செப்டம்பர் 22 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
கட்டுரை
உள்ளங்கையில் உலகம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
கேள்விக்கென்ன பதில் ?
கட்டுரை
தொடர்கள்
கவிதை
தொடர்கள்
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : ஆதிக்கம் கொள்ள அனுமதியோம்!
- எஸ்.கே
| Printable version | URL |

என் உடன் பணியாற்றும் ஒருவர். அவர் பெயர் சிதம்பரம் என்று வைத்துக் கொள்வோம். அவர் யாரையும் சட்டென்று ஏக வசனத்தில் அழைக்க ஆரம்பித்துவிடுவார். ஒருமுறை பழகினால்கூட அடுத்தமுறை சந்திக்கும்போது "வாப்பா, போப்பா" என்று ஆரம்பித்து ஆழம் பார்ப்பார். ஏதும் எதிர்ப்பு வரவில்லையானால் "வா, போ"; பிறகென்ன, "வாடா, போடா"தான்! எடுத்த எடுப்பில் எகத்தாளமான, எடுத்தெரிந்த பேச்சு வரும் என்பதால் அவரிடம் எல்லோருமே சற்று அச்சத்துடன்தான் பேசுவர். அவரிடம் ஒரு கேள்வி கேட்டால் பதில் வராது. எதிர்க்கேள்விதான் வரும். "இதை ஏன் என்னிடம் கேட்கிறாய்? உன் உள்நோக்கம் என்ன?" என்று பிளேட்டை திருப்பிவிடுவார். அவருடைய மேலதிகாரிகளை ஒரு குற்ற உணர்வுடனேயே தவிக்கும்படி செய்து விடுவார். அவர் பணிபுரியும் நிறுவனத்தின் உள்ளந்தரங்கமெல்லாம் தனக்கு அத்துப்படி என்கிற உணர்வை எல்லோரிடமும் எப்படியோ ஏற்படுத்திவிடுவார். சமநிலையிலும் கீழ்நிலையிலுமிருப்பவர்கள் இவர் மேலிடத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்றிருப்பவர் என்று திடமாக நம்பினார்கள். மேலிட நிர்வாகிகள் இவர் கீழ்மட்டத்திலும், தொழிற்சங்க மத்தியிலும் மற்றும் சமூக அந்தஸ்திலுள்ள முக்கியஸ்தர்களிடையேயும் மிகுந்த செல்வாக்கு பெற்றவர் என்று நம்பினார்கள். ஆனால் இந்தப் பொய்த்தோற்றத்தை (facade) யாரும் கிழிக்கவில்லை. இவர் காலம் கடைசிவரை சிறப்பாக ஓடியது. இவரிடம் குற்றம் காணவேண்டுமென்பதற்காக வரும் ஆய்வார்களை மடக்கி அவர்களின் பதவி உயர்வு பற்றிய விவரம் ஏதாவதொன்றை எப்படியோ தெரிந்து கூறி தடுமாற வைத்துவிடுவார். அல்லது கணையை இன்னொருவர் பக்கம் திசைதிருப்பி விடுவார். Red herring என்கிற அஸ்திரத்தை முழுதுமாக பயன்படுத்தியவர் இவராகத்தான் இருக்கமுடியும்.

அவருடைய ஓய்வுபெறும் நாளன்று நடந்த பிரிவுபசார விழாவன்று நான் பேசும்போது அவருடைய இந்த அருமை பெருமைகளைக் குறிப்பிட்டு, "இந்த தொழில்நுணுக்கங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் செல்கிறாரே" என்று ஆதங்கத்துடன் கூறியதற்கு பதிலாக அவர் "Scott Adams எழுதியுள்ள நூல்களை வாசித்து அதில் கூறியுள்ளபடி நடவுங்கள்" என்றார்.

ஆனால், அந்த எத்தரின்கீழ் பணியாற்றிய ஒருவரிடம் அவர் இதுபோல் "வா, போ" என்று விட்டு ஆழம் பார்த்திருக்கிறார். அவர் பட்டென்று "என்னிடமெல்லாம் இந்த வேலையை வைத்துக் கொள்ளாதீர்கள். மரியாதை கொடுத்து மரியாதையை வாங்குங்கள்" என்று (அது ஒரு cliche-யாக இருந்தாலும் பரவாயில்லை என!) "கண்ட்ரைக் கோடாலி" போட்டார். உடனே "டபால்" என்று ஜகா வாங்கி "என்னங்க நான் உன் அண்ணன் மாதிரி" என்று குழைந்து, ஆனல் அதன்பின் அவரிடம் எச்சரிக்கையுடன் உரையாடத் தொடங்கினார்.

இதுபோல் நம்மை அடக்கியாண்டு ஆதிக்கம் கொள்ள பலர் இவ்வுலகில் என்னேரமும் தயாராக இருப்பார்கள். நாம்தான் மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் இருக்கவேண்டும். இதுபோன்ற நபர்களுக்கு ஊசிநுழையும் இடம்கூட கொடுக்கக் கூடாது. அவர்கள் அதில் யானையையே நுழைத்துவிடுவார்கள். இவர்கள் நம்மை மரியாதைக் குறைவுடன் நாலுபேர் எதிரில் அழைக்கவோ, நம்மீது ஆதிக்கம் கொள்ளவோ அனுமதித்தால் அது நம் ஆளுமையை பாதித்து, அதள பாதாளத்தில் தள்ளிடும். நம்மையறியாமல் பிறர்மேல் நம் பேச்சு எடுபடாமல் போய்விடும். ஆகையால் இத்தகைய சைத்தான்களை அடையாளம் கண்டுகொண்டு, நம் மேல் அவர்கள் அவ்வாறு அகந்தையுடனான ஆதிக்கம் செலுத்தாதவாறு காத்துக் கொள்ளல் அவசியம். நம் தனித்தன்மையையும் பெருமையையும் நாம்தான் காத்துக் கொள்ளவேண்டும். அதற்கு சிறிதும் பங்கம் ஏற்படாதவாறு ஒவ்வொரு கணமும் கவனமாகக் காக்கவேண்டும். நம் பெருமையையும் அதன் காரணமாக நமக்கு ஏற்படும் சக்தியையும் குலைக்க பிறர் முனைவது இயற்கை. ஆனால் அதை முறியடித்து நம் மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வது நம் கடமை. இவ்விஷயத்தில் நாம் எப்பொதும் விழிப்புடனிருக்க வேண்டும். பிறருடைய முயற்சிகள் எல்லாமே தெளிவுடன் வெளிப்படாது. மிக நுட்பமாக காய்களை நகர்த்துவார்கள் சில தொழில் நுணுக்கம் தெரிந்தவர்கள். இவர்களுடைய சூழ்ச்சியை உடனுக்குடன் முறியடித்து "நான் விழித்துக் கொண்டிருக்கின்றேனடா" என்று தெளிவாகக் காண்பித்துக் கொண்டேருக்கவேண்டும்.

கீதையில் இந்தக் கருத்தை, "நீயே உனக்கு முதல் நண்பனும், முதல் எதிரியுமாக அமைகிறாய்" என்றும், "உன்னை நீயேதான் உயர்த்திக் கொள்ள வேண்டும். உன்னை ஒருபோதும் தரம் தாழ்த்திக்கொள்ளாதே" என்றும் கூறப்பட்டிருக்கிறது.

 "உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானம் அவசாதயேத்
  ஆத்மன்யே வாத்மனோ பந்து ராத்மைவ ரிபுராத்மனஹா"

என்ற செய்யுளில். (இதன் தமிழாக்கத்தை வெண்பா வடிவில் இக்கட்டுரைத் தொடரின் ஒரு முந்தைய பகுதியில் இங்கே காணலாம்.)

பிறர்மேல் தான் கொள்ள முற்படும் ஆளுமை, ஆதிக்கம், அகந்தையுடனான அதிகாரம் போன்றவற்றை உலகறிய வெளிப்படுத்தும் விதமாக சில சிறுசிறு நடைமுறைகளை நுட்பமாக சிலர் செய்துகாண்பிப்பார்கள். இவை ஏதோ தற்செயலாக நடந்தவைபோல உங்களுக்குத் தோன்றும். ஆனால் அதைக் காணுறும் பிறருக்கு அவர்கள் உணர்த்தும் செய்தி என்னவெனில், "இந்த நபர்மேல் எனக்கு ஆதிக்கம் இருக்கிறது" என்பதுதான். இத்தகைய செயல்முறைகள் யாவை என்பதைப் பார்க்கலாம்.

  • ஒரு அவையில் உங்களருகில் அமர்ந்திருக்கும் நபர் உங்கள்மேல் படும்படியாக கால்மேல் கால்போட்டு அமர்கிறார். நீங்கள் உங்கள் உடலைக் குறுக்கிக்கொண்டு நகர்ந்துகொள்கிறீர்கள். அவர் உங்கள் சங்கடத்தைக் காணாதவர்போல் இன்னும் சௌகரியமாக காலை நீட்டி அமர்கிறார். இதனை உங்களைச் சுற்றியுள்ள பலர் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
  • இதேபோல் நீங்கள் அருகிலமர்ந்திருப்பவரிடம் ஏதோ பேச முற்படுகிறீர்கள். அதற்காக அவர்பக்கம் கொஞ்சம் தலையைச் சாய்த்துத் திருப்பி உரையாடுகிறீர்கள். அவரோ, தன் முகத்தை உங்கள் பக்கம் திருப்பியோ, அல்லது தன் காதை உங்கள் பக்கம் கொணர்ந்தோ உங்கள் சொற்களைக் கேட்பதற்கான முயற்சி ஏதும் செய்யாமல் தலையை இன்னும் நன்றாக பின்னோக்கி சாய்த்து smug-ஆக அம்ர்ந்தபடியே, ஒரு அரை மில்லிமீட்டர் உதட்டை சுழிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதிலிருந்து ஏனையோர் உணர்வது என்ன?

இவை சிறிய, சாதரணமான நிகழ்ச்சிகள்தான். ஆனால் subtle-ஆக அங்கு நிலவும் இந்த சூழ்நிலை உரக்கக் கூறும் செய்தி என்னவெனில், உங்கள் கை தாழ்ந்தும், அந்த நபர் கை உயர்ந்தும் இருக்கிறது என்பதுதான். "நாசூக்கு கருதி ஒதுங்குவதுதான் சிறந்தது, அதுதான் பண்பாடு, அதுதான் பிறர் கருத்தில் மேம்பட்டு நிற்கும்" என்று நீங்கள் நம்பினால், நீங்கள் மனித இயல்பினைப் பற்றிய கல்வியில் அரிச்சுவடிகூட தேறவில்லை எனப் பொருள். உங்கள்மேல் பிறர் கழிவிரக்கம் கொள்ளலாம். "பாவமய்யா அவர், இன்னொரு ஆளின் திமிரைப் பார்" என்று அவர்கள் எண்ணலாம். ஆனால் உங்களைவிட அந்த நபருக்குத்தான் அவர்கள் மதிப்பும் மரியாதையும் கொடுப்பர் என்பது திண்ணம். இது தன்னிச்சையாக நிகழ்வது. மனித மனம் வெற்றிபெறுவோரையும், ஆதிக்கம் செலுத்துவோரையும்தான் மதிக்க முற்படும். இரக்கம், தாழ்வு, பரிதாபம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும் நபர்களிடமிருந்து மக்கள் ஒதுங்க முற்படுவர். இதனால்தான் Nothing succeeds like success என்பார்கள்.

நான் இவ்வுலகில் பல திறமைசாலிகளைக் கண்டிருக்கிறேன். ஆனால் அவர்களைவிட பல படிகள் குறைவாக திறமை கொண்ட நபர்கள் பல பெருமைகளை அள்ளிச்செல்கிறார்கள்; உலகமே அவர்களைப் புகழ்ந்து தள்ளுகிறது. சமுதாயத்தில் உயரிய அந்தஸ்துகளைப் பெறுகிறார்கள். எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் அவர்களை அழைத்துச் சிறப்புச் செய்கிறார்கள்; விருதுகளை வழங்குகிறார்கள். வானளாவப் புகழ்கிறார்கள். அவர்கள் எதிரில் கூழைக் கும்பிடு போடுகிறார்கள் அவர்கள் என்ன வேண்டினாலும் தட்டாமல் செய்கிறார்கள். அந்தப் பெரிய மனிதர்கள் செய்யாததையெல்லாம்கூட அவர்கள் சாதித்துள்ளதாக முரசறைகிறார்கள். பெரிய அரசியல் தலைவர்கள், வெளி நாட்டிலிருந்து வரும் பிரமுகர்கள் எல்லோரும் இவரை கௌரவிக்கிறார்கள். இவர்கள் தொடர்புள்ள துறைகளில் மான்யங்கள் பெருவது, வெளிநாட்டு விஜயம், விருதுகள், நுழைவுகள் எல்லாவற்றிற்குமே இவர்களுடைய சிபாரிசு தேவை என்கிற நிலைமை உண்டாகிறது. ஆனால் உண்மையிலேயே இவர்களைவிட பன்மடங்கு திறமை கொண்ட வல்லுனர்கள் பலர் எங்கோ ஒரு மூலையில் முடங்கிக் கிடப்பார்கள். (அத்தகைய சிலர், திறமையில்லாத நபர்கள்கீழ் பணியாற்றும் சிறுமையைக் கூட அனுபவித்துக் கிடப்பர்). அவர்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களுடைய திறமை பற்றித் தெரிந்திருந்தும்கூட சூழ்நிலை அனுகூலங்கள் கருதியும் (expediency), இற்றைப்படுத்தப்பட்ட நடைமுறைகளை எதிர்க்கும் சக்தியின்மையாலும், அவர்களை ஓரங்கட்டிவிட்டு "பவர்" உள்ளவர்கள் சொற்படித்தான் செய்வர். "இது நியாயமா" என்று நீங்கள் கேட்கலாம். அய்யா, இவ்வுலகம் இப்படித்தான் சுழல்கிறது. அதை உணர்ந்து புத்திசாலித்துவத்துடன் பிழைத்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். இந்தக் கருத்தைத்தான் பில் கேட்ஸ் கூறுகிறார், "Life is not fair. Get used to it" என்று!

ஆனால் இந்த நிலைமையைப் பற்றி சற்று சிந்தித்து "ஏனிப்படி நிகழ்கிறது?" என்று கூர்ந்து நோக்கினால் ஒரு உண்மை தெளிவாகத் தெரிகிறது. பலரின் கூற்றுப் போல் இதற்கு அதிர்ஷ்டமோ, கிரஹங்கள் குந்தியிருக்கும் கட்டங்களோ காரணமல்ல. சமுதாயத்தில் பெருமை பெற தொழில் திறமையோ, நுண்கலை நுட்பங்களின் வல்லமையோ மட்டும் நிச்சயம் போதாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதைத்தாண்டி மனித இயல்புகளின் நெளிவுசுளிவுகளைப் புரிந்து, கொஞ்சம் ஈகோ போஷாக்கு, கொஞ்சம் அனுசரிப்பு, இடம் பொருள் ஏவல் அறிந்து சமயத்திற்கேற்ப ஒழுகுதல் -இவைதான் திறமையின் மேல் ஒரு லேயராக செயல்பட்டு வெற்றியையும் மதிப்பையும் தேடிக் கொடுக்கிறது.

நீங்கள் ஏதோ பத்தோடு பதினொன்றாக நானும் வாழ்ந்தேன் என்பதுபோலல்லாமல் பிறர் மதிக்கும் வண்ணம் தனித்தன்மை பெற்று விளங்க வேண்டுமானால் உங்கள் செயல்பாடுகள் dogmatic-ஆக அல்லாமல் மனித இயல்புகளுக்கேற்ப அமைந்திருத்தல் வேண்டும். அப்போதுதான் உங்களை, "Here is somebody" என்று இன்னொருமுறை திரும்பிப் பார்ப்பார்கள். ஏனெனில், If you are not somebody, you are nobody!

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |