செப்டெம்பர் 28 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நியுஜெர்சி ரவுண்டப் : நியூ ஜெர்சி திரைப்படவிழா
- பாஸ்டன் பாலாஜி
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

விடிந்தும் விடியாத அதிகாலை ஐந்து மணிக்கு பாஸ்டனில் இருந்து நியு ஜெர்ஸி நோக்கி பயணம் ஆரம்பித்தது. சாதனையாளர்களின் வரலாறுகளின் திரைப்படப்பதிவுகள் பார்ப்பதற்கான ஆர்வம் இருந்த அளவு சூரியன் உதயமாகும் கருக்கல் காலத்தை ரசிப்பதற்கும் ஒதுக்கலாம்.

பல காலமாக பாஸ்டனில் இருந்தாலும் முதல் முறையாக 'பிரக்ஞை' ரவி சங்கரை சந்தித்தது இந்த விழாவின் ஹைலைட். போக ஐந்து மணி நேரம், திரும்பி வர ஐந்து மணி நேரம். அனேகமாக இந்த மாதிரி பயணங்களில் 'அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு' என்று குத்துப் பாடல்களையும், 'அந்தாக்சரி' போன்ற சின்னபுள்ள விளையாட்டுகளையும், 'போலீஸ் மாமா தெரிகிறானா' என்னும் கண்ணாமூச்சியும் நடத்துவது எம் வழக்கம்.

'பிரக்ஞை' ரவி ஷங்கர் இந்த பழக்கத்தை மாற்றினார். கொஞ்சம் நினைவலை, நிறைய ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியச் சூழல், கருத்தியல் மோதல்களின் நியாயங்கள் என்று அலுக்காமல் பரவலாக பேசினார். சிந்தனையை முடுக்கி, கற்பித்துக் கொண்ட நியாயங்களை அசைத்து, தேங்கிப் போன மூளையை தூசி தட்டி, அறிவைத் தூண்டிய தர்க்கமுறை தெளிவுகள்.

மார்க்சிஸம், சமூகவியல், மானுடவியல், இயங்கியல், இயக்க மறுப்பு வாதத்தின் பிழையான சொல்லாக்கம், என்று இஸங்களும் உண்டு. சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா என்று நாடுகளும் களத்தில் இடம்பெற்றது. இஸ்லாமிய கள ஆய்வு, 'பிரக்ஞை' பத்திரிகைக்கான நேர்காணல்கள், சம்பத் கதைகள், ஆ. இரா. வெங்கடாசலபதி கட்டுரைகள், எஸ்.வி.ராஜதுரை என்று நேம் ட்ராப்பிங் கலந்த சர்ச்சைகள் அலசப்பட்டது. உளவியலுக்கும் மார்க்சுக்கும் உள்ள முரண், கம்யூனிசத்திற்கும் காபிடலிஸத்திற்கும் உள்ள பல ஒற்றுமைகள் என்று பரந்த தளங்களின் கருத்துக்களின் கோர்வைகளும் முன்வைக்கப்பட்டன.

பொம்மைக் கடைக்குள் நுழையும் என்னுடைய குழந்தைக்கு தந்தையின் பட்ஜெட் எவ்வளவு என்று அறிந்து வைத்திருக்கும். இருந்தாலும், தூண்டிலாக வைக்கப்பட்டிருக்கும் எல்லா பொம்மைகளையும் ஆற அமர ரசித்து விளையாடுவாள். கடைசியாக, அலுத்து மிதமிஞ்சிய திருப்தி கிடைத்தவுடன், ஒரேயொரு விளையாட்டுப் பெட்டியை மட்டும் வாங்கச் சொல்லுவாள். அதே போல், மொத்தமாக பல்சுவை ஆக்கங்களையும், தன்னுடைய ஐம்பதாண்டுக்கும் அதிகமான ஆய்வறிவை இலகுவாக வழங்கினாலும், எங்களின் பொக்கீடறிந்து, சிந்திக்கவேண்டிய takeaways-ஐ எங்களுக்குள் விட்ட, மிக மிக சுவாரசியமான பத்து மணி நேரம்.

இனி ஆவணப்படங்கள் குறித்த சிறு எண்ணவோட்டங்கள்:

1. சர் சி வி ராமன் (இயக்கம் : அம்ஷன் குமார்)

நான் சென்றபோது ஆரம்பித்திருந்தது. தன்னம்பிக்கை சிவி ராமனின் முகத்தில் மிளிர்கிறது. வெளிநாடுகளில் தங்கி பத்தோடு பதினொன்றாக ஆகாமல், தாயகம் திரும்பி பளிச்சிட்டதை சிறப்பாக வெளிக் கொணர்ந்திருந்தார். தனியாக ஆராய்ச்சி மையம் துவக்கியது, பலரையும் ஊக்கமூட்டும் விதமாக படமாக்கப்பட்டிருந்தது.

படத்தில் கவர்ந்த காட்சி: இரவு உணவு உண்ட பின் அனைவரும் இளைப்பாறும் தருணத்தில் இராமனின் நண்பர், அவரின் தலைப்பாகையை அவிழ்த்துவிட்டு ரிலாக்ஸ் செய்யச் சொல்கிறார். 'அதில் என்னுடைய ஈகோ இருக்கிறது. அவிழ்த்தால் தலைக்கனம் வெளியே வந்துவிடும்' என்று நகைச்சுவையும் சமயோசியதமாகவும் ராமன் பதிலளிக்கிறார்.


2. எம் எஸ் சுவாமிநாதன் (இயக்கம் : அம்ஷன் குமார்)

'இன்னும் இருபதாண்டுகளில் பசி, பட்டினியால் இந்தியாவே காலி' என்று உலகம் உச்சரித்ததை மாற்றிக் காட்டியவர். பசுமைப் புரட்சியில் முக்கிய தூணாக இருந்தவரின் வாழ்க்கையை அறிய முடிகிறது.


3. அப்துல் கலாம் (இயக்கம் : பி தனபால்)

தாத்தா தன்னுடைய பேரனுக்கு கலாமின் கதையை சொல்வதாக அமைத்திருக்கிறார்கள். ஷோபனாவும் ஆவனப்படத்தில் அம்மாவாக நடித்திருக்கிறார்.  அப்துல் கலாம் தன் சாதனைகளாகச் சொல்வதை  படம் பிடித்திருந்தார்கள். சிறுவர்களைப் பெரிதும் கவர்ந்த படம் என்பதாலோ என்னவோ, விழாவிற்கு வந்திருந்த பெரியவர்களைக் கவருமாறு காட்சியோட்டம் அமையவில்லை.

மதிய உணவு மெனு மனதை மயக்கியது. அவியல், உருளைக் கறி, மாங்காய் ஊறுகாய், ஜிலேபி, பிஸிபேளா பாத், பகாளா பாத் என்று வயிறார உண்டோம். உண்ட மயக்கம் கூடாது என்பதற்காக ஃபில்டர் காபியுடன் எழுத்தாளர்களின் வாழ்க்கை சித்திரங்களை பார்க்க ஆரம்பித்தோம்.


4. இந்திரா பார்த்தசாரதி (இயக்கம் : ரவி சுப்பிரமணியன்)

இ.பா. வாழ்ந்த இடங்களுக்கு சென்று படம் பிடித்திருந்தார்கள். புதுச்சேரியில் காலங்கழித்த பகுதிகள், நாடக அரங்கில் இ.பா. ஆகிய இரண்டும் பெரும்பாலான பங்கு வகித்தது. வெளி ரங்கராஜன், நா முத்துசாமி, பிரபஞ்சன், வெங்கட் சாமிநாதன், ஞானி, என்று பிரபலங்களும் இ.பா.வின் சிஷ்யர்களும் தங்கள் கருத்துக்களை சுருக்கமாக வெளிப்படுத்தி, இ.பா. குறித்த சித்திரத்தை முழுமை செய்தனர்.


5. அசோகமித்திரன் (இயக்கம் : அம்ஷன் குமார்)

'Finding Neverland' திரைப்படத்தில் பீட்டர் பான் பிறந்த கதையை விவரிப்பது போல் ஹைதராபாத் நகரமும் பதினெட்டாவது அட்சரக் கோடும் உருவான கதை, குறும்படத்தை ஆக்கிரமித்திருந்தது. எழுத்தாளர்களுக்கே உரித்தான, துண்டுக் காகிதத்திலும் நெடுங்கதைகளை அடித்தல் திருத்தல்களுடன் எழுதும் பழக்கத்தினை வெளிக்கொணர்ந்தார். சா. கந்தசாமி, வாஸந்தி என்று பொருத்தமானவர்களைத் தேடிப் பிடித்து பேட்டிகளை இணைத்திருந்தார்.

'தான் கண்ட காட்சிகளையும் மனிதர்களையும் எழுதி முடிக்க இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளாவது பிடிக்கும்' என்று அ.மி. சொன்னதை வைத்தது, வெகு சிறப்பான முத்தாய்ப்பு.


6. ஜெயகாந்தன் (இயக்கம் : சா கந்தசாமி)

ஜெயகாந்தனின் திரைப்படங்களில் இருந்து சில காட்சிகள் இடம்பெற்றது. அவரின் புகழ்பெற்ற படைப்புகளில் இருந்து சில பகுதிகள் வாசிக்கப்பட்டது. அவர் உலவிய பிரதேசங்களில் மீள் உலா நடத்தப்பட்டது. பிரமிக்க வைக்கும் மனிதரைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள ஆர்வத்தைத் தூண்டுமாறு அமைக்கப்பட்டிருந்தாலும், படக்கோர்வையிலும் விஷயப்பரப்பிலும் போதாமையை வெளிப்படுத்திய ஆக்கம்.


7. ஊருக்கு நூறு பேர் (இயக்கம் : பி லெனின்)

விருதுப்படங்களுக்குரிய சாமுத்ரிகா லட்சணங்களுடன் கூடிய புனைவுப் படம். திரைப்படத்திற்கு சிறப்பான முன்னோட்டத்தை கே.எம். சுந்தரம் வழங்கினார். படத்தின் பிறகு நடந்த கலந்துரையாடலில் சிந்தனை வட்ட அமைப்பாளர் முருகானந்தம், ஜெயகாந்தனின் குறுநாவலில் இருந்து, திரையாக்கம் மாறுபட்டிருந்த சிற்சில இடங்களை சுட்டினார்.

பத்திரிகையாளராக நடித்த அர்ச்சனாவிற்கு வசனம் இல்லாவிட்டாலும், இயல்பாக சிறப்பாக நடித்திருந்தார்.
மரண தண்டனையா, மன்னிப்பா? என்னும் விவாதத்தை எழுப்புகிற திரைப்படம். தூக்குப் போடுவது சரியா தப்பா, என்பதில் இருந்து ஆங்காங்கே வழுவி, கம்யூனிசம், மார்க்சிசம், ஆளும் வர்க்கம் என்று தத்துவங்களில் போராடியது கவனத்தை சிதறடித்தது.

மாலதி ரங்கராஜனின் விமர்சனம்:  The Hindu : "Oorukku Nooru Paer"

தியோடார் பாஸ்கரனின் விமர்சனம்: The Hindu : A language of visuals

| |
oooOooo
பாஸ்டன் பாலாஜி அவர்களின் இதர படைப்புகள்.   நியுஜெர்சி ரவுண்டப் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |