செப்டம்பர் 9 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
வேர்கள்
சமையல்
க. கண்டுக்கொண்டேன்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
முத்தொள்ளாயிரம்
திரையோவியம்
சிறுகதை
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  சிறுகதை : பின்தொடரும் பூனைகள்
  - ஹரன்பிரசன்னா
  | Printable version |

  ஹையோ, புஸி எத்தன அழகு
  புஸ¤புஸ¤ன்னு
  லைட் எரியுற கண்ணோட
  அப்படியே கட்டிக்குவேன்
  பூனை என் செல்லம்

  (வெங்கட், இரண்டாம் வகுப்பு, சித்ரா மெட்ரிகுலேஷன் பள்ளி)

  என்னை விடாது தொடரும் பூனைகள் போலவே நீங்களும் என்னைப் பின்தொடரப்போகிறீர்கள். இப்போது என்னுடன் என் எழாம் வயதில் இருக்கிறீர்கள்.

  முதல் பூனை

  என் பாட்டிக்குப் பூனை என்றாலே பிடிக்காது. அதன் உடலிலிருந்து உதிரும் மயிர் வீட்டிலுள்ள குழந்தைகளுக்குப் பல நோய்களை உண்டாக்கும் என்று  சொல்லுவாள். பாட்டியின் செல்வாக்கை மட்டுப்படுத்தி வைப்பதில் என் அம்மா அதிக அக்கறை எடுத்துக்கொள்ளுவாள். வீட்டில் பூனையை வளர்க்க, பாட்டிக்குப் பிடிக்காது என்ற ஒரு காரணம் என் அம்மாவிற்குப் போதுமானதாய் இருந்தது. ஆனாலும் அம்மா என்னைப் பூனையின் பக்கத்திலேயே அண்ட விட மாட்டாள். என் அக்கா மட்டும் எந்தவிதத் தடையுமில்லாமல் பூனையைக் கொஞ்சுவாள். அதைப் பார்க்கும்போது என்னுள் ஏக்கம் பரவும்.

  ஏனோ இந்தப் பூனை என்னை ஈர்க்கிறது. சாம்பல் நிறக்கோடுகளுடன் புசு புசுவென உரோமங்களுடன் முன் வலது காலை எச்சில்படுத்தி முகத்தைத் துடைக்கும் அழகைப் பார்க்கும்போது பூனையை அள்ளிக் கொஞ்சத் தூண்டும். மடக்கி வைக்கப்பட்ட படுக்கை விரிப்புகளில் நான்கு கால்களையும் மேலே தூக்கி பூனை ஆழ்நித்திரையில் இருக்கும்போது அது அறியாமல் பதுங்கிச் சென்று முகத்தை வைத்துப் பூனையை அழுத்திக் கொஞ்ச வெகுநாளாக எனக்கு ஆசை. 

  நான் பூனையின் அருகில் சென்றாலே யாராவது பார்த்துவிடுவார்கள். சமையலறையின் சன்னல் வழியாக அக்கா பார்த்துக் கத்துவாள். பாட்டி புலம்பத் தொடங்குவாள். பெரிய பிரளயத்துக்குப் பின் பூனை ஏகப்பட்ட வசவுகளைப் பெறுவதோடு அன்றைய தினம் கழியும்.

  வீட்டில் யாருமே இல்லை என்று ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு கொஞ்சச் செல்லும்போது பூனை இல்லாது போனதுமுண்டு.

  இன்னும் சில சமயங்களில் நானே வாய்ப்பைக் கெடுத்துக்கொள்வேன். கொஞ்சம் அதீத ஈடுபாட்டுடன் கொஞ்சிவிடுவேன். பூனை மிகுந்த பயத்துடன் கொஞ்சம் கோபம் கலந்து புதுமாதிரியாகக் கத்தும். அந்தச் சத்தத்தை வைத்தே நான் பூனையைக் கொஞ்சுகிறேன் என்று அக்கா கண்டுபிடித்துவிடுவாள். பாட்டி, "அந்தச் சனியனைக் கொண்டு போய் விட்றுங்கடான்னா யாரு கேக்குறா? நா என்ன சொன்னாலும் எனக்கு எதிரா செய்யணும் அவளுக்கு.." என்று பூனையையும் என்னையும் விட்டுவிட்டு அம்மாவை வையத்தொடங்குவதோடு அன்றைய தினம் முற்றும்.

  இப்போது வீட்டில் யாரும் இல்லை. என்னைப் பார்த்தவுடனே ஓடும் பூனை இன்று  கொஞ்சம் நட்பு கலந்த குரலில் மிக மெலிதாக "மியாவ்" என்றது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தினம் பால் ஊற்றும் அக்கா இன்று மறந்துவிட்டாள் என்பதை யூகித்தேன். பூனை பசியிலிருக்கிறது. சமையலறையில் பாலைத் தேடி எடுத்துக்கொண்டுவந்து அதன் கிண்ணத்தில் ஊற்றினேன். சிறிது தயக்கத்திற்குப் பின் பருகத் தொடங்கியது. நாக்கு பாலை நக்கிக்கொண்டிருந்தாலும் அதன் கண்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது. அதிக ஈர்ப்புச்சக்தியுள்ள கண்கள். கரும்பச்சை நிறத்தில் அதன் கண்களைப் பார்க்கும்போது நான் என் வசமிழக்கத் தொடங்கினேன். மெல்ல பூனையை நெருங்கினேன். அது பால் குடிப்பதை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு மீண்டும் குடிக்கத் தொடங்கியது. அதனருகில் அமர்ந்து தலையைத் தடவிக்கொடுத்தேன். மெல்லிய சத்தத்தில் அது உறுமுவது கேட்டது. நான்கைந்து முறைத் தடவிக்கொடுக்கவும் இயல்பாகி என் கைகளை உரச ஆரம்பித்தது. எனக்கு மிகுந்த சந்தோஷமாயிருந்தது. நாளை முதல் என்ன ஆனாலும் பூனைக்கு நான்தான் பாலூற்றவேண்டும் என நினைத்துக்கொண்டேன். அக்கா வரும்போது பூனை என்னைக் கொஞ்சுவதைப் பார்த்து ஆச்சரியப்படவேண்டும் என்ற என் எண்ணம் உறுதிப்படத் தொடங்கியது.

  பூனையும் நானும் வெகு விரைவில் நண்பர்களானோம்.

  தினம் காலையில் பூனைக்குச் சன்னதம் பிடித்த மாதிரி ஒரு பரபரப்புத் தொற்றிக்கொள்ளும். சமையலறையிலிருந்து ரேழிக்குப் பாயவும் ரேழியிலிருக்கும் கதவு வழி மேலேறி சேந்திக்குச் செல்லவும் அங்கே இருந்து கீழே குதிக்கவும் அதன் அட்டகாசம் சொல்லி மாளாது. நான் கையில் சிறிய குச்சியையோ அல்லது அம்மாவின் படுக்கையறையில் வாடிப்போய்க் கிடக்கும் பூநாரையோ எடுத்துக்கொண்டு ஆட்டுவேன். தூரத்திலிருந்து அதைப் பார்க்கும் பூனை பதுங்கிப் பதுங்கி நடக்கத் தொடங்கி ஓடிவந்து என் கையில் தாவும். ஒரு கட்டத்தில் மூச்சு வாங்கிச் சாயும். இரண்டே நிமிடத்தில் ஆர்வம் தாங்காமல் மீண்டும் பரபரப்பாக ஓடத் துவங்கும். பூனையின் காலை நேரங்கள் எனக்கு மிக உவப்பானவை. சில சமயங்களில் அக்கா நான் அன்றைய வீட்டுப்பாடத்தை எழுதாமல் பூனையுடன் விளையாடுகிறேன் என்று போட்டுக்கொடுப்பாள். அவளுக்குப் பொறாமை என நினைத்துக்கொள்வேன். அவளிடமும் சொன்னேன். மிகுந்த அலட்சிய பாவத்தோடு "பூனை உங்கூட வெளயாட மட்டுந்தான் செய்யும். ஆனா அதுக்கு நெசமாலுமே எம் மேலத்தான் பாசம்" என்றாள். அவள் அகந்தைக்குச் சிகரம் வைக்கிற மாதிரி ஒரு நாளும் வந்தது.

  இரவில் ·பேனின் சத்தம் கர்ண கொடூரமானதாய் இருக்கும். கொஞ்சம் பெரிய மனுஷ தோரணையில் "அந்தச் சத்தம் இல்லைன்னா தூக்கம் வரமாட்டேங்குது" என்பாள் அக்கா.

  அவள் உறங்கும்போது பார்க்கவே எனக்குப் பயமாய் இருக்கும். பாதிக்கண் திறந்து தூங்குவாள். வயதை மீறிய வளர்ச்சி அவளுக்கு என்று பக்கத்துவீட்டு லட்சுமணன் அவன் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. சில தினங்களுக்கு முன்பு காலையில் வழக்கம்போல் பூனையுடன் விளையாட முனைந்தபோது அக்கா திட்டினாள். இனிமேல் பூனையுடன் அப்படி விளையாடக்கூடாது என்று சொன்னாள். அதற்கான காரணங்களைச் சொல்ல முற்றிலும் மறுத்துவிட்டாள். பாட்டியும் கூட, "பூனை பாவம், அதை உபத்திரவிக்காதே!" என்று சொன்னது ஆச்சரியமாக இருந்தது. பூனையும் வழக்கத்திற்கு மாறாக பரபரப்பில்லாமல் அமைதியாக இருந்தது. கடந்த சில நாளாகவே பூனையிடம் காலை வேளைகளில் பரபரப்பில்லை என்றாலும் இன்று அதன் அமைதி அளவிற்கு அதிகமாக இருப்பதை உணர்ந்தேன். யோசிப்பினிடையே தூக்கம் வரத் தொடங்கியது.

  காலையில் வீட்டில் ஏகத்திற்கும் பரபரப்பு. ஆளாளுக்கு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. யாரிடமாவது கேட்டாலும் பதில் சொல்வார்கள் என்று தோன்றவில்லை. அக்கா ரேழியில் இருக்கும் கட்டிலில் உட்கார்ந்துகொண்டு கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்துக்கொண்டிருந்தாள். நானும் சென்று கட்டிலில் உட்கார்ந்துகொண்டேன். என்றைக்கும் இல்லாமல் அக்கா மீது பாசம் வருவதுபோல உணர்ந்தேன். உடனடியாக அதை மறுக்கவும் செய்தேன். அவளைத் தொட்டு அக்கா என்று அடிக்குரலில் கூப்பிட்டேன். நிமிர்ந்து பார்த்தாள். பார்த்த மறுவினாடி சொன்னாள்.

  "நாந்தான் சொன்னேன்ல.. பூனைக்கு எங்கிட்டத்தான் பாசம் ஜாஸ்தின்னு.. நேத்து அது குட்டிப் போட்டிச்சு தெரியுமா.. உனக்கெங்க தெரியும். படுத்தா சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம பாதி வாயத் தொறந்துக்கிட்டு எச்சி ஒழுகிக்கிட்டு தூங்கத்தான் தெரியும்.. நேத்து நைட் பூனை வந்து என்னை முட்டி முட்டி எழுப்பிச்சு.. நாந்தான் கட்டிலுக்குக் கீழ இடம் ஒழிச்சுக் கொடுத்தேன். அழகா நாலு குட்டி போட்டுருக்கு.. பூனை உன்னை எழுப்பலை. என்னைத்தான் எழுப்பிச்சு.. தெரிஞ்சுக்கோ . இல்ல பாட்டி.." என்று பாட்டியையும் துணைக்கழைத்தாள். பாட்டி, "இந்த விஷயம்லாம் பொண்ணுங்களுக்குத்தான் புரியும்னு பொம்பளைப் பூனைக்குக் கூடத் தெரிஞ்சிருக்கு.. அவனுக்கு என்ன தெரியும். நீ அவனை சும்மா சீண்டாத" என்றாள்.

  கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்தேன். கருஞ்பச்சைக் கண்களுடன் இரண்டு முன்னங்கால்களை முன்னே நீட்டி, பின்னங்கால்களைப் பின்னே நீட்டி, பக்கவாட்டில் சாய்ந்து படுத்திருந்தது. மூன்று குட்டிகள் பால் குடித்துக்கொண்டிருந்தன. ஒரு குட்டி மடியைத் தேடிக்கொண்டிருந்தது. நான்கு குட்டிகளும் கண் திறக்கவில்லை. தாய்ப்பூனை பெரிய சாகசத்திற்குப் பின் ஓய்வெடுக்கும் வீரன் மாதிரி சத்தம் இல்லாமல் மியாவ் என்று வாயை மட்டும் அசைத்தது. சாம்பல் நிறக்கோடுகளாலான புசுபுசுவென்று இருக்கும் அப்பூனையை ஏனோ என் ஆழ்மனதிலிருந்து வெறுத்தேன்.

  எழாம் வயதில் நடந்த சம்பவங்களைத் தொகுத்துச் சொன்னதன் களைப்பை மீறி உங்களை என் பதினைந்தாம் வயதிற்கு அழைத்துச் செல்கிறேன்.

  இரண்டாம் பூனை >>

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |