Tamiloviam
செப்டெம்பர் 27 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : தேவையற்ற பந்த்
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அக்டோபர் 1-ல் தமிழகம் முழுவதும் முழுஅடைப்பு நடத்துவது என்று ஆளும் தி.மு.க வும் அதன் கூட்டணி கட்சிகளும் முடிவெடுத்துள்ளன. தங்கள் கருத்துக்கு மாற்று கருத்து யாராவது சொன்னாலே மத்திய அரசை மிரட்டிப் பார்க்க தி.மு.க கூட்டணி கையில் எடுக்கும் ஆயுதம் தான் இந்த முழு அடைப்புப் போராட்டம்.

ஆட்சிக்கு வந்த 16 மாதங்களில் ஆளும் கூட்டணி நடத்தப்போகும் இரண்டாவது பந்த் இது. 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது சம்மந்தமாக ஏற்கனவே மாநிலம் தழுவிய பந்தை நடத்திய தி.மு.க தனது கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி இரண்டாவது முறை பந்த் நடத்த தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே 27 சதவீத இடஒதுக்கீடுத் திட்டத்தில் உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லத் தெரியாமல் இன்று வரை மத்திய அரசு தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சேது சமுத்திர திட்டத்தில் சகவாச தோஷத்தால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ராமர் பற்றி வார்த்தைகளை அள்ளித் தெளித்துவிட்டு கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. மேலும் இத்திட்டத்தை நிறைவேற்ற மாற்றுப் பாதைகளைப் பற்றி நாங்கள் ஆலோசனை செய்கிறோம் - அதற்கு மூன்று மாதம் அவகாசம் கொடுங்கள் என்று உச்சநீதி மன்றத்திடம் வாய்தா வேறு வாங்கியுள்ளது மத்திய அரசு.

தாங்கள் ஆதரித்தத் திட்டம் என்பதாலேயே இந்த இரண்டு திட்டங்களையும் உடனடியாக நிறைவேற்றத் துடிக்கிறார் தமிழக முதல்வர். சேது சமுத்திர திட்டத்தை உண்மையில் எந்தக் கட்சியுமே எதிர்க்கவில்லை. மாற்றுப் பாதைகளைப் பற்றித்தான் யோசிக்கச் சொல்கிறார்கள். அதைப் பற்றி யோசிக்கிறோம் என்று சொல்லிதான் மத்திய அரசு 3 மாதம் தவணை வாங்கியுள்ளது. மேலும் இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

அப்படியிருக்க தமிழக அரசு இதை வலியுறுத்தி பந்த் நடத்துவது கோர்ட்டை நிலைகுலையச் செய்யும் செய்கையாகும். மேலும் முழு அடைப்பு போராட்டம் சட்டவிரோதமானது என்று கேரள உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளன. இந்த நிலையில் ஆளும் கட்சியே முன்னின்று முழுஅடைப்பை நடத்துவது கண்டிக்கத்தக்கது. அக்டோபர் 1-ம் தேதி திங்கள்கிழமை முழுஅடைப்பு என்றால் ஞாயிற்றுக்கிழமை ஏற்கெனவே வங்கி உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை. இதுதவிர செவ்வாய்க்கிழமை அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த நாள் விடுமுறை. எனவே சேர்ந்தாற்போல் 3 நாள் விடுமுறை இருந்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடு முடக்கப்படும். கோடிக்கணக்கான ரூபாய் வருமான இழப்பு ஏற்படும்.

மத்திய அரசுக்கு இவ்விஷயத்தில் தங்களது எதிர்ப்பை உண்மையாகவே காட்ட மாநில அரசு விரும்பினால் மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களாக இருக்கும் தங்கள் எம்.பி.க்களை ராஜினாமா செய்யச் சொல்லலாமே? ஆனால் அப்படி சொல்ல கருணாநிதி உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் என்ன முட்டாள்களா? மேலும் இவர்களது அச்சுறுத்தலுக்கு பணிந்து மத்திய அரசு நிச்சயம் உடனடியாக சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முன்வரப்போவதில்லை. கருணாநிதி ஒருவருக்காக வடமாநில ஓட்டுக்கள் முழுவதையும் இழக்க காங்கிரஸ் தலைவர்கள் என்ன முட்டாள்களா? இதை நன்றாக உணர்ந்துதான் இருக்கிறார் தி.மு.க தலைவர். ஆனாலும் தங்கள் எதிர்ப்பைக் காட்ட - ராமர் விவகாரத்தில் மத்திய அரசு தனக்கு ஆதரவாக அறிக்கை விடாததை மனதில் வைத்துக்கொண்டு இந்த பந்த் நாடகத்தை நடத்த முயல்கிறார். மொத்தத்தில் பந்த்தால் பாதிக்கப்படப்போவது அப்பாவி பொதுஜனம் மட்டும் தான்.

ஏற்கனவே தி.மு.க கூட்டணியின் திறமையற்ற ஆட்சியால் மனம் வெதும்பியுள்ள மக்கள் இத்தகைய தேவையற்ற பந்த்களினால் மேலும் அதிருப்தி அடைவார்களே தவிர்த்து தி.மு.க தலைவரை வாழ்த்தப்போவதில்லை. ஏற்கனவே நடத்திய பந்திற்கே மாதங்கள் பலவாகியும் ஒருபலனையும் நாம் காணவில்லை. இந்நிலையில் இன்னொரு பந்த்தா? இன்னும் 5 நாட்கள் உள்ளன - மனம் மாறி இந்த பந்த்தை நிறுத்த. மாறுவார்களா ?

|
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |