அக்டோபர் 05 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பாடல்களால் ஒரு பாலம் : கவிதை அரங்கேறும் நேரம்
- அபுல் கலாம் ஆசாத் [azad_ak@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

தமிழில்

திரைப்படம்: அந்த ஏழு நாட்கள்
பாடலாசிரியர்
: குருவிக்கரம்பை ஷண்முகம்
இசை
: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்
: ஜெயசந்திரன், எஸ்.ஜானகி
திரையில்
: பாக்கியராஜ், அம்பிகா


இந்தியில்

திரைப்படம்: வஹ் சாத் தின்
பாடலாசிரியர்
: ஆனந்த பக்ஷி
இசை
: லக்ஷ்மிகாந்த் - பியாரிலால்
பாடியவர்: ஷப்பீர் குமார்
திரையில்
: அனில் கபூர், பத்மினி கோலாப்பூரி

எழுபதுகளில் கவியரங்க மேடைகளில் வலம் வந்த பெயர் ஒன்று தமிழ்த் திரைக்கு எண்பதுகளில் அறிமுகமானது. இலக்கியத்தில் பட்டம் பெற்ற வைரமுத்துவின் வருகை எண்பதுகளின் துவக்கத்தில் தமிழ்த் திரையில் நிகழ்ந்ததைப் போலவே, இலகியத்தில் முனைவர் பட்டம் பெற்றிருந்த இவரது வருகையும் நிகழ்ந்தது. முதல் பாடலே வெற்றிப்பாடல். ஆனாலும் என்ன காரணத்தாலோ இவரால் திரையில் காலூன்ற முடியாமற்போனது. டாக்டர் குருவிக்கரம்பை ஷண்முகம், மரபுக் கவிதைகளால் கவியரங்கங்களை அலங்கரித்தவர் 'கவிதை அரங்கேறும் நேரம்' என தமிழ்த் திரையில் தனது முதல் பாடலை எழுதினார். பாடலின் வெற்றிக்குப் பிறகு திரைப் பத்திரிகை ஒன்றில் 'எனது பிரம்மன் பாக்கியராஜ்' என தனது வெற்றியை பாக்கியராஜுக்கு சமர்ப்பித்திருந்தார்.

Woh Saat Dinகே.பாக்கியராஜ் - இவரை தமிழ்த்திரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தத் தேவையில்லை, ஆனால், கே.பாகய ராஜா - இவரை உங்களுக்குத் தெரியுமா? நமது கே.பாக்கியராஜ்தான். இவரது 'அந்த ஏழு நாட்கள்' திரைப்படம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது பாக்கியராஜின் பெயர் பாகய ராஜாவாக மாறியது. அவரது பெயர்தான் மாறியதே தவிர, கதையின் கருவோ காட்சியமைப்புகளோ கொஞ்சமும் மாற்றப்படாமல் அப்படியே இந்திக்கு ஏற்றாற்போல் எடுக்கப்பட்டது. இந்திக்கு ஏற்றாற்போல் என இங்கே குறிப்பிடுவது, தென்னகத்தின் 'பாலக்காட்டு மாதவன் நாயர்' வடக்கே சென்றபோது 'பிரேம் பிரதாப் பாட்டியாலாவாலா'வாக மாறியதை.

திரைப் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற நினைப்பில் நகரத்திற்கு வந்து ஒண்டுக் குடித்தனத்தில் தனது நாள்களைக் அழித்துக்கொண்டிருக்கும் இளைஞன் அவன். வெகுளித்த்னமான அவனது நடவடிக்கைகளால் கண்ட நாள் முதலாக அவன் மேல் எந்தவிதமான மதிப்பும் தோன்றாமல் அவனை நகைச்சுவைப் பாத்திரமாகவே நினைத்துவந்த அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அந்த வெகுளித்தனத்துக்குள் மறைந்திருக்கும் சோகம் தெரியவருகின்றது. சாப்பாட்டிற்கே வழியில்லாமல் ஈரத்துணியை வயிற்றில் இறுக்கிக் கட்டிக்கொண்டு பசியை மறக்கடிக்கும் அவனது செய்கையைப் பார்த்ததும் பச்சாதாபம் தோன்றுகிறது.

