அட்டோபர் 06 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
அடடே !!
கேள்விக்கென்ன பதில் ?
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உள்ளங்கையில் உலகம் : உலகளாவிய தரவு மேம்பாட்டு வளர்ச்சி
- எழில்
| Printable version | URL |

 
செல்பேசியின் தரவு வேகத்தை அதிகப்படுத்த அறிமுகமான உலகளாவிய தரவு மேம்பாட்டு வளர்ச்சி (Enhanced Data for Global Evolution, EDGE) குறித்து இவ்வாரம் காண்போம்.

செல்பேசியில் ஜி பி ஆர் எஸ் உதவியுடன் தரவு வேகத்தை எவ்வாறு அதிகப்படுத்துவது என்பதனை முந்தைய பதிவுகளில் கண்டோம். ஜி பி ஆர் எஸ் துணைகொண்டு அதிகபட்சமாக தரவு வேகம் 170 கிலோபிட்ஸ் ( நடைமுறை வேகம் நூறு கிலோபிட்ஸ்கள்) வரை அதிகரிக்க முடியும். இந்த வேகத்தை விட மும்மடங்கு வேகத்தை அதிகரிக்க உதவும் நுட்பமே உலகளாவிய தரவு மேம்பாட்டு வளர்ச்சி ( EDGE) ஆகும். எட்ஜ் நுட்பத்தைப் பயன்படுத்தி தரவு வேகத்தை 470 கிலோபிட்ஸ் வரை அதிகரிக்கலாம் ( theoretically). நடைமுறையில் (practically) 380 கிலோபிட்ஸ் வேகம் வரை அதிகரிக்க முடியும்.

தொலைத்தொடர்பு உலகம் இரண்டாந்தலைமுறை கம்பியில்லாத் தொடர்பு முறையிலிருந்து மூன்றாவது தலைமுறை கம்பியில்லாத் தொடர்பு முறைக்கு (3G) மாறுவதற்காய்த் தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருக்கையில் உருவான இடைப்பட்ட நுட்பங்கள் தான் ஜி பி ஆர் எஸ் மற்றும் எட்ஜ் . மூன்றாவது தலைமுறை செல்பேசிகள் மற்றும் வலையமைப்புகள் உதவியுடன் தரவு வேகத்தை ஒரு மெகா பிட்ஸ் வரை உயர்த்த முடியும் . ஆனால் இந்த மூன்றாந்தலைமுறை வலையமைப்பு நிறுவுவதற்கும், செல்பேசிகள் தயாரிக்கவும் பெருத்த செலவு ஏற்படும் . முற்றிலும் புதிய வகை வலையமைப்பு (network)மூன்றாந்தலைமுறைத் தொடர்பு முறைக்குத் தேவைப்படும்.  ஏனெனில் தள நிலையத்துக்கும் செல்பேசிக்குமிடையே நிகழும் தகவல் பரிமாற்ற முறை , இரண்டு தொடர்பு முறைகளிலும் வெவ்வாறானது . ஆக புதிய வகைத் தள நிலையங்களை அமைக்க வேண்டும். எப்படியும் மூன்றாந்தலைமுறை வலையமைப்பு தற்போதோ , பிறகோ அவசியம் ஏற்படுத்தப்படல் வேண்டும். அதற்கு முன் உபயோகத்தில் இருக்கும் தள நிலையங்களில் சிறு மாறுதல்கள் செய்து , அதன் மூலம் தரவு வேகத்தை அதிகப்படுத்த இயலாதா என்று ஆராய்ந்து அதன் முடிவில் மேற்சொன்ன ஜி பி ஆர் எஸ் மற்றும் எட்ஜ் நுட்பங்கள் வரையறை செய்யப்பட்டன.  

சரி,தரவு வேகத்தை எப்படி அதிகரிப்பது? ஜி எஸ் எம் மூலம் ஒரு வினாடிக்கு 9.05 கிலோபிட்ஸ் தரவு அனுப்பப் படலாம் என்றும் , குறியீட்டுத்தகவல்களைக் குறைத்து (codeing signals ), நிறைய நேரத்துண்டுகளில்(multiple time slots) ஒரு நேரத்தில் ஒரு செல்பேசிக்குத் தரவு அனுப்பும் ஜி பி ஆர் எஸ் மூலம் வினாடிக்கு 171.2 கிலோபிட்ஸ் வரை அதிகரிக்கலாம் என்று பழைய பதிவுகளில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

குறியேற்றம் (Modulation) பற்றி அறிந்திருப்பீர்கள். எந்தவொரு தகவலையும் வானலை வழியே அனுப்புகையில் அந்தத் தகவல்களை அப்படியே அனுப்பாமல் உயர்ந்த அதிர்வெண் கொண்ட அலைகளோடு குறியேற்றம் செய்து அனுப்புவதும், அந்த அலைகள் எதிர்முனையை அடைந்தவுடன் அத்தகவல்களைக் குறியிறக்கம் ( Demodulation) செய்து தகவல்களை மீட்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்தக் குறியேற்றத்தில் பல்வேறு வகை உண்டு. ஜி எஸ் எம் நுட்பத்தில் பயன்படுத்தப்படுவது GMSK (Gaussian Minimum Shift Keying) எனப்படும் முறை. இந்தக் குறியேற்ற முறையில் ஒரு குறியீட்டுத்தகவல் (modulated message) அனுப்பப் படுகிறது எனில் ஒரு பிட் தகவல் (data) அனுப்பலாம். இந்தக் குறியேற்ற முறைக்குப் பதில் 8-PSK (8-Phase shift keying)) எனப்படும் மற்றொரு குறியீட்டு முறையைப் பயன்படுத்தினால் ஒரு குறியேற்றம் செய்த தகவலுக்குள் மூன்று பிட் தகவல்களை அனுப்ப முடியும். ஒரு பிட் தகவல்கள் அனுப்பப்பட்ட இடத்தில் மூன்று பிட் தகவலகள் அனுப்ப முடியும் எனில், ஜி பி ஆர் எஸ் வேகத்தினைப் போன்று மும்மடங்கு வேகத்தை எட்ஜ் மூலம் அடையலாம் அல்லவா?

எட்ஜ் வசதியை ஏற்படுத்த, ஏற்கனவே இருக்கும் ஜி பி ஆர் எஸ் வலையமைப்பிலும் செல்பேசியிலும் என்னென்ன மாறுதல்கள் செய்ய வேண்டும்?

1. புதிய வகை செல்பேசிகள் வடிவமைக்கப்பட வேண்டும். இச்செல்பேசிகள் சாதாரண ஜி எஸ் எம், ஜி பி ஆர் எஸ் வசதி இருப்பதோடு, எட்ஜ் முறையின் குறியேற்ற முறையிலும் (8 - PSK) இயங்கும் செலுத்தி/பெறுனர் (Transmitter/ Receiver) வடிவமைக்கப் படல் வேண்டும். செல்பேசியின் மென்பொருள், எட்ஜ் நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட வேண்டும்

2. தள நிலையங்கள் (Base Transceiver Station, BTS) எட்ஜ் வசதியை ஏற்படுத்திக்கொள்ள , ஏற்கனவே இருக்கும் ஜி பி ஆர் எஸ் வலையமைப்பில் மென்பொருள் மாறுதல் செய்து கொள்ளல் வேண்டும் . அதனுடன், குறியேற்ற முறையை மாற்றி அமைத்து , தகவல்களை அனுப்ப/பெற உதவும் ஒரு வன்பொருளைத் ( Hardware) தள நிலையங்கள் இணைத்துக்கொள்ளல் அவசியம். அனுப்புனர்/பெறுனர் அலகு (Transceiver Unit , TRU) என்று இதை அழைக்கிறார்கள். கீழுள்ள படத்தைப் பார்த்தால் மேற்சொன்ன தகவல்கள் எளிதில் விளங்கும்.

EDGE.ஜி பி ஆர் எஸ் வேகத்தினை அதிகரிக்க இந்த எட்ஜ் நுட்பம் உதவுவதால் இதற்கு மேம்படுத்தப்பட்ட ஜி பி ஆர் எஸ் (EGPRS). என்றும் மற்றொரு பெயருண்டு. செல்பேசிச் சேவை வழங்குனர்களுக்கு இந்த எட்ஜ் முறை அதிக பலன் அளிக்கக் கூடியது, மூன்றாந் தலைமுறை வலையமைப்புகள் அமைப்பதற்கு ஏற்படும் செலவு மற்றும் நேரம் அதிகம். ஆகவே மூன்றாந்தலைமுறை வலையமைப்பினை வடிவமைத்துக் கொண்டிருக்கையில் எட்ஜ் வசதியை எளிதில் ஏற்படுத்திக் கொண்டு, தங்களது பயனாளர்களுக்கு தரவு வசதியை அதிகரித்துக் கொடுக்கலாம். ஏற்கனவே மூன்றாந்தலைமுறை வலையமைப்புகள் பரவலாக அமைக்கப்பட்டு இவ்வகைச் செல்பேசிகளும் சந்தையில் விற்பனை செய்யப்பட்டாலும் , மூன்றாந்தலைமுறைச் செல்பேசிகளில் கவர்ச்சிகரமான பயன்பாடுகள் (Killer Applications) எதுவும் இல்லை. எனவே இரண்டாம் மற்றும் இரண்டரைத் தலைமுறை (2.5G) வலையமைப்புகள் இன்றும் அதிக வருமானம் ஈட்டிக் கொடுப்பதில் உதவுகின்றன.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |