அக்டோபர் 7 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
முத்தொள்ளாயிரம்
சமையல்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
திரைவிமர்சனம்
பெண்ணோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  முத்தொள்ளாயிரம் : நீ என்ன பேய் ஜென்மமா ?
  - என். சொக்கன்
  | Printable version |

  பாடல் 49

  காதலுக்குத் தூதாக, பொதுவான நண்பர்களை அனுப்பலாம், அல்லது, புத்திசாலிப் பறவைகளை அனுப்பலாம், ஓடுகிற தண்ணீரையும், வானத்து மேகத்தையும்கூட தூதாகக் அனுப்பியவர்கள் இருக்கிறார்கள்.

  ஆனால், இவற்றில் எதையும் நம்ப விரும்பாத சிலர், தங்களின் மனதையே தூதாக அனுப்புகிறார்கள், 'என் நெஞ்சே, நான் அவனை / அவளைக் காதலிப்பது, உன்னைத்தவிர வேறு யாருக்கு நன்றாகத் தெரியும் ? ஆகவே, நீயே நேராகச் சென்று, வலதுபக்கம் திரும்பி, ஒன்றரை மைல் தூரம் பயணித்து, அவனை / அவளைச் சந்தித்து, என்ன சேதி என்று கேட்டுக்கொண்டு வா.', என்று செல்லம் கொஞ்சி அனுப்பிவிடுகிறார்கள்.

  இந்தப் பாடலில் வரும் காதலி, அந்த வகையைச் சேர்ந்தவள்தான்.

  ஒளி பொருந்திய புலிக்கொடியைக் கொண்ட வெற்றி வீரன் சோழனை மனதினுள் நிறைத்துக்கொண்டவள் இவள் - அவனை நினைத்துநினைத்து, பிரிவுத் துயரத்தால் இவளுடைய தோள்கள் நடுங்குகின்றன, உடம்பு மெலிந்துவிட்டது, ஆனாலும், அவன் அவளைச் சந்திக்க வரவில்லை.

  ஆகவே, இந்தத் துன்பத்தின் உச்சியில், அவள் தனது நெஞ்சை அழைத்து, அவனிடம் தூதாக அனுப்புகிறாள், 'நெஞ்சே, என் காதலன் சோழன், இந்த வீதியில் பவனி வரும்போது, நீ அவனெதிரே போய் நில்.', என்று கட்டளையிடுகிறாள், 'என்னால்தான் அவனை நேருக்கு நேர் பார்க்கமுடியவில்லை, வெட்கம் பிடுங்கித் தின்கிறது, ஆனால், உன்னால் அது முடியும்.', என்று நம்பிக்கையூட்டுகிறாள்.

  'அவனை நினைத்த பாவத்துக்காக, நான் இங்கே அனுபவித்துக்கொண்டிருக்கும் துன்பத்தையெல்லாம், ஒன்றுவிடாமல் நீ அவனுக்கு எடுத்துச் சொல்., நீர் வளம் நிறைந்த இந்த மண்ணை ஆளும் அரசன் அவனுக்கு, இந்தப் பெண்ணின்மேல் கொஞ்சம்கூட இரக்கமில்லையா ? அவனை நேசிக்கும் என்மேல் கருணைப் பார்வையை வீசாத அவனுடைய கண், நிஜக் கண்தானா ? அல்லது மரக் கண்ணா என்றெல்லாம் நீ கேட்டுக்கொண்டு வா.'

  வரக்கண்டு நாணாதே; வல்லைஆல் நெஞ்சே
  மரக்கண்ணோ மண்ஆள்வார் கண்என்று இரக்கண்டாய்
  வாள்உழுவை வெல்கொடியான் வண்பினல் நீர்நாடற்குஎன்
  தோள்அழுவம் தோன்றத் தொழுது.

  (வல்லை - உனக்கு வல்லமை உண்டு, உன்னால் முடியும்
  ஆல் - 'ஆமாம்' என்பதுபோன்ற ஒரு குறிப்பு
  இரக்கண்டாய் - இரக்கம் கொள்கிறாய்
  வாள் - ஒளி
  உழுவை - புலி
  வண் - அதிகமான
  அழுவம் - துன்பம் / நடுக்கம்)  பாடல் 50

  பிரிந்திருக்கும் காதலர்களுக்கு, இங்கே ஏராளமான விரோதிகள் உண்டு - அவர்கள் முன்பு கூடியிருந்த நாள்களின் இனிய நினைவுகளைக் கிளறிவிட்டு, வாட்டி வேடிக்கை பார்க்கும் இந்த 'வில்லன்'களில் முக்கியமானது இயற்கை - குறிப்பாக, வாடைக்காற்று !

  காதலனைப் பிரிந்த காதலியையோ, காதலியைப் பிரிந்த காதலனையோ, இந்த வாடைக்காற்று வருடித் தாக்கும்போது, அவர்களுக்குப் பழைய ஞாபகங்களும், ஏக்கமும் தானாய்க் கிளர்ந்து எழுகிறது.

  அதீதமாய்க் குளிரும் பனி வாடைக் காற்றின் இந்தக் கொடுமையைத் தாங்கமுடியாத ஒரு பெண், அந்தக் காற்றை அழைத்துப் பேசுகிறாள், 'ஏம்பா, உனக்கும் எனக்கும் என்ன விரோதம் ? அநாவசியமா என்னை ஏன் இப்படித் தொல்லை பண்றே ? கொஞ்சநேரம் என்னை நிம்மதியா விடமாட்டியா ?', என்று அதட்டுகிறாள்.

  'நீ என்னைமட்டும் தொல்லைசெய்தாலாவது பரவாயில்லை, ஊரில், காதலனைப் பிரிந்திருக்கும் ஒரு பெண்ணையும் நீ விட்டுவைப்பதில்லை, கொஞ்சமும் இரக்கமில்லாமல் அவர்கள்மேல் பாய்ந்து, உன் குளிர்ச்சியால் வருடி, பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டு வதைக்கிறாய்.', என்று கடுமையாய்க் குற்றம் சாட்டுகிறாள் அவள், 'நீ என்ன பேய் ஜென்மமா ? என்னைப்போன்ற பெண்கள் எல்லோரும், உனக்குக் கப்பம் / வரி செலுத்தும் அடிமை மக்களா ? பிறகு ஏன் இப்படியெல்லாம் எங்களைக் கொடுமைப்படுத்துகிறாய் ?'

  இப்படிக் கேட்டுவிட்டு, அவள் தொடர்ந்து சொல்கிறாள், 'உற்சாகமாகவும், வேகமாகவும் ஓடுகின்ற குதிரைகளைப் பூட்டிய தேரில், என் காதலன், சோழன் கிள்ளி வந்துகொண்டிருக்கிறான், நான் அவனுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன், ஏக்கமும், எதிர்பார்ப்பும், தளர்வும் நிறைந்த இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு, நீ உன் வேலையைக் காட்டுகிறாய்., இது நியாயமா ?'

  பேயோ பெருந்தண் பனிவாடாய் பெண்பிறந்தா
  ரேயோ உனக்குஇங்கு இறைக்குடிகள் நீயோ
  களிபடுமால் யானைக் கடுமான்தேர்க் கிள்ளி
  அளியிடை அற்றம்பார்ப் பாய்.

  (பெருந்தண் - அதிகக் குளிர்ச்சி
  வாடாய் - வாடைக் காற்றே
  பெண் பிறந்தாரேயோ - பெண்ணாகப் பிறந்தவர்கள்தானா
  இறை - வரிப்பணம்
  கடுமான் - வேகமாக ஓடும் குதிரை
  அளியிடை - அருள் செய்வதற்கு முன்பாக
  அற்றம் - தளர்ச்சி / மெலிவு / இடைவெளி)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |