Tamiloviam
செப் 04 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : திராவிட கொள்கைகளும் கோட்பாடுகளும்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
  Printable version | URL |

மதச்சார்பற்ற இந்தியாவில் மக்களின் மத, வகுப்பு வாத ஒற்றுமைகளை சீர்குலைக்க முயற்சி செய்பவர்களை, சிறையில் மின்விசிறி இல்லாத அறைகளில் அடைக்க வேண்டும் என்று பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். இதனால் தான் விஷ்வ இந்து பரிஷத்தின் சர்வதேச தலைவர் பிரவிண்பாய் தொகாடியா போன்ற இந்து மத அமைப்புகளின் தலைவர்கள் பீகார் மாநிலத்திற்குள் நுழைய அனுமதியளிக்காமல் திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டிலோ நிலைமை தலைகீழாக உள்ளது. “கடவுளை மற மனிதனை நினை” என்று முழங்கி நாத்திக, பகுத்தறிவு கொள்கைகளை பரப்பிய பெரியார் வாழ்ந்த இம்மண்ணில் தான் தீவிர இந்து மத பிரச்சாரங்களும் இன்று தங்கு தடையின்றி நடந்து வருகின்றன. இந்து மத அமைப்பு தலைவர்களின் கூட்டங்களும் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. உதாரணமாக கன்னியாகுமரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் மாநாடு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டம் போன்றவைகளை கூறலாம்.

பெரியாரின் திராவிடக் கொள்கை மற்றும் பகுத்தறிவு கோட்பாடுகள் குழி தோண்டி புதைக்கப்பட்டுவிட்டனவா? என்ற கேள்வியை பகுத்தறிவாளர்களிடமும், திராவிட கொள்கையில் பற்றுள்ளவர்களிடமும் எழுப்பினோம். அரசு ஊழியரான ரா.ராமலட்சுமி கூறியது:

திராவிட நாடு பிரிவினை, இந்தி மொழி எதிர்ப்பு, நாத்திக வாதம், சாதி மத ஒழிப்பு, சமூகநிதி ஆகிய கொள்கைகளை 1940ம் ஆண்டு தஞ்சை விட்டயபுரம் மாநாட்டில் தந்தை பெரியார் பிரகடனப்படுத்தினார். இன்று மேற்சொன்ன கொள்கைகளை திராவிட இயக்க கட்சிகளும், திராவிட கழகமும் கைவிட்டு விட்டன என்பது தான் சோகமான உண்மை. 1957ம் ஆண்டு பிரிவினைவாத எதிர்ப்புச் சட்டம் மத்திய அரசு கொண்டு வந்த போது திராவிட தனிநாடு கொள்கை கைவிடப்பட்டது. 1963ம் ஆண்டு இந்தி எதிர்ப்புக்கு இருந்த ஆவேசம் இப்போது மறைந்து விட்டது. சாதி மத ஒழிப்புக்கு திராவிட கழகமும், கட்சிகளும் முக்கியத்துவம் கொடுக்காததால் இன்று பல்வேறு சாதி, மத கட்சிகள் உலா வருகின்றன.

மொத்தத்தில் திராவிட இயக்கம் தோன்றிய காலத்தில் இருந்த கொள்கைகள், கோட்பாடுகள், செயல்பாடுகள் என அனைத்தும் வீழ்ச்சியடைந்து விட்டன. அந்த இடத்தை தற்போது இந்து மதவாதிகள் பிடித்து கொண்டனர் என புள்ளிவிபர ஆதாரத்தோடு விவரிக்கிறார் இவர்.

இவர் கூறும் கருத்தை மறுக்க முடியாது. ஏனெனில் சென்னை மயிலாப்பூரில் ஒரு கூட்டத்தில் பேசிய கருணாநிதி, பெரியார் மற்றும் அண்ணாவால் வளர்க்கப்பட்ட திராவிட உணர்வு பட்டுப் போய்விட்டது என்கிறார். இத்தனைக்கும் கருணாநிதி தன்னை அறிஞர் அண்ணா துரையின் அன்புத் தம்பி என்றும் கூறிக் கொள்கிறார். மற்றொரு திராவிட கட்சி தலைவியான செல்வி ஜெயலலிதா ராமர் கோவிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது என கேள்வி எழுப்பியுள்ளார். செல்வி ஜெயலலிதா தலைமை தாங்கும் கட்சியின் பெயர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். எல்லாம் காலத்தின் கொடுமை!.

இக்கருத்தை வன்மையாக மறுக்கிறார் திராவிட கழக, கொள்கை பற்றாளர் மாண்புமிகு மணியன். மரம் ஓய்வு பெற நினைத்தாலும் காற்று சும்மா இருக்க விடுவதில்லை என்ற தத்துவம் திராவிட கழகத்திற்கும் பொருந்தும் என்கிறார். திராவிட கொள்கைகளில் தனிநாடு, இந்தி எதிர்ப்பு போன்ற கொள்கைகள் தோல்வி அடைந்து இருக்கலாம். ஆனால் சாதி மத ஒழிப்பு, சமூக நீதி போன்றவற்றிற்கு குரல் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம் என்கிறார். உதாரணமாக கடந்த ஜுலை 16 ம் தேதி முதல் 25 ம் தேதி வரை திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தமிழர் சமூக விழிப்புணர்வுக்கான எழுச்சிப் பயணத்தை குறிப்பிடலாம் என்கிறார்.

பத்திரிக்கைத் துறையில் 30 வருட அனுபவம் பெற்ற மூத்த பத்திரிக்கையாளர் எஸ். ராம கிருஷ்ணன் தன் கருத்தை மிகத் தெளிவாக சொல்கிறார்.

திராவிட நாடு என்பது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை உள்ளடக்கியது. ஆனால் இன்று இந்த மாநிலங்களுக்கிடையே ஒரு நல்லுறவு இல்லையே என கூறி ஆதங்கப்படுகிறார். 1967 ம் ஆண்டு, என்று நீதிக்கட்சி திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதோ அன்று முதல் திராவிட பகுத்தறிவு சித்தாந்தம் அழியத் துவங்கிவிட்டது. இந்த அழிவை துவக்கி வைத்த பெருமை அண்ணாதுரையை சேரும். எப்படி என்றால் கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று பெரியார் பிரச்சாரம் செய்தார். ஆனால் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பிரச்சாரம் செய்ய துவங்கினார். அன்று முதல் திராவிடம் அழியத் தொடங்கி இன்று எலும்பு கூடு போல் உள்ளது என்கிறார்.

'திராவிட கொள்கைகளும் கோட்பாடுகளும் வீழ்ச்சியடைந்து விட்டன என்கிறீர்கள். இந்த வீழ்ச்சி சகித்துக் கொள்ள கூடிய ஒன்றா?' என்று கேள்வி கேட்டால், 'பெரியாரால் உருவாக்கப்பட்ட பகுத்தறிவு இயக்கமும், சமூகத்திற்கு அதன் பங்களிப்பும் மறக்க முடியாத வரலாற்று சுவடுகள். சுய மரியாதை, சமதர்ம, சமூக சீர்திருத்த கொள்கை வளர்ச்சிக்கு நல்ல அடித்தளம். பெரியாருக்கு பின்பு வந்தவர்களும் திராவிட கழக தலைவர்களும் பெரியாரின் சொத்துக்களை அனுபவிக்கதான் இருக்கின்றார்கள். முன்பெல்லாம் இந்து மதத்தினர் பூக்குழி இறங்குவார்கள். திராவிடர் கழகத்தினரும் பதிலுக்கு கடவுள் இல்லை என்று பூக்குழி இறங்குவார்கள். தற்போது இவை எல்லாம் மறைந்து விட்டன. திராவிட கொள்கை வீழ்ச்சி சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. முன்பெல்லாம் பகுத்தறிவை மையமாக கொண்டு எவ்வளவு திரைப்படங்கள் வந்தன. இப்போது திராவிட கொள்கைக்கு படம் எடுக்க யார் இருக்கிறார்கள்' என கோபமாய் கேட்கிறார்.

தமிழ் ஆட்சிமொழி, தமிழ் தேசியம், கடவுள் எதிர்ப்பு பிரச்சாரம் போன்ற கொள்கைகளை திராவிட கட்சிகள் கைவிட்டு விட்டு ஒருவருக்கொருவர் இழிவுபடுத்தும் செயலுக்குத் தான் முன்னுரிமை அளிக்கின்றனர்.

ஆனால் திராவிட கொள்கையில் பிடிப்பு கொண்ட இரண்டாம் தர, மூன்றாம் தர தலைவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர். உதாரணமாக பேராசிரியர் பெரியார்தாசன், அருண்மொழி, இயக்குனர் வேலுபிரபாகரன், நடிகர் சத்தியராஜ் போன்றோரை கூறலாம்.

தற்போதைய சூழலில் ஒரு வலுவான தலைவர் வந்தால் மீண்டும் திராவிட கோட்பாடு , கொள்கைகள் வலுப்பெறும். ஏனெனில் திராவிட சித்தாந்தத்தில் பிடிப்பு கொண்ட சிந்தனையாளர்கள் தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர். திராவிட கொள்கையை எளிதாக தமிழ் மண்ணில் இருந்து அப்புறப்படுத்திவிட முடியாது. ஏனெனில் அதன் ஆணிவேர் அவ்வளவு வலுவானது.

oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |