Tamiloviam
செப்டெம்பர் 13 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : நனவுலகில் கனவுகளுடன் ஒரு நிலவு - நிர்மலா ராஜூ (2)
- மதுமிதா [madhumitha_1964@yahoo.co.in]
| | Printable version | URL |

(சென்ற வார தொடர்ச்சி)

வருகையாளர்களைப் பெருக்கும் பொருட்டு கொள்கைகளை விட்டுக்கொடுக்க நேரிட்டிருக்கிறதா ?

Nirmala Rajuநிலாச்சாரலுக்கு முன்னும் பின்னும் ஆரம்பித்த எண்ணற்ற தமிழ் வலைத்தளங்கள் பொருளாதார நெருக்கடியால் மூடப்பட்டுவிட்டன. நிலாச்சாரலிலிருந்து வருவாய் தேவையில்லை என்ற எங்கள் நிலைப்பாடே நிலாச்சாரல் இன்னும் தொடர்வதற்குக் காரணம்.

இந்த தெளிவான நிலைப்பாடு காரணமாக பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் தரவேண்டிய நெருக்கடி எங்களுக்கில்லை. அதனால் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவும் தேவை இருக்கவில்லை.

பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அவர்கள் பார்வையிடும் பக்கங்களின் விபரமும் நிலாச்சாரலின் ரீச் பற்றி அறிய பயன்படுமாதலால் விபரங்களை அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அவை பெருக வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டு எதுவும் செய்ததில்லை. உண்மையாகவே இதுவரை நிலாச்சாரலுக்கென்று எங்கும் எந்தக் கட்டண விளம்பரமும் நாங்கள் தந்ததில்லை. நிலாச்சாரலில் விளம்பரம் செய்யுங்கள் என்று யாரிடமும் போய் கேட்டதில்லை. Organic growth என்று சொல்வார்களல்லவா - அப்படித்தான் நிலாச்சாரலின் வளர்ச்சி இயற்கையாகவே அமைந்தது. வாய்மொழி விளம்பரம் தந்த அனைத்து வாசகர்களுக்கும்தான் நன்றி சென்றடையும்

வருகையாளர்களில் எவ்வளவு பேர் ஜனரஞ்சகமும் காத்திரமும் சம அளவில் நிறைந்த நிலாச்சாரல் போன்ற தமிழ்த்தளத்திற்கு சந்தா கட்டிப் படிக்க முன் வரக்கூடும்? இலவசமாக சேவை நடத்துவதன் மூலமே பொருளாதார ரீதியில் தன்னிறைவு உடைய வலையகத்தைத் தொடர முடியுமா?

இணைய இதழை சந்தா கட்டி படிக்க வாசகர்கள் பெருமளவில் முன்வருவார்களா என்பது சந்தேகமே. பெரிய பெரிய பத்திரிகைகளெல்லாமே இந்த இணைய சந்தா விஷயத்தில் தடுமாற்றம் காண்பதாகத்தான் அறிகிறேன். ஆனாலும் சில வாசகர்கள் நிலாச்சாரல் இலவசம் என்பதை அறியாமல் சந்தா விபரங்கள் கேட்டு அஞ்சல் அனுப்பும்போது ஆச்சரியமாகவே இருக்கிறது.

எனினும் சந்தா என்ற Revenue model வழி செல்லாமல் பொருளாதாரத் தன்னிறைவுக்கு புதிது புதிதாகத் தோன்றும் மற்ற வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம். அவற்றில் ஒன்றுதான் நிலாஷாப். நிலா புக்ஸ் மூலம் மின் நூல்கள் வெளியிட்டு விற்கவும் முயன்று வருகிறோம்

என்றாலும்  வருவாயை எதிர்பார்க்காமல் எவ்வளவோ தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றனவே? ஒருமித்த கருத்துடைய குழு அமையுமானால் பொருளாதார ரீதியில் தன்னிறைவு உடைய வலையகத்தைத் தொடர்வது சாத்தியமே.


சிறுபத்திரிகைகள் போல் காலப்போக்கில் நிதிப்பற்றாக்குறையில் நின்றுபோகும் அபாயம் இருக்கிறதே? மேலும், தன்னார்வலர்கள் வேறு விஷயங்களில் நாட்டம் கொள்ளும்போது, வருமானம் இல்லாத ஒன்று தன்னிறைவு அடைந்து விடுமா?

ஒருவர் போனால் இன்னொருவர் வருவார். அப்படித்தானே சேவை நிறுவனங்கள் இயங்குகின்றன?

ஆனால் அதற்காக இந்த மாடலில் குறைகள் எதுவும் இல்லை என்று சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிட்டது போல சேவை நிறுவனங்களுக்கான பல பின்னடைவுகள் இங்கும் இருக்கின்றன - உதாரணமாக தொழில் நுட்ப முன்னேற்றங்களுக்கேற்றவாறு நிலாச்சாரலை விரிவுபடுத்துவது மிகப் பெரும் சவாலாகவே எங்களுக்கு அமைந்திருக்கிறது.


வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை எப்படி அறிந்து கொள்கிறீர்கள் ? (கவுண்ட்டர் வைத்தல்ல.)

ஆரம்ப கால கட்டத்தில் வாரத்துக்கு ஆறிலிருந்து பத்து படைப்புகளைத் தேற்ற மிகவும் சிரமமாக இருக்கும். எத்தனையோ சித்து வேலைகளெல்லாம் செய்துதான் ஒவ்வொரு இதழையும் வெளிக்கொணரவேண்டி இருக்கும். இப்போது நல்ல படைப்புகளாகத் தேர்ந்தெடுத்து வெளியிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. விரைவாக வெளியிட்டு படைப்பாளிகளை ஊக்குவிக்க முடியவில்லையே என்று நாங்கள் வருந்தும் அளவுக்கு ஆக்கங்கள் இருப்பில் இருக்கின்றன.

படைப்பாளிகளே இத்தனை பேர் நிலாச்சாரலின் மேல் அபிமானம் வைத்திருக்கும்போது வாசகர்கள் அவர்களை விட பலமடங்கு இருப்பார்கள் என்பது தெளிவு. தவிர, படைப்புகளுக்கு வரும் பின்னூட்டங்களின் அதிகரிப்பும் வாசகர் எண்ணிக்கையின் வளர்ச்சியைக் காட்டுமகிறது


நிலாச்சாரலின் இத்தனை இதழ் வரையிலான பங்களிப்பில் உங்களைக் கவர்ந்த,நெகிழச் செய்த,மகிழச்செய்த எதிர்வினை ? (எதிர்வினை=வாசித்தபின் வந்த கருத்துக்கள்)

நிலாச்சாரலில் வெளியான என்னுடைய கருவறைக்கடன் என்ற சிறுகதையைப் படித்துவிட்டு வந்த பின்னூட்டங்கள் பல என்னை கதாசிரியராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் மிகவும் நெகிழச்செய்தன. அவற்றில் குறிப்பாக இரண்டு பின்னூட்டங்கள்:

'இந்தக் கதையைப் படித்துவிட்டு என் கண்ணீரை மறைக்க நான் மிகவும் சிரமப்படவேண்டி இருந்தது. இனி என் தாயை நல்ல விதத்தில் கவனித்துக் கொள்ள நான் முடிவு செய்திருக்கிறேன்'

'மிகவும் நல்ல கதை. இதைப் படித்தபின் எனக்கு அயல்நாடு செல்லும் ஆசை போய்விட்டது. பணி முக்கியம்தான். ஆனால் தாய் அதைவிட முக்கியம்'

ஒரு மனிதனின் வாழ்க்கையில் தன் படைப்பு வரவேற்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதைவிட ஒரு படைப்பாளிக்கு வேறு என்ன அங்கீகாரம் முக்கியமாகிப் போய்விடமுடியும்? அத்தகைய படைப்புகளை சாமனியருக்கும் கொண்டு சேர்க்கும் பெருமையைவிட பத்திரிகையாசிரியராய் நான் வேறு என்ன சாதித்துவிட முடியும்?

அன்றைய, இன்றைய அச்சுப் பத்திரிக்கையின் தரம் குறித்து (தாளின் தரம் அல்ல. எழுத்து நேர்மையின் தரம்) என்ன நினைக்கிறீர்கள்?

ஜனரஞ்சகம் என்ற பெயரில் பத்திரிகைகளின் தரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். பெரிய பெரிய பத்திரிகைகளே சினிமாவால்தான் முக்கால்வாசிப் பக்கங்களை நிரப்புகின்றன. தவிர, தமிழில் ஒரு வாரப் பத்திரிகை வாங்கினால் போதும் என்கிற அளவுக்கு ஒரே கட்டுரைதான் வெறும் வார்த்தை மாற்றங்களோடு மற்ற சில பத்திரிகைகளிலும் வெளியாகிறது. பத்திரிகை விமரிசனங்களைக் கூட நம்பி படம் பார்க்க முடியாத அளவுக்கு அவை ஒருதலைப் பட்சமாக இருக்கின்றன. சமூக அக்கறையோடு எழுத வேண்டும் என்பதைவிட சென்சேஷனலாக எழுத வேண்டும் என்பதே இங்கு முன்னிலைப் படுத்தப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை தொழில் போட்டி பத்திரிகைகளின் நேர்மையையும் தரத்தையும் பாதிக்கிறது என்றே கருதுகிறேன்.


பத்திரிகைகளுக்கும், இணைய இதழ்களுக்கும் என்ன ஒற்றுமை வேற்றுமை காண்கிறீர்கள் ?

அச்சுப் பத்திரிகைகளுக்கு இருக்கும் கட்டமைப்பு (Infrastructure) இணைய இதழ்களுக்கு இருப்பதில்லை. குறைந்த பட்ஜெட் காரணமாக இணைய இதழ்கள் பெரும்பாலும் தனிமனிதர் சார்ந்ததாகவே அமைந்திருக்கின்றன.  அவற்றின் ஸ்திரத்தன்மை குறைவு. அதனால், இப்போதுள்ள நிலையில் அச்சுப் பத்திரிகைகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை இணைய இதழ்கள் ஏற்படுத்துவது கடினம்.

ஆனால் அச்சு இதழ்களைவிட  இணைய இதழ்களில் பன்னாட்டு தமிழ் சமூகங்களின் வாழ்வியல் தாக்கம் அதிகம் வெளிப்படுகிறது.  இதனால் எதிர்காலத்தில் இணைய இதழ்களின் முக்கியத்துவம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அச்சு இதழ்கள் வளரும் எழுத்தாளர்கள் நெருங்க இயலாத அளவிலேயே உள்ளன. இணைய இதழ்கள் புதிய எழுத்தாளார்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதோடு அவர்களை வார்த்தெடுக்கும் பயிற்சிக் களங்களாகவும் அமைகின்றன. அந்த விதத்தில் இணைய இதழ்கள் இளைய சமுதாயத்தில் தமிழார்வத்தைத் தூண்டும், அணையாமல் பாதுகாக்கும் அரிய பணியைச் செய்கின்றன என்பது என் கருத்து.

அதே சமயம் இணைய இதழ்கள் சிற்றிதழ்கள் போல்தான் என்பதால் பிரபலமானவர்களின் எழுத்துக்களை அதிகம் காணமுடியாது. எத்தனை தரமானதாக இருந்தாலும் புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசகர்களைப் படிக்கத் தூண்டுவதற்குத் தனி முயற்சி தேவை.

அதோடு இணைய இதழ் நடத்த எழுத்துத் திறமையும் உலக ஞானமும் மட்டும் போதாது. இணைய தள வடிவமைப்பு, ப்ரோக்ராமிங் போன்றவற்றின் அடிப்படையாவது தெரிந்திருக்கவேண்டும். அட்மினிஸ்ட்ரேஷன், பப்ளிசிடி போன்றவற்றிற்கெல்லாம் தனித்தனியே ஆள் வைத்துக் கொள்ள வசதி இருக்காது. அதனால் பன்முகத்திறமையும் நேரமேலாண்மையும் இங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

இணைய இதழின் ஆசிரியராக இருப்பதில் நேர மேலாண்மை முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறினீர்கள். முழுநேரமாக மென்பொருள் துறையில் இருந்து கொண்டு எப்படி நிலாச்சாரலையும் சமாளிக்கிறீர்கள்?

நான் ஆரம்பத்தில் பணிபுரிந்த பொறியியல் துறையில் நேர மேலாண்மைக்கு முக்கியத்துவம் அதிகம். அந்த அனுபவத்தில் அதிகம் கற்றுக் கொண்டேன்.

எனது நேரமேலாண்மை (Time management)  மூன்று கூறுகளைக் கொண்டிருக்கும்:

- Listing and grouping the tasks
- Reverse engineering
- Delegation

செய்யவேண்டிய வேலைகளுக்கான பட்டியல் எபோதும் என்னிடம் இருக்கும் (வீட்டு வேலைகள், நிலாச்சாரல் மற்றும் இதரவேலைகள்). எந்த வேலை எப்போது முடிக்கப்பட வேண்டும் என்று அதில் குறித்துக் கொள்வேன். ஒரு வேலை குறித்த நாளில் முடியவேண்டுமென்றால் எப்போது ஆரம்பிக்கவேண்டும் என்று கணக்கிடுவேன் (reverse engg). பின் வேலைகளை எந்த வரிசையில் செய்தால் குறைந்த முயற்சியில் விரைவாக (Efficiently) முடிக்கலாம் என்று திட்டமிட்டு சிறு சிறு குழுக்களாக பிரித்துக் கொள்வேன். கடைசியாக, வேலைகளை சரியான ஆட்களிடம் ஒப்படைப்பேன். (delegation)

நானே செய்ய வேண்டிய வேலைகளுக்கு ஒரு கால அட்டவணை போட்டுக் கொள்வேன். பணி நாட்களில் செய்ய சிறு சிறு வேலைகளும் விடுமுறை நாட்களில் செய்ய பெரிய வேலைகளுமாக ஒதுக்கிக் கொள்வேன். எல்லாமே பெரிய வேலைகளாக இருந்தால், அவற்றை சிறு சிறு கூறுகளாகப் பிரித்து பணி நாட்களில் ஒவ்வொரு கூறாய் செய்துவருவேன்.

இப்போதெல்லாம் விடுமுறை நாட்களில் ஓய்வுக்கும் பொழுதுபோக்குக்கும் சற்று நேரம் ஒதுக்குவதைக் கட்டாயமாக்கி வருகிறேன். பணி நாட்களிலும் குறைந்தது அரைமணி நேரமாவது பொழுதுபோக்குக்காக நேரம் செலவிடவேண்டுமென்று முயற்சி செய்து வருகிறேன்.


பொறியியல் துறை குறித்து சொன்னீர்கள். உங்கள் கல்வித் தகுதி உங்களின் எழுத்து, பத்திரிகை போன்ற இதர ஆர்வங்களில் எவ்வாறு உதவுகிறது ?

(தொடரும்...)

நன்றி : "நா‎ன்காவது தூண்"  நூலிலிருந்து

படங்கள் : ஜெயா டிவி

| | | |
oooOooo
                         
 
மதுமிதா அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |