செப்டம்பர் 29 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
கேள்விக்கென்ன பதில் ?
திரையோவியம்
கவிதை
தொடர்கள்
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உள்ளங்கையில் உலகம் : செல்பேசியால் உடல் பாதிக்கப்படுமா?
- எழில்
| Printable version | URL |

 
செல்பேசியை அதிகம் பயன்படுத்துவதால் உடலுக்கு ஆபத்து ஏற்படும் என்ற கருத்து தற்போது பரவலாய் வலுப்பெற்றுள்ளது. இது குறித்து இந்த வாரம் அலசுவோம்.

Mobile Radiationஎந்தவொரு மின்னணுவியல் சாதனமும் சந்தைக்கு வருமுன் அங்கீகாரம் பெற்ற பின் தான் சந்தையில் விற்க அனுமதிக்கப்படுகிறது. மின்னணுவியல் சாதனத்தின் மின்காந்த இடையூறுகள் (Electro Magnetic Interferance, EMI) ஒரு குறித்த அளவில் இருக்க வேண்டும் . பிற மின்னணுவியல் சாதனங்களுக்கோ அல்லது சுற்றுச் சூழலுக்கோ குந்தகம் விளைவிக்காத வகையில் இருந்தால் மட்டுமே அக்கருவிகளுக்கு அனுமதி வழங்கப்படும். மின்னணுவியல் கருவிகள் எல்லாமே மின் காந்த இடையூறுகளை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றவை என்றாலும் ஒரு குறித்த எல்லைக்குள் (அளவுக்குள்) இடையூறுகள் இருப்பின் அதனால் அதிகம் பாதிப்பில்லை.

சரி, நாம் செல்பேசிக்கு வருவோம். செல்பேசியிலுள்ள செலுத்தி / பெறுனர், 800 முதல் 2000 மெகா ஹெர்ட்ஸ் அதிர்வெண் பட்டைக்குள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் திறன் (Power) கருவிக்குக் கருவி வேறுபடும். 0.1 வாட் முதல் 0.6 வாட் வரை ஆற்றல் வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்தவை இக்கருவிகள். செல்பேசிகள் எல்லா நேரத்திலும் ஒரே ஆற்றலில் இயங்குபவை அல்ல, தள நிலையத்தின் அருகிலிருக்கும் போது குறைந்த திறனிலும், தள நிலையத்திலிருந்து வெகு தூரம் செல்கையில் சற்று அதிகத் திறனிலும் இயங்குபவை என்பதை முந்தைய பதிவுகளில் நாம் பார்த்திருக்கிறோம். இவ்வாறு தள நிலையத்திற்கும் செல்பேசிக்குமிடையே வானலைகள் பரவும் வேளையில் அதனை எந்நேரமும் உடம்பில் சுமந்து செல்லும் பயனாளருக்குப் பாதிப்பு இருக்குமா ? இது போதாது என்று , தற்போது சந்தையில் புழங்கும் நவீனவகைச் செல்பேசிகளில் பண்பலை வானொலியும் (FM Radio) ப்ளூடூத் கருவியும் இணைக்கப்பட்டுள்ளது. பண்பலை வானொலி 88 முதல் 108 மெகா ஹெர்ட்ஸிலும், ப்ளூடூத் கருவி 2.4 கிகா ஹெர்ட்ஸிலும் இயங்குகின்றன. இவை வெளிப்படுத்தும் ஆற்றலும் நம்மைப் பாதிக்குமா? ப்ளூடூத் கருவிகளின் ஆற்றல் சுமார் நூறு மில்லிவாட்ஸ் என்ற குறைந்த அளவிலேயே அமைவதால் பாதிப்பில்லை, இருப்பினும் உடலுக்கு மிக அருகில் ஒட்டிக்கொண்டிருக்கும் எந்தவொரு மின்னணுவியல் கருவியின் கதிர்வீச்சும் உடலுக்குப் பாதிப்புதானே ? மேலும், தள நிலையத்திலிருந்து செல்பேசிக்கு வரும் அலைகள் தொடர்ச்சியாக அனுப்பப் பெறாமல் ஒரு குறிப்பிட்ட நேரத்துண்டில் தான் அனுப்பப் படுகின்றன என்றும் பார்த்தோம் . அவ்வாறு ஒரு குறித்த நேரத்துண்டில் வரும் அலைகள் ஒரு வெடிப்பு (Burst ) என்று அழைக்கப்படும். இந்த வெடிப்பின் ஆற்றலானது செல்பேசியைக் காதில் வைத்துப் பேசிக்கொண்டிருப்பவரின் உடற்செல்களைப் பாதிக்கும் ஆற்றல் வாய்ந்தவை . இவற்றின் பாதிப்பை எவ்வாறு அளவிடுவது?

உட்கவர்தல் விகித எண் (Specific Absorption Ratio, SAR) - செல்பேசியின் கதிரியக்கம் மனித உடலை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை அளக்க உதவுவது இந்த உட்கவர்தல் விகித எண் . மனித உடலின் திசுக்கள் எந்த அளவுக்கு வானலைகளை உட்கொள்ளும் திறன் கொண்டவை என்பதை இந்த எண் கொண்டு கணக்கிடுகிறார்கள். ஒரு கிலோகிராமுக்கு எவ்வளவு வாட்டுகள் திறன் (Watts per Kilogram) உட்கொள்ளப் படுகிறது என்ற அலகால் இவ்வெண்ணைக் குறிக்கிறார்கள் . செல்பேசியைக் காதோடு ஒட்டி வைத்துக்கொண்டு பேசுகையில் வானலைகளின் கதிர் வீச்சால் உண்டாகும் வெப்பமானது நம் தலைப்பகுதியின் திசுக்களை பாதிக்காவண்ணம் அச்செல்பேசிகளின் அலைவீச்சு அமைய வேண்டும். அனுமதிக்கப்பட்ட வரம்பு 1.6 வாட்ஸ்/கிலோகிராம் . செல்பேசியின் உட்கவர்தல் விகித எண் இதற்கு மேல் இருந்தால் அச்செல்பேசியை சந்தையில் விற்க அனுமதி தரப்படுவதில்லை.அதிக பட்சம் 1.6 வாட்ஸ்/கிலோகிராம் என்றாலும் இந்த அளவுக்கு செல்பேசியில் கதிர்வீச்சு இருப்பதில்லை.  இந்த இணைப்புக்குச் சென்று உங்களின் செல்பேசி எந்தத் நிறுவனத் தயாரிப்பு என்று தேர்ந்து சுட்டினீர்களேயானால் உங்கள் செல்பேசியின் உட்கவர்தல் விகித எண்ணை அறிந்து கொள்ளலாம்.

சில மாதங்களுக்கு முன் ஸ்வீடனின் லுன்ட் பல்கலைக்கழகத்து (Lund University) ஆய்வாளர்கள் பரிசோதனை ஒன்றை நிகழ்த்தினர்.தங்கள் பரிசோதனைக்கு எலியைப் பயன்படுத்திக் கொண்டனர். செல்பேசி வெளிப்படுத்தும்/பெறும் கதிர் வீச்சுக்களை உருவாக்கி எலியின் மீது அக்கதிர்கள் விழும் வண்ணம் அமைத்தனர். தொடர்ச்சியாக இரண்டு மணி நேரத்துக்கு செல்பேசி வானலைகளால் பாதிக்கப்பட்ட எலியின் மூளைச் செல்கள் 2% பாதிக்கப்பட்டனவாம். ஐம்பது நாள் ஆய்வின் முடிவில் இந்த விளைவு கண்டுபிடிக்கப்பட்டதாய் ஆய்வாளர்கள் அறிவித்தனர். எனினும், இதேபோல் செல்பேசி பயன்படுத்தும் மனிதர்களின் மூளைச் செல்களும் பாதிக்கப்படுமா என்பது குறித்து உறுதியாகச் சொல்ல இயலாது என்றும் தெரிவித்தனர். செல்பேசியைச் சட்டை பைக்குள் வைத்துக் கொண்டால் இருதயம் பாதிக்கப்படும் என்றும், கால்சட்டைப் பையில் வைத்துக்கொண்டால் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படும் என்றும் ஏராளமான உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன . இதுவரை மருத்துவ ரீதியாக ,செல்பேசியின் மூலம் பாதிப்பு அடைந்ததாக எந்தவொரு தகவலுமில்லை.மனித உடலில் செல்பேசியின் பாதிப்புகள் குறித்தும் எந்தவொரு ஆய்வும் இல்லை. இருப்பினும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டால் இது குறித்த அச்சமின்றி நிம்மதியாய் இருக்கலாம்.

அதிக நேரம் செல்பேசியைக் காதில் வைத்துக்கொண்டு பேசுவதைத் தவிர்க்கலாம். அலுவலக அல்லது தொழில் ரீதியாக நிறைய அழைப்புகள் ஏற்படுத்திப் பேச வேண்டியிருக்கிறது என்றால், காதுபேசிகளைச் (Earphones ) செல்பேசியில் இணைத்துப் பயன்படுத்தலாம். இதன் மூலம் செல்பேசி நேரடியாக உடலின் செல்களைப் பாதிப்பது தவிர்க்கப்படுகிறது. செல்பேசியைக் காதோடு ஒட்ட வைத்துக் கொண்டு வெகுநேரம் பேசினால் , செல்பேசி சூடாகி அந்த வெப்பம் உங்கள் கன்னத்தைப் பாதிக்கலாம், சிலருக்குத் தலைவலியும் ஏற்படலாம். காதுபேசிகளைப் பயன்படுத்துவதன் மூலம் இதனைத் தவிர்க்கலாம். புதிய செல்பேசிகளை வாங்கும்போது அச்செல்பேசியின் பயன்பாடுகளை அறிந்துகொள்வதோடு , அவற்றின் உட்கவர்தல் விகித எண் ஒரு கட்டுக்குள் இருக்கிறதா என்பதையும் பார்த்து வாங்கலாம். சந்தையில் வெளிவந்த பிறகும் தயாரிப்புக் கோளாறு காரணங்களால் சில செல்பேசிகள் அதிக அளவு கதிர்வீச்சை வெளிப்படுத்துவதுண்டு. எனவே செல்பேசியைப் பயன்படுத்துகையில் எச்சரிக்கையாகவே இருப்போம். அதிக நேரம் வெட்டியாய்ப் பேசுவதைத் தவிர்ப்போம். உடல் செல்கள் பாதிப்பது தவிர்க்கப்படுவதோடு செல்போன் பில் வரும்போது ஏற்படும் அதிர்ச்சியையும் இதனால் தவிர்க்க முடியும்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |