செப்டம்பர் 9 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
வேர்கள்
சமையல்
க. கண்டுக்கொண்டேன்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
முத்தொள்ளாயிரம்
திரையோவியம்
சிறுகதை
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  நாங்க ரெடி நீங்க ரெடியா ? : நீங்கள் டி.ஜி.பி.யாக இருந்தால்
  -
  | Printable version |

  நமக்கு எப்பொழுதுமே அடுத்தவர்களின் செயல்பாடுகளில் ஒரு எதிர்மறையான அபிப்பிராயம் உண்டு. குறிப்பாக சினிமா, அரசியல், டிவி, விளையாட்டு என்று இப்பட்டியல் நீளும். இதையே மையமாக வைத்து தமிழோவியத்தில் இந்த புதிய பகுதியை தொடங்கியுள்ளோம்.

  இனி வரும் வாரங்களில், ஒவ்வொரு வாரமும் நமக்கு கடிதம் எழுதும் வாசகர்களில் சிலரை தேர்ந்தெடுத்து ஒரு கேள்வி கேட்போம். அதற்கு வாசகர்கள் தங்கள் பதிலை (தமிழில்) சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதி அனுப்பலாம். கேள்வியை அனுப்பினால் கண்டிப்பாக பதில் அனுப்பியாக வேண்டுமென்பதில்லை. (முடியவில்லை என்று ஒரு வரி பதில் போட்டால் போதும். அதுவும் முடியவில்லையென்றால் பரவாயில்லை)

  இது வரை கடிதம் எதுவும் எழுதவில்லை ஆனால் இதில் கலந்து கொள்ள விருப்பமா? உங்கள் ஆர்வத்திற்கு எங்கள் நன்றி. உடனே feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு உங்கள் விருப்பத்தை தெரிவித்து ஒரு வரி போடுங்கள். வரும் வாரங்களில் உங்களையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்கிறோம்.

  பதிலை அனுப்பும் போது உங்கள் (சமீபத்திய) புகைப்படத்துடன் அனுப்பினால் ரொம்ப சந்தோஷம்!

  இதோ இந்த வார கேள்வி.

  நீங்கள் DGP ஆக இருந்தால், மாநிலத்தில் சட்ட ஒழுங்கை எப்படி காப்பற்றுவீர்கள் ?


  Meenaks'வால்டர்' மீனாக்ஸ்

  டிஜிபியின் புதிய நடவடிக்கைகள்

  1. மாலை ஆறு மணிக்கு போலீஸ் ஸ்டேஷனில் விளக்கு ஏற்றும் பழக்கத்தை முதலில் ஒழிப்பேன். "உள்ளே லட்சுமி வரட்டும்" என்று போன டி.ஜி.பி. ஏற்படுத்தி விட்டுப் போன பழக்கத்தை எல்லா போலீஸாரும் தப்பாகப் புரிந்து கொண்டு விட்டார்கள். இனிமேல் எந்த "லட்சுமி"யும் போலீஸ் ஸ்டேஷன் உள்ளே வரத் தேவையில்லை.

  2. சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்றுவது மிக முக்கியம். குறிப்பாக சட்டத்தை வக்கீல்களிடமிருந்து காப்பாற்றுவது மிக முக்கியம். இதற்காக விசேஷ போலீஸ் பிரிவு ஏற்படுத்தப்படும். அவர்களுக்கு வக்கீல்களைத் துணிச்சலோடு எதிர் கொள்ளத் தேவையான விசேஷ பயிற்சிகள் வழங்கப்படும்.

  3. "கடமை, கண்ணியம் , கட்டுப்பாடு - இவை மூன்றும் எங்களிடம் தட்டுப்பாடு" என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு போலீஸ் கண்மணிகள் பணியாற்றி வருவது அறிந்ததே. இதை சிறிதளவேனும் மாற்றியமைக்க முயல்வேன்.

  4. சிறப்பு நள்ளிரவுக் காவல் படை அமைக்கப்படும். அவசரப்படாதீர்கள், இவர்கள் நள்ளிரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு குற்றங்களைத் தடுக்க அல்ல. நள்ளிரவு கைதுகள், நள்ளிரவு அரங்க இடிப்புகள், நள்ளிரவு சிலை அகற்றுதல்கள் போன்ற தமிழக அரசின் சிறப்புப் பணிகளுக்கு காவல் படையாகப் பணியாற்றுவார்கள்.

  5. ஜூனியர் விகடன், ரிப்போர்ட்டர், நக்கீரன் போன்ற புலனாய்வுப் பத்திரிக்கைகளில் 'கவர் ஸ்டோரி'யாக மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இடம்பெறும் எந்த விஷயமும் அத்தனை நல்ல விஷயமாக இருக்க முடியாது என்று நீண்ட நாள் ஆராய்ச்சியின் அடிப்படையில் கண்டுபிடித்துள்ளேன். இம்மாதிரி விஷயங்களுக்காக சிறப்புப் புலனாய்வுப் படை அமைக்கப்படும்.

  6. சந்தன வீரப்பன் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க இயலாமைக்கு வருந்துகிறேன். (கருத்து தெரிவித்தாலும் ஒன்றும் கிழித்து விடப் போவதில்லை என்பது அறிந்ததே.)

  பின் குறிப்பு: மேற்கூறிய புதிய நடவடிக்கைகள் அனைத்தும் தமிழக முதல்வரின் மனமாற்றங்களுக்கு உட்பட்டதே என்று தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்.


  Azadநான் டி.ஜி.பி.யாக இருந்தால்

  'சௌத்ரி' ஆசாத்

  சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் ஒரு நாளில் நடக்கக்கூடியவை அல்ல. குறுகிய கால, நீண்ட கால செயல் திட்டங்கள் அதற்கு அவசியம்.

  ஒரு மாநிலத்தின் மொத்த காவல் துறையின் பொறுப்பையும் ஏற்று டி.ஜி.பி.யாகப் பதவியேற்க இருக்கிறேன். பதவியேற்குமுன் முக்கியமானதொரு மனப்பயிற்சியை மேற்கொள்வேன். முதல்வருடன் ஒத்துப்போகக்கூடிய மனப் பக்குவத்தை முதலில் என்னில் கொண்டுவர முயற்சி செய்வேன். இதுதான் எனது முதல் படியாக இருக்கும்.

  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பில் இருக்கும் நான், முதலில் எனது கடமை என்ன என்பதைப் புரிந்து சரியாகப் பணியாற்றினாலொழிய நான் நினைக்கும் சட்டம் ஒழுங்கை மற்றவர்களின் மேல் திணிக்க முடியாது. ஜனநாயகத்தின் அடிப்படையில், மாநிலத்தை ஆள்வதற்கென்று ஒருவரிடம் மக்கள் பொறுப்பைச் சுமத்தியிருக்கும்போது, அவருடன் ஒத்துழைப்பது எனது முதல் கடமை என நினைக்கிறேன்.

  அரசியல் சதுரங்கத்தில், மற்றவர்களின் பார்வையில் அதிகமான விலை கொடுப்பதாகத் தோன்றினாலும், எனது செயல்திட்டங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக, அதாவது மாநிலத்தின் காவல் துறை எப்படியிருக்கவேண்டும் என நான் நினைப்பது நிறைவேற இந்த 'விலை' அவசியம்தான்.

  அடுத்து, ஒரு மாத விடுமுறை எனக்குத் தேவைப்படும். இதுவரையில் சட்டம், ஒழுங்கு, குற்றவியல், போதைப் பொருள் தடை, எஸ்.டி.எ·ப், எனப் பல துறைகளில் 'குற்றம் குற்றமே' பாணியில் வாழ்க்கை முறை அமைந்துவிட்டதால், பொருளாதாரம், திட்டம், அரசு செலவினங்கள், நவீனப்படுத்துதல் போன்ற விவரங்களில் அதிகமான பயிற்சிகள் இல்லை. மாநிலத்தின் காவல் துறையின் பொறுப்பாளருக்கு எந்த அளவிற்குப் பயிற்சிகள் இருக்கவேண்டுமோ அத்தனை இல்லை. அவற்றில் வல்லுனராக மாறமுடியாது; குறைந்தபட்சம், அரசு அவற்றில் எப்படி நடந்துகொள்கிறது என்ற விவரங்களைப் படிக்க விடுமுறையில் பாதி நாள்களை செலவழிப்பேன்.

  மீதி நாள்களில், முதல் தகவல் அறிக்கை (F.I.R.) சரியாக பதியப்படாததால் அரசு தரப்பில் தோல்வியடைந்த வழக்குகளின் கோப்புகளைப் படிப்பதில் கவனம் செலுத்துவேன்.

  எனது செயல் திட்டங்களின் விவரம் கீழே.

  1. காவல் - பொதுமக்கள் விகிதம்
  தமிழகத்தில் காவல் - பொதுமக்கள் விகிதம் ஒன்றிற்கு எழுநூற்று எண்பத்தெட்டு என்னும்படியாக இருக்கிறது (1:778). எழுநூற்று எழுபத்தெட்டு பேரைக் கண்காணிக்க ஒரு காவலர்.

  பீகார் மாநிலத்தில் இந்த விகிதம், ஒன்றுக்கு ஆயிரத்து எண்பத்தைந்தாக இருப்பினும் (1:1085), மகாரஷ்ரிரத்தை விடவும் குறைவான விகிதத்தையே நாம் கொண்டிருக்கிறோம் (மஹாராஷ்டிரம் - 1:557). இது அமெரிக்க (1:368), பிரித்தானிய (1:412) விகிதங்களைத் தொட்டுவிடும் அளவில் இருக்கிறது.

  தமிழகத்தில் காவல் துறையின் பலத்தை எண்ணிக்கையில் அதிகப்படுத்துவது எனது முதல் குறிக்கோள். மத்திய மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் இதனைச் செயலாக்க முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அரசுடன் ஒத்துப் போவேன் எனச் சொன்னதற்கு, இதைப் போன்ற மேம்பாட்டுத் திட்டங்களில் அரசு உதவவேண்டும் என்பதும் ஒரு காரணம்.

  இந்த விகிதம் அதிகமானால், சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளை இப்பொழுது இருப்பதை விடவும் திறமையாகச் சமாளிக்க முடியும்.

  2. பட்ஜெட்:
  ஆயுதங்கள், குற்றத் தடவியல் (Forensic Science) ஆகிய துறைகளுக்கு குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கப்படுகின்றது. இதனை மாற்ற முயற்சி செய்வேன். நவீன ஆயுதங்கள், தளவாடங்கள், தொலை தொடர்பு, இவற்றை உபயோகிப்பதற்கான பயிற்சி, குற்றத் தடவியலிலும் நவீன கருவிகளைக் கொண்டு வருதல், தேவையான மனித வளத்தை மேம்படுத்துதல், இவற்றில் எனது கவனம் இருக்கும்.

  மொத்த நிதி ஒதுக்கீட்டில் அரை சதவீதமே பெறுகின்ற குற்றத் தடவியல் துறையைப் பலப்படுத்துதல் அவசியம்.

  பணியில் இருக்கும் போது (on duty) இறக்கும் காவலர்களின் குடும்பத்தாருக்கு தரப்படும் உதவித் தொகை அதிகப்படுத்தப்படும். குறிப்பாக, அவரது வாரிசு ஒருவருக்கு மேல்படிப்பிற்கான செலவுகள் அரசு தரப்பிலிருந்து தரலாமா என ஆராய்வதற்கான சட்ட வல்லுனர்களின் குழுவை அமைப்பதும் எனது குறிக்கோள்களில் ஒன்று.

  இம்முயற்சி மனோரீதியாக காவல் துறையினரின் மனதில் கடமை உணர்வைக் கொண்டுவரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

  ஒரு டி.ஜி.பி.யின் எல்லைகளுக்குள் மேற்சொன்னவை வருகின்றனவா என்பது வேறு விஷயம். முதல்வருடன் எனக்கு இருக்கப்போகும் நல்லுறவை (good offices) முன்வைத்து இதற்கான முயற்சிகளில் ஈடுபட எண்ணம்.

  3. மனித வள மேம்பாடு:
  காவல் துறையைப் பற்றிய பேச்சு வரும்பொழுதெல்லாம், காவல் தனது அதிகாரத்தைத் தவறான முறையில் உபயோகிப்பதே அதிகமாக பேசப்படுகிறது. தவறான முறையில் அதிகாரத்தை உபயோகிக்கின்றார்கள்; சரியான முறையில் உபயோகிக்கின்றார்களா என்றால், கிடையாது. காரணம், சட்ட நுணுக்கங்களில் கவனம் செலுத்துவதில்லை.

  சரியான முறையில் செயல்படுத்தப்படும் காவலின் அதிகாரம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவசியமானது.

  வழக்குகளுக்கு அடிப்படை முதல் தகவல் அறிக்கை. இதனை எழுதுபவர் அனுபவமிக்க எழுத்தர் (writer). நீண்ட நாள் பணியில் பல வழக்குகளைச் சந்தித்து, பல குற்றவாளிகளைப் பிடித்து, அனுபவம் வாய்ந்த காவலர். ஆனாலும், சட்ட நுணுக்கங்களில் இவரது ஆற்றல் ஒரு தேர்ந்த குற்றவியல் வழக்கறிஞரின் திறனுக்கு ஈடாகுமா என்பது கேள்விக்குறி. முதல் தகவல் அறிக்கையை ஊதித் தள்ளும் சட்ட மேதைகளின் முன், அனுபவத்தின் அடிப்படையில் என்னதான் செயலாற்றினாலும் வெற்றி பெற முடியுமா?

  குற்றவியல் துறை சார்ந்த சட்ட வல்லுனர்களைக் கொண்டு 'பட்டறைகள்' நடத்தி எழுத்தர்களின் திறனை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துவேன். அகப்பட்ட குற்றவாளி தப்பிவிடாமல் இருக்க முதல் தகவல் அறிக்கை சரியான முறையில் பதியப்படப்வேண்டும்.

  பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இந்தப் பயிற்சிகளை எந்த அளவிற்கு ஏற்பார்கள் எனும் சந்தேகம் தோன்றலாம். உளவியல் ரீதியான பட்டறைகள் அவர்கள் மனதை மாற்றும். தன்னை நவீனப்படுத்திக் கொள்ளாத தொழில் எதுவாக இருந்தாலும் நாளடைவில் அழிந்துவிடும் என்னும் உண்மையை அவர்களுக்கு உணர்த்தினால் அவர்கள் மாறுவார்கள்.

  இத்துடன், இந்தியாவிலே முதன் முதலில் கணினி அறிமுகப்படுத்தப்பட்ட காவல் துறை என்னும் பெருமையைப் பெற்றிருக்கும் தமிழகக் காவல் துறையின் கணினி செயல்பாடுகள் மேம்படுத்தப்படும். அதற்கான பயிற்சிகளில் அதிகமான கவனம் செலுத்தப்படும்.

  4. அதிகாரங்கள்:
  எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் 'Q' ப்ரான்ச்சின் அதிகாரங்கள் அதிகமாக்கப்படும். தீவிரவாதத்தை ஒழிப்பதில் தன்னை சமாதானப்படுத்திக்கொள்ளும் எந்த அரசாலும் தனது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைவதைத் தடுக்க முடியாது.

  5. 'பொதுமக்கள் - காவல்' உறவு:
  காவல் துறை தனது எல்லையை மீறுவதான குற்றச்சாட்டுகள் அவசியம் விசாரிக்கப்படும். 'உங்கள் நண்பன்' என்னும் பெயரை மீண்டும் காவல் துறை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். முடியாதென்று எதுவும் இல்லை. மேற்சொன்ன காவல் - பொதுமக்கள் விகிதத்தைக் குறுக்கும் முயற்சியில் ஆளெடுப்பு நடக்கையில், கண்காணிப்பிற்கெனவும் (vigilance) ஆள்கள் எடுக்கப்படுவார்கள். இன்டலிஜென்ஸ் - கவுன்டர் இன்டலிஜென்ஸ் சரியான முறையில் செயலாக்கப்படும். இதனால், காவல் துறை தனது எல்லையை மீறுவது தடுக்கப்படும்.

  இன்னும் பல மேம்பாடுகளை முயற்சி செய்து, இந்தியாவில் சிறந்த காவல் துறையென்னும் பெயரை என்றும் நமதாக்கிக்கொள்ள விருப்பம்.

  O

  ஒரு சராசரிக் குடிமகனை மூன்று மணி நேரம் கற்பனையில் டி.ஜி.பி.யாக உலவவிட்ட தமிழோவியத்திற்கும், விவரங்கள் எடுக்க உதவிய இணயதளங்கள் அனைத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்.


  'Namakkal' Raja'ஹானஸ்ட்' ராஜா (நாமக்கல்)

  உடனடி நடவடிக்கையாக முழுமையாக லஞ்ச லாவண்யத்தை ஒழிப்பேன், கள்ள சாராயம் இல்லாமல் செய்வேன், தீவிரவாதத்தை வேரறுப்பேன், பணம்
  பதவியின் காலில் வீழ்ந்து கிடக்கும் சட்டத்தை மீட்பேன், ஒரு குற்றம்கூட இல்லாமல் தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றுவேன்  - என்றெல்லாம் சொல்வேன் என்று நீர் எதிர்பார்த்தீரோ.. ஏமாந்தீர்! இவையனைத்தும் காலம் காலமாக காவல்துறையின் முன்னுள்ள சவால்கள். அவற்றிற்குரிய நடவடிக்கைகள் என் காலத்திலும் பழுதில்லாமல் எடுக்கப்படும். அதே சமயம் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டிய, மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றை தீர்ப்பதுதான் என் முழுமுதற் கடமையாக இருக்கும். 

  1. மாதாந்திர மக்கள் சந்திப்பு

  தற்போது காவல்துறை என்றதும் மக்கள் மனதில் ஏற்படும் ஒருவித பயம் கலந்த வெறுப்பை முதலில் போக்க வேண்டும். காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையேயுள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். அதற்குத் தேவையான மாற்றங்கள் மேல்மட்டத்திலிருந்து செய்யப்படும். எஸ்.பி, டி.எஸ்.பி போன்ற அதிகாரிகள் தங்கள் பகுதியின் ஆய்வாளர்கள் மற்றும் இதர காவலர்களுடன் ஒரு குழுவாக மாதம் ஒருமுறையாவது அவசியம் மக்களை சந்திக்க அறிவுறுத்தப்படுவார்கள். அந்த சந்திப்பு வெறும் சம்பிரதாயமானதாக இல்லாமல் செயல்திறம் கொண்டதாக இருக்கும். அச்சந்திப்பின் நோக்கம் பற்றியும், அங்கே மேற்கொள்ளவிருக்கிற நடவடிக்கைகள் பற்றியும் பாமரரும் தெளிந்தறிய விரிவான அறிவிப்புகள் வெளியிடப்படும்.

  அச்சந்திப்பில் பொது மக்களின் கோரிக்கை மனுக்களனைத்தும் உயரதிகாரிகளால் உடனுக்குடன் பரிசீலிக்கப்படும். உடனடியாக நடவடிக்கை எடுக்கத்தக்க நியாயமான மனுக்களுக்குரிய நீதி அவ்விடத்திலேயே கிடைக்க ஆவண செய்யப்படும். உதாரணமாக- வாடகையும் தராமல், இடத்தையும் காலியும் செய்யாமல் வாடகைதாரர் ஆக்கிரமிப்பு செய்து அராஜகம் செய்வது பற்றிய ஆதாரத்துடன் கூடிய புகார் என்றால், உடனிருக்கும் காவலர்கள் உடனடியாக உதவிக்கு அனுப்பப்படுவார்கள். இதே இன்று காவல்துறை இருக்கும் நிலையில் இப்புகாரை எடுத்துக் கொண்டு ஒருவர் காவல் நிலைய படியை மிதிப்பாரேயாயின், ரைட்டருக்கு இருநூறு, ஏட்டுக்கு முன்னூறு, ஆய்வாளருக்கு ஐந்நூறு என்று குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயாவது தண்டம் அழ வேண்டியிருக்கும் (சொந்த அனுபவம்). அதைவிட ஆக்கிரமிப்பு செய்தவர் அதிகம் கொடுப்பரேயாயின் உங்கள் மனு குப்பை கூடையைத்தான் தஞ்சமடையும். அத்தகைய பாரபட்சங்கள் இது போன்ற மக்கள் சந்திப்புகளால் தவிர்க்கப்படும். அல்லது கவனத்திற்கு வந்து தகுந்த நடவடிக்கைக்கு உள்ளாகும்.

  2. தகவல் பெறும் உரிமை

  எந்த சட்டத்தை அமல் படுத்துகிறேனோ இல்லையோ வெறும் ஏட்டளவிலுள்ள, பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாகிய "தகவல் பெறும் உரிமை" சட்டத்தை காவல்துறையில் முழுமையாக நடைமுறைப்படுத்துவேன். தங்கள் புகாரின் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது பற்றிய அறிக்கையை எழுத்துபூர்வமாக கேட்டுப் பெறலாம். அது எக்காரணம் கொண்டும் மறுக்கப்படக் கூடாது.

  3. கட்ட பஞ்சாயத்து, கந்துவட்டி ஒழிப்பு

  கந்துவட்டி கொடுமை போல இன்று ஏழை மக்களை வாட்டும் இன்னொரு விசயம் இருக்க முடியாது. அவசர செலவுக்காக பத்து, இருபது என்று அநியாய வட்டிக்கு கடன் வாங்கிவிட்டு, பின்பு அதை அடைக்க முடியாமல் வருமானம் அனைத்தையும் வட்டியாக கொடுத்து துன்புறும் சிலரை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். அசலை விழுங்கும் வட்டியின் கொடுமை தாளாமல் காவல் நிலையம் சென்றால், அங்கே கந்து வட்டி கடன்காரர்களே தேவலாம் என்று எண்ணும்படியாக சில வசூல் ராஜாக்கள் காய்ந்த மடியிலும் கறக்கப் பார்க்கிறார்கள். காவல்துறைக் காப்பாற்றும்- என்னும் தங்கள் கடைசி நம்பிக்கையும் பொய்த்து போகும்போது, அவர்கள் தங்கள் வாழ்வின் மீதிருந்த பிடிப்பை முற்றிலும் இழந்து குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இந்த கொடுமை என் பணிக் காலத்தில் எந்த இடத்திலும் நடைபெறக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பேன். கந்து வட்டி சம்மந்தமான புகார்களின் மீது மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

  அதேபோல் "வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்று அராஜகமாக அன்றாடம் காய்ச்சிகளை உருட்டி மிரட்டி, பணம் பறித்து தனி அரசாங்கமே நடத்த முயலும் கட்ட பஞ்சாயத்து ஆசாமிகளின் கொட்டத்தை அடக்க ஆனது அனைத்தும் செய்யப்படும்.

  4. களையெடுப்பு, அரசியல் கலப்பு தவிர்ப்பு

  காவல்துறைக்குள்ளேயே சுய பரிசோதனை செய்யப்பட்டு அனைவராலும் நேர்மையான அதிகாரிகளாக அறியப்படுபவர்கள் பாராட்டப்படுவார்கள். மேலும் மேலும் அவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்படுவார்கள். அதே சமயம் லஞ்சம், ஊழல், முறைகேடு போன்றவற்றில் ஈடுபட்ட புகார்கள் உள்ள அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்.

  அரசியல்வாதிகளின் நியாயமான சிபாரிசுகளைத் தவிர மற்ற அனைத்தையும் புறந்தள்ள அனைவரும் அறிவுருத்தப்படுவார்கள். இவற்றை நடைமுறைப்படுத்துவதில் எந்த அதிகாரியாவது சிக்கலை சந்தித்தால் அவர்கள் காவல்துறை தலைவராகிய என்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இதற்காக தனி ஹாட் லைன் வசதி ஏற்படுத்தி தரப்படும்.

  - நேர்மையானதொரு முதல்வரின் பக்கபலமில்லாமல், இவற்றில் ஒன்றையாவது நடைமுறைப்படுத்த முனைந்தால், அடுத்த கணமே இன்னாள்- முன்னாள் ஆகிவிடுவேன் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |