Tamiloviam
செப்டெம்பர் 13 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : பள்ளிக்கூடம்
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

 

ரவுடியிஸம், காதல் இதை மையமாக வைத்தே தமிழ் திரையுலகம் காலத்தை ஓட்டிவரும் இந்நாட்களில் அத்திப்பூத்தாற்போல சில நல்ல வித்தியாசமான கதை அம்சங்களுடன் கூடிய படங்களும் வெளிவரத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட வித்தியாசமான படங்களை எடுக்கக்கூடியவர்களில் முக்கியமானவரான தங்கர் பச்சான் இயக்கி நடித்துள்ள படம் தான் பள்ளிக்கூடம்.

அடிப்படை வசதிகளற்று இடிந்து விழும் நிலையில் இருக்கும் பள்ளிக்கூடத்தை தொடர்ந்து நடத்த தடைபோடுகிறார்கள் உள்ளூர் பெரியமனிதர்கள். இதை எதிர்க்கும் அப்பள்ளியின் ஆசிரியர்கள் உள்ளூர் மக்களின் உதவியுடனும் அந்தப் பள்ளியில் படித்து நல்ல நிலமையில் இருக்கும் பழைய மாணவர்களின் உதவியுடனும் பள்ளியை மீண்டும் நடத்த ஏற்பாடு செய்கின்றனர்.

Sneha,Narenஇம்முயற்சியில் முக்கிய ஆளாக இருப்பவர் பள்ளியின் முன்னாள் மாணவரான தங்கர் பச்சான். தான் அதிகம் படிக்கவில்லை என்றாலும் அப்பள்ளியில் படித்து இன்று கலெக்டராக உள்ள நரேனும், சினிமா இயக்குனராக உள்ள சீமானும் பள்ளியை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வர நிச்சயம் உதவுவார்கள் என்ற எண்ணத்தில் அவர்களிடம் செல்கிறார். பள்ளியின் இன்றைய அலங்கோல நிலையைக் கேட்டுப் பதறும் நரேன் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதாக வாக்குறுதி அளித்தாலும் ஊருக்குள் வரத்தயங்குகிறார்.  காரணம் புரியாமல் திண்டாடும் தங்கரிடம் ஒருநாள் தன் மனதில் தோன்றிய காதல் கதையைச் சொல்கிறார் நரேன். தங்கர், நரேன், சீமானுடன் ஒரே வகுப்பில் படித்த சிநேகாவை நரேன் காதலிக்க - சிநேகா வீட்டில் தோன்றும் எதிர்புகளால் அந்தக் காதல் கைகூடாமல் போகிறது. மேலும் நரேனுக்கு அவமானமும் இழப்புகளும் ஏற்பட - வெறுத்துப் போய் அந்த ஊரை விட்டு வெளியேறும் நரேன் திரும்பவும் ஊருக்கு வரவே கூடாது என்ற வைராக்கியத்தில் தான் இருப்பதையும் தங்கரிடம் கூறுகிறார்.

இதை அறியும் தங்கர் நரேனை ஊருக்கு வரச் சொல்லி வற்புறுத்த நண்பர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்படுகிறது. மேலும் சிநேகா அதே பள்ளியில் டீச்சராக இருப்பதும் நரேனுக்குத் தெரியவர அவரது மறுப்பு இன்னும் அதிகமாகிறது. இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் பள்ளிக்கூடத்தின் நிலை என்ன ஆனது? சிநேகா நரேன் காதல் கைகூடியதா? இதுதான் கிளைமாக்ஸ்.

கிராமத்தில் இருக்கும் அந்த பள்ளியிலே படித்து, அந்த பள்ளிக்கே டீச்சராகி, அந்த பள்ளியை மீட்க போராடும் சினேகாவின் காதல் கதை அற்புதம். சினேகா கோகிலாவாக வாழ்ந்திருக்கிறார் - அதிகம் பேசாமலேயே அசத்தியிருக்கிறார். காதலின் வலியை தனக்குள் புதைத்து வைத்துக் கொண்டு அவர் காட்டும் முக பாவங்கள் அருமை. மேக்கப் இல்லாத எளிய புடவையுடன் கூடிய அவரது தோற்றம் கிராமத்து சராசரி டீச்சர்களின் அச்சு அசலான பிம்பம். பழைய காதலனான நரேனிடம் பேசுவது யார் என்று தெரியாமலேயே பேச நேரும் போதும், நரேனை நேருக்கு நேர் பார்க்க இயலாமல் ஓடி ஒளிந்து அழுவதும் சபாஷ் சிநேகா !

Seeman,Snehaகலெக்டராக வரும் நரேன் அந்தப் பாத்திரத்திற்கு நன்றாகப் பொருந்தியிருக்கிறார். நண்பண் தங்கரைக் கண்டதும் உருகி மருகுவதும், தான் படித்த பள்ளிக்காக எதையும் செய்யத் தயாராவதும் ஒரு பக்கம் என்றால் சினேகா மேல் உள்ள கோபத்தில் அவரது பெயரைச் சொன்னாலே வெறுப்பை உழிழ்ந்து உயிர் நண்பனுடனே சண்டை போடும்போது நடிப்பில் பளிச்சிடுகிறார்.

திரைப்பட இயக்குனராகவே நடித்திருக்கிறார் சீமான். சிறுவனாக இருக்கும் போது இவருக்கும் நர்ஸான ஸ்ரேயா ரெட்டிக்கும் ஒரு இது என்று ஊர் அவதூறு பேசினாலும் ஸ்ரேயாவாலேயே சீமான் பெரிய ஆளாவதும், தன்னை ஆளாக்கிய ஸ்ரேயாவிடம் நன்றி மறக்காமல் இருப்பதும் சூப்பர். நரேன் - தங்கர் இருவருக்குள்ளும் என்ன பிரச்சனை என்பது தெரியாமலேயே இருவரையும் சமாதானப்படுத்த முயலும் காட்சியில் சீமானின் நடிப்பு அசர வைக்கிறது.

குமாராகவே வாழ்ந்திருக்கிறார் தங்கர். தான் படித்த பள்ளிக்கு ஒரு ஆபத்து என்றதும் பதறி அடித்துக்கொண்டு உதவி கேட்டு நண்பர்களிடம் ஓடுவது மனதை உருக்குகிறது. 'ஏலே இதையா பழைய சட்டைன்னு சொல்ற ? இது இருந்தா காலத்துக்கும் எனக்கு போதுமடா....' என அப்பாவித்தனமாக சீமானின் உடைகளை கேட்டு வாங்குவது, நண்பர்களிடமுள்ள கோபத்தை மறந்து அவர்கள் தன் வீட்டுக்கு வந்தது தெரிந்ததும் ஓடியாடி உபசரிப்பது என தன் நடிப்பில் முத்திரை பதிக்கிறார் தங்கர்.

உள்ளூர் நர்ஸாக வந்து பெரிசுகளின் ஆபாசத் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஸ்ரேயா கொஞ்ச நேரமே வந்தாலும் தன் அழுத்தமான நடிப்பால் மனதில் நிற்கிறார்.

யதார்த்தமான - அருமையான கதை என்றாலும் ஆங்காங்கே எல்லை மீறும் தங்கர் எரிச்சலை வரவழைக்கிறார். ஸ்ரேயாவின் கையையும் காலையும் சுரண்ட மாணவர்கள் ஆசைப்படுவதுபோல காட்டுவதும், இளம்பிராயத்து காதலில் கனவு பாட்டை திணித்திருப்பதும் முன்பாதி படத்தின் பல இடங்களில் செயற்கைத்தனமான உணர்வுகளை காட்டியிருப்பதும் ஓவர் என்றால் 'இந்த நிமிடம்' பாடலை 'நரேன் - சினேகா' படுக்கையறைக் காட்சிகளாக எடுத்திருப்பது டூ மச்..

பாடல்கள் ஓக்கே. மீண்டும் பள்ளிக்கு போகலாம் - காடு பதுங்குறோமே பாடல்கள் சூப்பர். ஆனாலும் பரத்வாஜ் பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.. ஜே.கே யின் கைவண்ணத்தில் பள்ளிக்கூட செட் அசர வைக்கிறது.

நல்ல கதை, யதார்த்தமான காட்சிகள், நல்ல கருத்து என்று பல வகையிலும் பாராட்டு பெற்றாலும் கானா உலகநாதன் பாட்டு - ஸ்ரேயா சம்மந்தப்பட்ட காட்சிகள் போன்றவற்றைத் தவிர்த்திருந்தால் பள்ளிக்கூடம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

| | | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |