செப்டம்பர் 16 2004
தராசு
கார்ட்டூன்
வேர்கள்
மேட்ச் பிக்சிங்
முத்தொள்ளாயிரம்
காந்தீய விழுமியங்கள்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
பேட்டி
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
திரைவிமர்சனம்
கட்டுரை
சமையல்
க. கண்டுக்கொண்டேன்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள் : எங்கே செல்லும் இந்தப் பாதை,..
  - ஜெயந்தி சங்கர்
  | Printable version |

  எ·ப் எம் (FM - பண்பலை/நுண்ணலை) எனப்படும் வானொலிச்சேவை இந்தியாவில் மட்டுமல்லாது உலகளவில் அந்தந்த மொழியிலும் ஆங்கிலத்திலும் மிகவும் பிரபலம் தான். டீவி பார்த்துக் கண் கெடவும் வலிக்கவும் வாய்ப்புண்டு. ஆனால், எத்தனை கேட்டாலும் காது தான் வலிக்காதே. செல்வத்துள் எல்லாம் தலையான செவிச்செல்வம் நிச்சயம் அறிவு வளர உதவுகிறது. ஆனால், சிலவேளைகளிலோ?!

  விளம்பரங்களுக்கிடையே விறுவிறுப்போடு பல தகவல்களுடன் அளிக்கப்படும் நிகழ்ச்சிகளைக் கேட்பவர்கள் எல்லா வயதினருமே தான். சிங்கப்பூரில் தமிழர்கள், 'ஒலி'யையும் ஆங்கில ரசிகர்கள் 98.7 FM அலைவரிசையையும் காலையில் வேலை/பள்ளிக்குக் கிளம்பிச்செல்லும்போது, காரில் கேட்பது வழக்கம். முக்கியசெய்திகள், வானிலை, போக்குவரத்துச்செய்திகள் போன்றவற்றை அறியவும் அரட்டைகளைக் கேட்கவும் என்று பயணநேரம் சுகமாய் அமைந்துவிடுவதுண்டு.

  சிங்கப்பூரில் 28-07-04 அன்று நடந்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியது. அன்று காலை 98.7 FM (ஆங்கிலம்) அலைவரிசையில் மிகவும் அக்கறைக்குரிய விஷயம் நடந்துள்ளது. அந்த அனுபவத்தை லௌ சீ கின் என்ற ஒருவர் நாளிதழ் மன்றத்தில் வருத்ததோடு எழுதியுள்ளார். க்ளென் ஓங் மற்றும் ஷைக் ஹைக்கல் என்ற அறிவிப்பாளர்களிடம் நேயர் ஒருவர் தொலைபேசியிலழைத்து அன்றைய சுவாரஸியத்திற்காகக் கேட்ட
  கேள்வி, -- "பஸ்ஸில் போகும் போது, உங்களுக்குப் பிடித்த ஒரு பெண்ணிடம் நீங்கள் எப்படி பேச முயற்சிப்பீர்கள்?"

  இது வரை தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடன் காரில் வானொலியைக் கேட்டுக்கொண்டே போன லௌ சீ கின் பேசாமல் தானிருந்திருக்கிறார். ஷைக் ஹைக்கல் என்ற அறிவிப்பாளர் கொடுத்த பதிலில் தூக்கிவாரிப்போட்டு வானொலியைப் பட்டென்று நிறுத்திவிட்டார். அறிவிப்பாளர் நேயருக்குச் சொன்னபதில்," நீ என்ன நிற உள்ளாடை (panties) அணிந்திருக்கிறாய்? வெள்ளையா? என்று கேட்கவேண்டும்." உடனிருந்த க்ளென் ஓங் சமாளித்துத் தடுக்க முயன்றும்கூட, விடாமல் தொடர்ந்து ஷைக் ஹைக்கல், "அது காட்டனா (cotton? )? இல்லை, லேஸ் (lace ) வைத்ததா என்று கூடக் கேட்கலாம்", என்று கூறிக்கொண்டே போக, லௌ சீ கின் தாங்காமல் வானொலியை அணைத்துவிட்டு நாளிதழுக்கும் அன்றே எழுதிப்போட்டுவிட்டார். பெரியவர்கள் தவிர பலவிதமான சிறுவர்களும் கேட்கும் இந்நிகழ்ச்சிகளில் இத்தகைய மட்டரகமான கருத்துகளும் நகைச்சுவை என்ற பெயரில் அபத்தங்களும் ஒலிபரப்பக்கூடாது என்றும் மீடியா கார்ப் (Media Corp) நிறுவனத்திற்குப் பொதுக்கடிதம் எழுதியிருந்தார்.

  முன்பு ஒருமுறை நேயர் ஒருவர் விளையாட்டாளர் ஒருவரை வானொலிப்பேட்டியில் கேட்டிருக்கிறார்," உங்கள் விளையாட்டுத் திறன் உடலுறவிற்குப் பிறகு மிளிர்கிறதா?", இதை நேரடியாக வானொலியில் ஒலிபரப்பியிருக்கிறார்கள். சீன வானொலியும் இத்தகைய நிகழ்ச்சிகளுக்குப் பெயர்போனதே. கேட்பவர்களை அதிகரித்து விளம்பரதாரர்களை ஈர்க்கவே இவ்வாறு வானொலி அலைவரிசைகள் ஒன்றோடொன்று போட்டிபோட்டுக்கொண்டு செய்கின்றன என்பதும் ஓரளவு உண்மையே. ஆனால், எல்லை மீறும்போது?! சிங்கையின் ஒரே தமி வானொலியான நமது 'ஒலி 96.8' தரத்தைச் சிறப்பாகக் காப்பாற்றிக்கொண்டு வருகிறது. இதற்காகத் தாராளமாக தமிழர்களாகிய நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

  வானொலியில் காலைநேர கலாட்டா (Morning Madness) வில் 98.7 FM (ஆங்கிலம்) அலைவரிசையில் பாலியல் ஜோக்குகள் மட்டரகமான கடிகள் அந்தரங்க உறுப்புக்களைப்பற்றிய ஜோக்குகள் போன்ற அத்தனை கீழ்த்தரமும் பேசப்படுகிறது. "லௌ சீ கின் செய்ததுபோல வானொலியை அணைக்கமுடியாது எங்களுக்கு", என்று வருந்துகிறார், ஜிம்மில் (Gym) பயிற்றுவிப்பாளரான திருமதி சௌ மோ ஹ¤ங்க். நாள் முழுவதும் பயனீட்டாளர்ளுக்காக வானொலி அலறிக்கோண்டே இருக்குமாம் ஜிம்மில்.

  சரி விஷயத்திற்கு வருவோமா?! லௌ சீ கின் அவர்களின் கோரிக்கைக்கு மீடியா கார்ப் நிறுவன உயர்அதிகாரி சிலநாட்களிலேயே பதில் போட்டார். ஆனால், அது வெறும் சால்ஜாப்பாகவே இருந்தது. உற்சாகத்தில் கொஞ்சம் எல்லை மீறிவிட்டார், வானொலி கேட்பவர்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும், இனிமேல் மீடியா கார் நிறுவனத்தின் கோட்பாடுகளின் படி நிகழ்ச்சிகள் நடக்கிறதாவென்று கண்காணிக்கிறோம் என்று ஏற்கனவே ஒருமுறை கேட்டமாதிரியே மன்னிப்புக் கேட்டிருந்தார்கள்.

  இதனைத்தொடர்ந்து மறுபடியும் ஆகஸ்ட் 10 அன்று ஆங்கில நாளிதழில் ஊடக வளர்ச்சி கழகத்தின் (Media Development Authority) உயர் அதிகாரி விரிவான விசாரணைக்குப் பிறகு மீடியா கார்ப் மீது அபராதம் விதிக்கப்போவதாக அறிவித்தார். ஊடக வளர்ச்சிக் கழகம் மேற்கொண்ட  விசாரணைகள் தொடர்ந்தன. முடிவு மீடியா கார்ப் நிறுவனத்துக்கு எதிராய் இருந்தால், அந்த நிறுவனம் $ 50,000 அபராதம் கட்ட நேரிடும் என்பதே ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியான தகவல். இதைத்தொடர்ந்து "நான் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு சொல்லவில்லை, நகைச்சுவை சேர்க்கவே அவ்வாறு கூறினேன், எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்", என்று ஒருவருட ஒப்பந்தத்திலிருந்த ஷைக் ஹைக்கல் கேட்டும் கூட, விசாரிக்கப்பட்டு வேலையிலிருந்து ஆகஸ்ட் 6ஆம் தேதி  தூக்கப்பட்டுள்ளார். இப்போதும் அவர் தன் செயலுக்கு வருந்தவில்லை. அவர்கள் முடிவை மதிக்கிறேன் என்று மட்டும் சொல்லியிருக்கிறார், ஒரு மகளுக்குத் தந்தையான இவர். 14 ஆம் தேதி வெளியான செய்தியின் படி அறிவிப்பாளர் டேனியல் ஓங்க் என்பவரும் இத்தகைய அநாகரிகமான ஜோக்குகளுக்காக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மீடியாகார்ப் நிறுவனத்திற்கும் 02/09/04 செய்தியின்படி S$30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சரி, இந்த நடவடிக்கைகள் மற்றவருக்கு நிச்சயம் ஓர் எச்சரிக்கை. இருந்தாலும் இத்தகைய சிலபல பொறுப்பற்ற செயல்கள் சிறிய மற்றும் பெரிய அளவில் ஆங்காங்கே நடந்தபடியே தானிருக்கின்றன, இல்லையா?!

  சில வாரங்களுக்கு முன்னர் தோழி ஒருத்தி தொலைபேசியில் புலம்பித்தீர்த்தார். அவரது மிகவும் அக்கறை நியாயமானதே. அதுவும் ஓர் ஆசிரியர் மாணவனுக்கு உதாரணமாய் இருக்கவேண்டியவராயிற்றே! நடந்தது இதுதான். தோழியின் மகனுக்கு 11 வயது. பள்ளியில் பாடப்பளு அதிகமாகிக்கொண்டே வந்திருக்கிறது. சிலகாலமாகப் பையன் சோர்வாகக் காணப்பட்டிருக்கிறான். இரவு உறக்கம் கூட வராமல் புரண்டுபுரண்டு
  நட்டநடுராத்திரியில் புத்தகப்பைச் சோதித்துபார்ப்பது, பேனா இருக்கிறதா, பென்ஸில் இருக்கிறதா என்று பார்ப்பது, வீட்டுப்பாடம் செய்தாயிற்றா, செய்ததை எடுத்துவைத்தாயிற்றா என்று இரவெல்லாம் கொட்டடா கொடையடாவென்று தவியாய்தவித்திருக்கிறான்.

  அரையாண்டுப் பரி¨க்ஷ நெருங்கி வரும் நேரம். புதிதாய் ஒரு கணித ஒப்படைப்பை (maths project) கொடுத்து செய்யச்சொல்லியிருக்கிறார் சற்று கண்டிப்பான அவனுடைய ஆசிரியர். இவனும் செய்துகொண்டுபோயிருக்கிறான். குறைகள் சுட்டிக்காட்டப்பட்டு மறுபடியும் பையன் திருத்திக் கொண்டுபோயிருக்கிறான். ஆனால், அதில் இரண்டாம் முறை வேறு குறைகளைக் கண்டுபிடித்ததோடு அல்லாமல் எந்தவித உதவியும் செய்யாமல் கத்தியிருக்கிறார். அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தவன்,"அம்மா, என்னால முடிஞ்ச வரைக்கும் யோசிச்சு செஞ்சிட்டேன். ஆனாலும், 'அக்செப்ட்' பண்ணிக்கமாட்டேங்கறார்மா", என்றிருக்கிறான். அவனது கவலை அடுத்தவாரம் வரவிருந்த அரையாண்டுப்பரி¨க்ஷக்குப் படித்துத் தயாராகவேண்டுமே என்பது தான்.

  அவனின் அம்மாவும் நாள் முழுவதும் யோசித்துவிட்டு ஆசிரியருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். பரி¨க்ஷ முடியும் வரை கணித ஒப்படைப்பைத் தள்ளிவைக்குமாறு கெஞ்சியிருக்கிறார். முடியுமானால், அந்த நடவடிக்கையிலிருந்து மகனை விலக்கிவிடுமாறு வேண்டியிருக்கிறார். ஒரு கடிதம் எழுதித்தரச்சொன்னார் ஆசிரியர். ஆனால், அடுத்த நாள் சிறுவன் கொடுத்த கடிதத்தை ஒதுக்கிவிட்டு வகுப்பில் எல்லோரிடமும் நடந்ததைச்சொல்லி பையனின் மானத்தை வாங்கியிருக்கிறார். இத்தோடு போயிருந்தால் பெரிய பிரச்சனை கூட இல்லை. ஆனால் அவர் அடுத்தாற்போல் வகுப்பில் பேசியதே மிகுந்த அக்கறைக்கு உரியது. சத்தமாகச்சொன்னதும் 11 வயது மாணவர்கள் அதிர்ந்திருக்கிறார்கள். அவர் அந்தப்பையனைப்பார்த்து, "நீ சரியான கோழை, போ,போய் உங்கம்மா பாவாடைக்கடியில ஒளிஞ்சுக்கோ," என்றிருக்கிறார். ("Coward, Go, hide under your mother's skirt ! " ) இதைக்கேட்ட அந்தப்பையனுக்கு அவமானத்துடன் அதிர்ச்சி! வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொல்லி அழுதிருக்கிறான்.

  ஓர் ஆசிரியர் இரண்டுங்கெட்டான் பிள்ளைகளிடம் என்ன பேசுகிறோம் என்று கூட யோசிக்காமல் பேசுவது எத்தனை பொறுப்பற்ற செயல் !

  பொதுவாகவே இங்கிதம், நாகரிகம், கண்ணியம், நாசூக்கு போன்ற எல்லாப் பண்புகளையும் துறந்து வருகிறோமா?! அதிலும் மிகவும் பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டிய ஆசிரியர்கள், ஊடக அறிவிப்பாளர்கள் போன்றவர்கள் எல்லைமீறுவது எத்தனை கண்டிக்கத்தக்கது? தங்களுக்குத் தெரியாமலேயே இளைய தலைமுறைகளுக்கு முன்னுதாரணமாய் இவர்கள் ஆகிறார்கள் என்பதுதான் வருந்தத்தக்க விஷயம். முன்பு நான்கு சுவர்களுக்குள்கூட பேசக் கூசிய வார்த்தைகள் பல்லாயிரம் பேர் கேட்க வானொலியில் வெளிப்படையாகப் பேசப்படுவதற்கு என்ன காரணம்? ஓர் ஆசிரியர் சர்வசாதாரணமாக வகுப்பில் கண்டபடிபேசுவதற்கும்கூட விழுமியங்களின் கண்டிக்கத்தக்க எதிர்மறை மாற்றங்கள் அல்லாமல் வேறு என்ன? எங்கே சென்று
  கொண்டிருக்கிறோம் நாம்......?

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |