செப்டெம்பர் 28 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறப்பு ஆசிரியர் : களிமண் வீரர்கள்
- ராசுகுட்டி [raasukutti@gmail.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

பழங்கால சீனாவில் ஒரு வழக்கம் இருந்து வந்தது என்னவெனில், அரசன் இறக்கும்பொழுது அவன் மெய்க்காவலர்கள் மற்றும் படையிலேயே மிகச்சிறந்த 100-300 வீரர்களை உயிரோடு அடக்கம் செய்து விடுவர். மன்னனின் மறுமையிலும் இவர்களே காத்து நிற்க வேண்டும் என்ற உயரிய (?!) நோக்கோடு காலங்காலமாய் நடந்து வந்த வழக்கம் இது.

அந்த காலகட்டத்தில் யின் ஷி ஹுவாங் (Qinshihuang) என்றொரு அரசன் சீனப்பிரதேசத்தை ஆட்சி புரிந்து வந்தான். மிகச் சிறு வயதிலேயே அரியணை ஏறிய அரசன் அவன். ஆம் 13 வயதில் அரியணை ஏறிய அரசன், ஆட்சி புரிய ஆரம்பித்தது மிக குறுகிய ஒரு நிலப்பரப்பைத்தான். பின் தன் வீர தீர பராக்கிரமங்களால் சுற்றி இருந்த ஆறு பேரரசுகளை ஒன்றன் பின் ஒன்றாக வீழ்த்தி தற்போதைய சீன நிலப்பரப்புக்கு சமமான நாட்டை நிறுவினான். அரியணை ஏறிய அந்த மிகச்சிறிய வயதிலிருந்தே மரணத்திற்கு பிந்தைய வாழ்வைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்த அரசனும் இவன் ஒருவனாகத்தான் இருப்பான். அவனுக்கு எதிரிகள் அதிகமாகையால் தன் மறுவாழ்விலும் அதற்கேற்ப ஆபத்துகள் வருமென்று அஞ்சி மிகப் பிரும்மாண்டமாய் தன் பாதாள லோகத்தை நிர்மானிக்க ஆரம்பித்தான்.

நிலத்திற்கடியில் மாபெரும் அரண்மனையொன்றை நிர்மானித்த அரசன் தன் பாதுகாப்பிற்காக தன் படையிலேயே சிறந்த வீரர்கள் எட்டாயிரம் பேரை தேர்ந்தெடுத்தான். தன் காலத்திற்குப் பின் அவ்வளவு பேரும் உயிருடன் அடக்கம் செய்யப் பட வேண்டுமென்று ஆணையும் பிறப்பித்து வைத்தான். ஆனால் முதன்மை அமைச்சரின் மகள், அரசரின் மெய்க்காப்பாளனை உயிருக்குயிராய் காதலித்து வந்தாள். ஒரு போரின்போது கடுமையாய் காயமடைந்தான் மன்னன், எப்போது வேண்டுமானாலும் இறந்துவிடுவான் என்னும் நிலை. இந்நிலையில் எப்படியாகிலும் மெய்க்காப்பாளனைக் காப்பாற்ற வேண்டும் என்று யோசித்தவள் ஒரு யுக்தி செய்தாள்.

அரசனிடம் சென்று தனக்கு மந்திரவித்தை தெரியுமென்றும், அதன் மூலம் அவனுடைய உடல் நிலை சீரடைவதற்கும், மன்னன் மறுமையில் நீங்கா வெற்றி பெறுவதற்கும் தன்னால் உதவ முடியுமென்றாள். மருத்துவத்தில் கெட்டிக்காரியான அவள் அரசனுக்கு வைத்தியம் செய்ய மன்னனுக்கு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம். அடுத்தகட்டமாக ஒரு களிமண் பொம்மை செய்து, அரசனின் படுக்கை அருகே நிறுத்தினாள். அந்த களிமண் உரு அவளின் ஆசி பெற்றதென்றும் வீரர்களைவிட அது சிறப்பாக மன்னனை காக்குமென்றும் நம்பிக்கை தெரிவித்தாள்.  உண்மையில், களிமண் உடை தரித்து யாரும் சந்தேகிக்கா வண்ணம் அரசனை கண்ணின் மணிபோல் காத்து வந்தது அமைச்சர் மகளின் காதலனான மெய்க்காப்பாளனே.

Clay Warriorsதன்பால் நம்பிக்கை வர வர அரசனிடம், எட்டாயிரம் வீரர்களையும் களிமண்ணில் பிரதியெடுக்க வைத்தாள், பின் அந்த ஆளுயர களிமண் பொம்மைகளை சீனபாணியில் சுட்டு அரண்மனை சுற்றி அணிவகுப்பில் நிறுத்தி, அவர்கள் கையில் ஆயுதங்களையும் கொடுக்க வைத்து,   இவைகளே மன்னனை மறுபிறவியில் சிறப்பாக காக்கும் தன் மந்திர ஆசியுடன், என்று நம்ப வைத்து அதற்கான பணிகளை முடுக்கி விட்டாள். இவையாவும் நல்லமுறையில் நடந்து முடியும் தருவாயில்...

அனைத்தும் அறிந்த அமைச்சனுக்கோ மகளின் காதலில் உடன்பாடில்லை, எனவே ஒரு நாளிரவு அரசனின் பக்கத்தில் இருந்த களிமண் பொம்மையை யாருமறியாமல் சுக்குநூறாய் உடைத்தெறிந்தான். காவலுக்கு வந்த மெய்க்காவலன் செய்வதறியாது பொம்மை போலவே மன்னன் அருகில் நின்றுவிடுகிறான். பின்னர் மன்னனை நலம் விசாரிப்பதுபோல் வரும் அமைச்சன், இந்த களிமண் பொம்மைகள் போர் மற்றும் அந்நிய சக்திகளிடமிருந்து மட்டுமல்லாமல் தீ, வெள்ளம் போன்ற இயற்கை அழிவுகளில் இருந்தும் காக்குமா என வினா எழுப்புகிறான். பின் அவனே விடையளிப்பது போல் தீ மற்றும் வெள்ளத்திடமிருந்து தன்னைக் காத்துக்கொள்பவை மட்டுமே பிறரையும் காக்க வல்லவை என்று கூற மன்னனுக்கும் சந்தேகப் பேய் பிடித்து விடுகிறது. தன் பக்கத்தில் இருக்கும் களிமண் பொம்மையை கடும்வெப்பத்தில் சுட்டு, பின் வெள்ளத்தில் அமிழ்த்த ஆணையிடுகிறான்.

Clay Warriorsதன் காதலன்தான் களிமண் பொம்மை போல் நிற்கிறான் என்ற உண்மை தெரியாத அமைச்சன் மகள் அந்த ஆணையை முன்னின்று செயல்படுத்த, எட்டாயிரம் வீரர்களை காப்பாற்றவும், அமைச்சன் மகள் மேல் கொண்ட காதலாலும், மேலும் தங்கள் திட்டம் வெற்றி பெறவும் வேண்டி மெய்க்காப்பாளனும் சத்தமின்றி தீயில் பொசுங்கிப் போகிறான். இந்த தியாகத்தை நேரில் கண்ணுற்ற அமைச்சனோ குற்ற உணர்ச்சியில் அங்கேயே இறந்து போகிறான். வெள்ளத்தில் அமிழ்த்த களிமண் பொம்மையை வெளிக்கொணரும்போது தான் காதல் பரிசாக கொடுத்த மோதிரத்தையும் மெய்க்காப்பாளனின் வாளையும் பார்த்து உண்மை அறிந்த அமைச்சன் மகள் காலம் தாழ்த்தாமல் அன்றிரவே மருந்தில் விஷம் கலந்து மன்னனை சாகடித்து எட்டாயிரம் வீரர்களை விடுவிக்கிறாள். ஆனாலும் மன்னன் விரும்பியபடி வெகுவிமர்சையாக அவனை அடக்கமும் செய்வித்தாள்.

இன்னமும் இந்த களிமண் வீரர்கள்தான் மன்னனை மட்டுமல்லாது ஷியான் நகரையும் காப்பற்றி வருவதாக நம்பி வருகிறார்கள் சீன மக்கள்.

| |
oooOooo
ராசுகுட்டி அவர்களின் இதர படைப்புகள்.   சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |