செப்டம்பர் 29 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
கேள்விக்கென்ன பதில் ?
திரையோவியம்
கவிதை
தொடர்கள்
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
முச்சந்தி : புதிர்கள், பாடல்கள்
- என். சொக்கன் [nchokkan@gmail.com]
| Printable version | URL |
"ஒருவேளை அவர் ஜெயித்துவிட்டால், அந்த உத்தியை அப்படியே ஜெராக்ஸ் எடுக்க ஆயிரம் பேர் வருவார்கள் என்பதுமட்டும் நிச்சயம்."


The Davinci Code bookடான் பிரவுன் எழுதிய 'The Davinci Code' மற்றும் 'Angels and Daemons' ஆகிய நாவல்களைப் படிக்கும்போது, இதுபோன்ற கதைகள் தமிழில் வராதா என்று ஆசை பிறக்கிறது.

இந்தக் கதைகள் இரண்டும் பிரம்மாண்டமான இலக்கியங்கள் என்று அர்த்தமில்லை. ஆனால், சுவையான குறிப்புகளின்மூலம், வாசகர்களையும் கூடச் சேர்த்துக்கொண்டு துப்பறியும் உத்தி, ரொம்பவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

குறிப்பாக, இந்த நூல்களில் இடம்பெற்றுள்ள புதிர்ப் பாடல்கள் வித்தியாசமான வாசிப்புச் சுவையைத் தருகின்றன இவை, டான் பிரவுனின் சொந்தக் கற்பனையா, அல்லது எங்கிருந்தாவது எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறாரா என்பது தெரியவில்லை.

ஆனால், இந்த நாவல்களைப் படித்து ரசித்ததில் ஒரு உபயோகம், தமிழிலும், ஆங்கிலத்திலும் இதுபோன்ற புதிர்ப் பாடல்களை இப்போது தேடி வாசிக்கிறேன். பதில் தெரிந்தால் சந்தோஷம், தெரியாவிட்டால் (தெரிந்துகொள்வதில்) இன்னும் அதிக சந்தோஷம் !
 
உதாரணமாக, காலில் முள் குத்திவிட்டால், என்ன செய்யவேண்டும் என்று யாரோ கேட்டிருக்கிறார்கள். அதற்கு ஒருவர் இப்படி பதில் சொன்னாராம் :

"பத்து ரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் கால் வாங்கித் தேய்"

இதற்கு விளக்கம் கண்டுபிடிக்கவேண்டுமானால், ராமாயணம் தெரிந்திருக்கவேண்டும். 'பத்து' என்பது 'தசம்', 'பத்து ரதன்' என்றால், 'தச ரதன்'. தசரதனின் புத்திரன், ராமன். ராமனின் மித்திரன், சுக்ரீவன், சுக்ரீவனின் சத்துரு, அவன் அண்ணன் வாலி, வாலியின் பத்தினி பெயர், தாரை.

'தாரை' என்பதில் காலை வாங்கவேண்டும். அதாவது, 'த'வுக்குப்பின் உள்ள துணைக்காலை நீக்கிவிடவேண்டும். இப்போது கிடைப்பது 'தரை'

அதாவது, காலில் முள் குத்தினால், அந்தக் காலைத் தரையில் தேய்க்கவேண்டும். அவ்வளவுதான் விஷயம் !

இப்படி ஏகப்பட்ட புதிர்ப் பாடல்கள் இருக்கின்றன. இவற்றைச் சரியானமுறையில் கதையோடு கோர்த்து, போரடிக்காமல் ஒரு நாவல் பண்ணுவதுதான் சிரமம். மேற்படி நாவல்களில் டான் பிரவுன் அதை அட்டகாசமாகச் செய்திருக்கிறார்.
 
இதுபோன்ற நாவல்களுக்குத் தமிழில் வரவேற்பு இருக்குமா, விற்குமா என்றெல்லாம் யாராலும் நிச்சயமாகச் சொல்லமுடியாது. எவரேனும் தைரியமாக முயன்றுபார்த்தால்தான் உண்டு.

ஒருவேளை அவர் ஜெயித்துவிட்டால், அந்த உத்தியை அப்படியே ஜெராக்ஸ் எடுக்க ஆயிரம் பேர் வருவார்கள் என்பதுமட்டும் நிச்சயம்.


புதிர்ப் பாடல்களைத் தேடிப் போய், மீண்டும் காளமேகத்தில் விழுந்துவிட்டேன்.

ஏற்கெனவே பலமுறை படித்த பாடல்கள்தான். என்றாலும், ஒவ்வொருமுறையும், 'பின்றான்யா' என்று காளமேகத்தைச் செல்லம் கொஞ்சியபடி அவருடைய வெண்பாக்களைத் திரும்பத் திரும்ப வரிவரியாக வாசித்து ரசிப்பது பழக்கமாகிவிட்டது.

எளிய, கடினமான சிலேடைகளில் ஆரம்பித்து, 'குடத்தில் கங்கை அடங்கும்'போன்ற புத்திசாலித்தனமான பாடல்கள்வரை, காளமேகக் கவிஞரிடத்தில் திகட்டத் திகட்ட வாசிப்பதற்கு அற்புதமான விஷயங்கள் இருக்கின்றன. நல்ல உரையோடு படித்தால், எல்லோரும் அவரைச் செல்லம் கொஞ்சத் தொடங்கிவிடுவது நிச்சயம்.

உதாரணமாக, ஒரே ஒரு பாடல்.

காளமேகம் ஒரு அரசரின் சபைக்குச் சென்றிருக்கிறார். அங்கே சிலர் கம்பீரமாகக் கால் மேல் கால் போட்டு அமர்ந்துகொண்டு, இவரை மேலும், கீழுமாக ஆராய்ந்திருக்கிறார்கள்.

'யார் நீ ?', என்று அவர்கள் காளமேகத்தை அதட்ட, அவருக்குக் கோபம் வந்துவிட்டது, 'நீங்கள் யார் ? அதை முதலில் சொல்லுங்கள்' என்று எதிர்க் கேள்வி போட்டிருக்கிறார்.

'நாங்கள் கவிகள்', என்று அவர்கள் கம்பீரமாகச் சொன்னதும், காளமேகத்துக்குச் சிரிப்பு. அப்போது அவர் பாடிய பாடல்தான் இது :

'வாலெங்கே நீண்டெழுத்த வல்லுகிரெங்கே, நாலு
காலெங்கே ஊன்வடிந்த கண்ணெங்கே - சாலப்
புவிராயர் போற்றும் புலவர்காண் நீங்கள்
கவிராயர் என்றிருந்தக் கால்.'

'கவி' என்றால், கவிதை எழுதுபவர் என்று ஒரு அர்த்தம். குரங்கு என்று இன்னொரு அர்த்தம். இந்தச் சிறிய 'இரட்டை அர்த்தத்தை' வைத்துதான், இப்படி ஒரு சுவாரஸ்யமான பாடலைப் பாடியிருக்கிறார் காளமேகம்.

அதாவது, நீங்கள் கவிகள் (குரங்குகள்) என்றால், உங்களுடைய வால் எங்கே ? நீண்டு வளர்ந்த நகம் (உகிர்) எங்கே ? நாலு கால் எங்கே ? கண்களில் பீளை எங்கே ? என்றெல்லாம் பட்டியலிட்டு கேலி செய்கிறது இந்தப் பாடல்.

இதேபோல், சின்ன வயதில் பாரதி செய்த ஒரு குறும்பும் தெரியும்தானே ?

ஈற்றடி (வெண்பாவின் கடைசி அடி - மூன்று வார்த்தைகள்) கொடுத்து வெண்பா எழுதச் சொல்வது ஒரு சுவாரஸ்யமான தமிழ் விளையாட்டு, அதேசமயம் வெண்பா எழுதுவதற்கு நல்ல பயிற்சியும்கூட. ('கவிதை' என்கிற தலைப்பில் வருகிற ஒரு மாத இதழில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதும் போட்டி நடந்து வருகிறது. ஒவ்வொரு ஈற்றடிக்கும் பத்து வெண்பாக்களுக்குக் குறையாமல் தேர்ந்தெடுக்கிறார்கள்.)

அந்நாள்களில், தமிழில் மிகுந்த புலமை வாய்ந்த காந்திமதிநாதப் பிள்ளை என்பவர், அவரைவிட வயதில் சிறியவராகிய பாரதியை மட்டம் தட்ட எண்ணி, 'பாரதி சின்னப் பயல்' என்று ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதச் சொன்னாராம்.

அப்போது, அவருடைய கர்வத்தைப் போக்கும்வகையில், பாரதி எழுதிய வெண்பா இது : (தளை தட்டுகிறதே என்று யோசிக்காதீர்கள், வார்த்தைகளைப் புரியும்படி பிரித்துக் கொடுத்திருக்கிறேன்) :

ஆண்டில் இளையவன் என்று அந்தோ, அகந்தையினால்
ஈண்டு இங்கு இகழ்ந்து என்னை ஏளனம் செய் - மாண்பு அற்ற
காரிருள் போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பார் அதி சின்னப் பயல்.

(வயதில் நான் சிறியவன் என்ற அகந்தையினால் இங்கே என்னை இகழ்ந்து ஏளனம் செய்கிற, மாண்பில்லாத, காரிருள்போல உள்ளம் கொண்ட காந்திமதிநாதனைப் பார், மிகவும் சின்னப் பயல் !)

இப்படி பாரதியை அவமானப்படுத்த நினைத்த காந்திமதிநாதரையே பதிலுக்குக் கிண்டலடிக்கும்படி அந்தப் பாடல் அமைந்துவிட்டது. ஆகவே, அவர் வெட்கப்பட்டுக்கொண்டு கூசி நின்றார்.

அதைப் பார்த்ததும், பாரதிக்கு வருத்தமாகிவிட்டது. என்னதான் இருந்தாலும், அவர் வயதில் பெரியவர் என்பதால், அவருடைய அவமானத்தை மாற்றும்வகையில், அதே பாடலைக் கொஞ்சம் மாற்றி இரண்டாவது வெண்பா எழுதினார் பாரதி.

ஆண்டில் இளையவன் என்று ஐய, அருமையினால்
ஈண்டு இன்று என்னை நீ ஏந்தினையால் - மாண்பு ற்ற
கார் அது போல் உள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி
சின்னப் பயல்

(வயதில் நான் சிறியவன் என்ற அருமையினால் என்னை இன்று ஆதரவாகக் காக்கிறாய், மாண்புள்ள, மழை போல உள்ளம் கொண்ட காந்திமதி நாதரே, உன் முன்னால் இந்தப் பாரதி சின்னப் பயல் !)

பாரதி, அப்போதே சின்னப் புயல்தான் !


இந்த வாரக் கேள்வி :

எம். பி.க்களுக்குத் தொகுதி மேம்பாட்டு நிதி என்கிற பெயரில் நிதியளிப்பது, நேர்மையான, நியாயமான தேர்தல் முறைக்கே விரோதமானது. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் செலவு பண்ணலாம். ஆனால், ஏற்கெனவே உள்ள அந்தத் தொகுதி எம். பி.க்கு ஐந்து ஆண்டுகளில், பத்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதை நேர்மையாக அந்தத் தொகுதியில் செலவு பண்ணியிருந்தால், அந்த எம்.பி.யுடன் 25 லட்ச ரூபாய் செலவு பண்ணி இன்னொருவர் போட்டியிட்டு எப்படி வெற்றி பெறமுடியும் ?

- மூத்த அரசியல்வாதி இரா. செழியன் (நேர்காணல் : மணா - புதிய பார்வை - ஆகஸ்ட் 16 - 31, 2005)இந்த வார வாக்கியம் :

காடு என்பது, ஒவ்வொரு கணமும் புதியதாக மாறியபடியே இருக்கக்கூடிய ஓர் இடம். அதேசமயம், ஒவ்வொரு இடமும், ஏற்கெனவே பார்த்ததுபோலவும் இருக்கும். காடு திசைகள் இல்லாதது. ஏனெனில், மொத்தக் காடுமே, வானம் என்ற ஒரே திசையை நோக்கி எழுந்துகொண்டிருப்பது. பெரும் மரங்கள்முதல், சிறுபுற்கள்வரை கிடைத்த இடைவெளிகளையெல்லாம் நிரப்பியபடி வானம் நோக்கி எம்பிக்கொண்டிருக்கின்றன. அங்கே பக்கவாட்டில் திசை தேடும் மனிதன் அபத்தமான ஓர் அன்னியன்.

- 'காடு' நாவலில் ஜெயமோகன்

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |