செப்டம்பர் 23 2004
தராசு
கார்ட்டூன்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
முத்தொள்ளாயிரம்
காந்தீய விழுமியங்கள்
திரைவிமர்சனம்
க. கண்டுக்கொண்டேன்
சமையல்
நையாண்டி
பெண்ணோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • ஹர்ஷத் மேத்தா
 • - சசிகுமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  நாங்க ரெடி நீங்க ரெடியா ? : மின் சாதனமே போ போ !!
  -
  | Printable version |

  இனி வரும் வாரங்களில், ஒவ்வொரு வாரமும் நமக்கு கடிதம் எழுதும் வாசகர்களில் சிலரை தேர்ந்தெடுத்து ஒரு கேள்வி கேட்போம். அதற்கு வாசகர்கள் தங்கள் பதிலை (தமிழில்) சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதி அனுப்பலாம். கேள்வியை அனுப்பினால் கண்டிப்பாக பதில் அனுப்பியாக வேண்டுமென்பதில்லை. (முடியவில்லை என்று ஒரு வரி பதில் போட்டால் போதும். அதுவும் முடியவில்லையென்றால் பரவாயில்லை)

  இது வரை கடிதம் எதுவும் எழுதவில்லை ஆனால் இதில் கலந்து கொள்ள விருப்பமா? உங்கள் ஆர்வத்திற்கு எங்கள் நன்றி. உடனே feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு உங்கள் விருப்பத்தை தெரிவித்து ஒரு வரி போடுங்கள். வரும் வாரங்களில் உங்களையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்கிறோம்.

  பதிலை அனுப்பும் போது உங்கள் (சமீபத்திய) புகைப்படத்துடன் அனுப்பினால் ரொம்ப சந்தோஷம்!

  இதோ இந்த வார கேள்வி.

  நீங்கள் தினமும் உபயோகிக்கும் மின் சாதனங்களில் (கணிணி, செல்பேசி, தொலைக்காட்சி, ரேடியோ, தொலைபேசி, வாட்ச்) ஒன்றை இனி ஒரு வருடத்திற்கு உபயோகிக்க கூடாது என்றால் எதை விட்டுவிடுவீர்கள் ? ஏன் ?


  அருணா

  கண்டிப்பா கம்ப்யூட்டர் இல்லைங்கானும். அதுதான் மம்மு போட்டுண்டு இருக்கு. அத விட்டுட்டா ஒரு வருஷத்துக்கு யாரு அவியலும்,பருப்பு உசிலியும் போடுவா?. அதையும் தவிர சீட்ட கிழிச்சு போம்மா ஆத்துல போய் ஆடுகிறான் கண்ணன் பாத்துண்டு இருன்னுட்டா!!  எல்லாத்துக்கும் மேல பாக்கெட் மணிக்கு என் ப்ராண நாதனன்னா நம்பி இருக்கனும்.

  செல்,யோசிக்க வேண்டிய விஷயம்தான். நான் எங்க இருந்தாலும், கபால்னு அவசரத் தேவைக்கு கூப்பிட ப்ரயோஜனமா இருக்கே . மத்தவாளும் என்ன கூப்பிட்டு குசலம் விசாரிக்க உபயோகமா இருக்கே. ஒரு வருஷம்  நான் இத விட்டா,என் செல் ஸ்டோர் பண்ணி வெச்சு இருக்கறவா எல்லாம் உஷ் ஹப்பாடானு பெருமூச்சு விடுவா. அதெப்படி அவாள எல்லாம் லேசுல நிம்மதியா விட முடியும்...... இருங்கோ மிச்ச மீதாரியும் அலசிட்டு முடிவுக்கு வரலாம்.

  தொலைக்காட்சி, ஆங் ஐய்யாங்..... மெட்டி ஒலி கேட்காம எப்படி ஒரு வருஷம்.... என்ன சத்தம் அங்க! என் ஆத்துக்காரர் அவசரமா இத விடு விடுனு பறக்கரார் வேற ஒன்னும் இல்ல. NFL பாக்க வுடாம நான் சீரியல் பாக்கறேன்னோனோ,அதான் அவ்ளோ பரபரப்பு. என்ன ஒரு வசதின்னா, ஒரு வருஷம் கழிச்சு பாத்தாலும் கதை புரியும். இத சாய்ஸ் லிஸ்ட்ல கீழ போட்டுக்கறேன். ஆஹா என்ன சந்தோஷம் என் ஆத்துக்காரர் மூஞ்சில தெரியுமோ!. சரி நான் என்னத்த விடப்போறேன்னு சஸ்பென்ஸ் தாங்க முடியாதவா கடைசி பாராக்கு தாவுங்கோ.

  ரேடியோ கேட்கறதே இல்ல. இத விட்டாலும் விடாட்டாலும் ஒன்னுதான். காசிக்கு போனா தனக்கு ரொம்ப பிடிச்சத விடனும்னு சொல்லுவா. ஆனா அங்க போறவா எல்லாம் விடறது என்ன தெரியுமோ..அத்திக்காய், விலாம்பழம், பலாக்கொட்டைனு எது சாப்பிடாத உருப்படியோ அத விடுவாங்க. ஆனா தினமும் உபயோகிக்கற ன்னு கேள்வி கேட்டதுனால நான் காசில விடற மாறி இத வுட முடியாதே...

  தொலைபேசி. செல் சிக்னல் பலஹீனமா இருக்கறச்ச கை கொடுக்கும் ஆபத்பாந்தவன் இவர். இவர மூட்டை கட்டி டாட்டா சொன்னா, நன்றி மறந்த பாவம் என் தலைல விழும். அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உம் மேலதான் வரும்.

  லவாலக்கடி லக்கி ப்ரைஸ் யாருக்கு கடசில... தொலைக்காட்சிதானா... தொல்லை விட்டுது ஒரு வருஷத்துக்கு...

  வணக்கம் வணக்க்க்க்கம் வணக்கம்ம்ம்ம்ம்ம்.


  ஷக்தி

  ஆஆஆ! ஒரு வருடம், செல்பேசி இல்லாமலா? ரொம்ப  கடினம். முடியவே முடியாது.
   
  ரேடியோ? ஹ்ம்ம்..எ·ப் எம் எப்படி கேட்பது?
   
  வாட்ச் ? சேசே! வெளியே செல்லும் போது இன்னொருவரிடம் ஒரு மாதத்திற்கு மணி கேட்க முடியுமா?
   
  தொலைப்பேசி ? தொலை தூர நண்பர்கள், உறவினருடன் தொடர்பு கொள்ள ஒரே வழி. லெட்டர் எழுதுவது போர். எல்லோருக்கும் ஈமெயில் இருப்பதில்லை. ஒரு வருடம் இவர்களுடன் பேசாமல் இருக்க நான் சன்யாசினி இல்லை. ஆகவே தொலைப்பேசியை தொலைவில் எறியலாமா என்ற பேச்சுகே இடமில்லை.

  கணினி இல்லாமலா? மூச்! அந்த பேச்சுக்கே இடமில்லை!
   
  ஆக தொலைக்காட்சியே தேவையற்ற அழுமூஞ்சி சீரியல்களின் ஆதிகத்தால் பரிதாபமாக தேர்வாகிறது.

  அதிகாலை, காலை, முற்பகல், பகல், மாலை, இரவு என பல நேரங்களில் நம்மை அழவைக்கும் எந்த தொலைக்காட்சித் தொடரும் நான் பார்க்காமல் இருப்பது, தொலைக்காட்சியை தியாகம் செய்வதை எளிதாக்குகிறது. சுடச்சுட செய்தி வேண்டுமா? மறு நாள் தினசரிகளைப் பார்த்து சற்றே ஆறிப்போய் தெரிந்து கொண்டால் என்ன கொள்ளைப் போகும்?
   
  என் மூன்று வயது பெண் மட்டும் சற்று நை நை என்று அழக்கூடும். எந்நேரமும் அவளுக்காக ஓடும் கார்ட்டூன் நெட்வர்க் இல்லாமல் போனதால் துக்கம் மேலிடலாம்.
   
  இரண்டு வருடம் முன்பு, வேறு தொலைக்காட்சிப் பெட்டி வாங்க நேர்ந்த பொழுது, பழைய தொலைக்காட்சிப் பெட்டியை விற்பதற்கும், புதிது வாங்குவதற்கும் ஆறு மாத காலம் இடைவெளி கொடுத்தோம். எங்களால் இந்த ஆறுமாத காலத்தில் முன்பை விட சிறந்த முறையில் பணியாற்ற முடிந்ததாய் தோன்றியது.
   
  சரி நல்ல திரைப்படங்கள் தொலைக்காட்சியில் பார்க்க முடியாது போய்விடுமே, என்று மனதில் வருத்தம் மேலிடுவதற்கு முன், அதை
  தியேட்டரில் சென்று பார்த்தால் போகிறது என்று மனதிற்கு சமாதனம் சொல்லி விடலாம்
   
  தியேட்டருக்கு செல்ல முடியவில்லையெனில், என்ற அடுத்த கேள்வி எழுந்தால், 'ஹிஹி, ஒரு வருடம் தானே, பின் தொலைக்காட்சி வீட்டிற்கு வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாமே' என்று சால்ஜாப்பு சொல்லி மீண்டும் மனதை ஏமாற்றி விடுவேன்.


  பரி

  ரேடியோ:

  "காலையில் எழுந்தேன், 'ஆய்' போனேன், பல் தேய்த்தேன், அடித்துப் பிடித்து வெளியில் ஓடி 1970-ஆம் ஆண்டு பிக்கப் ட்ரக்கை ஓட்டிக் கொண்டு கேர்ள்·பிரண்டைப் பார்க்கப் போனேன், அதற்குள் அவள் வேறொருவனுடன் ஓடிவிட்டாள். நான் பெரிய தப்புப் பண்ணிவிட்டேன், 'ஆய்' போன நேரத்தை மிச்சம் பிடித்திருக்க வேண்டும். 'கண்ணே திரும்ப வந்துவிடு, இனி நான் ஆய் போகமாட்டேன்'" போன்ற அற்புத வரிகள் கொண்ட
  அமெரிக்க நாட்டுப்புற பாடல்களைக் கேட்க ரேடியோ வேண்டும்.

  தொலைபேசி

  டிஎஸ்எல் (DSL) இணைப்பிற்காக மட்டுமே இருக்கும் வீட்டு தொலைபேசியை ஏற்கனவே மானசீகமாக விவாகரத்து செய்தாகிவிட்டது. ஆனாலும், ஒன்பது மணிக்கு முன்பு செல்பேசிக்கு அழைக்கும் 'செல்பேசி நாகரிகம்' தெரியாதவர்களை, உடனே, 'வீட்டு நம்பருக்கு பண்றியா/பண்றீங்களா?' என்று அவசர அவசரமாக சொல்லிவிட்டு, செல்பேசி நிமிடங்களை மிச்சம் பிடிக்க வீட்டுத் தொலைபேசி தேவை.

  செல்பேசி

  "இதோ இன்னும் 10 மைல்தான், வந்துவிடுவேன்"
  "இன்னும் 3 மைல்தான் இருக்கு, 5 நிமிஷத்துல அங்கெ இருப்பேன்"

  செல்பேசி கம்பெனி வழங்கும் 'அட்சய பாத்திர' வார இறுதி நிமிடங்கள், ராக்கெட் ஏவும் துல்லியத்தோடு வார இறுதிகளில் வரவை அறிவிக்கவும், நண்பர் வீட்டு வாசலில் போய் நின்றுகொண்டு, கதவைத் தட்டினால் கதவுக்கு வலிக்குமே என்றும், அழைப்பு மணியை அடித்தால் நண்பர், 'செல்பேசிதான் சிணுங்குகிறது என்று அதைத்தானே தேடி ஓடுவார்', என்றும் நினைத்துக் கொண்டு -இன்னொரு முறை- செல்பேசியைத் தட்டி "ஹலோ, எவ்வளவு நேரமா வெளியில நிக்கிறது? வந்து கதவத் திறங்க" என்று அதட்ட செல்பேசி அவசியம் வேண்டும்.

  தொலைக்காட்சி

  சாதாரண version

  எந்தச் சானலைத் திருப்பினாலும் நிரந்தரமாக இருக்கும் புஷ் vs கெர்ரி போட்டியின் கருத்துக் கணிப்பு வரைபடத்தை (Poll graphics), குறுக்கு, நெடுக்கு கோடுகளாக, பீட்ஸாவை ஒழுங்கில்லாமல் வெட்டியது மாதிரி, ஈசிஜி மானிட்டரில் தெரியும் நெளி நெளி கோடுகள் மாதிரி என்று பல வடிவங்களில், பல வண்ணங்களில் பார்ப்பது, 10 வினாடிகளுக்குள் முடிந்துவிடும் 100மீட்டர் ஓட்டப்பந்தயத்தைப் பார்ப்பதை விட சுவராசியமானது. அதனால் தொலைக்காட்சி வேண்டும்.

  கொஞ்சம் ரசமான, ஆனால், (என் அளவுகோலின்படி) ஆபாசமில்லாத version

  ஒலிம்பிக்ஸ் 100மீட்டர் ஓட்டப்பந்தயம் பார்க்க கிளர்ச்சியாக(exciting) இருந்தாலும், முதுமையில் உச்சத்தை (orgasm) அடைவது போல (பத்து வினாடிகளுக்குள்) சீக்கிரம் முடிந்துவிடும். முதல் கட்டத் தேர்தலில்(Primaries) ஆரம்பித்து, அடுத்த அதிபர் யாரென்று முடிவு தெரியும் வரை, -கிட்டத்தட்ட ஒரு வருடம் நடக்கும்- அமெரிக்கத் தேர்தல், இளமையில், தொட்டு, தழுவி, சரசமாடி, உச்சத்தை அடைவது போல சுவராசியமானது(இது வெறும் கல்வி ஞானம் என்பதை அறிக! மேலும், 'கல்வி'யில் நடு எழுத்து மேல் புள்ளி உண்டு! - 'ல்'). யார் மேலே, யார் கீழே என்று எந்தச் சானலைத் திருப்பினாலும் படம் போட்டுக்(Poll graphics) காட்டும் தொலைக்காட்சி, இந்தத் தேர்தல் வருஷத்தில் (election year) அவசியம் வேண்டும்

  கணினி

  'இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்' என்பதற்கு இலக்கணமாய் முணுக், முணுக்கென்று தொட்டதுக்கெல்லாம் உணர்ச்சி சப்பட்டு சண்டை போடும், குழுக்கள், வலைப்பதிவுகள், வலைசஞ்சிகைகள், வலைமன்றங்கள், நடுவிலே சம்பந்தமில்லாமல் ஆஜராகி, மொத்துப்படும் 'கருத்து கந்தசாமி'களிடமிருந்து தப்பிக்க வேண்டும்.

  1. காக்கா கருப்பு
  பால் வெளுப்பு
  நான் ஒரு துடுப்பு

  2. கரியிருட்டின் கடைகோடியில்
  பல்லியின் விழி தெறித்த
  வெளிச்சப் பொட்டில்
  துள்ளி விழநினைத்து
  தொலைத்தேன் என் சுய(தம்பட்ட)த்தை

  முன்னது போன்ற 'கருப்பு & வெள்ளை'(black & white) கவிதைகளையும், பின்னது போன்ற உட்கருத்தும், ஊறுகாயும் வைத்த விதைகளையும் படிக்காமல் தப்பிக்க வேண்டும்.

  கணினியைக் கொடுத்து, கூடவே இணைய இணைப்பை -நான் கேட்காமலேயே- கொடுத்துவிட்டு, 'நாளைக்குள் இதை முடிக்கவேண்டும்' என்று வேலையையும் (இதையும் நான் கேட்காமலேயே) கொடுக்கும் மேலாளரின் 'அட்டூழிய'த்திலிருந்து தப்பிக்க வேண்டும்.

  ஆமாம், நான் கொஞ்சம் நிம்மதியாக இருக்க வேண்டும். அதனால், கணினியை விட்டுவிடுவேன்.

  (கிசுகிசுப்பான குரலில் படிக்கவும்)
  என் ஒரு வருட சம்பளத்தை தமிழோவியம் என் வங்கிக் கணக்குக்கு அனுப்பியதை வெளியில் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்! அது ரகசியம்.


  சத்யராஜ்குமார்

  Sathyaraj Kumarதொலைக்காட்சிதான். ஆல் விகுதியெல்லாம் எதற்கு? ஏற்கெனவே வெற்றிகரமாக விட்டிருக்கிறேன். மெகா தொடர் இரைச்சலால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி கோவையில் மனைவியோடு தனிக்குடித்தனம் கிளம்பினேன். டிவி இல்லாத வீடாக அதை வைத்திருக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி அப்படியே இரண்டு வருடங்களுக்கு மேல் இருந்தேன். என் தங்கை உட்பட உறவினர்கள் எல்லோரும், " ஏன் இப்படி ஒய்ஃபை சித்தி கூட பார்க்க விடாம கொடுமைப்படுத்தறிங்க. " என்று திட்டினார்கள்.

  தனபால் என்றொரு நண்பர் இருக்கிறார். அவர் மட்டுமே என்னைப் பாராட்டினார். " உங்க வீட்டுக்கு வர்றதுக்கு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குங்க. ஏன்னா இங்கே டிவி இல்லை. ஒரு கோயில் மாதிரி வீடு சாந்தமா, அமைதியா இருக்கு. "

  அந்த அமைதிக்காகவே அவர் அடிக்கடி வருவார். அவர் ஒரு லட்சிய இளைஞர் என்பதையும், சமீபத்தில் அப்துல் கலாமை சந்தித்து சின்ன டாக்குமென்ட்டரி எடுத்து சிடி வெளியிட்டிருக்கிறார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டியது அவசியம்.

  அதற்கப்புறம் சென்னைக்குக் குடி பெயர்ந்த பின், என் பையனுக்கு மூன்று வயதாகி விட்டது. வெறும் கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு அவனை ஏமாற்ற முடியவில்லை. அவன் கார்ட்டூன் பார்ப்பதற்காக பக்கத்து வீட்டுக்குப் போக ஆரம்பித்ததும், முதல் முறையாக என் மனைவியிடமிருந்தே ஒரு புரட்சிக் குரல் கிளம்பியது. " பையன் டிவிக்காக பக்கத்து வீட்டில் போய் உக்காந்து கிடக்கிறதெல்லாம் அசிங்கம்ங்க. "

  டிவியும் வேண்டும். ஆனால் அது நம்மை பிய்த்துப் பிறாண்டா வண்ணம் கன்ட்ரோலும் வேண்டும். (ரிமோட் கன்ட்ரோலைச் சொல்லவில்லை). யோசித்துப் பார்த்து விட்டு ஒரு டிவி ட்யூனர் கார்டையும், ஹோம் தியேட்டரையும் வாங்கி கம்ப்யூட்டரில் இணைத்து விட்டேன். ஒரு ஓரமாய் சின்ன விண்டோவில் கார்ட்டூன் நெட் வொர்க்கை ஓட விட்டு விட்டு நான் பாட்டுக்கு கம்ப்யூட்டரில் வேலை பார்க்கலாம். ஸ்டார் மூவிஸ், ஏ எக்ஸ் என் சேனலிலேல்லாம் டிஜிட்டல் துல்லியத்தில் படம் பார்த்த அந்த அநுபவம் இருக்கிறதே... ஆங் சொல்ல மறந்து விட்டேனே... சித்ரனும் நானும் உட்கார்ந்து அதில் பார்த்த ஆங்கிலப்படங்கள் நிறைய இருக்கிறது. (சித்ரன், அதைப் பத்தி ப்ளாக் போடணும்ன்னு எப்பவாச்சும் நினைச்சிங்களா? )

  இப்போது இங்கே சர்க்யூட் சிட்டி போகிறபோதெல்லாம் வழவழா தட்டைத் திரை எல்சிடி டிவியைப் பார்த்தால் கை துறுதுறுக்கிறது. ஊர் ஊராய் அதைத் தூக்கிக் கொண்டு அலைய முடியாது என்பதால், என் வலைப்பூவில் எழுதின குப்பை கதை போல தினந்தோறும் குப்பைத் தொட்டியை கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

  o0o

  இந்தக் கேள்விக்கு கொஞ்சம் சுருக்கமான ஒரு பதிலும் உள்ளது. அந்த ஒரு வருடம் வெகேஷன் என்றால் கணிணி வேண்டாம். வருடம் முழுதும் இரவாயிருந்தால் செல்பேசி, தொலைபேசி வேண்டாம். இன்னும் ஒரு பத்து வருஷம் கழித்து என் பையன் பத்தாம் வகுப்புப் பரீட்சை எழுதப் போகிறானென்கிற போது, தொலைக்காட்சி, ரேடியோ வேண்டாம்!! காதலித்துக் கொண்டிருப்பதாயிருந்தால் வாட்ச் வேண்டாம்!!!


  பா நந்தன்

  இப்படி ஒரு விவகாரமான கேள்வியக் கேட்டா என்னன்னு சொல்ல ? நமக்கு பேச்சு வழக்கு தமிழ்ல எழுதத்தான் வருது. கோவிச்சுக்காதீங்க.

  சரி. ஒவ்வொரு பொருளா எடுத்துகிட்டு அதனோட பயன்பாடுகளை(என்னைப் பொருத்தவரையிலான) பொருத்து முடிவெடுப்போம்.

  முதல்ல தொலைக்காட்சி:

  மூணு மாசம் மூக்கப் புடிக்கத் தின்னுட்டு தூங்கி தூங்கி வழிஞ்சுகிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கப்ப எங்கம்மாவோட திட்டுக்கள்ல இருந்து என்னைத் தப்புவிச்சதனால அது மேல எனக்கு தனிப்பட்ட பாசம் உண்டு. அதுல வந்த சீரியல்கள் தொல்லை தாங்க முடியாம நான் கவிதை எழுத ஆரம்பிச்சதுல இருந்து அதுமேல உங்களுடைய ஒட்டுமொத்த கோபமும் அதுமேல உண்டு.  அதுவும் வேலைக்கு சேர்ந்த நாளுல இருந்து அந்நியமாயிடுச்சு. தொலைக்காட்சி வாங்குனா படிக்கற பழக்கமும் கலந்துரையாடல்களும் போயிடும்ங்கிறதாலயும், நான் FTV பாக்கவெ கூடாதுங்கிற நண்பர்களுடைய சதிகள்னாலயும் இப்போதைக்கு அதை வாங்குற ஐடியாவுல இல்லை. அதை ஏற்கெனவே ஒரு வருசம் தள்ளி வெச்சுட்டதுனால அதை ஆட்டத்துல இருந்து  விலக்கி வைக்கிறேன்.

  அடுத்தது கணினி:

  தினமும் அதுலதான் குப்பை கொட்டிகிட்டு இருக்கேன்(இப்பதான் உண்மையை பேசறான்னு யாரோ சொல்லுறாங்கப்பா). வயித்துப் பாட்டுக்கும் வாய்ப்பாட்டுக்கும் வழிபாட்டுக்கும் அதுதாங்கிறதால அத விடவே முடியாது.

  அடுத்து வானொலி:

  நான் உபயோகிக்க மறந்தாலும் "கேட்டுக்க மச்சி ரேடியோ மிர்ச்சி" என்றும் "சென்னையின் நம்பர் ஒன் எ·ப்.எம். சூரியன் எ·ப்.எம்" என்றும் கடைகளிலும் பேருந்துகளிலும் கேட்பதை என் காதுகள் தவ்ர்க்கவியலாது என்பதால் அதுவும் ஆட்டத்திலிருந்து விலக்கப்படுகிறது.

  அடுத்து தொலைபேசி:

  வீட்டுல தொலைபேசி ஏற்கெனவே இல்லை(ஊருல இருக்கு.சென்னையில இல்லை.). இருந்தா பண்ணையா பரதேசியான்னு கேட்டு ராங் கால் வரும். தேவையா இது? அதனால அதையும் ஆட்டத்துல இருந்து தூக்கிறலாம்.

  அடுத்து செல்பேசி:

  உண்மையா சொல்லப் போனா நான் வெச்சிருக்கறது செல்பேசியான்னே குழப்பமா இருக்கு. அலாரம், கால்குலேட்டர், பேஜர், ஒலிப்பதிவாளர்(அதாங்க recorder), கடிகாரம்னு ஏகப்பட்ட விதத்துல உதவறத நீங்க செல்பேசின்னு கூப்பிடுவீங்களா. நான் அப்படித்தான் ஊர ஏமாத்திக்கிட்டு இருக்கேன். 7500 ரூபா மதிப்புள்ள அந்த டப்பாவ கம்பெனி பரிசா கொடுத்துச்சேங்கிற ஒரே காரணத்துக்காக இன்னும் குப்பைத் தொட்டியில போடாம இருக்கேன். அடுத்த மாசத்தோட அதை தள்ளி வைக்கற முடிவுல இருக்கறப்ப இந்த கட்டுரை எழுதச் சொல்லி கேட்டாங்க. எப்படியோ ஊருல எல்லாத்துக்கும் தனிமடல் போடுற வேலை மிச்சம். இனிமே என் எண் எடுக்காதுங்கப்பு. சொல்லீட்டேன். அம்புட்டுத்தேன்.

  என்ன கடிகாரத்தைக் காணாமேன்னு கேக்குறீங்களா? அது கையில இல்லேன்னா நான் எதை வெச்சு முதுகு சொறிஞ்சுக்கறதாம்?

  அதனால இப்போதைக்கு என்னுடைய ஓட்டு செல்பேசிக்கு.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |