சென்ற வாரத்திற்கு நேர்மாறான சில சம்பவங்களை இந்தவாரம் பார்ப்போமா.....
திருட்டுக்களில் கூடப் புதுமை பாருங்களேன் ! ஜூலை 14 ஆம் தேதியில் உள்ளூர் ஆங்கில நாளிதழில் வந்த செய்தி. சில தினங்களுக்கு முன்னர் '·பார் ஈஸ்ட் ப்ளாஸா' என்னும் ஒரு பேரங்காடியில் நடந்த சம்பவம். முப்பது வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு ஸ்லீவ்லெஸ் ப்ளௌஸைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு காஷியரை நோக்கிச் சென்றார். அங்கு நின்ற அவர் தன் வாலட்டிலிருந்து ஒரு $100 தாளை உருவினார். இதைக்கண்டதும் காசாளர் மளமளவென்று மீதிச் சில்லரையான $50.10 ஐ எண்ணித் தயாராய் எடுத்திருக்கிறார். திடீரென்று அந்த ஆடவர், " நான் வாங்கவில்லை!", என்று கத்திக்கொண்டே ப்ளௌஸை காசாளர் முகத்தில் எறிந்துவிட்டு அவர் கையில் இருந்த $50.10 ஐயும் சட்டென்று பிடுங்கிக்கொண்டு, கௌண்டரின் மேலிருந்த $100 தாளையும் உறுவிக்கொண்டு ஓடியேவிட்டான். தெரிந்தவர் தகவல் கொடுக்கக்கோரி காவல்துறையின் போன் நம்பர்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
2004 ஏப்ரலில் ஓங்க் என்னும் 30 வயது ஆடவருக்கு 5 1/2 வருட சிறையும் ஐந்து கசையடியும் தண்டனையாக அளிக்கப்பட்டது. எதற்குத் தெரியுமா ? ஒரு எக்ஸ்டஸி மாத்திரையை மத்திய போதைப்பொருள் ஒழிப்புத் துறையின் ( Central Narcotics Bureau) அதிகாரி ஒருவருக்கு விற்றதற்கு. ஸ்டார்ம் பிக்சார்ஸின் முதலாளிகளுள் ஒருவரான ஓங்க் அந்த அதிகாரியை சாதாரண நபராய் நினைத்துவிட்டிருக்கிறார். அந்த அதிகாரி சந்தை விலையைவிட நான்கு மடங்கு விலை அந்த ஒரே மாத்திரைக்குக் கொடுக்கத் தயாராய் இருந்தாராம். எப்போதும் எனக்கு புரியாதது என்னவென்றால், போதைப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கமும் சட்டமும் எல்லாவிதமான வழிகளிலும் கடுமையாக இருக்கும்போது, இந்தத்தீவிற்குள் எப்படி போதைப்பொருள் புழக்கத்திற்கு வருகிறது?! கடுமையான தண்டனைகளையும் தாண்டி கடத்தப்படுவது பெருத்த ஆச்சரியத்தைக்கொடுக்கக்கூடியது. இவ்வருடம் குறைந்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. சரி, விஷயத்துக்கு வருவோம். இந்த ஓங்க் கையும் மாத்திரையுமாய் பிடிப்பட்டார்! இவருக்காக இப்போது இவருடைய வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். இவர்கள் கொடுக்கும் காரணம் சிரிப்பை வரவழைக்கக்கூடியது. ஓங்க் அந்த அதிகாரியால் அதிக விலைகூறப்பட்டு மாத்திரையை விற்கத் தூண்டப்பட்டார். இந்த மேல்முறையீட்டை முக்கிய நீதிபதி புங்க் ஹாவ் நிராகரித்தார். நிராகரிப்புக்கான காரணம் மற்றும் தீர்மானம் பிறகு வெளியிடப்படும் என்றும் கூறினார் நீதிபதி. செய்தி கடந்த ஆகஸ்டில் ஆங்கில நாளிதழில் வெளியானது.
ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி நாளிதழில் வெளியாகியிருக்கும் சில விநோத திருட்டுக்களைப்பார்ப்போம். ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூரின் தேசிய (9th)தினத்தன்று ஜூரோங் வட்டாரத்தில் ஒரு உணவகத்திலிருந்து $ 40 பெறுமானமுள்ள கோழி இறைச்சி களவு போயிருக்கிறது. கடைக்கு சப்ளை செய்பவர் ஒரு பக்கெட்டில் இருந்த இறைச்சியை கடையின் பின்புறக்கதவருகில் வைத்திருந்தார். ஆனால், கடைக்காரர் காலை 5.20 வாக்கில் வந்துபார்த்தால், பக்கெட் காலி! அதே நாளில் நடந்தவேறு ஒரு திருட்டு, வீட்டு ஜன்னலை உடைத்து கம்பிவழியாக நடந்திருக்கிறது. கொஞ்சம் ரொக்கம் மற்றும் $100 மதிப்புள்ள மொபைல் போன் எல்லாவற்றையும் கையை உள்ளே நுழைத்து எடுத்துச் சுருட்டிக்கொண்டு தப்பித்துவிட்டான். போகும் வழியில் மோபைலின் பௌச்சையும் (pouch), பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பர்ஸையும் கீழே போட்டுவிட்டுப்போயிருக்கிறான். வேறு ஒருதிருட்டில் தேசியதினத்திற்கு முதல்தினம் ஆர்சார்ட் ரோட்டில் இருக்கும் ஒரு அலுவலகத்தில் புகுந்து இரண்டு மாடிகளிலும் எல்லா அறையிலும் புகுந்து குடைந்து, கொஞ்சம் ரொக்கத்துடன் செக் புத்தகத்தையும் எடுத்துக் கொண்டோடிவிட்டிருக்கிறான் திருடன்.
2004 ஜூன் 5 ஆம் தேதி ஆங்கில நாளேட்டில் (TheStraitsTimes) படித்த செய்தி என்னுள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. கராங்குனி என்று இங்கு அழைக்கப்படுபவர்கள் rag and bone man என்பார்களே அத்தகையோர். அவர்கள் பேப்பர், பாட்டில், அட்டைப்பெட்டி என்று தொடங்கி எலக்ற்றானிக்ஸ் சாமான்கள் வரை பொருக்கியும் விலைக்கு வாங்கியும் (நம்ம ஊர் பழைய பேப்பர்காரன் மாதிரி) பிழைப்பு நடத்துபவர்கள். இதில் சாமர்த்தியமாக உயர்ந்த நிலைக்கு வருபவர்களும் உண்டு. பலரிடம் செல்போனும் கூட இருக்கும்.
சிரெங்கூன் வட்டாரத்தில் Baffalo Road என்றொரு தெரு உண்டு. அங்கு ஒரு 74 வயது கிழவர் தன் மனைவியுடன் 'வோய்ட் டெக்'கில் உறங்கிக்கொண்டிருந்தாராம். வோய்ட் டெக் என்பது அடுக்கு மாடிக்கட்டிடத்தின் கீழ்த்தளம். அவரிடம் இருந்த 204 வெள்ளியை அபகரித்திருக்கிறான் ஒரு திருடன். ர·ப்பி ஜெலன் என்ற அந்தத் திருடன், அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. வேறு வட்டாரத்தில் இருந்த தங்கள் வீடு போய்ச் டாக்ஸிக்கான பணத்தைக்கெஞ்சிக்கேட்ட கிழவனை காலால் உதைத்து முகத்தில் குத்தி, பேனாக்கத்தியால் முகத்தில் கீரிக்காயப்படுத்தியிருக்கிறான். கிழவர் இரண்டு வாரங்களுக்கு கோமாவில் இருந்துவிட்டு இறந்துவிட்டார். கிழவி பாவம் தனிமையில் தவிக்கிறாள்! அந்தக்கொடிய ஆடவனுக்கு 20 வருட சிறை 21 கசையடி! எதற்கு? $204 பணத்திற்காகச் செய்த வன்முறைக்கு!
இதில் என்ன கவனிக்க வேண்டிய விஷயமென்றால், இவன் ஏற்கனவே பல குற்றங்களுக்கு போதைப்புழக்கம் உட்பட சிலமுறை சிறை சென்று, 24 கசையடி பட்டவன். நல்ல ஆரோக்கியமான ஆணுக்கே ஒரு கசையடியைச்சமாளிக்கமுடியாதாம். சுருண்டு விழுந்துவிடுவார்களாம். வாரக்கணக்கில் இடைவெளி விட்டு மருத்துவர் அனுமதி கொடுத்தபிறகே அடுத்த அடியாம்! நிரந்தவடுக்கள் இருக்குமாம்.போயும் போயும் 204 வெள்ளிக்காசுக்காக ஓர் உயிரையே போக்கத்துணிந்துவிட்ட அந்தப் பாவியை நினைத்து கோபம் வந்தது எனக்கு. தனியாகிப் போன அந்தக்கிழவியின் நிலை தான் ஆகப்பரிதாபம்.
திருட்டுக்களில் நவீனம் ! சின்னத்திருட்டுகள் ஒருபுறமிருக்க பெரியதிருட்டுகளும் நடக்கிறது. சிங்கப்பூரில் சாலைக்கட்டணங்கள் அதிகம். இன்னும் சொல்லப்போனால், இந்த ரோட் டாக்ஸ¤(Road TAX)க்குப் பயந்தே இங்கு பலர் கார் வாங்குவதில்லை. சாலைப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவே கார் வாங்குவதை அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது. அதே காரணங்களுக்காகவே இங்கு காருக்கு 10 ஆண்டுகள் ஆனதுமே scrap செய்துவிடவேண்டும். அவ்வாறு கழிக்கப்பட்ட கார்கள் ஏற்றுமதி செய்யப்படும். ஸ்க்ராப் மெட்டலாகவோ இல்லை அப்படியேவோ ஏற்றுமதியாகிவிடும். இதில் கூடத்திருட்டுத்தனமாம். திடீர் திடீர் என்று ஸ்க்ராப் யார்டில் (SCRAP YARD) ரெய்டு நடத்தப்படுகிறது. தகவகள் மிகவும் ஆச்சரியம் தரக்கூடியவை தெரியுமா? அதாவது 2004 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதிவரை 202 வாகனங்கள் டிரெஜிஸ்ட்டர் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டதாக ஆவணங்களில் பதியப்பட்டு இன்னமும் ஸ்க்ராப் யார்டில் இருக்கின்றன. இதில் சில மலேசியாவிற்குப்போய் திரும்பும் போது போலி நம்பரோடு நாட்டிற்குள் புகுந்துவிடுமாம். சில உள்ளூரிலேயே புழங்கப்படும். இவ்வாறு போலி ஆவணங்கள் தயாரிக்கும் ஸ்க்ராப் நிறுவனங்கள் மட்டுமில்லாது உடந்தையாய் இருக்கும் ஏற்றுமதி நிறுவனங்களும் சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகளே. சுமார் 10000 வாகனங்கள் ஒரு மாதத்திற்கு டிரெஜிஸ்ட்டர் செய்யப்படுகின்றன இங்கு. அவற்றில் ஏற்றுமதி செய்யப்பட்டதாய் பதிசெய்யும் கார்கள் அத்தனையும் ஏற்றுமதியாவதில்லை. கார்விற்பவர்களும் ஏமாற்றப்படுகிறார்கள். நேர்வழியில் இயங்கும் பழைய கார் தரகர்களிடம் காரை விற்று, ஏற்றுமதி செய்த ஆவணத்தின் நகலைப்பெற்றுக் கொள்ளுமாறு குடிமக்களை வாகன ஏற்றுமதி இறக்குமதிக் கழகம் கேட்டுக்கொண்டது. இல்லையானால், டிரெஜிஸ்ட்டர் செய்யும் போது கிடைக்கக்கூடிய கழிவை அவர்கள் பெற முடியாது என்றும் எச்சரிக்கிறது.
'Low crime does not mean No crime' என்று போலீஸ் இலாகா அடிக்கடி ஆங்காங்கே விளம்பரப் படுத்தியபடியிருக்கிறது. ஆனாலும், ஏமாறுபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். ஏமாற்றுபவர்கள்/திருடுபவர்கள் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறுவதேயில்லை.
திருட்டுகளில்தான் எத்தனை எத்தனை வகை! வியக்காமலிருக்கவே முடியவில்லை. இத்தனைக்கும் இங்கு சட்டம் கண்கொத்திப்பாம்பாகத் தான் பார்த்துக் கொண்டேயிருக்கிறது. இருந்தாலும் இப்படி,.....
|