வெளிநாடுகளில் வயிற்றுவலியென்று மருத்துவமனைக்குப்போன இரண்டு பெண்கள் சீக்கிரமே அது பிரசவவலி என்றறிந்து வியப்பு அடங்கும்முன்பே கையில் குழந்தையோடு வீடு திரும்பியுள்ளனர். இதைப்படித்ததுமே, 'எத மறைக்கமுடிஞ்சாலும் வயத்துல வளர கொழந்தைய மறைக்கமுடியுமா?' என்று சாதாரணமாகப் புழங்கப்படும் கேள்விக்குக் கிடைக்கும் 'முடியாது' என்ற பதில் என்மனதில் மறுபரிசீலனைக்குட்பட்டது .
2004 ஜூலை மாத ஆரம்பத்தில் பிபிசி யில் வந்த செய்தி. இங்கிலந்தின் கரொலைன் மக்கின்கெர் என்ற 36 வயது மாது வயற்றுவலியால் துடிதுடித்துக் கீழே விழுந்துவிட்டார். இது இரண்டாம் முறையாம் அவ்விதம் அவருக்கு நேர்ந்தது. இதே பெண்ணிற்கு மூன்று வருடங்களுக்கு முன்பு இதேபோல ஆனபோது அப்பென்டிஸைடிஸ் என்று சந்தேகித்து சீக்கிரமே பிரசவவலியென்று உறுதியாகி மருத்துவமனையிலிருந்து
வெளியாகும்போது கையில் தன் மூத்த மகளுடன் தான் வீட்டிற்குப் போனார். கொஞ்சம் எடை கூடியிருந்த அவருக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஆன படியே இருந்ததால், கர்பம் என்றே நினைக்கமுடியவில்லையாம். இரண்டாம் முறை இவருக்கு சந்தோஷ அதிர்ச்சியாக ஒரு மகன் பிறந்துள்ளான்!
சென்ற வருடம் அக்டோபரில் ஒரு ஆஸ்திரேலிய மாது தாங்கமுடியாத வயிற்றுவலியோடு மருத்துவமனைக்குப் போனாராம். கொஞ்சநேரத்திலேயே அந்தவலி பிரசவவலியென்று உறுதிசெய்தனர் மருத்துவர். பொதுவாகப் பெண்களுக்கு கருத்தரித்த ஓரிரு மாதங்களிலேயே நிச்சயமாகத் தெரிந்துவிடும் என்கிறார் சிங்கப்பூர் கேகே தாய்சேய் நலமருத்துவமனையின் மருத்துவர் ஆர்தர் ட்செங்க். மாதவிடாய் நின்றதுமே கர்பம் தானென்று உறுதிசெய்துகொள்ள அவர்களாகவே பிரெக்னன்ஸி டெஸ்ட் செய்துகொள்கிறார்கள். இல்லையென்றால், மருத்துவரிடம் சென்று சோதித்தறிகிறார்கள். கருத்து கேட்கப்பட்ட நான்கு மருத்துவர்களும் வருடத்திற்கு அதிக பட்சமாக மூன்று தாமத கேஸ்களைப் பார்ப்பதாய்ச் சொல்கிறார்கள். ஆனால், அவை அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு மாதங்களான கர்பமே. ஸ்டெல்லா என்ற பெண்ணின் கர்பம் தான் ஆக அதிகத்தாமதமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இது மிகவும் அரிது என்பதே அவர்களின் வாதம்.
மாதவிடாய் சீராக (ரெகுலராய்) இல்லாத பெண்கள்தான் தாமதமாகத் தங்கள் கர்பத்தை உறுதிசெய்கின்றனர்.சில பெண்களுக்கு மாதவிடைகளுக்கிடையே ஆறுமாதம் வரைகூட இடைவெளியிருப்பதுண்டு. சிலருக்கு கர்பம் வளர ஆரம்பித்தும்கூட மாதாமாதம் மாதவிடாய் வந்தபடியிருக்குமாம். மிகவும் குண்டான பெண்கள் கர்பம் தரித்திருப்பதால்தான் எடைகூடுகிறது என்று நினைக்கத் தவறுகிறார்கள். கர்பகால வாந்தி தலைசுற்றல் போன்றவை இல்லாதவர்கள் பலருண்டு. இவர்களுக்கெல்லாம் கர்பம் உறுதியாவது தாமதமாகிவிடுகிறது. எப்படியும் ஐந்தாம் மாதமாகும்போது ஒரு கர்பவதிக்குத் தெரிந்துவிடும். ஏனென்றால், அதற்குள் அவளின் வயிற்றில் வளரும் சிசு, நகர்ந்து உதைக்க ஆரம்பித்துவிடுகிறது.தாமதமாகத் தன் கர்பத்தை அறியும் பெண்கள் கவலைப்படவேண்டியதில்லை என்பதே இந்த மருத்துவர்களின் எண்ணம். அப்பெண்களும் ஆரோக்கியமான பிள்ளையைப்பெற்றுக் கொள்ளமுடியும் என்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், " இத்தனைமாதம் கல்லுளிமங்(கியாய்?!)கனாய் இருந்த அந்தக்குழந்தை எத்தனை பலமுடையது!", என்று வேறு வியக்கிறார்கள் இவர்கள் உற்சாகமாக.
கர்பமாய் இருக்கும் உங்களுக்கு அதுதெரியாமல் போகமுடியுமா? இங்கிலந்திலும் ஆஸ்திரேலியாவிலும் இரண்டு பெண்களுக்கு
நடந்துள்ளதாம் இதுவரை. ஆனால், இதுவரை இதுபோல சிங்கப்பூரில் நடந்ததில்லை என்கின்றனர் டாக்டர்கள். இந்தவருடத் தொடக்கத்தில் பாலிடெக்னிக் மாணவி ஸ்டெல்லா (உண்மைப் பெயரில்லை) வாயைக்கட்டாமல் கண்டதையும் தின்றுதீர்ப்பதால்,தன் எடை கூடுகிறதென்று நினைத்தாள். அவளுடைய அம்மாவும்கூட அவ்வாறே நினைத்தாள். இதற்காகத் தன் பெண்ணிற்கு உடல் இளைக்கும் மாத்திரைகளைக்கொடுத்தாள். ஏதோ கிரீம் கூட வாங்கிக்கொடுத்திருக்கிறாள். பாலிடெக்னிகில் ஏதோ கோர்ஸ் மாறும் நேரம். பெண் பெரும்பாலும் வீட்டிலிலேயே இருந்தாளாம். தூங்கி மிகவும் தாமதமாக எழுந்து டீவீயில் முன் படுத்துக்கொண்டு வாயிற்கு வேலை கொடுத்தபடியிருந்திருக்கிறாள்.
ஒரு நாள் சிநேகிதி ஒருத்தி," யூ லுக் ப்ரெக்னெண்ட்", என்றதுமே ஒரேயடியாய் அப்செட்டாகி வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொல்லியிருக்கிறாள். அப்போதுதான் மைக்கேல் (உண்மைப் பெயரில்லை) என்ற தன் வகுப்புத்தோழனோடு கடந்த ஆண்டு இறுதியில் ஒருமுறை உடலுறவு கொண்ட தன்ரகசியத்தை அம்மாவிடம் உடைத்திருக்கிறாள். உடனே தாய் மகளை அழைத்துக்கொண்டு மருத்தவரிடம் சென்றிருக்கிறாள். மருத்துவர் கருத்தரித்து 24 வாரங்களாகிவிட்டது என்றும் இனிமேல் குழந்தையைப் பெற்றுக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லையென்றும் சொல்லிவிட்டார். செய்திகேட்டு உடைந்து அழுதிருக்கிறாள். மிகவும் பயந்து வாழ்க்கை முடிந்துவிட்ட விரக்தியடைந்தாளாம். என்னசெய்வதென்றே தெரியவில்லை அவளுக்கு. ஆனால், மருத்துவர் அபார்ஷன் செய்தால் அவளது உயிருக்கே ஆபத்து என்றதும் வேறு வழியில்லாமல் இசைந்தாள். முன்பே தெரிந்திருந்தால் அபார்ஷன் செய்துகொண்டிருப்பேன் என்கிறாள் ஸ்டெல்லா.
ஜூலை ஆரம்பத்தில் குழந்தை பெற்றுக்கொண்டுவிட்டாள்.
மூன்று பிள்ளைகளில் மூத்த பெண் ஸ்டெல்லா. சிரெங்கூன் வட்டாரத்தில் நான்கறை வீட்டில் வசிக்கும் சாதாரண ஒரு மத்தியதரக் குடும்பம்.எப்படித்தன் கர்பத்தை அறியாமல் இருந்தார் என்று நிருபர் கேட்டதற்குத் தனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருந்ததாயும், ஆனால் பயத்தினால் சீக்கிரமே ஒரு முடிவுக்கு வரவில்லையென்றும் சொன்னாள். தான் பாதுகாப்பாய் இருப்பதாயும், பயப்படவேண்டாம் என்றும் மைக்கேல் சொன்னதை முழுவதும் நம்பியதை மிகவும் வேதனையோடு கூறினாள். மாதவிடாய் முறையின்றி இரண்டு மாதங்கள் கூடத் தள்ளிப்போகும் இயல்புண்டு என்பதால்தான் பயப்படவில்லை என்கிறாள். இந்தப்பதின்மவயதுப் பெண்ணிற்கு இயற்கையான சுகப்பிரசவமே ஆயிற்று. கர்பம் பற்றியறிந்தபிறகு வகுப்பிற்குச் செல்லவில்லை. பிரசவவலி ஏற்பட்டதும் ஒரு சின்ன மருத்துவமனையில் ரகசியமாய் அட்மிட் செய்துவிட்டாள் அவள் தாய். யாருக்கும் தெரியாமல் சாமர்த்தியமாகத் தன் பெண்ணின் விஷயத்தை மறைத்துவிட்டாள். அந்தத் தாய் பாவம் அந்த மைக்கேலை முழுமையாக நம்பியதாக அங்கலாய்க்கிறாள். இருவரும் நல்ல நண்பர்களாய் இருப்பார்கள் என்று நம்பினேனே என்றும் 'பள்ளியில் நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று சொல்லிவிட்டு அவன் செய்த வேலையைப்பாருங்கள் என்றும் அரற்றுகிறாள். பதினெட்டு வயது மகளின் உடன்பாடோடு நடந்தது என்பதைக்கூட அவளால் ஏற்றுக்கொள்ள மடியவில்லை. முழுப்பழியையும் அவன் மீது சுமத்துவதைப்பாருங்கள்!
இந்தப்பெண்ணுக்கு பிரசவத்திற்கு முன்பும் பின்பும் நிறைய கௌன்சிலிங் செய்திருக்கிறார்கள். முன்பே அவளைத்தயார் செய்திருக்கிறார்கள், குழந்தையைப் பெற்று தத்துகொடுத்துவிட. அவளின் அம்மாவும் குழந்தையைத் தத்துகொடுத்துவிட்டு ஒழுங்காகப் படியென்று அறிவுரை கூறியிருக்கிறாள்.
எப்ரல் மாதம் பிரசவமாகி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குக் குழந்தையில்லாமலேயே திரும்பியிருக்கிறாள் ஸ்டெல்லா. குழந்தையைத் தத்தெடுக்கத் தகுந்த பெற்றோர்நெருங்கிய உறவினர் ஒருவர் கிடைக்கும்வரை கவனித்துக்கொள்கிறார். அவ்வப்போது தன் மகளைப்பற்றிய நினைவு வருகிறது ஸ்டெல்லாவுக்கு. குழந்தை யாருக்கோ சொந்தமாகப்போகிறது, இனிமேல் நினைத்துப்பார்க்கக்கூடாது என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறாளாம்.
மணமாகிப் பிள்ளைபெற்றுக் கொள்வதைப் பலகாரணங்கள் சொல்லித் தள்ளிப்போடவே நினைக்கும் இளம் ஜோடிகள் ஒருபுறமும், படிக்கவேண்டியகாலத்தில் இத்தகைய தவறுகள் செய்து தாயாகும் மாணவிகள் ஒருமுறமும் அடங்கிய சமூகம் தான் எத்தனை முரண்களை உள்ளடக்கியுள்ளது!
|