செப்டெம்பர் 14 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பாடல்களால் ஒரு பாலம் : சக்தி கொஞ்சம் ஏறுதடி
- அபுல் கலாம் ஆசாத் [azad_ak@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

தமிழில்,

திரைப்படம்: பில்லா
பாடலாசிரியர்
: கண்ணதாசன்
இசை
: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்
: மலேசியா வாசுதேவன்
திரையில்
: ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா

இந்தியில்,

திரைப்படம்: டான் (1978) [டான் (2006)]
பாடலாசிரியர்: அஞ்சான் [ஜாவீத் அக்தர்]
இசை: கல்யாண்ஜி ஆனந்த்ஜி [ஷங்கர் - எஹ்ஸான் - லாய்]
பாடியவர்: கிஷோர் குமார் [உதித் நாராயண், ஷாருக் கான்]
திரையில்: அமிதாப் பச்சன், ஜீனத் அமன் [ஷாருக் கான், அநேகமாக பிரியங்கா சோப்ரா]

 

Billa,Rajiniஇத்தொடரில் இடம்பெற்ற, இடம்பெறப்போகின்ற மற்ற பாடல்களுக்கு இல்லாத தனி இடம் இந்தப் பாடலுக்கு உண்டு. மற்ற அனைத்துப் பாடல்களும் வடக்கிலிருந்து தெற்கிற்கு வந்திருக்கும், அல்லது தெற்கிலிருந்து வடக்கிற்குப் போயிருக்கும். இந்தப் பாடல் வடக்கிலிருந்து தெற்கிற்கு வந்ததோடு மட்டுமல்லாமல், மீண்டும் வடக்கிலேயே இரண்டாவது முறையாக அதே பாடல் வரிகளை வைத்து இன்னொரு முறை படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படி நிகழ்வது இந்தித் திரையில் இதுவே முதன்முறை.

டான் திரைப்படம் 1978இல் வெளிவந்தது. அமிதாப், ஜீனத், ப்ரான் முக்கியமான பாத்திரங்களில் Amitabh in Donநடித்திருந்தார்கள். இப்பொழுது 2006இல் அதே கதை, அதே பெயரில் ஷாருக் கான் நடித்து வெளிவரவிருக்கிறது. இக்கட்டுரை வெளிவரும் நேரத்தில் படத்தின் சிறப்புக் காட்சி எங்கேனும் திரையிடப்பட்டிருக்கலாம். படத்தில் விசேஷம், சில பாடல்களின் வரிகளை மாற்றாமல் அப்படியே 1978இல் வெளிவந்த பாடலின் மறுகலவையாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்தப் பாடலில் தொகையறாவை மாற்றியிருக்கிறார்கள், இடையே ராப் இசையில் சில வரிகளைச் சேர்த்திருக்கிறார்கள். புதிதாக இணைக்கப்பட்ட வரிகளை ஜாவீத் அக்தர் எழுதியிருப்பதாகக் குறிப்புகள் கூறுகின்றன. ஒலிநாடாவைப் பார்த்து இதனை உறுதி செய்துகொண்டு, அது சரியாக இருக்கும் பட்சத்தில் இந்தியில் ஒரே பாடலில் இரண்டு புகழ்பெற்ற திரைக் கவிஞர்களின் வரிகள் அமைந்த முதல் பாடல் இதுவாக இருக்கும்.

இந்தப் பாடலில் பனாரஸ் பாணியிலான வரிகளுக்கு இடையே ராப் இசையில் சேர்க்கப்பட்டிருக்கும் வரிகளைப் பாடியிருப்பவர் ஷாருக். 1978இல் கிஷோர் குமாரின் குரலில் ஒலித்த பாடல் 2006இல் உதித் நாராயணின் குரலில் ஒலிக்கின்றது. ராப் இசையில் இடையில் பாடுபவர் ஷாருக் கான். படத்தின் கதையமைப்பிலும் எந்தவிதமான மாற்றங்களும் இல்லையென்றுதான் செய்திகள் கூறுகின்றன.

படம் விறுவிறுப்பாகச் செல்லும் சமயத்தில் ரசிகனைக் கொஞ்சம் மகிழ்விப்பதற்காக 'உப்புக் கருவாடு' பாடலை முதல்வன் திரைப்படத்தில் குறிப்பிட்ட இடத்தில் அமைத்ததாகப் படித்ததுண்டு. திரைக்கதை அமைப்பில் இது ஒரு உத்தியெனில், அந்த உத்தியின்படி அமைந்த பாடல் இந்தப் பாடல்.

பாடலுக்கான சூழல் மிகமிகச் சாதாரணமானது. போலீசின் பிடியிலிருந்தும், எதிரிக் கூட்டத்தின் பார்வையிலிருந்தும் தப்பிக்க வேண்டிய சூழலுக்கு ஒரு அப்பாவி தள்ளப்படுகிறான். தப்பித்து ஓடும்போது காதலியையும் இழுத்துக்கொண்டு ஓடுகிறான். ஓடி ஓடி சமூகத்தின் கீழ்த்தட்டு மக்கள் வாழ்கின்ற பகுதியில் ஒளிய வருகிறான். கதாநாயகனும் ஒரு காலத்தில் சமூகத்தின் அடிமட்ட வாழ்க்கையை அனுபவித்தவன்தான். அந்தச் சமயத்தில் அவனுக்கு விருப்பமான வெற்றிலையை மடக்கி 'சாப்பிடுகிறாயா' என ஒருவர் உபசரிக்க, இவனுக்கு பழைய நினைவுகளெல்லாம் வருகின்றன. தான் எதிரிகளால் துரத்தப்பட்டுக்கொண்டிருப்பதை மறந்துவிட்டு, போதைப் பொருள் சுருட்டப்பட்ட வெற்றிலையைப் போடுகிறான். பாடல் பிறக்கின்றது, கூடவே ஆடலும்.

இது சராசரிப் பாடலாக இருப்பதாகப் பலருக்குத் தோன்றலாம். ஆனால், டான், பில்லா இரண்டும் வெளிவந்த நேரத்தில், அமிதாப், ரஜினி இருவருக்கும் இருந்த ரசிகர் கூட்டத்திற்கு இந்தப் பாடல் அரங்கைக் கலகலக்கவைத்த பாடல்.

பங்கியும் பான் பீடாவும் நமக்குவேண்டுமானால் அன்னியக் கலாசாரமாக இருக்கலாம். இந்திப் படங்களுக்கு இவை அன்னியமானதல்ல. பனாரஸ்வாலாக்களின் முறுக்குமீசையும், பானைத்தொந்தியும், பங்கிற்காக அவர்கள் மூலப்பொருள்களை இடிப்பதும் அடிக்கடி இந்திப் படங்களில் தலையைக் காட்டும். இந்தப் பாடலிலும் அது இடம்பெற்று,

பங்க் கா ரங்கு ஜமாஹோ சக்காசக்
ஃபிர் லோ பான் ஷபாய்
அரே அய்ஸா ஜட்கே லகே ஜியாபே
புனர் ஜனம் ஹோஜாய்
பங்கு நிறத்தக் கலந்து சட்டாசட்
வெத்தலையப் போட்டதனால்
!
அட என்னா ஓட்டம் மனசுல ஓடுது
புதுசாப் பொறந்தவனா
!

கிஷோரின் குரலில் பாடலின் தொகையறா துவங்கியதும், கல்யாண்ஜி ஆனந்த்ஜியின் டோலக் இசையைக் கேட்க மனம் தயாராகிவிடும்.

தமிழில் ரஜினி + மலேசியா வாசுதேவன் வந்த வெற்றிப்பாடல்களுக்கு எந்தவிதத்திலும் குறையாத பாடலாக இது ஒலித்தது.

பங்க் அடிச்சேண்டி பான் பீடா போட்டேண்டி
சிங்கிள் டபுளாச்சு சிகப்பெல்லாம் வெளுப்பாச்சு
டக்கர் அடிக்குதடி டாப்புல போகுதடி
நிக்கிறனா பறக்குறனா எதுவுமே புரியலடி
வெத்தலையப் போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி
சக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி
அடி மாமா மக ரதியே
- என்
சீனி சக்கரக்கிளியே
!
ஏழுலகம் முன்னால ஆடுதடி தன்னால
இந்த நேரம் பாத்து என்ன இழுக்குறியே கண்ணால
!

(வெத்தலையப் போட்டேண்டி)

அடீ
பட்டுக்கோட்ட
பக்கத்துல கொட்டப்பாக்கு விக்கிறவன்
பட்டணத்தில் வந்த பின்னே கோட்டும் சூட்டும் போட்டுக்கிட்டான்
புத்தி கெட்டுப் போட்டுக்கிட்டான் மாட்டுனது மாட்டிக்கிட்டான்
போறதுக்கு வழியக் கொஞ்சம் சாமியத்தான் கேட்டுக்கிட்ட்டான்
!

(வெத்தலையப் போட்டேண்டி)

அந்தரியே சுந்தரியே அந்தரங்கக் காதலியே
ஆறுகால் புன்னகையில் ஆளக்கொஞ்சம் மாத்துறியே
இந்திரனின் ஊர்வசியே என் தோட்ட மல்லிகையே
எப்போது பாத்தாலும் கைப்பிடியில் நிக்கிறியே
!

(வெத்தலையப் போட்டேண்டி)

ஜனரஞ்சகமாக ஒலிக்கும் இதன் இசையமைப்பில் அந்த நேரத்தில் வெளிவந்த சில ரஜினி பாடல்களின் சாயல் தெரியும். ரஜினிக்கென அது ஒரு பாணி (பேட்டர்ன்) அமைந்திருந்தது.

போக்கிரிக்குப் போக்கிரி ராஜா
பூத்திருக்கு பட்டுல ரோஜா
எண்ணைக்கும் நீந்தானடி எனக்குப் பொண்டாட்டி
!

இதில் கடைசி அடி.

நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
யார் வம்புக்கும் தும்புக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய் பொத்தி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன்
- அந்த ஆகாயம் போல் வாழ்பவன்!

இதில் கடைசி அடி.

இவற்றை, சக்தி கொஞ்சம் ஏறயில புத்தி கொஞ்சம் மாறுதடியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இசையமைப்பில் ரஜினிக்கென அப்பொழுது அமைந்திருந்த பாணி தெரியும்.

இந்தப் பாடல் சிலருக்குப் பிடிக்கும்; சிலருக்கு பிடிக்காது. ஆனாலும், வழமையான ஓட்டத்திலிருந்து கொஞ்சம் மாறுதலுக்காக 'ஏழுலகம் முன்னால ஆடுதடி தன்னால இந்த நேரம் பாத்து என்ன இழுக்குறியே கண்ணால' வரிகளைக் கேட்டால், அது வேறுலகம்.

| | | | |
oooOooo
அபுல் கலாம் ஆசாத் அவர்களின் இதர படைப்புகள்.   பாடல்களால் ஒரு பாலம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |