செப்டம்பர் 08 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
கேள்விக்கென்ன பதில் ?
திரைவிமர்சனம்
அறிவிப்பு
தொடர்கள்
சிறுவர் பகுதி
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
முச்சந்தி : ஞகரம்
- என். சொக்கன் [nchokkan@gmail.com]
| Printable version | URL |

'ஔவை வழியில், பாரதி நெறியில் சிற்பி வரைந்த ஆத்திச்சூடி' என்ற குறிப்புடன், கவிஞர் சிற்பி குழந்தைகளுக்காக எழுதியிருக்கும் நவீன ஆத்திச்சூடி நூலை, 'கோலம்' பதிப்பகம் வெளியிட்டுள்ளது. (28 பக்கங்கள், விலை ரூ 10/-)

அகரவரிசையில் இந்தக் கால விஷயங்களைச் சுருக்கமாகப் புரியும்படி எழுதியிருப்பது நன்கு மனதில் பதிகிறது. சட்டென்று கவனத்தில் தோன்றுகிற உதாரணங்கள் : நொறுக்குணவு தவிர், கணிப்பொறி பழகு, காடுகள் போற்று, மந்தைத்தனம் ஒழி, யுகமாற்றம் நாடு !

இந்த வரிசையில் என்னை ரொம்ப ஆச்சரியப்படுத்திய விஷயம், நாம் பொதுவாக அதிகம் பயன்படுத்தாத ஞகரத்தில் அவர் தந்திருக்கிற வரிகள்தான்.

ஞண்டெனப் பற்று (ஞண்டு - நண்டு)
ஞாலத்து இசை பெறு (ஞாலம் - உலகம்)
ஞிமிரெனப் பாடு (ஞிமிர் - வண்டு)
ஞெழுங்க நட்புறு (ஞெழுங்க - இறுக்கமாக)
ஞேயம் நாட்டில் வை (ஞேயம் - அன்பு)

ஞகரத்தில் இத்தனை வார்த்தைகள் உள்ளது என்று இதைப் படித்தபிறகுதான் தெரிந்துகொண்டேன். அந்த ஆர்வத்தில், ஆத்திச்சூடி விஷயத்தில் சிற்பியின் முன்னோடிகளான பாரதியும், ஔவையும் ஞகரத்தை எப்படிக் கையாண்டார்கள் என்று தேடிப் பார்த்தேன். (பாரதிதாசனும் ஆத்திச்சூடி எழுதியிருப்பதாக முன்னுரையில் சிற்பி சொல்கிறார். ஆனால் என்னிடமுள்ள பாரதிதாசன் கவிதைகள் (முழுத்?)தொகுப்பில் ஆத்திச்சூடி எதுவும் இல்லை !)

ஔவையாரின் ஆத்திச்சூடியில் ஞகரத்தில் தொடங்கும் வரி ஒன்றே ஒன்றுதான்.

ஞயம்பட உரை (ஞயம்பட - கனிவானமுறையில்)

ஔவையுடன் ஒப்பிடுகையில், பாரதியார் ஞகரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அவரது 'புதிய ஆத்திச்சூடி'யில், மொத்தம் ஐந்து வரிகள் ஞகர வரிசையில் அமைந்துள்ளன.

ஞமலிபோல் வாழேல் (ஞமலி - நாய்)
ஞாயிறு போற்று (ஞாயிறு - சூரியன்)
ஞிமிறென இன்புறு (ஞிமிறு - வண்டு ... சிற்பியின் நூலில் வரும் 'ஞிமிர்' என்பது, அச்சுப்பிழையாக இருக்கவேண்டும்)
ஞெகிழ்வது அருளின் (ஞெகிழ்தல் - அலையல், அவிழ்தல், வாடுதல், சுழலுதல், தளர்தல், இளகுதல், நெகிழ்தல், இன்னும் நிறைய அர்த்தங்கள் வருகிறது ... பாரதி சொல்லும் அர்த்தம் என்ன ?)
ஞேயம் காத்தல் செய் (ஞேயம் - அன்பு)

மேலும் ஞகரம் தேடுகிற ஆசையோடு, கழக அகராதியை (திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் - விலை ரூ 165/-) அணுகினேன். நிறைய சுவாரஸ்யமான வார்த்தைகள் தட்டுப்பட்டன. (இந்த வார்த்தைகளில் பெரும்பாலானவற்றைக் குழந்தைகளால்மட்டுமே சரியாக உச்சரிக்கமுடியும் என்பது வேறு விஷயம் ;)

ஞஞ்ஞை - மயக்கம் (இதைச் சரியாகச் சொல்லிமுடிப்பதற்குள் நிஜமாகவே மயக்கம் வந்துவிடும் என்று நினைக்கிறேன்)
ஞத்துவம் - அறியும் தன்மை
ஞமன் - யமன்
ஞலவல் - மின்மினிப் பூச்சி / கொக்கு
ஞறா - மயிலின் குரல்
ஞாஞ்சில் - கலப்பை / நாஞ்சில்
ஞாடு - நாட்டுப் பகுதி (இப்படிப் பல வார்த்தைகளில், 'ஞ'கரத்தைத் தூக்கிவிட்டு, 'ந'கரத்தைப் போட்டால், அர்த்தம் சரியாகவே வருகிறது !)
ஞாதி - சுற்றம் (நாதி ?)
ஞாயிறுதிரும்பி - சூரிய காந்தி (வாவ் !)
ஞாய் - தாய் (இந்த வார்த்தைக்குமட்டும், 'ஞ = ந' விதியைத் தாற்காலிகமாக மறந்துவ்¢டவேண்டும் ! இல்லையென்றால், வம்பு !)
ஞான்றுகொள்ளுதல் - கழுத்தில் சுருக்கிட்டுச் சாதல் (நாண்டுகொள்ளுதல் ?)
ஞெகிழ் - தீ
ஞெள்ளை - நாய்
ஞேயா - பெருமருந்து
ஞொள்கு - இளை, அஞ்சு, சோம்பு, அலை

இனிமேல், 'ஞாயிறு', 'ஞானம்', 'ஞாபகம்' ஆகிய பொதுவான வார்த்தைகளைமட்டுமின்றி, மற்ற ஞகர வார்த்தைகளையும் ஞாபகத்தில் வைத்திருந்து பொருத்தமான இடங்களில் பயன்படுத்தவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டிருக்கிறேன் !


'நாளை விடியும்' என்று ஓர் இரு திங்களிதழை யாரோ இலவசமாக அனுப்பிவைத்திருந்தார்கள். கூடவே, இதழ் தொய்வின்றித் தொடர, ஆண்டு நன்கொடை அல்லது வாழ்நாள் நன்கொடை தந்து உதவுங்களேன் என்று ஒரு சீட்டு.

உதவலாமா, வேண்டாமா என்று யோசித்தபடி இதழைப் புரட்டினேன். ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்கங்கள். 'ஜெயகாந்தன் எதிர்ப்புச் சிறப்பிதழ்', என்று அறிவிக்காதகுறையாக, முன் அட்டை டு பின் அட்டை, ஜெயகாந்த விரோதக் கருத்துகள். துணுக்குச் செய்திகளைக்கூட விட்டுவைக்காமல், மொத்தமாக ஜெயகாந்தனைச் சாத்தியிருக்கிறார்கள். கெட்ட வார்த்தையில் திட்டாதது ஒன்றுதான் பாக்கி. (அதையும் ஒரு கவிதை லேசாகத் தொட்டுச் செல்கிறது !)

அதாவது, 'பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுதவேண்டும், பேசவேண்டும் என்கிற தமிழறிஞர்கள், தம்மைத் தாமே நக்கிக்கொள்கிற நாய்கள்', 'வர்ண வேறுபாடுகள் இருக்கவேண்டும். ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும்', 'தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது' என்று ஒரு விழாவில் ஜெயகாந்தன் பேசிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த இதழ் தயாராகியுள்ளதாகத் தெரிகிறது.

'நாய்கள்', என்பதை, 'சிங்கங்கள்' என்று மாற்றிக்கொள்வதாகவும், தனது கருத்துகளுக்கு மன்னிப்பு தெரிவித்தும் ஜெயகாந்தன் வெளியிட்ட அறிக்கைகள் ஒருபக்கமிருக்க, இந்தக் கட்டுரைகளில் பெரும்பாலானவை ஜெயகாந்தனின் அரசியல் பின்னணி, தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றைத் தாக்கியே உருவாகியிருப்பதை ஏற்கமுடியவில்லை.

அவருடைய படைப்பிலக்கியச் சாதனைகளுக்காக, அவர் என்னவேண்டுமானாலும் அபத்தமாக உளறிக் கொட்டலாம் என்று யாரும் சொல்லிவிடமுடியாது. ஆனால், ஞானபீடை, அஞ்ஞான பீடம் என்றெல்லாம் ஜெயகாந்தனை விமர்சிக்குமுன், அவர் என்னதான் எழுதியிருக்கிறார் என்று ஒருமுறை படித்துப் பார்த்தவர்களுக்குதான் அந்தத் தகுதி உண்டு என்று தோன்றுகிறது.

ஜெயகாந்தனின் மொழி / அரசியல் / சமூகக் கருத்துகளை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், எதிர்க்கலாம். ஆனால், இதுபோன்ற சர்ச்சைகளால், தமிழ் இலக்கியத்துக்கு அவரது பங்களிப்பை மறைக்கமுயல்வது சரியில்லை என்று தோன்றுகிறது.

மொத்தத் தொகுப்பிலும், என்னை ரொம்பக் கவர்ந்த, சட்டென்று மனம் விட்டுச் சிரிக்கவைத்த விஷயம், வழக்கறிஞர் பூ. அர. குப்புசாமியின் கட்டுரையிலிருந்து :

"புதுக்கோட்டை 1959 கல்லூரி மலருக்கு, 'ஞானத்தைத் தேடி' என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இதைப் பாருங்கள் என்று ஜெயகாந்தனிடம் கொடுத்தேன்.

தலைப்பைப் பார்த்தவுடன், 'அட சண்டாளா, ஏய்யா என் பொண்டாட்டியைத் தேடுகிறாய் ?', என்றார்"


இந்த வார உவமை :

பாப்பு சைக்கிள் மெக்கானிக் என்று சொல்லிக்கொள்வான். கடை எதுவும் கிடையாது. ராகவன் பிள்ளை கடை பெஞ்சில் பாதி நாள் ஆணி அடித்தமாதிரி உட்கார்ந்திருப்பான்.

- 'தேர்' சிறுகதையில் இரா. முருகன்


இந்த வார வாசகம் :

A Family that cooks together, Stays together

- 'Veneta Cucine' வ்¢ளம்பரத்திலிருந்து.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |