்டு வாரிசுகள். ஆனால் இன்றுவரை அவள் அறையில் ஸபான் வாசம் செய்கிறார். டின்னில் துரு ஏறினால் என்ன? அது பின்னால்தானே இருக்கிறது? நிறம் மங்கினால் என்ன, பைரனின் கண்களில் தீட்சண்யம் குறையவில்லையே!

  அல்பேனியாவை விட்டு ஸபானிடம் வந்துவிடவில்லை. ஏனென்றால் அல்பேனியா ஸபானிடம் பத்திரமாக இருக்கிறது. எப்படி?

  ஸபானே அல்பேனியாவுக்குச் சென்றிருக்கிறார். அந்த குறிஞ்சி நில மக்களுடன் அளவளாவி இருக்கிறார். தென் ஐரோப்பாவில் இரண்டு வருடப் பயணம். அப்போது (அக்டோபர் 1809) அல்பேனியாவுக்கு வந்து சேர்ந்தார். அங்கே அலி பாச்சா என்கிற பூ இதழ் போன்ற காதுகளையும் சுருட்டை முடியையும் ரஸித்து மகிழ்ந்தான். தன்னை ஸபான் தந்தையாகவே கருதவேண்டும் என்று ஆணையிட்டான்!

  ஸ்பெயின், இத்தாலி போல நாகரீகம் மிகுந்த நாடல்ல அல்பேனியா. ஆனால் அல்பேனிய மறவர்களின் தீரமும், அதன் மலைத் தொடர்களின் அமானுஷ்ய எழிலும் கவிஞனை ஆக்கிரமித்துக் கொண்டன.
  அல்பேனியாவும் ஸபரினை மறக்கவில்லை. இன்றுவரை அல்பேனிய சதுக்கங்களிலும், கல்லூரிகளிலும், தொல்பொருள் காட்சியகங்களிலும் என்றே விருந்தினனாக வந்த ஸபானுக்கு சிலை உண்டு, கதை உண்டு, சரித்திரமும் உண்டு.

  லண்டன் தேசிய சித்திரக் காட்சியகத்தில் பைரனின் ஓவியம் (தாமஸ் பிலிப்ஸ் வரைந்தது) ஆங்கிலக் கவிஞனை அல்பேனிய வீரனாகக் காட்டுகிறது. அல்பேனிய ராஜ உடையில் வெல்வெட்டும் ஜரிகையுமாக ஒளிரும் பைரன் என் அறையிலும் வசிக்கிறார். கடல்கள் - கண்டங்களுக்கப்பால் உள்ள தொந்தங்களை நினைவுபடுத்துகிறார். இன்று எள் மணக்க மணக்க மிளகாய்ப் பொடி இடித்தோமே அது தம்பிக்குப் பிடிக்குமே" என்று நான் பைரனிடம் ஆதங்கப்பட்டுக் கொள்கிறேன்.

  இவ்வாறு அல்பேனியாவுடன் என் உறவு உறுதிப்பட்டு விட்டதால் "விவரமறியாத பயணிக்கு அல்பேனியா முற்றும் புரியாத புதிர்" என்று கவி-ஓவியர் எட்வர்ட் லியர் கூறியதை நான் விவரமறியாத பேச்சு என்று ஒதுக்குகிறேன்.

  ஆனால் லியர் 1848ல் அல்பேனிய சுற்றுப் பயணம் செய்தபின் 1851ல் பிரசுரித்த புத்தகத்தில் "Journal of a handicape Painter in Greece and Albania) தம், சொந்த பயண அனுபவங்களை ரஸமாகவே பதித்திருக்கிறார். புதிர்கள் எல்லாம் உல்லாசமாகவே இருக்கின்றன.

  பக்கம் 2 >>

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |