செப்டம்பர் 2 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
க. கண்டுக்கொண்டேன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
முத்தொள்ளாயிரம்
சமையல்
கோடம்பாக்கம்
திரைவிமர்சனம்
அமெரிக்கா Matters
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  முத்தொள்ளாயிரம் : க்ளெப்டோமேனியா
  - என். சொக்கன்
  | Printable version |

  பாடல் 39

  மிகப் பெரிய பணக்காரர்களில் சிலருக்கு, சிறு பொருள்களைத் திருடுகிற விநோதமான பழக்கம் இருப்பதுண்டு - அவர்களின் வீட்டில் தேனும், பாலும் புரண்டோடிக்கொண்டிருக்கும் - ஆனாலும், அவர்கள் தெருவோரப் பெட்டிக்கடையிலிருந்து பென்சில் திருடிக்கொண்டிருப்பார்கள்.

  இந்தப் பணக்காரர்கள், நினைத்தால், அவர்களே ஒரு பென்சில் தொழிற்சாலை அமைக்கலாம், ஆனாலும், யாருக்கும் தெரியாமல் அந்தப் புழுக்கைப் பென்சிலைச் 'சுடுவதில்' அவர்களுக்கு அப்படியொரு ஆனந்தம் - தங்களையும் அறியாமல், 'க்ளெப்டோமேனியா' (Kleptomania) எனப்படும் இந்த மனோவியாதிக்கு அடிமையாகிவிட்டவர்கள் அவர்கள்.

  இதேபோல், காதல் வயப்பட்டவர்களிடம் வேறு சில விசித்திரமான திருட்டுப் பழக்கங்களைப் பார்க்கலாம் - காதலியின் தலையிலிருந்து உதிர்ந்த பூ, காதலனின் கைக்குட்டை, அல்லது அவர்கள் பயணித்த பஸ் டிக்கெட் என்று, நமக்கு 'அல்பமாய்'த் தோன்றும் பொருள்களைத் திருடி, பத்திரப்படுத்திக்கொள்ளும் விநோதம் அது.

  'தகரம்கூட தங்கம், பருவும்கூட பவளம், சிந்தும் வேர்வை தீர்த்தம், சின்னப் பார்வை மோட்சம்.', என்று இந்த விளையாட்டுக்கான விதிமுறைகளை வகுத்திருக்கின்றன நம் சினிமாக்கள்.

  இங்கே, சோழனின்மீது காதல் கொண்ட ஒரு பெண், அந்த நினைவுகளோடு தூங்கச் செல்கிறாள்.

  கனவிலும் அவன் வருகிறான், அவளைச் சீண்டி விளையாடுகிறான், நாணம் கொண்ட அவள், அவனிடமிருந்து விலகிச் செல்வதாக நினைத்துக்கொண்டு, படுக்கையில் முன்னும், பின்னுமாய்ப் புரள்கிறாள்.

  மறுநாள் காலை, துயிலெழுந்து பார்க்கையில், அவளுடைய மேலாடை நழுவி, எங்கோ விழுந்துவிட்டிருக்கிறது.

  இதைப் பார்த்ததும், அவளுக்குச் செல்லக் கோபம் - நேற்றைய கனவில் வந்த சோழன்தான், கோபியரிடம் சேலை கவர்ந்த கண்ணனைப்போல, அவளுடைய மேலாடையைத் திருடிக்கொண்டு ஓடிவிட்டான் என்று முடிவுகட்டுகிறாள் அவள் - 'இத்தனை பெரிய நாட்டை ஆளும் அரசன், கேவலம், ஒரு பெண்ணின் உடைகளைத் திருடுகிறானே.', என்று பொய்யாய்ச் சலித்துக்கொள்கிறாள்.

  குளிர்ந்த மலர்களால் தொடுத்த மாலையை அணிந்தவன் சோழன், அவனுடைய அரசவைக்குப் போய்ப் பார்த்தால், தினந்தோறும், அவனைச் சந்திப்பதற்காகப் புலவர்களும், அதிகாரிகளும், மேலும் பல கலைஞர்களும் கூட்டம் கூட்டமாய் வருகிறார்கள், அவர்களுக்கெல்லாம், ஆண் யானைகளையும், பெண் யானைகளையும் பரிசாக அள்ளித் தருகிறான் சோழன்.

  ஆனால், வாரி வழங்கும் வள்ளலாகிய அதே சோழன்தான், இங்கே ஒரு பெண்ணின் சேலையைத் திருடிக்கொண்டு ஓடியிருக்கிறான் - கொடுத்துக் கொடுத்துச் சிவந்த அவனுடைய பெரிய கரங்கள், காதல் மயக்கத்தில், இந்தத் திருட்டைச் செய்திருக்கின்றன.

  'ஆனால், நான் இந்த விஷயத்தைச் சும்மா விடப்போவதில்லை.', என்று குறும்பாய்ச் சொல்கிறாள் அவனுடைய காதலி, 'நாளைக்கு, அந்தச் சோழன், படைகள் சூழ, இந்த வீதியில் பவனி வருவானில்லையா ? அப்போது அவனை வழிமறித்து, "என் சேலையைத் திருடியது என்ன நியாயம் ?" என்று நேரடியாய்க் கேட்டுவிடப்போகிறேன்.'


  தானை கொண்டுஓடுவது ஆயின்தன் செங்கோன்மை
  சேனை அறியக் கிளவேனோ - யானை
  பிடிவீசும் வண்தடக்கைப் பெய்தண்தார்க் கிள்ளி
  நெடுவீதி நேர்ப்பட்ட போது.

  (தானை - மேலாடை / சேலை
  செங்கோன்மை - செங்கோல் தன்மை
  சேனை - படை (வீரர்கள்)
  கிளவேனோ - சொல்லமாட்டேனோ ?
  பிடி - பெண் யானை
  வீசும் - அளவின்றி வழங்கும்
  வண்தடக்கை - வள்ளல் குணம் கொண்ட, பெரிய கை
  பெய் - அணிந்துள்ள
  தண் தார் - குளிர்ந்த (மலர்களால் தொடுத்த) மாலை
  நேர்ப்பட்டபோது - நேரில் சந்திக்கும்போது)  பாடல் 40

  ஒரு சிறு நினைவோ, இணையைத் தேடிக் கூவும் ஒரு பறவையின் வேதனைக் கூக்குரலோ, அல்லது ஒரு புல்லாங்குழலின் மெலிதான அழுகையோ, பிரிந்திருக்கும் காதலர்களின் தனிமைத் துயரத்தை அதிகப்படுத்திவிடுகிறது.

  திருக்குறளில், பொழுதுகண்டு இரங்கும் ஒரு காதலி, 'குழல்போலும் கொல்லும் படை' என்று வர்ணிக்கிறாள். அதாவது, 'முன்பு, நான் என் காதலனோடு சேர்ந்திருந்தபோது, இந்தக் குழலோசை, எங்கள் இருவரின் மனதை மயக்கி, ரசிப்புக்குரியதாக இருந்திருக்கிறது - ஆனால், இப்போது, அவன் என்னைப் பிரிந்தபிறகு, அதே குழலோசை, என்னைக் கொல்லும் கருவியாகிவிட்டது.'

  இந்த முத்தொள்ளாயிரப் பாடலில், சோழனின் காதலி ஒருத்தி, அவனைப் பிரித்த வேதனையில், குழலோசையை வெறுத்துப் பேசுகிறாள்.

  மாலை வேளை. பசுக் கூட்டங்களை மேய்க்கும் ஆயர்கள், தங்களின் குழலில் பலவிதமான இனிய கீதங்களை இசைக்கிறார்கள் - அதைக் கேட்கும்போதெல்லாம், காதல் நினைவுகளும், பிரிவின் துயரமும் அவள் நெஞ்சை அறுக்கிறது.

  'தெளிந்த நீரில் மலர்ந்த, நறுமணம் நிறைந்த மலர்களைத் தொடுத்து, மாலையாக அணிந்தவன், இளைஞன், அழகன்,. என் காதலன் சோழன் சென்னி.', என்று பெருமிதத்தோடு சொல்கிறாள் அந்தக் காதலி.

  ஆனால், அந்தப் பெருமிதத்தைத் தொடரமுடியாதபடி, அவளுக்கு ஒரு நீங்காத குறை அல்லது ஏக்கம் இருக்கிறது, 'என் அன்புக்குரிய சோழனை, இந்த பூமியைக் காக்கும் காவலன் என்று எல்லோரும் பாராட்டிச் சொல்கிறார்கள், ஆனால், உலகத்துக்கே காவல் செய்யும் அவனால், இந்தக் குழலோசை தரும் வேதனையிலிருந்து என்னைக் காப்பாற்றமுடியாதா ?'

  தெண்ணீர் நறுமலர்த்தார் சென்னி இளவழகன்
  மண்ணகம் காவலனே என்பரால், மண்ணகம்
  காவலனே ஆனக்கால் காவானோ மாலைக்கண்
  கோவலர்வாய் வைத்த குழல்.

  (தெண்ணீர் - தெளிந்த நீர்
  நறுமலர் - இனிய வாசனையை உடைய மலர்(கள்)
  தார் - மாலை
  சென்னி - சோழன்
  மண்ணகம் - நிலம் / பூமி
  என்பரால் - என்பார்கள்
  காவலனே ஆனக்கால் - காவலனாக இருந்தால்
  காவானோ - காக்கமாட்டானோ
  கோவலர் - பசுக்கூட்டங்களின் மேய்ப்பர்கள்)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |