Tamiloviam
செப் 18 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : தொடர் குண்டுவெடிப்பு
- மீனா [feedback@tamiloviam.com]
  Printable version | URL |

பெங்களூரூவிலும் அகமதாபாத்திலும் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களின் ரணமே மக்கள் மத்தியில் ஆராத நிலையில் தலைநகர் டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது என்றால் மிகையில்லை. தீவிரவாதிகளை தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கிறோம் என்று வழக்கம் போலக் காவல்துறை அறிக்கைவிட்டுள்ளது. ஏற்கனவே பெங்களூரூ மற்றும் அகமதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு சபர்மதியில் உள்ள சிறையில் பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியதைப் போல டெல்லி குண்டுவெடிப்பிற்கு எங்கே திட்டம் தீட்டினார்கள் என்று பட்டிமன்றம் வைக்காத குறையாக காவல்துறையினர் வாதாடிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில் நடந்துள்ள 17 வது குண்டுவெடிப்புச் சம்பவம் இது.

நாட்டில் தொடர் குண்டுவெடிப்புகள் ஏற்படுவது சர்வ சகஜமாகிவிட்ட இந்நாளில் இத்தகைய தீவிரவாதச் செயல்களுக்கு யாரை காரணம் காட்டலாம் என்பதில்தான் உளவுத்துறை அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனரே தவிர தீவிரமாக உளவறிந்து இத்தகைய சதிச் செயலை நடக்கவிடாமல் தடுப்பதில் அவர்கள் பெருமளவில் அக்கறை செலுத்துவதில்லை என்பது நிதர்சனமான உண்மை. குண்டுவெடிப்பு நடந்த பிறகு ஒரு சில நாட்களுக்கு எல்லா இடங்களிலும் கெடுபிடி அதிகமாக இருக்கும் - பிறகு அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே நாம் அடியோடு மறந்துவிடுவார்கள்.. பரபரப்பாக நடந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் புஸ்வாணம் ஆகிவிடும்..

பொடா போன்ற சட்டங்கள் இருந்தால் நாட்டில் தீவிரவாதம் தலைதூக்க முடியாது என்ற எதிர்கட்சிகளின் வாதம் வெறும் விதண்டாவாதம் தான். பொடா அமுலில் இருந்த காலத்தில்தான் நாடாளுமன்ற தாக்குதல் நடைபெற்றது.. எனவே வெறும் சட்டம் போடுவதால் மட்டும் நாட்டில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்திவிட முடியாது.

இந்தியாவை விட பலமடங்கு அதிக அளவில் தீவிரவாதத்தை ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் இத்தகைய குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறைந்த அளவில் நடைபெற அதன் பலமான உளவுத்துறையே முக்கிய காரணம். கிட்டத்தட்ட நாட்டின் ஒவ்வொரு குடிமகனைப் பற்றியும் அந்த உளவுத்துறை அறிந்து வைத்துள்ளது. ஆனால் இங்கே நடப்பது என்ன? டெல்லியில் இத்தகைய தாக்குதல் நடக்கப்போகிறது என்று குஜராத் எச்சரித்தும் மாநில உளவுத்துறை அதன் வேலையைச் சரிவர செய்யவில்லை.. சரியாகச் செய்திருந்தால் இந்தத் தாக்குதலை நிச்சயம் தவிர்திருக்கலாம்.

எனவே அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூடி நடந்த சம்பவத்திற்கு இன்னார் தான் பொறுப்பு - இவர் ராஜினாமா செய்யவேண்டும் என்றெல்லாம் பேசுவதைத் தவிர்த்து உளவுத்துறையை வலுவானதாக்க மாற்ற முயற்சி செய்யவேண்டும் - உளவுத்துறை தரும் தகவல்களை பெற்று பிராந்தியங்களின் கண்காணிப்பை காவல்துறை அதிகரிக்கவேண்டும் - இதற்கு இந்த இரண்டு துறைகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் - முக்கியமாக இவர்களது நடவடிக்கைகளில் அரசியல்வாதிகளின் தலையீடு கொஞ்சமும் இருக்கக்கூடாது.. இதை விட்டுவிட்டு வெறுமனே கூட்டம் போட்டு பேசுவதால் மட்டும் எந்தப்பலனும் கிடைக்கப்போவதில்லை.

 

oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |