செப்டம்பர் 30 2004
தராசு
கார்ட்டூன்
வேர்கள்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
சமையல்
க. கண்டுகொண்டேன்
கட்டுரை
உங்க. சில புதிர்கள்
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  வேர்கள் : ஓடிப் போனானா - பகுதி 9
  - ஹரிகிருஷ்ணன்
  | Printable version |

  என் கேள்விக்கென்ன பதில்: 1

  பாரதியின் தீவிரம் மிகுந்த எழுத்துகள் என்று அரசு எவற்றைக் கருதியதோ அவை வெளிவந்த காலகட்டத்தில் 'இந்தியா' பத்திரிகையின் ஆசிரியராகவும், உரிமையாளராகவும் பதிவு செய்துகொண்டிருந்த சீனிவாசன் மீது மட்டுமே அரசு நடவடிக்கை எடுக்க முடிந்தது என்பதனை நாம் கண்டோம்.  அரசு நடவடிக்கை எடுக்க விரும்பியது பாரதியின் மீதும், அந்தப் பத்திரிகையின் உரிமையாளரான திருமலாச்சாரியின் மீதும்தான்.  இதில் என்ன வேடிக்கை என்றால், பாரதியே 'இந்தியா' பத்திரிகையின் ஆசிரியர் என்ற தோற்றம்தான் காவல் துறையில் நிலவியிருக்கிறது.  ஒருவரேனும் அந்தப் பத்திரிகை யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கவனிக்கவில்லை.  கைது நடவடிக்கைக்கான கடைசி கட்டத்தில்தான் நடவடிக்கை எடுப்பதானால்  சீனிவாசன் மீதுதான் எடுக்க முடியும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.  அதாவது, பத்திரிகையின் எழுத்தைக் கண்காணித்த அளவுக்கு, அதனுடைய நிர்வாக இயந்திரம் செயல்பட்டுக் கொண்டிருந்த விதத்தைக் கவனிக்கவில்லை.  ஒருவரை ஆசிரியர் என்று காவல் துறையும்; காவல் துறையின் மூலம் தகவல் பெறும் அரசாங்கமும், நம்பிக்கொண்டிருக்க,  'ஆசிரியர்' என்றும் 'உரிமையாளர்' என்றும் இன்னொருவர் பதிந்துகொண்டிருக்கிறார்.  யாரிடம் போய்ப் பதிந்துகொண்டிருக்கிறார்?  காவல் துறை கமிஷனரிடம்!  இது ஒரு பக்கம்.

  இன்னொரு பக்கத்தில், பத்திரிகையின் உண்மையான உரிமையாளர் யார் என்பது பற்றியும் காவல் துறைக்குக் குழப்பம் இருந்திருக்கிறது.  எஸ். என். திருமலாச்சாரியாரும், பாரதியும் பாண்டிச்சேரிக்குச் சென்றுவிட்டார்கள் என்று அப்போதைய தலைமைச் செயலருக்கு, அப்போதைய காவல் துறைத் துணைத் தலைவருடைய (டிஐஜி) தனி உதவியாளர் ஒரு ரகசியக் குறிப்பை அனுப்புகிறார்.  எப்போது? 5.9.1908 அன்று.  அதாவது, முரப்பாக்கம் சீனிவாசன் கைதான பத்து நாள் கழித்து.  Confidential என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்தக் குறிப்பு இப்படிச் சொல்கிறது:

  "An Officer of this Department report that this individual whois the proprietor of Indian Printing Agnecy, Broadway and who is believed to be the real owner of Tamil paper India and C. Subramania Bharathy have left Madras for Pondicherry fearing arrest and prosecution and that they do not propose to return for some time.

  Madras                         Personal Assistant to the DIG of Police
  5.9.08                         CID and Railways"

  மேற்படிக் குறிப்பில் உள்ள 'an individual' என்ற சொற்கள் எஸ். என். திருமலாச்சாரியைக் குறிப்பன.  இந்தியன் பிரிண்டிங் ஏஜென்சியின் உரிமையாளரும், 'இந்தியா' தமிழ்ப் பத்திரிகையின் உண்மையான உரிமையாளர் என்று நம்பப்படுபவருமான...' என்றுதான், சீனிவாசன் கைதான பத்து நாளுக்கு அப்புறம் கூட, காவல் துறையினர் யார் உண்மையான உரிமையாளர் என்பதை நிர்ணயிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள்.

  இப்படிப்பட்ட சூழல்களை வைத்துப் பார்க்கும்போது ஒன்று தெளிவாகிறது.  உரிமையாளரையும், ஆசிரியரையும் மாற்றி மாற்றிப் பதிவு செய்துகொண்டிருந்ததன் காரணமே, காவல் துறையைக் குழப்புவதற்காகத்தான்.  இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எப்போதிருந்து தொடங்கியிருக்கலாம் என்றால், இந்தியா பத்திரிகை தொடங்கப்பட்டு சுமார் ஓராண்டு காலம் கழித்து.  அப்போதுதான் பாரதியின் பெயர் பத்திரிகையின் அதிகார பூர்வமான 'ஆசிரியர்' என்று பதிவு செய்யப்படுகிறது.  இந்த 'அதிகாரபூர்வமான ஆசிரியர் பதவி' நீடித்தது வெறும் மூன்று மாத காலத்துக்குத்தான்.  அதற்குப் பிறகு ஏதோ சில காரணங்களால் சீனிவாசனை ஆசிரியர் பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள். 

  இங்கே ஒன்று சொல்லிவிடுகிறேன்.  மேற்படி 'செய்திருக்கிறார்கள்,' 'அமர்த்தியிருக்கிறார்கள்' என்ற சொற்கள் எல்லாவற்றிலும் காணப்படும் பன்மை 'இந்தியா' பத்திரிகையின் நிர்வாகத்தைக் குறிப்பதாகும்.  பாரதியை உள்ளிட்டதாகாது.  ஏனெனில், முதலீடு செய்தவர்கள் என்ற விதத்தில் நிர்வாக அதிகாரம் என்பது திருமலாச்சாரியார் முதலானவர்களிடம்தான் இருக்கிறதே தவிர, அங்கே சம்பளம் வாங்கிக் கொண்டு பணிசெய்த பாரதிக்கு இப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பதில் என்ன நேரடி அதிகாரம் இருந்திருக்க முடியும்?  சீனிவாசன் ஒரு 'குமாஸ்தா'வாகப் பணியாற்றியவர் என்ற விதத்தில்தான் இதுவரையில் ஆய்ந்தவர்கள் எல்லோரும் அணுகியிருக்கிறார்கள்.  ஆனால் அவருடைய வாக்குமூலம் (காண்க: பகுதி 7 - இவரா அப்பாவி?) ஒன்றைத் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது:

  'நான் பேப்பர் நடத்துவதற்காக வாங்கின கடனைக் கொடுத்து என்னைக் கடன் ஹிம்சையை விட்டு நீக்க வேண்டும்  என்று எஸ் என் திருமலாச்சாரியைக் கேட்டுக் கொண்டேன்.  எம் பி திருமலாச்சாரி பிந்தித் தருவதாகச் சொன்னார்.  நான் கொடுத்த டிக்ளரேஷனைத் தள்ளிவடும்படியாகக் கேட்டு அதைத் தள்ளுபடி பண்ணிக் கெண்டேன். பிறகு இந்தப் பத்திரிகையை எம் பி திருமலாச்சாரி பேருக்கு அவர் பணம் கொடுத்துக் கடனைத் தீர்த்தாலும் தீர்க்காவிட்டாலும் பத்திரிகையை எம் பி திருமலாச்சாரி பேருக்கு மாற்றி வைக்கச் சம்மதித்தேன்.'

  சீனிவாசன் 'இந்தியா' பத்திரிகையில் முதலீடு செய்திருக்கிறார்.  கடன் வாங்கி முதலீடு செய்தாரா, இல்லை சொந்தப் பணத்திலிருந்து முதலீடு செய்தாரா என்பதெல்லாம் நம்முடைய ஆய்வுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்.  கடன் வாங்கி முதலீடு செய்ததாகத்தான் வாக்கு மூலத்தில் சொல்ல முடியும்.  ஏனென்றால், 'நான் ஒரு ஏழை,' என்றுதான் வாக்குமூலம் தொடங்குகிறது.  ஆனாலும், 'நான் ஏழை.  எனக்குச் சர்காருக்கு விரோதமாக எழுத எண்ணமே கிடையாது.  எனக்கு ஒரு பத்திரிகை வைத்து நடத்துவதற்கான பணமும் சாமர்த்தியமும் கிடையாது,' என்று தொடங்கியிருந்த போதிலும், 'பேப்பர் நடத்துவதற்காக வாங்கின கடனைக் கொடுத்து' தன்னைப் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டதையும்; எம் பி திருமலாச்சாரி, 'பணம் கொடுத்துக் கடனைத் தீர்த்தாலும் தீர்க்காவிட்டாலும்,' பத்திரிகையை அவர் பெயருக்கு மாற்றித் தர சம்மதித்ததையும் குறிப்பிட சீனிவாசனுடைய வக்கீலான கெளடெல் தவறவில்லை.  (சீனிவாசன் தவறவில்லை என்றுதான் சொல்லவேண்டும் என்றாலும், வாக்கு மூலம் முழுக்க முழுக்க வக்கீலின் தயாரிப்பு.  இவர் மீது தவறேதும் இல்லை என்று சொல்லி இரக்கத்தை ஏற்படுத்துவதற்காக எடுத்து வைக்கப்படும் விண்ணப்பம் என்பதனால் விவரங்கள் உண்மையிலிருந்து சற்றே விலகித்தான் இருக்கும்.  உரிய உண்மையை உய்த்தறிய வேண்டியது வாசகர் கடன்.) 

  எனவே, சீனிவாசன் 'உரிமையாளர்' என்றும், 'ஆசிரியர்' என்றும் பதிவு செய்துகொண்டது ஏதோ வேறு வழியில்லாமலோ, அல்லது முதலாளியின் நிர்பந்தத்தினாலோ அன்று.  அந் நாளில் வெளிவந்துகொண்டிருந்த Indian Patriot பத்திரிகை (14.11.1908 அன்று - கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று மாதங்கள் கழித்து)  இந்த விவகாரத்தைக் குறித்து எழுதியிருக்கிறது.  முரப்பாக்கம் சீனிவாசனைக் குறித்து அந்தப் பத்திரிகை எழுதியதன் குறிப்பிட்ட பத்தியைப் பார்ப்போம்.

  "It is quite possible that in this case the accused was not his own master, and that he had for the sake of his livelihood to bear responsibility for things which, if left to himself, he might not have permitted to be publised; and we believe that to a certain extent he struggled between the extreme views of the paper and his appointment on it. But it is not quite clear why he became the proprietor of the journal if he did not mean to own it."

  (நன்றி: கால வரிசைபடுத்தப்பட்ட பாரதி படைப்புகள், தொகுதி 3, சீனி. விசுவநாதன் வெளியீடு)

  இவர் உண்மையில் உரிமையாளராக இல்லாத பட்சத்தில் ஏன் உரிமையாளர் என்று பதிவு செய்துகொண்டார்?  அப்படியே இருந்தாலும் பம்பாயிலிருந்து திருமலாச்சாரியார் சொன்னபடி, போலீஸ் கமிஷனரிடம் 'உரிமையாளர்' என்று மட்டும்தானே பதிவு செய்துகொண்டிருக்க வேண்டும்?  பாரதியே ஆசிரியர் என்றுதானே இவரிடம் 'சொல்லப்பட்டது?' (பார்க்க: பகுதி 7 - 'இவரா அப்பாவி?')  அப்படித்தானே இவர் காவல்துறை கமிஷனரிடம் சொல்லிப் பதிந்துகொண்டிருக்க வேண்டும்?  ஏன் தன்னையே உரிமையாளராகவும், ஆசிரியராகவும் பதிந்துகொண்டார்?  விடையில்லை.  யாரிடமும் விடையில்லை. 

  ஆனால், இது சர்வ நிச்சயமாக ஒரு நிர்வாக ஏற்பாடு என்பதை மறுக்க முடியாது.  இன்னொன்று.  பாரதியை ஆசிரியராகப் பதிவு செய்வதால் ஏற்படக் கூடிய 'பின் விளைவுகளைக்' கருத்தில் கொண்டு 'இந்தியா' பத்திரிகையின் நிர்வாகம் அவனுடைய பெயரை ஆசிரியர் என்று பதிவு செய்யாமல் விட்டிருக்கலாம்.  ஏனெனில், 'இந்தியா' பத்திரிகையின் மொத்த எழுத்து இயக்கமும் பாரதியின் தோள் மீதே இருந்தது என்பது வெளிப்படை.  'இந்த ஆளைப் பிடிச்சு ஜெயில்ல போட்டா, அடுத்த இதழ் வெளிவருவது பெரும் பாடாகிப் போகும்,' என்ற எண்ணம் நிர்வாகத்துக்கு இருந்திருக்கலாம்.  இதற்கே அதிகம் வாய்ப்பு இருக்கிறது. 

  எனவே, பாரதி சீனிவாசனை 'சிக்க வைத்துவிட்டான்' என்ற வாதம் அடிபட்டுப் போகிறது.  'தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டுத் தாம் தூரப் போய்விட்டமை' என்னும் வாதம் வெறும் அபவாதமாக நிற்கிறது.  சீனிவாசன், பாரதியை நம்பியோ, சார்ந்தோ இருக்கவில்லை.  நம்பியிருத்தல் என்ற சொல்லுக்கு என்ன பொருள் இருக்க முடியும்?  ஒரு ஆபத்து ஏற்பட்டால் காப்பாற்றுவார் என்பது நம்பிக்கையாக இருக்க முடியும்; ஒரு கஷ்டம் நேர்ந்தால், பொருளாதார ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ துணை நிற்பார் என்று நினைப்பது நம்பிக்கையாக இருக்க முடியும்.  இன்னும் இது போன்ற சில விஷயங்களில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை 'நம்பி இருக்கலாம்.'   இந்த மாதிரியான நம்பிக்கைகள் எதையும் சீனிவாசன், பாரதி மேல் வைத்திருக்க முடியாது.  ஏனெனில், அவர் பாரதியைப் பொருளாதார ரீதியிலோ, மற்றெந்த விதத்திலோ சார்ந்திருக்கவில்லை.

  ஆகவே, உண்மையில் சீனிவாசன், மாற்றி மாற்றிப் பதவிகளைப் பதிவு செய்து அரசைக் குழப்பிய திறக்கில் அகப்பட்ட பலியாடு இல்லை.  இந்த ஏற்பாட்டின் சூத்திரதாரிகளில் அவரும் ஒருவராக இருந்திருக்கும் வாய்ப்பே அதிகம் உண்டு.  

  இனி, நாம் சென்ற தவணையில் எழுப்பிக்கொண்ட மற்ற கேள்விகளுக்கு வருவோம்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |