பாடல் 45
உலகக் கவிதைகள், கதைகள், காவியங்கள் ஆகியவற்றை அலசுகையில், அவற்றிலெல்லாம், தாயைப் புகழ்ந்து பாடும் மகன்களையோ, மகள்களையோதான் ஏராளமாய்ப் பார்க்கிறோம்.
தந்தையரைக் குறை சொல்லும் பிள்ளைகள் எல்லா நாடுகளிலும் உண்டு, ஆனால், இவர்கள் அனைவருமே, தாய்மையின் பெருமை பாடுகிறவர்களாகதான் இருக்கிறார்கள். பட்டினத்தாரைப்போன்ற 'எல்லாம்' துறந்த சித்தர்கள்கூட, தங்கள் அன்னையைப்பற்றிப் பாடுகையில் நெகிழ்ந்து, உருகிவிடுவதைப் பார்க்கலாம்.
மேற்சொன்ன பொதுவிதிக்கு மாறாக, பெற்ற தாயை இகழ்ந்து பாடும் பாடல்களை, ஒரே ஒரு இடத்தில்தான் பார்க்கமுடியும் - காதல் சார்ந்த அகப் பாடல்கள்.
காதலுக்கு எதிரியாய் நிற்கும் அம்மாக்கள், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகச் செய்திருக்கக்கூடிய தியாகங்கள், பொழிந்திருக்கக்கூடிய அன்பு ஆகியவற்றையும் மறந்து, திட்டும், சாபமும் பெறுகிறார்கள் - குறுந்தொகையில் ஒரு பெண், 'என் அம்மா, இப்போதே, இந்த விநாடியிலேயே செத்துப்போய்விடமாட்டாளா, அவளுக்கு நரகம் கிடைக்காதா !', என்றெல்லாம் ஏங்குகிறாள், சாபமிடுகிறாள்.
இந்த முத்தொள்ளாயிரப் பாடலின் நாயகியும், தனது இப்போதைய (சோக) நிலைக்குக் காரணமாக, தன்னுடைய அம்மாவைச் சுட்டிக்காட்டிக் குறை சொல்கிறாள்.
மழலைப் பருவத்தில், குழந்தை சாப்பிட அடம்பிடிக்கும்போது, சிலர் நிலாவைக் காண்பித்துச் சோறூட்டுவார்கள், மேலும் சிலர், தெருவில் செல்லும் யாரோ ஒரு அப்பாவியைச் சுட்டிக்காட்டி, 'அந்தப் பூச்சாண்டி உன்னைப் பிடிச்சுகிட்டுப் போயிடுவான்.', என்று பயமுறுத்திச் சோறூட்டுவார்கள்.
ஆனால் இந்தத் தாய், தன் மகள் சாப்பிட மறுக்கும்போதெல்லாம், 'நீ ஒழுங்காய்ச் சாப்பிட்டால், நீ பெரியவளானதும், உன்னை அந்தச் சோழ அரசனுக்கே கல்யாணம் செய்துகொடுப்பேன்.', என்று சொல்லி, ஆசை காட்டிச் சோறூட்டினாள்.
விளையாட்டாய்ச் சொன்ன வார்த்தைகள்தான். ஆனாலும், அந்தச் சிறுவயதில் இந்த வித்தியாசமெல்லாம் புரியுமா என்ன ?
'சோழனுக்கும், உனக்கும் திருமணம்.', என்ற வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே வளர்ந்த அந்தக் குழந்தை, பருவ வயதை எட்டியதும், சோழனின்மீது தீராத காதல் கொண்டது. உறையூர் அரசனாகிய அவன் உலா வரும்போதெல்லாம், வீதிக்கு ஓடி, அவனைக் கண்ணாரப் பார்த்து மகிழ்ந்தது.
ஆனால், இப்போது அதே தாய், அவளை அடித்து விரட்டுகிறாள், 'நீ சோழனைப் பார்க்கக்கூடாது.', என்று தடை போடுகிறாள், 'நீ இப்படியெல்லாம் வெட்கம் கெட்டுத் திரிந்தால், நாளைக்கு உன்னை யார் திருமணம் செய்துகொள்வார்கள் ?'
இதைக் கேட்டதும், அந்தப் பெண் பெரும் அதிர்ச்சியுடன் தாயின் முகத்தைப் பார்க்கிறாள், 'ஏம்மா, என்னைச் சோழனுக்குத் திருமணம் செய்துவைப்பதாகச் சொன்னாயே, அந்த வாக்குறுதி என்னாச்சு ?', என்று கேட்காமல் கேட்கிறாள்.
தன்னுடைய இத்தனை வருட ஆசையெல்லாம், பாலைவனத்தில் தெரியும் கானல் நீராகப் போய்விட்டதே என்று அழுது தவிக்கும் அந்தப் பெண்ணின் கவலை, அவளுடைய தாய்க்குப் புரியவே இல்லை.
குதலைப் பருவத்தே கோழிக்கோ மானை வதுவை பெறுகென்றாள் அன்னை - அதுபோய் விளைந்தவா இன்று வியன்கானல் வெண்தேர்த் துலங்குநீர் மாமருட்டி அற்று.
(குதலை - மழலைச் சொல் கோழிக்கோமான் - உறையூரை ஆளும் அரசன் (சோழன்) வதுவை - திருமணம் வியன் - அதிகமான / ஆகாயம்போல் விரிந்த கானல் - பாலைவனம் வெண்தேர் - கானல் நீர் துலங்கு நீர் - ஒளிவிடும் தண்ணீர் மாமருட்டி - பெரிய மருட்சி / மயக்கம்)
பாடல் 46
மார்பில் அசையும் அழகிய மாலையுடன், சோழன் செம்பியன் வீதி உலா வந்தான், அந்தப் பாதையில் நின்றிருந்த பெண்கள் அனைவரும், கண்ணிமைக்காமல் அவனைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்கள்.
இதை கவனித்த அவர்களின் தாய்மார்கள், அவர்களை அதட்டி விரட்டுகிறார்கள், 'அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டு இப்படி நிற்காதே., வீட்டுக்குள் போ.', என்று துரத்துகிறார்கள்.
ஆனால், இதுபோன்ற தடைகளால், அறிவுரைப் பேச்சுகளால், இளமைப் பருவத்தைக் கட்டிவைத்துவிடமுடியுமா என்ன ?
சீக்கிரத்திலேயே, அந்தப் பெண்கள் எல்லோரும், சோழனின்மீது காதல் கொள்கிறார்கள் - ஆனால், இந்த ஒருதலைக் காதலால், அவர்களுடைய மேனியின் இயற்கையான, அழகான மாமை நிறம் மறைந்து, பசலைக்கு உரிய 'பீர்க்கம்பூ'வின் நிறம் படர்கிறது.
இதைக் கண்டு வேதனை கொண்ட ஒரு தாய் புலம்புகிறாள், 'நான் அப்போதே சொன்னேன், என் பேச்சைக் கேட்காமல், இப்போது இப்படி அவதிப்படுகிறாயே.', என்று மகளைப் பார்த்து வேதனையோடு கேட்கிறாள் அவள், 'தண்ணீரின்மேல் எழுந்த நெருப்பு, எந்தப் பயனும் இல்லாமல், உடனே அணைந்துவிடுவதுபோல, நான் சொன்ன அறிவுரையெல்லாம், நீ உடனடியாக மறந்துவிட்டாயா பெண்ணே ?'
அலங்குதார்ச் செம்பியன் ஆடுஎழில்தோள் நோக்கி விலங்கியான் வேண்டா எனினும் நலன்தொலைந்து பீர்மேல் கொளல்உற்ற பேதையர்க்குஎன் வாய்ச்சொல் நீர்மேல் எழுந்த நெருப்பு.
(அலங்கு - அசையும் தார் - மாலை விலங்கி - குறுக்கிட்டு / தடை செய்து வேண்டா - வேண்டாம் பீர் - பீர்க்கம்பூ)
|