அவனது உதவியாளனாக வரும் சிறுவனிடம்,

'ஏன் இப்படி உனது குரு கஷ்டப்படுகிறார்? சொந்த கிராமத்திற்குச் சென்று ஏதாவது வயல்வேலை செய்து பிழைப்பு நடத்தலாமே. அது சரி, இப்படி ஹார்மோனியத்தைத் தூக்கிக்கொண்டு அலைகிறாரே, உண்மையிலேயே உனது குருவிற்கு சங்கீதம் கிங்கீதம் எதாவது தெரியுமா' என்று கேட்டு வைக்கிறாள்.

வீட்டுக்காரரின் மகளின் இதயத்தில் தனது குருவிற்காக மெல்லிய மூலை உருவாகியிருப்பதை உணர்ந்துகொண்ட உதவியாளனும் தனது குருவை சீண்டிவிடும் விதமாக அவள் சொன்னதை வேறு தொனியில் குருவிடம் சொல்கிறான்.

'குருவே, நம்ம வீட்டுக்காரர் பொண்ணு இல்ல...அது உங்களுக்கு சங்கீதம் கிங்கீதம் எதுனாச்சும் தெரியுமான்னு ரொம்பவும் கேவலா கேக்குதுங்க. நான் விடுவனா, எங்க குரு தான்சேன் அளவுக்கு விஷயம் தெரிஞ்சவர்ன்னு சொன்னேன்'

அவ்வளவுதான் நாயகனுக்கு ரோஷம் பொங்கிவிடுகிறது. தனக்கே உரித்தான வெகுளித்தனமான பாணியில்,

'தான்சேன் என்னடா தான்சேன், நான் முகமது ரஃபிக்கும் கொறஞ்சவனில்ல. இப்ப பார், நான் வாசிக்ற மெட்டுல அவ மனசப் பறிகொடுத்துட்டி மாடிப்படியேறி வரப்போறா பார், நீ தாளம் போடு'

என ஆவேசமாகச் சொல்லுவதாக நினைத்துக்கொண்டு பாடத் துவங்குகிறான்.

மேரே தில்ஸே தில்லகி நா கர்
தில் தடக் க்யாதோ ஹோகா
ஹல்கா ஸா பீச்மே பர்தா ஹை
யே தரக் கயாதோ க்யா ஹோகா

என் மனதுடன் விளையாடாதே
மனம் துடிக்கத் துவங்கினால் என்னாகும்
?
இடையினில் சிறுதிரைதானே
அது விலகத் துவங்கினால் என்னாகும்
?

இந்தியில் இப்படி ஒலித்த பாடல், அதன் தமிழ் மூலவடிவில் வேறுவிதமாக ஒலித்தது. அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக ஆட்டம் போடும் மெட்டில் இடையிடையே மகுடி நாதத்துடன் இந்தியில் ஒலித்த பாடல், மிகவும் நளினமாக ஓர் அடிக்கு மூன்று சீர்கள் அமைந்து எளிமையான கவிதையாக ஒலித்தது. ஸ்வர வரிசை தெரியாத ரசிகர்களுக்கும் மெட்டின் ஸ்வர வரிசைகளை அறிமுகம் செய்தது.

சசகநிசபநிசச சச சமகநிசபநிசச
கவிதை அரங்கேறும் நேரம் - மலர்க்
கணைகள் பரிமாறும் தேகம்
- இனி
நாளும் கல்யாண ராகம் - அந்த
நினைவு சங்கீதம் ஆகும்

பார்வை உன் பாதம் தேடி - வரும்
பாவை என்னாசை கோடி
- இனி
காமன் பல்லாக்கில் ஏறி - நாம்
கலப்போம் உல்லாச ஊரில்
- உன்
அங்கம் தமிழோடு சொந்தம்
- அது
என்றும் திகட்டாத சந்தம்
!

கைகள் பொன்மேனி கலந்து - மலர்ப்
பொய்கை கொண்டாடும் விருந்து - இனி
சொர்க்கம் வேறொன்று எதற்கு
- எந்த
சுகமும் ஈடில்லை இதற்கு
- மனம்
கங்கை நதியான உறவை
- இனி
எங்கே இமை மூடும் நிலைமை!

நீரில் நின்றாடும்போதும் - சுடும்
நெருப்பாய் என்தேகம் ஆகும் - அது
நேரில் நீ வந்த
மாயம் - இந்த
நிலைமை எப்போது மாறும் - என்
இளமை மழை மேகம் ஆனால்
- உன்
இதயம் குளிர்வாடை காணும்
!

இந்திக்கு இதனை எடுத்துச் சென்றபோது தமிழில் இருந்த சில அமைப்புகள் பாடலின் துவக்கத்தில் இல்லாமற்போனது. தமிழில் பாடல் துவங்கும்போது, அம்பிகா மெல்ல நடந்து வருவதும், மாடியிலிருந்து இசைக்கப்படும் மெட்டில் அவர் மயங்கி மெதுவாக அவரது பிம்பம் மாடிப்படியேறிச் செல்வதுமான காட்சியமைப்பு இருக்கும்.

பெண் இசையினில் மயங்கி நாயகனைத் தேடி செல்வதான அமைப்பு இந்தியில் இல்லை. அவர்கள் வழக்கப்படி தபேலாவின் தாளகதியை வேகமாக அமைத்து முதல் அடி துவக்கும்போதே பத்மினி கோலாப்பூரி - அனில் கபூர் கூட்டணியின் நடனம் துவங்கிவிடும். பாடலின் பல்லவியும் சரணங்களும் 'என்னாகும்' (க்யா ஹோகா) என்னும் இயைபைக் கொண்டே அமைந்திருந்தது. இப்படி ஒரே வார்த்தையை இயைபாக அமைப்பது வடக்கே ஒரு பாணி. கடைசி வார்த்தை மட்டுமல்லாமல் அதற்கு முன்னால் ஒலிக்கும் வார்த்தையும் இயைபாக இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்வார்கள். இப்பாடலில் க்யாஹோகாவுடன் கூடவே அதன் முன்னால், ஜனக் கயாதோ, சமக் கயாதோ, சட்டக் கயாதோ என சமக் - சட்டக் - கட்டக் என ஒரே ஓசை நயமுள்ள வார்த்தைகளை அமைத்து அட்டகாசப்படுத்தியிருப்பார் கவிஞர் ஆனந்த் பக்ஷி.

இந்தியில் இதனைப் பாடிய ஷப்பீர் குமார் அந்த நேரத்தில் அதிகமான வாய்ப்புகளைப் பெற்றிருந்த பாடகர். அமிதாபுக்கு இவர் பாடிய மதீனே வாலோன்ஸே மேரா சலாம் கஹனா (படம்: கூலி), ஜானேதோ ஜானேதோ (ஷஹேன்ஸா) இவை இரண்டும் வடக்கே மிகவும் பிரபலமான பாடல்கள். எண்பதுகளின் இறுதியில் திரை இசையில் உண்டான பல மாறுதல்கள், இளைஞர்களின் நுழைவு இவற்றால் ஷப்பீர் குமாருக்கு வாய்ப்புகள் குறைந்தன.

தமிழில் ஜெயசந்திரனும் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர். வழமையான காதல் பாடலான திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி (மேயர் மீனாட்சி), இளையராஜாவின் இசையில் சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன் (காற்றினிலே வரும் கீதம்) துவங்கி மாஞ்சோலக் கிளிதானோ (கிழக்கே போகும் ரயில்) வழியாக ஒரு நீண்ட பட்டியலைத் தரமுடியும்.

ஜெயசந்திரனின் சிறந்த பாடல்களின் பட்டியலில் அவசியம் இடம்பெறும் இப்பாடல், இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் தமிழ்த் திரைக்கு எழுதிய முதல் பாடல் என்னும் பெயரையும் தாங்கி நிற்கிறது.

| | |
oooOooo
அபுல் கலாம் ஆசாத் அவர்களின் இதர படைப்புகள்.   பாடல்களால் ஒரு பாலம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |