Tamiloviam
செப்டெம்பர் 06 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : நனவுலகில் கனவுகளுடன் ஒரு நிலவு - நிர்மலா ராஜூ - நிலாச்சாரல்
- மதுமிதா [madhumitha_1964@yahoo.co.in]
| | Printable version | URL |

பிறந்தது மம்சாபுரம் என்கிற பட்டிக்காட்டில். வசிப்பது லண்டன் பட்டணத்தில். பணிபுரிவது மென்பொருள் தரக் கட்டுப்பாட்டு ஆலோசகராக. ஆன்ம திருப்திக்காக நடத்துவது நிலாச்சாரல் இணைய இதழ் (nilacharal.com). நிலாச்சாரலுக்கு நிதிதிரட்ட நடத்துவது நிலாஷாப். (nilashop.com)

சுமார் 50 சிறுகதைகளும் ஒரு நாவலும் பல கட்டுரைகளும் எழுதி இருக்கிறார். இவை நிலாச்சாரல், திசைகள், விகடன், கல்கி, குங்குமம் பாக்யா ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன.

நம்பிக்கை குழுமம் நடத்தியபோட்டியில் இவரது 'மஹா சக்தி' சிறுகதை பொற்காசு பரிசு பெற்றது. தேன்கூடு -தமிழோவியம் போட்டிகளில் 'ஜனனம்' சிறுகதைக்கு முதல் பரிசும் மனமுதிர்காலம் என்ற சிறுகதைக்காக மூன்றாவது பரிசும் கிடைத்துள்ளது.

நிறப்பிரிகை என்று ஒரு குறும்படம் தயாரித்திருக்கிறார். பூஞ்சிட்டு என்ற சிறுவர்அச்சு இதழ் நடத்திய, தொலைக்காட்சிக்கு சில நிகழ்ச்சிகள் தயாரித்த அனுபவங்கள்உண்டு.

'கருவறைக் கடன்' என்ற சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளிவந்திருக்கிறது. பெரிதாய் எதையாவது இனிதான் சாதிக்க வேண்டும் என்கிறார். தமிழ் இணைய இதழின் முதல் பெண் ஆசிரியர்.


கேள்வி : நிலாச்சாரல் ஆரம்பிக்கணும் என்னும் முதல் பொறி எப்பொழுது எப்படி தோன்றியது?

Nirmala Raju (Nilacharal.com)சிறு வயதிலிருந்தே எனக்கு பத்திரிகையாளராக வேண்டும் என்ற ஆவல் உண்டு. ஆனால் பொறியியல் கல்வி, பணி என்ற வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டதால் அந்த ஆவல் ஒரு தூரத்துக் கனவாக எங்கோ மனதின் மூலையில் பதுங்கிவிட்டதாகத்தான் நான் நினைத்திருந்தேன். ஆனால் அது ஒரு நீங்காத வெற்றிடமாக உருவாகி விரிவடைந்து கொண்டே வந்தது.

இலண்டன் வந்த புதிதில் இந்த ஆவலைப் பூர்த்தி செய்யும் விதமாக ஒரு தமிழ் இணைய தளத்துக்கு வாலன்டியராகப் பணி புரிய ஆரம்பித்தேன். ஆனால் அது திருப்திகரமாக அமையாததால் விரைவிலேயே விலக நேர்ந்தது. அப்பொழுது என் கணவர்தான் என்னை ஒரு இணைய தளம்  ஆரம்பிக்கச் சொல்லி ஆலோசனை தந்தார். தனி ஒருத்தியாய் எனக்கு அது சாத்தியப்படாது என்று எண்ணி மிகவும் தயங்கினேன். ஆனால் அவர் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் தொடங்கியதுதான் நிலாச்சாரல். அந்த முதல் பொறி தோன்றியது எனக்கல்ல; திருவாளர் ராஜுவுக்குத்தான்.

கேள்வி : 5 வருடம் பூர்த்தி ஆயாச்சு. ஆரம்பத்தில் நீங்கள் கவனித்த, வளரும் எழுத்தாளர் என்று கணித்த எத்தனை பேர் மேலும் சிறப்புடன் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்?

முதன்முதல் அப்படிக் கவனித்து கணித்தது கவிஞர் சேவியரைத்தான். அவரின் பேட்டியைக் கூட நிலாச்சாரலின் ஆரம்ப காலத்திலேயே வெளியிட்டோம். இன்று சேவியர் பல புத்தகங்களை வெளியிட்டிருப்பதோடு மேலும் மேலும் சிறப்புடன் எழுதிக் கொண்டிருக்கிறார்.

கவிஞர் புகாரியும் இவ்வளவு சிறப்புப் பெறுவார் என்று எதிர்பார்த்தேன்.

அதன்பின் சுகந்தி.  சுகந்தி முதன் முதலில் எழுத ஆரம்பித்தது நிலாச்சாரலில்தான். ஒரு சிறுகதை மூலம் துவங்கிய அவரது பயணம், தொடர்கதை, வரலாற்றுத் தொடர், அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள், சமூக ஆய்வுகள் என்று பல பரிமாணங்களில் மிளிர்ந்து கொண்டிருக்கிறது. நிலாச்சாரல் அவருக்குத் தரும் ஒவ்வொரு சவாலிலும் திறமையாய் வென்று, தமது பன்முக எழுத்துத் திறமையால் தானும் சிறப்புற்று நிலாச்சாரலையும் பெருமையடைய வைக்கிறார். அவரது முதல் மின்நூலாக கண்ணை மூடிக் காட்சி தேடி நாவல் வெளிவந்திருக்கிறது. விரைவில் அச்சிலும் அவரது எழுத்துக்களைக் கொண்டு சேர்க்க முயன்று வருகிறோம்.

புதிதாக நிறைய நம்பிக்கை ஏற்படுத்தி இருப்பவர் என்.கணேசன்.  அவரது எழுத்துக்களிலிருக்கும் புத்திசாலித்தனமும் முதிர்ச்சியும் அவரை மிக வேகமாக முன்னுக்குக் கொண்டுவரும் என நினைக்கிறேன்


கேள்வி : நிலாச்சாரல் ஆரம்பிக்கையில் இவ்வளவு தூரம் வரும் என்று நினைத்தீர்களா? திரும்பிப் பார்த்தால் என்ன தோன்றுகிறது?

Nila (Nilacharal.com)எப்போதுமே ஒரு காரியத்தை எடுக்குமுன் மிகவும் யோசித்துத்தான் இறங்குவேன். இறங்கிவிட்டால் முழுவீச்சில் அதில் ஈடுபடுவேன். அரைகுறையாகச் செய்வதோ சுமாராகச் செய்வதோ எனக்கு சரியாக வராது. அதனால் கண்டிப்பாக நிலாச்சாரலின் பயணம் நீண்டதாகவே இருக்கும் என்ற நம்பிக்கையோடுதான் முதலடி எடுத்துவைத்தேன்.

ஆனால் இப்போது திரும்பிப்பார்த்தால் மலைப்பாகவே இருக்கிறது. பொழுது போக்குக்காக ஆரம்பித்து இன்று உலகெங்கும் பல தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட ஒரு அமைப்பாக வளர்ந்து நிற்கிறது. இத்தனை பேர் என்னுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கவில்லை.

கேள்வி : உலகின் பல மூலைகளிலிருக்கும் தொண்டர்களை எப்படி ஒருங்கிணைத்து வாரம் தவறாமல் இதழை வெளிக்கொணர்கிறீர்கள்?

இது ஒரு சுவாரஸ்யமான சவால்தான். நிலாச்சாரலுக்கென்று அலுவலகம் என்று ஒன்று கிடையாது. இணைத்தில்தான் எங்கள் அலுவலகம். இதனை விர்சுவல் ஆ·பீஸ்(virtual Office) என்று அழைக்கிறோம்.

உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து செயல்படும் எங்கள் குழுவினரில்  பெரும்பானாலோர் முழு நேரமாய் மற்றொரு பணியில் இருப்பவர்கள். இருந்தும் காலம் தவறாமல் வேலை நடப்பதற்குக் காரணம் 'விரும்பியதை விரும்பிய வண்ணம் செயல்' 'சொல்வதைச் செய்; செய்வதைச் சொல்' என்ற எங்கள் தாரக மந்திரங்கள்தான். 

ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த வேலைகளைத் தேர்ந்தெடுத்து  விரும்பிய வேகத்தில் சுதந்திரத்தோடு செய்கிறோம். அதே சமயம் ஒவ்வொருவரும் என்ன செய்ய விரும்புகிறோம், எப்போது செய்ய விரும்புகிறோம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்தலும் அது குறித்த தகவல் பரிமாற்றமும் இங்கு மிகவும் இன்றியமையாதது.

ஒரே அலுவலக் கட்டிடத்தில் பணி புரியும்போது தாமதம் ஏற்பட்டால் நேரில் சென்று நிலைமையை அறிந்து சரிசெய்யும் வசதி உண்டு. ஆனால் நாங்கள் தொலை தொடர்பு சாதனங்களை மட்டுமே பெரிதும் நம்பியிருப்பதால் பணிபுரியும் ஒவ்வொருவருமே நேரம் தவறாமையைக் கடைபிடிக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது. ஆனால் பந்த் நாட்களில் கூட ஒரு மணி நேரம் சைக்கிள் மிதித்து நண்பர் வீடு சென்று மின்னஞ்சல் அனுப்பும் பொறுப்பாளிகளைக் கொண்டதுதான் எங்கள் குழு. அந்தப் பொறுப்புணர்ச்சியும் கடின உழைப்பும்தான் எங்கள் வெற்றிக்குக் காரணம்.

தமிழகத்தின் கடைக்கோடி திருநெல்வேலியிலிருந்து வட அமெரிக்காவின் சிகாகோ வரையிலும் எங்கள் குழுவினர் இருப்பதால் 24 மணி நேரமும் இயங்குகிற அனுகூலமும் எங்களுக்குக் கிடைக்கிறது.

இது தவிர குழுவினருக்குள் ஏற்படும் பிணைப்பும் சீரான செயல்பாட்டுக்கு முக்கியக் காரணம். நாங்கள் வெறும் குழுவாகச் செயல்படாமல் குடும்பமாகச் செயல்படுகிறோம் என்பதுதான் உண்மை. ஒருவர் மீதொருவருக்கு உண்மையான அக்கறை தானாகவே ஏற்பட்டுவிடுகிறது. உதாரணமாக, வேலை கிடைக்குமட்டும் பகுதி நேரப்பணியாக நிலாச்சாரலைத் தேர்ந்தெடுத்த பெண் ஒருவருக்கு அவருக்கு மிக விருப்பமான பணிகளும் பொறுப்புகளும் கொடுக்கப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டதோடு அவருக்கேற்ற முழு நேரப் பணி ஒன்றையும் ஏற்பாடு செய்தோம். தற்போது முழுநேரப்பணிக்குச் சென்றாலும் தனது ஓய்வு நேரத்தை நிலாச்சாரலுக்காக செலவிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார் அவர். இப்படி குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை உண்டு.


கேள்வி : உங்கள் குழுவில் இணைவது எப்படி?

Nirmalaஎங்கள் குழுவில் தன்னார்வத் தொண்டராகப் பணிபுரிய தங்கள் விபரங்களோடு எங்களை அணுகலாம். அல்லது வீட்டிலிருந்து பணிபுரிய விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து அனுப்பலாம். இரண்டாவதில் நீண்ட தேர்வு முறை உண்டு. வெற்றி பெறும் பட்சத்தில் அவர்கள் செய்யும் பணிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.  தன்னார்வத் தொண்டர்களுக்கு அவர்களின் விருப்பத்துக்கும் திறமைக்கும் ஏற்ற பணிகள் தரப்படும். நாளடைவில் நிலாச்சாரலின் அன்றாடப் பணிகளில் அவர்களுக்கென்ற ஒரு இடம் வந்துவிடும். அதனைச் சரியாகச் செய்து நிலாச்சாரலின் வளர்ச்சிக்கு உதவும் நிலைக்கு வரும்போது அவர் நிலாக்குழுவில் இடம்பெறுவார். தன்னார்வத் தொண்டராய் இருப்பது சுலபம். நிலாக்குழு அங்கத்தினருக்குப் பொறுப்பு அதிகம்.


கேள்வி : மாணவர்களுக்குக் கூட பயிற்சி அளிக்கிறீர்கள் அல்லவா?

ஆம், நான் கிராமத்தில் படித்து வளர்ந்தேனாகையால் வாழ்க்கையில் முன்னேற உலக ஞானம் எவ்வளவு அவசியம் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். மம்சாபுரத்திலிருந்து அண்ணா பல்கலைக் கழகம் சென்ற போது அந்த புதிய கலாசாரத்தில் பொருந்தாமல் சிரமப்பட்டேன். உலக அறிவு (exposure என்று சொன்னால்தான் சரியாகத் தெரிகிறது)  இருந்திருந்தால் என்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கலாம் என நான் பல சமயம் நினைத்துப் பார்த்ததுண்டு.  அதை உறுதிப்படுத்தும் விதமாக வெளி நாடுகளில் 15 வயதிலேயே மாணவர்கள் பகுதி நேர வேலைகளுக்குச் செல்வதால் அவர்களுக்கு ஏற்படும் பொறுப்புணர்ச்சியையும் தன்னம்பிக்கையயும் கண்டேன்

மாணவர்களுக்குக் கல்வியோடு வாழ்க்கையில் யதார்த்தமும், உலக ஞானமும் அவசியம் என்பதை உணர்த்தும் பொருட்டு ஏற்பட்டதுதான் 'Smart Student' பயிற்சித் திட்டம். இதன் மூலம் பயிற்சி எடுத்துக்கொண்டே வருவாய் ஈட்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பெரும்பாலான கல்லூரிகளில் இணையத் தொடர்பு இருப்பதால் மாணவர்களுக்கு உண்மையான ஆர்வமும் பொறுப்பும் இருந்தால் இத்திட்டத்தின் மூலம் மிகப் பெரிய பலனை அடையலாம். ஆனால் இதுவரை இத்திட்டத்தில் பங்கெடுக்க ஆர்வம் காண்பித்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவு. அப்படி விண்ணப்பித்தவர்களில் தேறியவர்கள் மிகவும் குறைவு. தேறியவர்களில் பொறுப்புடன் பணி செய்து நீடித்தவர்கள் இன்னும் குறைவு. ஆனால் அப்படி நீடித்தவர்களை கம்பீரமாய் சமூகத்தின் முன் நிறுத்தலாம். கண்ணை மூடிக்கொண்டு இவர்களுக்கு எந்த நிறுவனமும் வேலை தரலாம்.

இன்றைய மாணவர்களை செதுக்குவதில் பொறுப்பு எடுத்துக் கொள்ள நாங்கள் தயார்... ஆனால் மாணவர்களிடம் போதுமான ஆர்வம் இல்லை என்பது கசப்பான உண்மை.


கேள்வி : வருகையாளர்களைப் பெருக்கும் பொருட்டு கொள்கைகளை விட்டுக்கொடுக்க நேரிட்டிருக்கிறதா?

(தொடரும்...)

நன்றி : “நா‎ன்காவது தூண்”  நூலிலிருந்து

படங்கள் : ஜெயா டிவி

| | | | |
oooOooo
                         
 
மதுமிதா அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |