செப்டெம்பர் 28 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறப்பு ஆசிரியர் : ஒரு புத்தகம் சில கேள்விகள்
- ராசுகுட்டி [raasukutti@gmail.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

Oneஉன் தாய் தந்தையிடமிருந்து பேச்சு நடைகளைக் கற்றுக் கொள்கிறாய், ஆசிரியர்களிடமிருந்து எதைப் பேசுவது எப்படி நடந்து கொள்வது என்பதைக் கற்றுக் கொள்கிறாய், புத்தகங்களிடமிருந்துதான் உனக்கு சிறகுகளும் இருப்பதை உணர்ந்து கொள்கிறாய் என்று யாரோ சொன்னது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட தினத்தில் நான் "One" என்ற புத்தகத்தை படித்து முடித்திருந்தேன்.

ரிச்சர்ட் பாக் (Richard Bach) எழுதிய இந்த புத்தகத்தை நண்பனொருவன் பரிந்துரைத்தான். படித்து முடித்ததும் நண்பனைவிட, இந்த புத்தகத்தை மிக நெருக்கமாக உணர ஆரம்பித்துவிட்டேன். இந்த புத்தகத்தை சிபாரிசு செய்ததாலேயே அவன் இன்னும் நெருங்கிப் போனது தனி நிகழ்வு.

கதை சொல்லும் பாங்கு, நிகழ்வுகளின் கட்டமைப்பு மற்றும் சொல்ல வரும் விஷயத்தின் நேர்த்தி இவையனைத்துமே தனித் தனியாக சிலாகிக்க வேண்டிய விஷயங்கள், ஆனால் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் இந்தப் புத்தகத்தின் அடிநாதமாக விளங்கும் சில கருத்துக்கள் மற்றும் கேள்விகள்தான்.

ஒவ்வொரு யோசனையும், ஒவ்வொரு தீர்மானமும் நம்மைப் போன்ற ஒரு பிரதியை உண்டாக்கி விடுகிறது, இந்த பிரபஞ்சத்தில்.

சிந்திக்கவே எவ்வளவு சுவாரசியமான விஷயம் இது, ஒரு கல்லூரியை உதாரணமாக எடுத்துக் கொண்டீர்களானால், படிப்பு முடிந்ததும் ஒவ்வொருவரும் ஒரு முடிவு எடுப்பார்கள் அதன் படி அவர்கள் வாழ்க்கைப் பாதையே மாறும். இவர்கள் அனைவரும் உங்கள் பிரதிகள் என்று வைத்துக் கொண்டீர்களானால் உங்கள் வாழ்வும் ஒவ்வொரு முடிவுகளால் எப்படியெல்லாம் மாறியிருக்கும் என்று ஊகிக்க உதவும். இதையே நம் வாழ்வில் முன் சென்று பார்ப்பதற்கும் உபயோகித்துக் கொள்ளலாம்.

ஏனென்றால் இன்று நேரும் மிகச்சிறிய மாற்றம், நம்மை மிக வித்தியாசமான நாளையில் கொண்டுசேர்த்து விடுகிறது. (A tiny change today brings us to a dramatically different tomorrow)

இந்த புத்தகத்தில், நமது யோசனை, சிந்தனை, தீர்மானங்களை சேகரிக்க, அல்லது அவற்றின் வழி சென்று பார்க்க வகை செய்யும் சக்தி வாய்ந்த ஒரு தொழில்நுட்பத்தை பற்றி அதிக குழப்பமின்றி பேசுவார் பாக், கால இயந்திரத்தை இன்று நடைமுறையில் இருக்கும் மிகச் சாதாரணமான போக்குவரத்து சாதனம் போலவே பாவித்துக் கொள்கிறார். இதுவே நம்மை அதிக எதிர்க்கேள்விகளின்றி கதையின் போக்கில் செல்ல துணை புரிகிறது. ஆசிரியர் நம்மைப் பார்த்துக் கேட்கும் ஆதாரக் கேள்வியை புரிந்துகொண்டு, நம்மை நாமே அதைக் கேட்டுக் கொள்ள வைக்கும் பணியில் வெற்றியும் பெற்று விடுகிறது ஆசிரியரின் இந்த படைப்பான "One".

நீங்களே படித்துணர வேண்டிய விஷயங்கள்தான் இந்தப் புத்தகமெங்கும் நிறைந்து இருப்பதால், இந்த புத்தகத்தைப் பற்றி நான் வேறு எதுவும் கூறப் போவதில்லை. இந்த புத்தகம் எழுப்பிய மிக சுவாரசியமான கேள்விகள் சிலவற்றை மட்டும் கேட்டு வைக்கிறேன்.

இப்போது இருக்கும் நீங்கள் உங்களை உங்கள் சிறு வயதிலே சந்தித்தால் என்ன கூறுவீர்கள்? உங்களின் எந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வீர்கள்?

எ.கா : பத்தாவதில் மார்க் கம்மி என்று இப்படி அழுது கொண்டிருக்கிறாயே... இந்த மார்க் உனக்கு உபயோகமாகப் போவதேயில்லை ஏனென்றால் நீதான் பனிரெண்டாவதில் ஸ்டேட் பர்ஸ்ட். அழாமல் அடுத்த வேலையைக் கவனி. (அல்லது) சிறுசிறு சண்டைகளால் அவனுடன் பேசாமல் இருக்கிறாயே, கல்லூரி முடியும் இந்த தறுவாயிலாவது அவனோடு பேசிவிடு, இந்த வாய்ப்பை விட்டால் அவனை நீ சந்திக்கவே போவதில்லை. குறைந்த பட்சம் உன் 40 வயது வரை

அப்புறம், மேலும் ஒரு சூழல். இப்போதுள்ள உங்களை, உங்களின் 60 வயது பிரதி சந்தித்தால் என்ன கேட்டுக் கொள்வீர்கள்?

எ.கா : சோழிங்கநல்லூர் பக்கத்தில் வாங்கிய மனை விலையேறியதா?
(அல்லது)
ஓயாமல் குடியும் கும்மாளமாக இருக்கிறேனே, நான் 60 வயது வரை உயிரோடு இருந்தேனா என்ன?

அதற்கு அவர்கள் பதில் என்னவாக இருந்திருக்கும்? அவர்கள் பதிலால் உங்கள் வாழ்க்கைப் பாதை மாறியிருக்குமா?

யோசியுங்கள், ஏனென்றால் நம் வாழ்வின் கடைசிக் கேள்வி இப்படியிருக்கலாம்.

இப்போது உள்ள நானாக மாறுவதற்கு விலையாக என் வாழ்க்கையையே தந்திருக்கிறேன். நான் தகுந்த விலையைத்தான் கொடுத்திருக்கிறேனா ? (I gave my life to become the person I am right now. Was it worth it?

| |
oooOooo
ராசுகுட்டி அவர்களின் இதர படைப்புகள்.   சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |