செப்டெம்பர் 21 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பாடல்களால் ஒரு பாலம் : நூறு வருஷம்
- அபுல் கலாம் ஆசாத் [azad_ak@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

தமிழில்,

திரைப்படம்:
பணக்காரன்

இசை: இளையராஜா

பாடியவர்: மனோ

திரையில்: ரஜினிகாந்த், [சுமித்ரா], விஜயகுமார்

இந்தியில்,

திரைப்படம்: லாவாரிஸ்

பாடலாசிரியர்: ஆனந்த பக்ஷி

இசை: கல்யாண்ஜி ஆனந்த்ஜி

பாடியவர்: அமிதாப் பச்சன்

திரையில்: அமிதாப் பச்சன், [ராக்கி], அம்ஜத் கான்

அமிதாப் பச்சன் அரசியல் வட்டாரத்தில் கால்வைக்கத் துவங்கியிருந்த நேரம். தமிழ்த் திரையில் தோன்றிய பிரபலமான நட்சத்திரங்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியை ஆதரிக்கும் வகையில் அங்கங்கே ஓரிரு வசனங்களை உச்சரிப்பது இந்தியிலும் நடந்தது.

'அந்தா கானூன்' (தமிழில்: சட்டம் ஒரு இருட்டறை) என்னும் திரைப்படத்தில் ஒரு காட்சியில், ஒரு பெண்ணுக்கு வில்லனால் தொல்லை ஏற்படுகின்றது. அப்பொழுது அவள் 'கிருஷ்ணா என்னைக் காப்பாற்று' என கூக்குரல் எழுப்புகிறாள். அந்தக் காட்சியில் வில்லனிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றும் பாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த அமிதாப்பின் வசனம், அப்போதைக்கு காங்கிரசிற்குப் பெருந்தலைவலியாக இருந்த தஎன்.டி.ராமாராவை நோக்கிப் பேசுவதாக இருக்கும்.

'பெண்ணே கிருஷ்ணபரமாத்மா அரசியலில் மும்முரமாக இருக்கிறார், உன்னைக் காப்பாற்ற வரமாட்டார்' இதுதான் அந்த வசனம்.

Rajini Panakkaranஇந்தக் காட்சிக்கு ஏறக்குறைய பதில் சொல்வது போன்ற அமைப்புள்ள கோட்டோவியம் ஒன்று தினசரியில் வெளியானது. அமிதாப் அரசியலில் நுழைந்துவிட்டார். ஏற்கெனவே அரசியலில் ஈடுபட்டிருக்கும் என்.டி.ராமாராவ் அமிதாபைப் பார்த்து இந்தித் திரைப் பாடல் ஒன்றைப் பாடுவதாக வரையப்பட்ட கோட்டோவியம். பாடலின் வரிகள், 'எனது முற்றத்தில் உனக்கென்ன வேலை' (மேரே அங்க்னேமே துமாரா க்யா காம் ஹை). இந்த ஓவியத்தின் தாக்கம் அன்றைய அரசியலில் அதிகமாக பேசப்பட்டதன்று. ஆனால், இந்தத் தொடரின் ஒரு பகுதியை எழுதுவதற்குக் காரணமாக இருக்கின்றது. மேரே அங்க்னேமேயை பலர் அறியாமல் இருப்பினும், இதன் தமிழ் வடிவமான 'நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்' பதினைந்தாண்டுகளுக்கு முன் தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் ஒலித்த வெற்றிப் பாடல்களுள் ஒன்று என்பதை, தமிழ்த் திரைப் பாடல்களில் ஆர்amitabவமிருக்கும் அனைவரும் அறிவார்கள்.

இந்தியில், இந்தப் பாடலின் மையக் கருத்து சிலருக்கு முகச்சுளிப்பை உண்டாக்குவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. சில நேரங்களில் பாடல்களை நகைச்சுவை எனக் கருதி மேலோட்டமாக ரசித்துச் செல்லாமல், பொருளை அலசி ஆராய்த் துவங்கினால் அது நமக்கு ஏற்புடையதாக இல்லாமலும் போகலாம். அந்த வகையான பாடல்களுள் இதுவும் ஒன்று. மணப்பெண்ணின் உடலமைப்பு மணமகனுடன் பொருந்தாததாக இருக்கும்பட்சத்தில், நகைச்சுவையாக, 'அதனாலென்ன இதற்கு உதவியாக இருக்குமல்லவா' என்று கேட்கும் பாணியில் பாடல் இருக்கும்.

மனைவி சிவப்பாக இருந்தால் என்ன?
அறைக்குள் உட்கார வை, விளக்குக்கு வேலை இல்லை!

மனைவி கருப்பாக இருந்தால் என்ன?
கண்களில் தீற்றிக்கொள், கண்மைக்கு வேலை இல்லை!

மனைவி உயரமாக இருந்தால் என்ன?
மதில் சுவற்றில் வைத்துவிடு, ஏணிக்கு வேலை இல்லை!

இப்படி இந்தியில் மணப்பெண்ணைக் கேலி செய்து பாடுகின்ற பாடல், தமிழுக்கு வந்தபோது, அதில் மணமகனையும் பாடல் வரிகள் கேலி செய்வதாக எழுதப்பட்டது. இந்தியில் மொத்தப் பாடலுமே கேலியும் கிண்டலுமாக அமைந்திருந்தது. ஆனால், தமிழில் பாடலின் முன்பாதி மட்டும் கேலி செய்யும் விதமாகவும், பின்பகுதி வழமையான ரஜினிகாந்த் பாணி அறிவுரையாகவும் அமைந்தது.

உசிலை மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு
தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு!
ஓமக்குச்சி போலப் புடிச்சாரு தாரம்
தாவி அணைச்சாக்கா தாங்காது பாரம்!
இவரு ஏழு அடி நடக்கும் ஏணியடி
நிலவை நிண்ணுகிட்டே தொட்டுடுவார் பாரு!
மனைவி குள்ளமணி உயரம் மூணு அடி
இரண்டு இணைஞ்சிருந்தா கேலி பண்ணும் ஊரு!

இப்படியாக 'பொருத்தம் உடலிலும் வேண்டும்' என்னும் கண்ணதாசன் வரிகளுக்கு பலத்தைச் சேர்க்கும் பாணியில் நகைச்சுவையாகச் செல்லும் பாடலின் தன்மை பின்பகுதியில்,

முதலில் யோசிக்கணும் பிறகு நேசிக்கணும்
மனசு ஏத்துக்கிட்டா சேத்துக்கிட்டு வாழு!
ஒனக்குத் தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி
இருந்தா ஊரறிய மாலைகட்டிப் போடு!
சொத்து வீடு வாசல் இருந்தாலும்
சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டாக் கல்யாணம்தான் கசக்கும்!

இப்படியாக அறிவுரை கூறத்துவங்கிவிடுகிறது.

பாடலின் கதைக்களன் இந்திக்குப் புதியதல்ல. வழமையான நாசிர் ஹுசைன் தயாரிப்பாளர்களின் பாணி 'குடும்பப் பாடல்தான்'. திருமண வைபவங்களில் வடக்கே 'ரசம்' (நமது ரசம் அன்று, இந்தியில் ரசம் என்பதை நமது நலங்கோடு ஒப்பிடலாம்) நிகழ்ச்சியில் பாடும் பாடகி ஒருத்தி மணப்பெண்ணைக் கேலிசெய்து பாடலைப் பாடுகிறாள். அவளது காதலனுக்கும் இந்தப் பாடல் தெரியும். விதிவசத்தால் காதலர்கள் பிரிகின்றார்கள். அவர்களது காதலின் சின்னமான குழந்தை தாயிடம் வளர்ந்து வருகின்றது.

திரைக்கென வகுக்கப்பட்டிருக்கும் சில இலக்கணங்களின்படி, இருபதாண்டுகளுக்குப் பிறகு ஒரு திருமண விழாவில் கதாநாயக இளைஞன் அதே பாடலைப் பாடியதும், அதனைக் கேட்கும் பெரியவருக்கு பொறிதட்டி இளைஞனின் ரிஷிமூலம் நதிமூலத்தை ஆராய, அந்த இளைஞன்தான் அவர் தனது காதலிக்குப் பரிசாகத் தந்த காதலின் சின்னம். பிறகென்ன வழக்கம்போல அப்பா பாசம், பிள்ளைப் பாசம், 'அம்மாவை ஏன் விட்டுவிட்டு ஓடினாய்?' இத்தியாதி இத்தியாதி கேள்விகள். கடைசியில் சுபம்.

வில்லனாக அறிமுகமாகி கிடுகிடுவென புகழின் உச்சத்தை அடைந்து, நகைச்சுவை குணச்சித்திரம் என மாறுபட்ட பாத்திரங்களில் நடிக்கத் துவங்கி, தேவைக்கும் குறைவான வருடங்களுக்குள் அப்பாவாக நடிக்கத் துவங்கியவர் அம்ஜத் கான். இவர் வில்லனாக அறிமுகமான ஷோலேயில் இரட்டைக் கதாநாயகர்களுள் ஒருவர் அமிதாப். ஷோலே வெளியாகி பத்தாண்டுகளுக்கும் குறைவான இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தப் படமான லாவாரிஸில், அமிதாப் கதாநாயகன், அமிதாபின் தந்தையாக அம்ஜத் கான். சில படங்களிம் அமிதாபிற்கு ஜோடியாக நடித்த ராக்கி, இதில் 'பாடலை' முதலில் பாடுகின்ற அம்மா பாத்திரத்தில். தமிழில் இந்தப் பாடலுக்கு இதே போன்ற அமைப்பு இருக்கின்றது. புவனா ஒரு கேள்விக்குறியில் ரஜினிகாந்துக்கு துணையான பாத்திரத்தில் நடித்திருந்த சுமித்ரா பணக்காரனில் 'பாடலை' முதலில் பாடுகின்ற அம்மா பாத்திரத்தில்.

தமிழோ, இந்தியோ, முன்னணிக் கதாநாயக நடிகர்களின் ஆளுமை திரையில் நீண்டகாலம் இருக்கும் என்பதற்கு லாவாரிசும், பணக்காரனும் இன்னொரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

சில நேரங்களில் நகைச்சுவையாகப் பொழுதைக் கழிக்கவேண்டுமென்றால், நூறு வருஷத்தையும், மேரே அங்க்னேமேயையும் நாடலாம். ரஜினியும் அமிதாபும் நிச்சயமாக நம்மை சிரிக்கவைப்பார்கள்.

| | | | |
oooOooo
அபுல் கலாம் ஆசாத் அவர்களின் இதர படைப்புகள்.   பாடல்களால் ஒரு பாலம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |