செப்டம்பர் 01 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
திரைவிமர்சனம்
கேள்விக்கென்ன பதில் ?
சிறுகதை
இந்து மதம் என்ன சொல்கிறது ?
அடடே !!
கவிதை
தொடர்கள்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
முச்சந்தி : விஞ்ஞானக் கவிஞன்
- என். சொக்கன் [nchokkan@gmail.com]
| Printable version | URL |
"'செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே, தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும், உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் !'"

கவிதைகளில் அல்லது, பிற இலக்கியப் படைப்புகளில் அறிவியல் பார்வை என்று யோசிக்கிறபோது, மூன்றுவிதமான ஆய்வுகளுக்கு இடமிருக்கிறது.

 1. அறிவியல் செய்திகளை (வெளிப்படையாக) கவிதைகளில் பயன்படுத்துவது
 2. வருங்காலத்தில் நிகழக்கூடியவற்றை ஊகித்து, கனவு கண்டு சொல்வது
 3. கவிதைப்போக்கில் சொல்லும் விஷயங்களை, அறிவியல் செய்திகளின்மேல் ஏற்றி விவாதிக்கமுடிவது.

முதலாவது வகை, நாம் எங்கோ படித்த, அல்லது யாரோ சொல்லி அறிந்த (அல்லது, மெனக்கெட்டு தேடிப் பிடித்த) ஓர் அறிவியல் உண்மையை, கவிதையில் பொருத்தமாய்ப் பயன்படுத்துவது. இதற்கு ஒரு சமீபத்திய உதாரணம் சொல்வதானால், 'செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே, தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும், உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் !', என்று ஒரு காதல் பாட்டில் வைரமுத்து எழுதுகிறார் - இதுபோல, அறிவியல் செய்திகளை உவமைகளாகவோ, அல்லது விவாதப்பொருளாகவோ நேரடியாகப் பயன்படுத்துவது ஒரு சுவாரஸ்யமான உத்தி.

அடுத்த வகை, அறிவியல் புனைகதைகளோடு ஒப்பிடத்தக்கது - இயல்பான சம்பவங்களோடு, ஒரு கற்பனைக் கண்டுபிடிப்பையோ, அல்லது முற்றிலும் கற்பனையான ஒரு பாத்திரப் படைப்பையோ எழுத்தாளர் நமக்கு வழங்கக்கூடும் - காசிப்புலவர் பேசுவதை, காஞ்சியில் கேட்க ஒரு கருவி கண்டுபிடித்தால் என்ன என்று பாரதி கேட்டதைப்போல. இதற்கான சில சாத்தியங்கள் அந்தக் காலகட்டத்தில் இருந்திருக்கலாம், சில சோதனை முயற்சிகள் நடந்திருக்கலாம், அவற்றைப்பற்றி பாரதி கேட்டிருக்கலாம், ஆனால், படைப்பில் வெளிப்பட்டிருப்பது, ஒருவகையான கனவுதான் - இது வருங்காலத்தில் உண்மையாகும்போது, கவிஞனுக்கு தீர்க்கதரிசிப் பட்டம் கிடைக்கிறது.

இந்த மூன்றாவது வகைதான் கொஞ்சம் விவகாரமானது. கவிஞர் இப்படி நினைத்துதான் எழுதினாரா என்று உறுதியாய்த் தெரியாத நிலையில், அப்படிதான் என்று நாமாக ஊகித்துக்கொள்வதில் ஒரு சுவையான கிளுகிளுப்பு இருக்கிறது ! நம் ஊகம் உண்மையா, பொய்யா என்று யாராலும் நிச்சயமாய்ச் சொல்லமுடியாது என்பதால்,  இதுபோன்ற விவாதங்களை முழுமையாக மறுக்கவும் முடியாது, ஏற்கவும் முடியாது !

உதாரணமாக, 'ஏன், எதற்கு, எப்படி' நூலில் சுஜாதா எழுதுகிறார் - 'கம்ப ராமாயணத்தில் ராவணன் சீதையைக் கடத்திச் சென்ற கலத்தினால், கொஞ்ச தூரம் தரையில் சக்கர அடையாளங்கள் இருந்து, படக்கென்று அடையாளம் மறைந்துபோவதைச் சொல்லியிருக்கிறார் - நவீன விமானத்தின் 'டேக் ஆ·ப்'போல - 'மண்ணின் மேலவன் தேர் சென்ற சுவடெலா மாய்ந்து, விண்ணின் ஓங்கிய தொரு நிலை, மெய்யுற ...' என்பது கம்பர் பாட்டு !'

இப்போது, மேற்சொன்ன உதாரணத்தை, அதன் வாசிப்புச் சுவை தாண்டி, எந்த அளவுக்கு ஏற்கமுடியும் என்று யோசிக்கவேண்டியிருக்கிறது - நிஜமாகவே புஷ்பக விமானங்கள், இன்றைய விமானங்களைப்போல 'டேக் ஆ·ப்' ஆகியிருக்கின்றன, கம்பர் அதை கவனித்துப் பதிவு செய்திருக்கிறார் என்று நம்புவதா, அல்லது, கம்பரின்

சுவாரஸ்யமான கற்பனை இது என்று சொல்வதா ? இன்னும் தெளிவாய்க் கேட்பதானால், கம்பர் கவிஞரா, அல்லது விஞ்ஞானியுமா ?

'பாரதியில் அறிவியல்' என்ற தலைப்பைப் பார்த்ததும், இந்த மூன்று வகைகளில், எதைப்பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது என்றுதான் முதலில் கவனித்தேன். நூலின் முன்னுரையிலேயே, எனக்கான பதில் கிடைத்துவிட்டது - 'பாரதி விஞ்ஞானி அல்லன், ஆனால் அவனது பார்வை அறிவியல் பார்வை, அறிவியல் செய்திகளைத் தேடிப் பிடித்துத் தொகுத்தவன், அவற்றை நன்கு அறிந்தவன், அவற்றை எடுத்துச் சொல்லும் கவிதைத் தெளிவும், உரைநடைச் செழுமையும் கொண்டவன், அறிவியலில் இந்தியா இழந்த பெருமையை மீண்டும் பெற்று, விகசிக்கச் செய்து, உலகுக்கு அளித்து, தலைமையிடம் வகிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டவன் !'

நூல்முழுதும், இந்தக் கருத்து தெளிவான உதாரணங்களுடன், அரிய வரலாற்றுச் செய்திகளுடன் சிறப்பாக விளக்கப்படுகிறது. வெறும் கவிதைப் பட்டியலாகவும், உயர்ந்து பார்த்து வியக்கும் பதிவுகளாகவுமே அமைந்துவிடாமல், பாரதி, அறிவியல் என்னும் இரண்டு தலைப்புகளையும், அவற்றுக்குரிய மரியாதையுடன் அணுகியிருக்கிறார் நூலாசிரியர் இலந்தை சு. இராமசாமி அவர்கள். ஒவ்வொரு அத்தியாயத்திலும், விவாதப் பொருளான அறிவியல் தலைப்பை, எளிமையான வரையறைகள், எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி, பின்னர், அதுபற்றிய பாரதியின் எண்ணங்களைத் திரட்டித் தருவதால், எல்லாத் தரப்பினரும் இந்த நூலைப் புரிந்துகொண்டு, விரும்பி வாசிக்க முடியும்.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு சிறப்பு, பாரதியின் கவிதைகளோடு மட்டுமின்றி, சிறுகதைகள், தமிழ் / ஆங்கிலக் கட்டுரைகள், வசன கவிதைகள் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள அறிவியல் சிந்தனைகளையும் தொகுத்துள்ளார் இலந்தையார் - பாரதியின் பத்திரிகையாளர் முகம், அறிவியல் செய்திகளை, எளிய தமிழில் மக்களிடம் எடுத்துச் செல்வதில் எந்த அளவு பயன்பட்டிருக்கிறது என்பதை உணரமுடிகிறது.

நம் இந்தியக் குழந்தைகளுக்கான கல்வித் திட்டம்பற்றிய பாரதியின் கருத்துகளை, அறிவியலைத் தாய்மொழியில் கற்பிக்கிறபோது உண்டாகக்கூடிய சிக்கல்கள், தீர்வுகளைப்பற்றிய எண்ணங்களைத் தொகுத்துத் தந்திருக்கும் கட்டுரையையும், 'வானிலொரு வர்ணக் களஞ்சியம்' என்னும் தலைப்பில், பாரதியின் காலை, மாலை வர்ணனைகளை, 'அரோரா போரியாலீஸ்' எனும் ஒளி நடனத்துடன் ஒப்பிட்டு எழுதியுள்ள கட்டுரையையும் நூலின் மிகச் சிறந்த பகுதிகளாய்ச் சொல்லலாம்.

அறிவியலில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த இந்தியர்கள், பின்னாள்களில் அந்தப் புகழை இழந்துவிட்டோம் என்கிற வருத்தம் பாரதிக்கு நிறையவே இருந்திருக்கிறது. அதை மீண்டும் எட்டிப் பிடிப்பதற்கான நாளை நோக்கியே, பாரதியின் அறிவியல் சிந்தனைகள், ஏக்கங்கள், கனவுகள் யாவும் அமைந்துள்ளது. இந்த உண்மையை விளக்கிச் சொல்லும் இந்த நூல், பாரதியின் கனவை நிறைவேற்றுவதற்கான பாதையில், நம்மைச் செலுத்துவதற்கு, ஒரு நல்ல தூண்டுகோல் !

பாரதியில் அறிவியல் - இலந்தை. சு. இராமசாமி - ஸ்ரீராம் நிறுவனங்கள் வெளியீடு- பக்கங்கள் : 96 - விலை ரூ 30.


சென்றவாரம், அலுவம் நிமித்தமாகப் பூனா (ஹிந்தியில் 'பூணே' என்று எழுதுகிறார்கள். 'பூனே' இல்லை !) சென்றிருந்தபோது, ரொம்ப நாளாகத் தேடிக்கொண்டிருந்த ஹரிவம்ஷ்ராய் பச்சனின் 'மதுஷாலா' கவிதைத் தொகுப்பு கிடைத்தது.

இந்தப் புத்தகத்தைப்பற்றி நண்பர்கள் நிறைய பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள். அவ்வப்போது அங்கொன்றும், இங்கொன்றுமாகப் பாடல்கள், மொழிபெயர்ப்புகளை வாசித்திருக்கிறேன். மன்னா டே குரலில் குறுந்தகடாகக்கூட கேட்டிருக்கிறேன். ஆனால், முழுப் புத்தகம்மட்டும்தான் கிடைக்காமல் டபாய்த்துக்கொண்டிருந்தது.

இந்தப் புத்தகத்தை சரளமாக வாசிக்குமளவு எனக்கு ஹிந்தி தெரியாது. ஆனாலும், இதற்கு நல்ல ஆங்கில மொழிபெயர்ப்பு வந்திருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, வேறு வழியில்லை, அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் என்று வாசித்து, நண்பர்களிடம் விசாரித்துப் படிக்கவேண்டியதுதான் !

Vada Pavபூனாவில் தவறவிடக்கூடாத விஷயம், வடா-பாவ் எனப்படும் இந்திய பர்கர். சச்சதுரமான பன்னுக்குள், உருளைக் கிழங்கைச் சப்பட்டையாகத் தட்டிய ஒருவிதமான போண்டாவை வைத்து, இனிப்புச் சட்னி தடவி, காரமான மிளகாயுடன் சாப்பிடுகிறார்கள்.

'நல்ல வடா-பாவ் கடை எது ?', என்று ஆட்டோ டிரைவரிடம் விசாரித்தபோது, நகரின் அழுக்கான பகுதியொன்றுக்கு விரட்டிச் சென்றான், சமீபத்தில் பெய்த மழையின் சேற்றோரமாக ஒரு தள்ளுவண்டிக் கடை, அங்கே நிமிடத்துக்கு ஐம்பது என்ற விகிதத்தில் சூடான வடா-பாவ் விற்றுத் தீர்கிறது.

யாரும் சுத்தம், சுகாதாரம் என்றெல்லாம் யோசிக்காமல், அங்கேயே நின்றபடிதான் சாப்பிடுகிறார்கள். எங்களால் முடியவில்லை, பார்சல் வாங்கிக்கொண்டு விடுதி அறைக்கு வந்து சாப்பிட்டோம். சும்மா சொல்லக்கூடாது, அபாரமான ருசி !

பூனாவை நவநாகரீக நகரம் என்று சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் தங்கியிருந்த பகுதியும், அலுவலகமும், சற்றே பெரிய கிராமத்தைப்போல்தான் தோன்றியது. அதிலும் பெரும்பகுதி, ராணுவத்துக்குச் சொந்தமானது. ராணுவஸ்தர்கள் தினந்தோறும் மாலையில் விதவிதமான நாய்களுடன் மைல்கணக்கில் நடக்கிறார்கள். ஆங்காங்கே பழைய ஆயுதங்களையும், வாகனங்களையும் அலங்காரமாக நிறுத்திவைத்திருக்கிறார்கள். எந்தச் சந்தில் திரும்பினாலும், ராணுவ உயர்பதவியர்களின் பங்களாக்கள். கட்டுக்கோப்பான அந்தப் பகுதியைக் கடந்து பிரதான சாலையினுள் நுழைந்தால், வழக்கம்போல வாகன நெரிசல், மாசு.

நாங்கள் பயிற்சிக்காகச் சென்றிருந்த கட்டடம், பெரும்பாலும் காலியாகவே இருந்தது. கால்பந்து மைதானம்போல, சதுரம் சதுரமாக அடுக்கிய கடைகள். ஒவ்வொரு  மாடியிலும் வராண்டாவின் அகலம் குறைவது, மேலேயிருந்து பார்க்கும்போது மிக அழகான வடிவமைப்பாக இருந்தது. ஐந்தாறு அடுக்குகளில் எங்கிருந்து பார்த்தாலும் ¦

தரியும்படி, அவற்றினிடையே, தனியே நிற்கும் உணவகத்திற்குப் பொருத்தமான பெயர், 'island' !

பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு நாங்கள் வெளியே வரும்போதெல்லாம், லேசான மழை பெய்துகொண்டிருந்தது. ஆனால், அடுத்த ஐந்தாவது நிமிடம் மழை நின்று, சுமுக வாழ்க்கை திரும்பிவிடுகிறது.

பூனா விமான நிலையம் மிகச் சிறியது. பொதுவாகப் பயணிகளை விமானத்திற்கு அழைத்துச் செல்லும் இரண்டு நிமிடப் பேருந்துகள்கூட இல்லை. பரிசோதனைகளை முடித்து, விமானத்துக்கு நடந்தே செல்லுங்கள் என்று கை காட்டிவிடுகிறார்கள். விமானத்திலிருந்து இறங்கிவருபவர்களுக்கும் அவ்வாறே.

லேசான மழைத் தூறலை அனுபவித்தபடி பெங்களூர் விமானத்தை நோக்கி நடந்துகொண்டே, விமான நிலையப் பேருந்துகூட இல்லாத அளவுக்குப் பூனா ஏழை நகரமா என்று யோசிக்கையில், எதிரே மெல்ல ஊர்ந்து சென்ற குட்டி விமானத்தின் முதுகில், 'பூனா-வாலா' என்று எழுதியிருந்தது !


இந்த வாரத் தலைப்பு :

"குழந்தைமை : புதிரும், அற்புதமும்"

(குழந்தைகளின் உளவியல், வளர்ப்புமுறை, கல்விமுறைபற்றி பிரபலமான கல்வியாளர் மேரியா மாண்டிசோரி எழுதிய நூல் - தமிழாக்கம் : சி. ந. வைத்தீஸ்வரன் - சாளரம் வெளியீடு - ரூ 150/-)


இந்த வார விடுகதை :

'வந்தபிற்பாடு வந்தீர்களே !
போய்விட்டு ஒருதடவை வந்தீர்களே !
இனிமேல், போனால் வருவீரோ ?'

விடை : பற்கள் !

(சுல்தானா - 'பெண்ணே நீ' ஆகஸ்ட் 2005 இதழிலிருந்து)

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |