செப்டம்பர் 08 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
கேள்விக்கென்ன பதில் ?
திரைவிமர்சனம்
அறிவிப்பு
தொடர்கள்
சிறுவர் பகுதி
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உள்ளங்கையில் உலகம் : ப்ளூடூத் ( Bluetooth)
- எழில்
| Printable version | URL |

இப்போதெல்லாம் செல்பேசி வாங்குபவர்கள், பேசுவதற்கும் குறுந்தகவல் அனுப்புவதற்கும் மட்டும் வாங்கிப் பயன்படுத்துவதில்லை, செல்பேசியில் கேமெரா இருக்கிறதா? , ப்ளூடூத் எனப்படும் குறுந்தூர கம்பியில்லாத் தொடர்புமுறை வசதி இருக்கிறதா, அகச்சிவப்புத் துறை (Infra Red Port) இருக்கிறதா என்றெல்லாம் கவனித்துத் தான் வாங்குகிறர்கள் . தொழில்நுட்பத்தின் எல்லைகள் விரிந்து கொண்டே செல்கையில் மின்னணுவியல் கருவிகளின் பயன்பாட்டு எல்லைகளும் விரிந்து கொண்டே செல்கின்றன. கருவிகளின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.


Blue Toothஇந்தப் பதிவில் ப்ளூடூத் (Bluetooth) எனப்படும் குறுந்தொலைவு கம்பியில்லாத் தொடர்பு முறை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ப்ளூடூத் என்பது ஒரு கம்பியில்லாத் தொடர்பு முறை. பத்து மீட்டர் தூரம் வரை இம்முறையைப் பயன்படுத்தி கேபிள்கள் இல்லாத ஒரு தொலைத்தொடர்பை ஏற்படுத்த முடியும். அன்றாட மின்னணுவியல் வாழ்வில் நாம் பயன்படுத்தும் கருவிகளை கம்பிகளின்றி இணைக்க ப்ளூடூத் நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதன் தொழில்நுட்ப வரையறைகளைப் பார்ப்போமா?

அதிர்வெண்: 2.4 கிகாஹெர்ட்ஸ். இந்த அதிர்வெண் பட்டை ஐ எஸ் எம் பட்டை (ISM Band- Industry, Sceince, Medicine)- தொழில் , அறிவியல் மற்றும் மருத்துவப் பட்டை என்றழைக்கப்படுகிறது. இந்த அதிர்வெண்ணைப் பயன்படுத்த எவரிடமும் (அரசிடம்) அனுமதி பெறத்தேவையில்லை. தொழிலகங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றூம் மருத்துவ ஆராய்ச்சிகள் ஆகியவற்றிற்கென இந்த அதிர்வெண் பட்டை ஒதுக்கப்பட்டிருப்பதால் , இதெற்கென தனியாக அரசிடம் அனுமதி பெறாமலேயே இந்த அதிர்வெண்ணைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ப்ளூடூத் தொழில் நுட்பமும் இந்த அதிர்வெண்ணிலேயே இயங்குவதால் , ப்ளூடூத் கருவிகள் தயாரிப்பதும்,(உலகின் எந்தவொரு) பிற மின்னணுவியல் கருவிகளோடு எளிதில் தொடர்பு ஏற்படுத்துவதும் எளிதாகிறது.

வேகம்: வினாடிக்கு 1 மெகாபிட்ஸ் அதிகபட்ச வேகம்.

பயன்படுத்தபடும் நுட்பம்: அதிர்வெண் தாவல் பரவல் நிறமாலை முறை (Frequency Hopping Spread Spectrum). ஸி டி எம் ஏ (CDMA) நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த பரவல் நிறமாலைத் தொடர்புமுறை அமைக்கப்பட்டுள்ளது. அதிர்வெண் தாவல் என்றால் , கருவியின் செலுத்தி (Transmitter ) ஒரே அதிர்வெண்ணில் இயங்காமல் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் பட்டையிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட அதிர்வெண்ணில் இயங்குகிறது. இரு கருவிகள் அதிர்வெண் தாவல் முறையில் தொடர்பு கொள்கின்றதெனில் , அவ்விரு கருவிகளும், எந்த நேரத்தில் எந்த அதிர்வெண்ணைப் பயன்படுத்தி, தகவல்களை அனுப்ப/பெறப் போகின்றன என்பதை இரு கருவிகளும் முன்கூட்டியே முடிவு செய்து அதன் அடிப்படையில் தகவல் பரிமாற்றம் நிகழ்கிறது.

சரி, தொழில்நுட்பச் செய்திகள் போதும், பெயர்க்காரணத்துக்கு வருவோம். இதை ஏன் ப்ளூடூத் என்று அழைக்கிறார்கள், தமிழில் மொழி பெயர்த்தால், நீலப்பல் என்று வரும். நீலப்பல்லுக்கும் குறுந்தொலைவு கம்பியில்லாத் தொலைத் தொடர்புக்கும் என்ன சம்மந்தம்?

பத்தாம் நுற்றாண்டில் டென்மார்க் நாட்டை ஆண்டு வந்தவர் ஹெரால்டு ப்லூடன்ட் (Harald Bluetand) எனும் மன்னராவார். ப்லூடன்ட் என்றால், ஏறக்குறைய ப்ளூடூத் என்று பொருள் படுவதாகக் கூறுகிறார்கள். மன்னரின் பற்கள் ஒரு மாதிரியான நீல நிறத்தில் இருந்ததால் இப்பெயர் வந்ததெனக் கூறுவார்களும் உண்டு. சரி இவர் என்ன செய்தார்? நார்வே நாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டபோது , படையெடுத்துச் சென்று , நார்வே-யை டென்மார்க்குடன் இணைத்துக் கொண்டாராம். அதற்கும் ப்ளூடூத் நுட்பத்திற்குப் பெயரிட்டதற்கும் தொடர்பு உண்டா? வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள நாடுகளை வென்று ஹெரால்ட் ப்லூடன்ட் தன்னாட்டுடன் இணைத்து , தன் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டு ஆட்சி செய்தார். அது போல் உலகின் வெவ்வேறு பகுதிகளில் , வெவ்வேறு தொழில் நுட்பங்களுடன் இயங்கும் பல மின்னணுவியல் கருவிகளைக் கம்பியில்லாமல் இணைக்க இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதால் இதற்கு ப்ளூடூத் என்று பெயர் வந்தது. நாமும் "நீலப்பல்" என்றெல்லாம் தமிழ்ப்படுத்தாமல் ப்ளூடூத் என்றே அழைக்கலாம்.

1994-ல் எரிக்ஸன் இத்தொழில் நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்தியது. பின்னர் எரிக்ஸன், நோகியா, இன்டெல் , ஐ பி எம் மற்றும் தோஷிபா ஆகிய நிறுவங்கள் இணைந்து ப்ளூடூத் நுட்பத்திற்குச் செயல்வடிவம் கொடுத்தன. ப்ளூடூத் நுட்பத்திற்கான பொதுவான் வரையறைகள் தயாரிக்கப்பட்டு அவை நெறிப்படுத்தப்பட்டன. நாளடைவில் பிற நிறுவனங்களும் இத்தொழில் நுட்பத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தன, ப்ளூடூத் சிறப்பு ஈடுபாட்டுக் குழு ஒன்று ( Special Interest Group) அமைக்கப்பட்டது. தற்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவங்கள் இக்குழுவில் பதிவு செய்து கொண்டுள்ளன.

ஆக இடைச் செயலாக்கம் (InterOperability) என்பது இத்தொழில் நுட்பத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்று. அதாவது ஒரு நிறுவனம் ப்ளூடூத் கருவிகளைத் தயாரிக்கிறது என்றால், அந்த ப்ளூடூத் கருவியைக் கொண்டு பிற நிறுவனங்கள் தயாரிக்கும் ப்ளூடூத் கருவிகளுடன் இணைத்துத் தகவல் பரிமாற்றம் செய்யும் வகையில் அந் நிறுவனம் தனது கருவிகளைத் தயாரித்துச் சந்தையில் விற்பனை செய்ய வேண்டும். ஒரு தொழில் நுட்பத்தின் வெற்றி இந்த இடைச் செயலாக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.

ப்ளூடூத் வரையறையில் (Specifications) இரண்டு பகுதிகள் உண்டு: அகப்பகுதி (Core) மற்றும் பயன்பாட்டுப்பகுதி ( Profile). அகப்பகுதியானது இந்தத்தொழில் நுட்பத்தின் மென்பொருள், வன்பொருள் எவ்வாறு வடிவமைக்கப்படல் வேண்டும் என்பதை விவரிக்கும் வரையறையாகும். எல்லாவிதமான ப்ளூடூத் கருவிகளும் இந்த அகப்பகுதியின் அடிப்படையிலேயே அமைந்தவை. இரண்டாவது பகுதியான பயன்பாட்டுப்பகுதி ( Profile) கருவிக்குக் கருவி வேறுபடும். ஒரு கருவி எதற்குப் பயன்படுத்த வேண்டுமோ அதற்கேற்றாற்போல் இந்தப் பயன்பாட்டுப்பகுதியை ப்ளூடூத் கருவிகள் வடிவமைக்க வேண்டும். உதாரணமாய், ப்ளூடூத் காதுபேசி ( Earphone) என்றால் அதற்குரிய பேசிப்பயன்பாட்டுப் பகுதி (Headset Profile) அக்கருவியில் இருக்க வேண்டும். கணினியில் இணைக்கப்பயன்படும் ப்ளூடூத் பொருத்தி ( Bluetooth Adaptor) எனில், கோப்புகளை மாற்றும் பயன்பாட்டுப்பகுதி (File Transfer Profile) அக்கருவியில் இருக்க வேண்டும்.

மேலும் சில தகவல்களை அடுத்த வாரமும் பார்ப்போம்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |