செப்டம்பர் 22 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
கட்டுரை
உள்ளங்கையில் உலகம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
கேள்விக்கென்ன பதில் ?
கட்டுரை
தொடர்கள்
கவிதை
தொடர்கள்
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
முச்சந்தி : பூக்கள்
- என். சொக்கன் [nchokkan@gmail.com]
| Printable version | URL |

சுவரில் தொங்கும் அந்தச் சதுரத்துக்குள் மொத்தம் இருபத்தி நான்கு பூக்கள். அவற்றுள் எந்த இரு பூக்களும் ஒரே வண்ணத்தில் இல்லை என்பதை நம்பச் சிரமமாக இருக்கிறது.

ஒவ்வொரு பூவின் பெயரும் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும், கன்னடத்திலும் எழுதப்பட்டிருக்கிறது. பெரும்பாலான பூப் பெயர்கள் பரிச்சயமானவையாக இல்லை.

'நர்கீஸ்' என்று ஒரு பூ இருப்பதைப் பார்க்கிறேன். கொட்டும் மழையில் குடை பிடித்துக்கொண்டு ராஜ் கபூருடன் 'ப்யார் ஹ¤வா, எக் ரார் ஹ¤வா' என்று தலையசைத்துப் பாடுவது அவர்தானே ?

N S Kஅந்தக் காலக் கதாநாயகிகளைப்போலவே, ஏகமாகத் தலையசைத்துப் பாடுகிறவர் இப்போதும் ஒருவர் இருக்கிறார். அவர் நடிகை இல்லை, பாடகி. ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பதரை மணிக்கு தூர்தர்ஷனில், 'துள்ளாத மனமும் துள்ளும்' என்ற நிகழ்ச்சியில், பெரும்பாலான பெண் குரல்களைப் பாடும் ப்ரியா சுப்ரமணியன்.

அது சரி, நர்கிஸை நினைக்கும்போது, சம்பந்தமில்லாமல் டி. ஏ. மதுரம் நினைவுக்கு வருவது ஏன் ? கலைவாணரிடம் யாரோ, 'உங்களுக்கு காபி வேணுமா ? டீ வேணுமா ?', என்று கேட்டபோது, 'டீயே மதுரம்' என்றாராம் !

மீண்டும் பூக்களுக்குத் திரும்புகிறேன், பள்ளிக் காலத்தில், 'ஹைபிஸ்கஸ்' என்று சொல்லிப் பழகிய செம்பருத்தியை, ஹிந்தியில் 'ஹிபிஸ்கஸ்' என்று எழுதியிருக்கிறார்கள். 'அன்டிராய்னம்' என்பதுபோல் சிரமமான பெயர் வைத்துக்கொண்டிருக்கிற பூ, ஒரு வண்ணமயமான செடியைப்போலத் தோற்றம் தருகிறது.

எல்லாப் பூக்களின் ஒழுங்கான வட்ட வடிவம் சலிப்பூட்டுகிறது. சச்சதுரமான கச்சிதக் கட்டங்களுக்குள் அவற்றைச் சிறைப்படுத்திவைத்திருப்பதும் பிடிக்கவில்லை.

ஆனால், வண்ணங்கள் நிறைந்த அந்த பூப் பட்டியல், குழந்தைகளுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. சுவரில் தொங்கும் அதைச் சுட்டிக்காட்டி, 'பூஊஊஊ' என்று சிரிக்கிறாள் என் மகள்.

அவள் சிரிப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, எப்போதோ படித்த ஒரு சுவாரஸ்யமான விஷயம் நினைவுக்கு வருகிறது. குறிஞ்சிப் பாட்டில், ஏகப்பட்ட பூக்களின் பெயர்களை நிறைத்த ஒரு சங்கப் பாடல் இருக்கிறது. 'பூவெல்லாம் கேட்டுப் பார்' என்ற சற்றே பழைய திரைப்படத்தில், இந்தப் பட்டியலைச் சூர்யா ஜோதிகாவிடம் ஒப்பிக்கக் கேட்டிருப்பீர்கள்.

இந்தச் செய்தியை, கலைஞரின் சங்கத் தமிழ் புத்தகத்தில் வாசித்த ஞாபகம். ஆனால், இப்போது தேடியதில் அந்தப் புத்தகம் கண்ணில் படவில்லை. ஆகவே, நேரடியாக குறிஞ்சிப் பாட்டைத் தேடிப் பார்த்தேன்.

'பத்துப் பாட்டு' நூலின் ஒரு பகுதியான 'குறிஞ்சிப் பாட்டு', காதலன், காதலியின் நீண்ட பயணம் ஒன்றைச் சொல்லும் சுவையான புத்தகம். எழுதியவர் கபிலர்.

இந்நூலின் 61வது வரியில் தொடங்கி, 95வது வரிவரையிலான பகுதியில், அந்தக் காலப் பூக்களின் விரிவான பட்டியல் வருகிறது :

உள்ளகம் சிவந்த கண்ணேம் வள்இதழ்
ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கோடு வேரி, தேமா, மனிச்சிகை,
உரீஇநாறு அவிழ்தொத்து உங்தூழ், கூவிளம்,
எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான்பூங்குடகம்,
எருவை, செருவிளை, மணிப்பூங்குடசம்,
பயினி, வானி, பல்இனர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்இணர்க் காயா,
விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,
குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,
குருசிலை, மருதம், விரிபூங்கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமல் பாதிரி,
செருத்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,
தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,
தாழை, தளவம், முள்தாட் தாமரை,
ஞாழல், மௌவல், நறுந்தாண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குழலி,
கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை,
காஞ்சி, பனிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
பாங்கர், மாரவும், பல்பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அரும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்பூந் தொன்றி,
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருங்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மாஇருங்குருத்தும், வேங்கையும்,. பிறவும் ....

இத்தனை பூக்களையும் பார்த்து மயங்கி, அவற்றை ஆசையாகப் பறித்து, மழை கழுவித் தூய்மையாக்கிய பாறையில் குவிப்பதாகக் காட்சி.

பொதுவாக, குறிஞ்சித் திணையைப் பாடும்போது, அந்த நிலத்துக்குரிய கருப்பொருள்களைமட்டுமே பயன்படுத்துவார்கள். அதாவது, குறிஞ்சி நிலக் கடவுள், குறிஞ்சி நிலத்துக்கான காலம், பூக்கள், இப்படி. ஆனால், இந்தப் பாட்டைப் பொறுத்தவரை, எல்லாத் திணைகளுக்குரிய மலர்களையும் தொகுத்துச் சொல்லியிருக்கிறார் கபிலர். 

அந்தக் காலத்தில் இத்தனை பூக்கள் இருந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்கிறபோதே, இந்த பூக்களெல்லாம் இப்போது என்ன ஆனது என்கிற கேள்வியும் எழுகிறது. இதுகுறித்து யாராவது ஆராய்ச்சி செய்திருக்கிறார்களா, தெரியவில்லை. பட்டியலை வேகமாக ஒருமுறை படித்துப் பார்த்தால், வாழை, தாழை, அவரை, தாமரை, தும்பை என்று சில பூக்கள்தான் தெரிகிறது. மற்றதெல்லாம் என்ன ஆச்சு ?

வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்டுள்ள புலவர் அ. மாணிக்கனார் உரை, இந்தப் பூக்கள் சிலவற்றைக்குறித்து, மேலதிகத் தகவல்களைத் தருகிறது.

'காந்தள்' என்பது, குறிஞ்சி நிலக் கடவுளான முருகனுக்கு அடையாளம். ஆகவே, அதை முதலில் சொல்கிறார் கபிலர். 'காந்தள் மெல்விரல்' என்று குறுந்தொகையில் வருகிறது. காந்தள் மலர், மனிதக் கையைப்போலவே இருக்குமாம். கற்பனை செய்யக் கஷ்டமாக இருக்கிறது.

மென்மையான மலரான 'அனிச்சம்', விருந்தினருக்கு உவமையாக, 'மோப்பக் குழையும் அனிச்சம்' என்று திருக்குறளில் வருகிறது.

'வாகை' என்பது, வெண்மையான மரப் பூ, 'வெற்றி வாகை சூடினார்' என்று இப்போதும் சொல்வதன் காரணம், அந்தக் காலத்தில், போர்களில் வெற்றி கண்ட அரசர்கள், தங்களின் வெற்றிக்கு அடையாளமாக, வாகை மலரைச் சூடிக்கொண்டு வலம்வருவார்கள் !

'கோங்கம்' என்பதிலிருந்துதான் 'கொங்கை' என்ற வார்த்தை பிறந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். இதற்குக் காரணம், கோங்க மலரின் அரும்பு, அந்த வடிவத்தில் இருக்குமாம்.

'தில்லை' என்பது இன்னொரு மரப் பூ. இந்த மரம் அதிகம் நிறைந்திருந்த காரணத்தால்தான், சிதம்பரத்தைத் 'தில்லை' என்று குறிப்பிட்டார்களாம் ! (சிதம்பரத்தில் தில்லை மரங்கள் இப்போதும் இருக்கிறதா ?)

'ஞாழல்' என்பது, பி. ஏ. கிருஷ்ணன் நாவல் எழுதிய புலி நகக் கொன்றை, Tiger Claw Tree. 'பித்திகம்' என்பது, உச்சி வகுந்தெடுத்த கிளி வைத்துக்கொண்டிருந்த பிச்சிப் பூ. 'துழாய்' என்றால் துளசி.

'வேங்கை' என்று குறிப்பிடப்படும் மிருகமும், 'புலி' என்பதும் ஒன்றா என்று தெரியவில்லை. ஆனால், வேங்கை மலர்கள் விழுந்து கிடக்கும் பாறையை தூரத்திலிருந்து பார்க்கும்போது, அது புலியைப்போலவே தோன்றும் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லை, வேங்கை மலர்களைப் பறிக்க விரும்புகிறவர்கள், 'புலி புலி' என்று கத்துவார்களாம், அந்தச் சப்தத்தைக் கேட்டதும், இந்தச் செடியோ, கொடியோ, மரமோ தாழ்ந்து, மலர்களைப் பறிக்க அனுமதிக்குமாம்.

கபிலரின் இந்தப் பாட்டைப் படித்துவிட்டு, இத்தனை பூக்களையும் எனக்குப் பறித்துத் தந்தால்தான் ஆச்சு என்று அந்தக் காலத்துக் காதலியர், தங்கள் காதலர்களைப் பாடாகப் படுத்தியிருப்பார்களோ, என்னவோ ! பாவம் !இந்த வார வாசகம் :

See No Evil, Hear No Evil, Date No Evil

- ஜெயநகரில் ஒரு நவீன இரு சக்கர வாகனத்தின் பின்பகுதியில் பார்த்ததுஇந்த வார நகைச்சுவை :

உங்க பாடல்கள்லே ரெட்டை அர்த்தம் இருக்கே ?

தேவலாமே, எவ்வளவோ பேர் அர்த்தமே இல்லாம பாட்டு எழுதலையா ?

- ஆனந்த விகடன் 18.09.2005 இதழில் தஞ்சை தாமு

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |