செப்டம்பர் 15 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
உள்ளங்கையில் உலகம்
திரையோவியம்
கேள்விக்கென்ன பதில் ?
இந்து மதம் என்ன சொல்கிறது ?
திரைவிமர்சனம்
அடடே !!
அமெரிக்க மேட்டர்ஸ்
தொடர்கள்
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
முச்சந்தி : கவிஞரின் கதையவதாரம்
- என். சொக்கன் [nchokkan@gmail.com]
| Printable version | URL |
"இந்தக் கதை முழுவதுமே, பத்திகளாகப் பிரிக்கப்பட்ட நீண்ட கவிதை என்றே சொல்லிவிடலாம், அப்படியொரு விஷய அடர்த்தியும், வாக்கியச் சுருக்கமும், அதே சமயம் கதையின் முழுமையைத் தவறவிட்டுவிடாத முத்தாய்ப்பும் அசரடிக்கிறது."

நவீன கவிதையின் குறிப்பிடத்தக்க படைப்பாளியாக கௌரவிக்கப்படும் திரு. எஸ். வைதீஸ்வரனின், 'கால் முளைத்த மனம்' என்னும் அரிய சிறுகதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. அறுபதுகளில் எழுதிய பத்து கதைகளும், தொன்னூறுகளின் முதற்பகுதியில் எழுதிய இரு கதைகளும் தொகுக்கப்பட்டு 1993ல் வெளியாகியிருக்கிறது இந்தப் புத்தகம். கதைகள் யாவும் எழுத்து, தீபம், கணையாழி, சுபமங்களா இதழ்களில் வெளிவந்தவை. இவற்றில் சில பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

எஸ். வைதீஸ்வரன் அவர்களின் கவிதைகளில் தெரியும் நேர்த்தியும், கவனமும், அரிய அனுபவங்களும், தகவல்களும், நுணுக்கமான வர்ணனைகளும், வாழ்க்கையின் அதிசாதாரணமான, ஆனால் வேறொரு விதத்தில் சிந்திக்கையில் இயல்பில்லாத அபத்தங்களாய்த் தோன்றுகிற அதிசய / ஆச்சரியங்களும் அவரது சிறுகதைகளிலும் அற்புதமாக வெளிப்பட்டிருப்பது ஒரு இனிய ஆச்சரியம். இனி 'கவிஞர் எஸ். வைதீஸ்வரன்' என்றுமட்டும் சொல்வதற்கு நிச்சயமாக யோசிக்கத்தோன்றும், இச்சிறுகதைகளுக்காக அவர் தேர்ந்தெடுத்திருக்கிற புதுமையான களங்களும், காட்சிகளும், சிந்தனையோட்டத்தோடு போட்டிபோடும் விறுவிறுப்பான நடையும், இவர் ஏன் இப்போது சிறுகதைகள் எழுதுவதில்லை என்று உரிமையோடு கோபிக்கச் செய்கிறது.

உதாரணமாக, தொகுப்பின் மிகச்சிறந்த கதையாக நான் கருதுகிற 'ஒரு பயணத்தில் சில மின்னல்கள்' கதையைச் சொல்லலாம். ஹரித்துவாருக்குச் சென்று கங்கையில் முழுக்குப் போட்டுத் திரும்புகிற ஒருவருடைய அனுபவம்தான் இந்தக் கதை, ஆனால் கதையில் கங்கை கொஞ்சமேதான் வருகிறது - பாவ புண்ணியங்கள் பற்றிய கதாநாயகனின் சமபோக்குச் சிந்தனைகளும், அவன் சற்றும் எதிர்பாராமல் சந்திக்க நேர்கிற ஒரு நல்ல மனிதரும்தான் கதையை வழிநடத்திப்போகிறார்கள், டில்லி ரயில் நிலையத்தைச் சென்றடைவதற்கு அந்த மனிதர் கதாநாயகனுக்கு உதவுகிறார், பாஷை தெரியாத ஊரில் யாராவது ஏமாற்றிவிடப்போகிறார்களோ என்று அவன் கவலை கொண்டிருக்கையில், அவர் நயமாகப் பேசுகிறார், அவன் பேசுகிற சுமார் ஹிந்தியைப் பரிவோடு ஏற்று பதில் சொல்கிறார், அல்லது அவனைச் சங்கடப்படுத்தாமல் ஆங்கிலம் பேசுகிறார், கூட்டம் விழுந்து பிடுங்கும் பஸ்ஸில் அவனுக்கு சீட் போட்டு வைக்கிறார், டிக்கெட் எடுக்கிறார், மிகத் தெளிவான குறிப்புகள் கொடுத்து அவன் செல்லவேண்டிய இடத்துக்கு அனுப்பிவைக்கிறார் - அறிமுகமில்லாத இடத்தில் தனக்காக இத்தனை செய்த ஒரு மனிதரைக்குறித்து அவன் நெகிழ்ந்திருக்கையில், அதுவரை அவனிடம் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் பேசிக்கொண்டிருந்த அவரும் ஒரு தமிழர்தான் என்பது மிக யதேச்சையாகத் தெரியவருகிறது. அவன் சுதாரித்து, அவர் சென்ற பஸ்ஸைத் துரத்த முற்படுவதற்குள் .... இந்தக் கடைசி வாக்கியத்தில்தான் கதையின் உயிர்நாடியே இருக்கிறது .... 'அந்த டில்லி பஸ் க்ஷண நேரத்துக்குள் மிகவும் அறிமுகமாகிவிட்ட ஒரு புதிய ராமனாதனை மேலும் மேலும் என்னிடமிருந்து பிரித்துக்கொண்டிருந்தது' --- இப்படி அந்தப் பாத்திரத்தின் ('காதில் தேன் வந்து பாய்ந்ததுபோன்ற' என்று சொல்லலாமா ?) திடீர் பரவசத்தையும், ஏமாற்றத்தையும், 'மிகவும் அறிமுகமாகிவிட்ட' என்கிற வாக்கியத்தின் கனத்தால் நம் மேல் இறக்கிவிட்டு கதை முடிந்துவிடுகிறது.

இந்தச் சிறுகதைபோலவே, பொதுவாக தமிழ்ச் சிறுகதைகளில் (நவீன(?) சிறுகதைகளிலும்கூட) நமக்குப் பழக்கமாகியிருக்கிற களங்களை விடுத்து புதுமையான பாத்திரங்களையும், காட்சியமைப்புகளையும் எஸ். வைதீஸ்வரன் அவர்களின் சிறுகதைகளில் பார்க்க முடிகிறது. பரோடாவுக்கு 'திடீர் பயணம்' போகிற ஒரு குமாஸ்தாவின் பயணச் சிரமங்களையும், மகனுக்கு பிள்ளையார் செய்து தருவதாக சவால் விட்டுவிட்டு களிமண்ணையும், மனதையும் தன்போக்கில் உருட்டிக்கொண்டிருக்கிற தகப்பனாரையும், அம்மாவைக் கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு, அதன் பொருள் புரியாமலேகூட அதைச் சுமந்துகொண்டு திரிகிற சிறு பையனையும், தினம்தினம் புதிது என்று நினைத்துக்கொண்டு அதே நாடகத்தை மீண்டும் மீண்டும் ஒளி/லிபரப்பும் உலகத்தையும், மலைகளின் சிலிர்ப்பிலும், அவற்றைக் களவாடும் மனிதர்களின்மேலான கோபத்திலும் தன்னை மறக்கிற - அல்லது தன்னையே பார்க்கிற ஒரு அலுவலகப் பணியாளனின் சிந்தனைகளையும், மனைவிக்குக் கடிதம் எழுத நினைத்து, சொல்ல நினைத்த விஷய சமுத்திரத்தின் தன்னாலான பிரதிநிதியாக மைத்துளியைமட்டும் கடிதத்தில் ஏற்றி அனுப்பிவைக்கிற டெஸ்பாட்ச் க்ளர்க்கையும் இவரது அருமையான கதைகளில் இயல்பாகச் சந்திக்கமுடிகிறது. கவிஞருக்கே உரிய பாணியில் அலாதியான புதிய வர்ணனைகளும், குழப்பமில்லாத தெளிவான நடையும் கதைகளை இன்னும் ஊன்றிப் படிக்கவைக்கிறது. குறிப்பாக இவரது 'அறுபது'க் கதைகளின் தமிழ் மணக்கும் நடையை ஆழ்ந்து அனுபவிக்கலாம், தொன்னூறுக் கதைகள் இரண்டிலும் சுஜாதா, இரா. முருகனைப்பற்றிச் சொன்னதுபோன்ற எம். டி. வி. நடை ... வயதோடு எழுத்தாளரின் சிறுகதைப் பாணியும் மாறியிருக்கிறதோ என்று யோசிக்கவைக்கிறது.

ஆசிரியரின் புதுமையான வர்ணனைகள் / வாக்கிய அமைப்புகளுக்கு உதாரணம் சொல்லவேண்டுமானால், தொகுப்பின் தலைப்புக்கதையான 'கால் முளைத்த மனம்' சிறுகதையைக் குறிப்பிடலாம் -  இந்தக் கதை முழுவதுமே, பத்திகளாகப் பிரிக்கப்பட்ட நீண்ட கவிதை என்றே சொல்லிவிடலாம், அப்படியொரு விஷய அடர்த்தியும், வாக்கியச் சுருக்கமும், அதே சமயம் கதையின் முழுமையைத் தவறவிட்டுவிடாத முத்தாய்ப்பும் அசரடிக்கிறது.

இன்னும் சில உதாரணங்கள் :

* ஒற்றைக்கண்ணை எடுத்துக்கொண்டு ரயில் பசி மீறிய ராட்சஸன்மாதிரி ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. ஸ்டேஷனில் உள்ள அத்தனை ஜனங்களையும் ஒரே வாயில் 'லபக்'கென்று விழுங்கிவிடவரும் மலைப்பாம்புமாதிரி தோன்றியது.

* கார்ப்பொரேஷன் பள்ளிக்கூடம் விட்டவுடன் பையன்கள் தலைதெறிக்க வெளியே ஓடிவந்தார்கள். அவர்கள் கைகளையும், கால்களையும் உதைத்துக்கொண்டு அகண்ட பிரசவம்போல் வெளியே பாய்ந்து வந்த வேகம்.

* சிப்பாய் ரெக்ரூட்டுகள் கூட்டங்கூட்டமாக மலைச்சாரலில் குப்புறப் படுத்துக்கொண்டு துப்பாக்கி சுட்டுப் பழகிக்கொண்டிருந்தார்கள். மலைக்கு முன் மனிதர்கள் விழுந்து கும்பிட்டு சக்தியை வேண்டித் தவிப்பதுபோல், நினைக்க ஒரு ஆவல்.

* அந்த மலைகளைச்சுற்றி அரணாக்கயிறுமாதிரி கட்டிக்கொண்டிருக்கும் ரயில் தண்டவாளங்கள்.

* கடல் யுகயுகமாக அதே இடத்தில் அலைமோதிக்கொண்டிருக்கிறது. 'அட, காற்று வாங்கவாவது வேறு இடத்திற்குப் போவக்கூடாதா ?'

* நான் நான்கு படிகள் கீழே இறங்கி, ஓடும் ஆற்றுத் தண்ணீரில் மூழ்கி எழுந்தேன், ஜிவ்வென்று உடல் முழுவதும் ஆனந்தம் பரவியது. உடம்பு லேசாகி, பார்வைக்கு சுற்றியிருந்த காட்சிகள் குளுமையாக, ஈரமாகத் தெரிந்தது, என்னோடு சேர்ந்து, இந்த ஊரும் ஒரு தடவை முழுக்குப் போட்டமாதிரி பளிச்சென்றிருந்தது.

* மலைகள் அவர்கள் அடுத்த அடியில் துகள்துகளாக கரைந்துகொண்டிருந்தன. மலைக்குப் பின்னால் மறைந்துகொண்டு இத்தனை மனிதர்களும் வாரக்கணக்காக, வருஷக் கணக்காக மலைகளை மெள்ளமெள்ள குடைந்துகொண்டிருக்கிறார்கள். காசம் பற்றிய மார்க்கூடாக மலை முதுகு மெள்ளக் கரைந்து, திடமிழந்து இருள்குடையாக மாறிக்கொண்டிருந்தது.

* இந்தக் குறுகிய வாழ்வுக்காலத்தில் ஏகப்பட்ட பசிகளையும், செய்யவேண்டிய காரியங்களையும், அவைகளைச் செய்துமுடிக்கமுடியாதபடி இக்கட்டுகளையும், அசுரத்தனமான சமூகச் சூழலையும் ஏற்படுத்திவிட்டு நம்மை ஆண்டவன் பாவபுண்ணியங்களை வேறு பார்த்துக்கொள்ளச்சொல்வது ஆகாத காரியமாகப் படுகிறது. ஒவ்வொன்றையும் ஆராய்ந்து அனுமானித்துக்கொண்டிருக்க நமக்கு 'ஓவர்டைம்' தேவைப்படும் !

அரிதான இந்தத் தொகுப்பில், 'சிருஷ்டி', 'கால் முளைத்த மனம்', 'ஹே பரோடா', 'வார்த்தை', 'மலைகள்', 'கட்டையும் கடலும்', மற்றும் மேலே குறிப்பிட்டிருக்கும் 'ஒரு பயணத்தில் சில மின்னல்கள்' ஆகியவை தவறவிடக்கூடாத கதைகள். 'காக்காய்க் கதை', 'சைக்கிள் சாமி', 'இரண்டு ஜன்னல்' போன்றவை நகைச்சுவை இழையோடும் கதைகள் - குறிப்பாக 'சைக்கிள் சாமி'யின் கடைசி வாக்கியத்துக்குச் சிரிக்காதவர்களுக்கு 'நவீன நரசிம்மராவ்' என்று பட்டமே கொடுத்துவிடலாம் !

மொத்தத்தில், கவிஞரின் இந்தக் கதையவதாரம் மிகுந்த நிறைவளிக்கிறது !

(கால் முளைத்த மனம் - எஸ். வைதீஸ்வரன் - விருட்சம் வெளியீடு - பக்கங்கள் : 152 - ரூ 20/-)


சில 'பொழுதுபோகாத' கேள்விகள் :

* மிகத் துல்லியமாக எடை காட்டும் இயற்பியல் தராசுகள் கூண்டினுள் அடைபட்டிருப்பதும், குத்துமதிப்பாக எடைகாட்டும் மளிகைக் கடை தராசுகள் சுதந்திரமாகத் தொங்கிக்கொண்டிருப்பதும் எதைக் காட்டுகிறது ?

* தோசையைச் சுட்டுச் சுருட்டி, குறுக்கே கத்தியில் வெட்டி 'ஸ்பிரிங் தோசை' என்று புதிதுபோல் பேர் பண்ணி விற்கிறார்களே. அடுக்குமா ?

* சினிமாத் தியேட்டரின் நுழைவுச் சீட்டு கவுன்டரில் அமர்ந்திருக்கிற பெண்ணை 'கவுன்டச்சி' என்று குறிப்பிட்டால் ஏதேனுமொரு சாதிச் சங்கத்தினர் கோபித்துக்கொள்வார்களா ?

* எந்த அப்பாவுக்குத் தன் மகனின் முதல் மீசை பிடிக்கும் ?

* ஒவ்வொரு விமானப் பயணத்தின்போதும், 'டாய்லெட் சுவர்களில் பொம்மை கிறுக்கக்கூடாது' என்று சின்னப் பிள்ளைக்குச் சொல்வதுபோல் அறிவிக்கிறார்களே. அது அத்தனை அவசியமா ?

* அதே விமானப் பயணங்களின்போது, தரையிலிருந்து இத்தனை ஆயிரம் கிலோ மீட்டர் உயரம், வெளியே இத்தனை வெப்பம் (அல்லது குளிர்ச்சி) என்றெல்லாம் கர்ம சிரத்தையாகச் சொல்வதுகூட பரவாயில்லை. இடதுபக்கம் பொகாரோ, வலதுபக்கம் கஜுரஹோ, நாம் இப்போது கடந்து வந்தது பூனா என்றெல்லாம் மெனக்கெட்டு அறிவிக்கிறார்களே. அந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது ?

* நகரெங்கும் போக்குவரத்து நெரிசல். ஆனாலும், கார்கள் முன்பைவிட அதிகமாக விற்கிறதே, எந்த சௌகர்யத்தை நம்பி இப்படி வாங்கித்தள்ளுகிறார்கள் ?


இந்த வாரக் குறும்பு :

Nirmala Public Toilet - bangaloreபெங்களூரில் தெருவுக்குத் தெரு நிறைந்திருக்கும் கட்டணக் கழிப்பறைகளுக்கு, ஒரு பொதுவான வணிகப் பெயர் வைத்திருக்கிறார்கள் : "நிர்மலா"

அர்த்தம் தெரிந்துதான் வைத்தார்களா என்று தெரியவில்லை. ஆனால், எத்தனை பொருத்தமான Brand Name ;)

 

 

 


இந்த வாரக் கவிதை :

எனக்குத் தொலைவில் நின்றொருவன்
 இளித்தும், முறைத்தும் பிதற்றுகின்றான் !
தனக்குத் தானே வாயாடும்
 தன்மை கொண்டோன் பைத்தியமே !
கணக்குப் போட்டே அவனுருவைக்
 கணித்துப் பார்த்த பொழுதினிலே,
இணைத்தி ருந்தான் காதினிலே,
 இயம்பும் சின்னத் தொலைபேசி !

- கி. பாரதிதாசன்
- 'புதுவை வானம்பாடி' ஆகஸ்ட் 2005 இதழிலிருந்து

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |