அக்டோபர் 7 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
முத்தொள்ளாயிரம்
சமையல்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
திரைவிமர்சனம்
பெண்ணோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  நாங்க ரெடி நீங்க ரெடியா ? : மாற்ற விரும்பும் சம்பவம்
  -
  | Printable version |

  இனி வரும் வாரங்களில், ஒவ்வொரு வாரமும் நமக்கு கடிதம் எழுதும் வாசகர்களில் சிலரை தேர்ந்தெடுத்து ஒரு கேள்வி கேட்போம். அதற்கு வாசகர்கள் தங்கள் பதிலை (தமிழில்) சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதி அனுப்பலாம். கேள்வியை அனுப்பினால் கண்டிப்பாக பதில் அனுப்பியாக வேண்டுமென்பதில்லை. (முடியவில்லை என்று ஒரு வரி பதில் போட்டால் போதும். அதுவும் முடியவில்லையென்றால் பரவாயில்லை)

  இது வரை கடிதம் எதுவும் எழுதவில்லை ஆனால் இதில் கலந்து கொள்ள விருப்பமா? உங்கள் ஆர்வத்திற்கு எங்கள் நன்றி. உடனே feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு உங்கள் விருப்பத்தை தெரிவித்து ஒரு வரி போடுங்கள். வரும் வாரங்களில் உங்களையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்கிறோம்.

  பதிலை அனுப்பும் போது உங்கள் (சமீபத்திய) புகைப்படத்துடன் அனுப்பினால் ரொம்ப சந்தோஷம்!

  இதோ இந்த வார கேள்வி.

  உங்கள் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை மாற்ற சந்தர்ப்பம் கிடைத்தால் எதை மாற்றுவீர்கள் ?


  - ரா.சுப்புலட்சுமி

  ரொம்ப சின்ன வயசுல நடந்துச்சு இந்த சம்பவம். எங்க பக்கத்து வீட்டுல ஒரு அழகான அக்கா இருந்துச்சு. பேரு.......சாந்தினு வைச்சுக்குவோம். ஒரு நா அந்த அக்கா என்ன கூப்பிட்டு, " உன் ப்ரண்டு நளினி இருக்கா இல்ல..அவ அண்ணன் சேகர் கிட்ட நான் குடுத்தேன்னு இந்த கடுதாச குடுக்கிறயா...உனக்கு ஆரஞ்சு மிட்டாய் கை நிறைய தர்றேன்"னு சொல்லிச்சு. எனக்கு ஆரஞ்சு மிட்டாய்னா அவ்ளோ உசுரு. நான் மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு கடுதாசு வாங்கின்னு ஒரே ஒட்டமா ஒடினேன்.

  அப்பதான் நளினி வந்தா, "என்ன இவ்ளோ ஒட்டமா ஒடியாரே..என்ன உன் கையிலே"ன்னு கேட்டா.  நான் "உன் அண்ணனுக்கு தான்...கடுதாசு..அந்த சாந்தி அக்கா குடுக்க சொல்லிச்சு..". அதுக்கு அவ, "  நேத்துதான் என்கிட்ட ஒண்ணு தந்துச்சு அந்த அக்கா..அதுக்குள்ள இன்னுஓண்ணா..?". நாங்க பேசிகிட்டே இருக்கும்போது, அவ அம்மா வந்துட்டாங்க. " என்ன..கடுதாசுனு என்னமோ பேசிகிட்டு இருக்கே....என்னது அது...?" என் கையில் உள்ளதைப் பார்த்து கேட்டாங்க.

  நானும் தெரியாத்தனமா, "சேகர் அண்ணனுக்குத்தான் அத்த, அந்த எருமட்டைகாரங்க வீட்டு சாந்தி அக்கா குடுக்கச் சொன்னங்க"னு சொல்லிட்டு அவங்க கிட்ட குடுத்தேன். வாங்கி படிச்சு பாத்துட்டு, " என்ன திமிருடி அவளுக்கு...? என்ன தெர்யமிருந்தா என் புள்ளைக்கே கடுதாசு குடுத்து மயக்குவா அவ ?...இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பார்க்கமா விட மாட்டேன்"னு வரிஞ்சு கிட்டு போனங்க.

  O

  சில வருடங்களுக்கு முன் சாந்தி அக்காளைப் பார்த்தேன். உடம்பெல்லாம் சுருங்கி தலையெல்லாம் நரைத்து அடையாளம் தெரியாமல் போயிருந்தாள். என்னை அடையாளம் தெரியவில்லை அவளுக்கு, நான் சொல்லி புரிய வைத்தவுடன், முகம் மலர சினேகத்துடன் சிரித்தாள்.

  சேகருடனான அவளுடைய முதல் காதல் அன்று முறிந்தது. அவர் அம்மா போட்ட சண்டையால் அவமானம் தாங்க முடியாமல் அவர்கள் வீட்டை காலிச் செய்து வேறு ஊருக்கு போனார்கள். அவள் அப்பா உடனேயே சொந்தத்திலேயே ஒரு மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம் முடித்து வைத்தார்.

  "அது சரிப்பட்டு வரல்லே. அவருக்கு என்னை சுத்தமா புடிக்கல. ரெண்டாவது வருசமே என்னை விட்டு போய்ட்டார். நான் எருமட்டை வித்து, பஜ்ஜிப் போட்டு எங்க அப்பா அம்மா கூடவே காலத்தே ஓட்டிட்டேன்."

  "சேகர் அண்ணன் எப்படியிருக்கார்...?"

  "ஓ.....உனக்கு அப்ப விசயமே தெரியாதா....? எனக்கு கல்யாணம் முடிஞ்ச மறு நா, அவங்க வீட்டு உத்தரத்தில தொங்கிட்டு மவராசனா போய் சேர்ந்துட்டார்..... நாந்தான் பூமிக்கு பாரமா இன்னும் இருக்கேன்..."

  பீறிட்டு வந்த கண்ணீரை அடக்க முடியவில்லை என்னால்.

  நான் மட்டும் அன்று அந்த கடிதத்தை சேகர் அண்ணனிடமே கொடுத்து இருந்தால்...?


  - மூர்த்தி

  மாற்ற நினைத்தால் நிறைய இருக்கின்றன. பசி, பட்டினி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். மொத்தத்தில் உலகத்தையே புதிதாக மாற்றியமைக்கத்தான் வேண்டும். என்றாலும் இங்கு  ஒன்றே ஒன்றைத்தான் கூற வேண்டுமென்பதால் இதோ:

  இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. அப்போது எனக்கு மூன்று வயது. வருடம் 1974. தீபாவளி முடிந்த ஒரு சில நாள்தான் ஆகி இருக்கும். பலகாரம் தின்று கொண்டிருந்தேன். கடும் புயல் காற்று. மரங்கள் தரையைத் தொடுமளவுக்கு வளைந்து நிமிர்ந்தன. கடுமையான மழை. வெள்ளிக்கம்பியாய் மழைநீர் எம் கூரையைக் கிழித்துக் கொண்டு வீட்டிற்குள் இறங்கியது. தட்டு, அண்டா, குண்டா எல்லாம் எடுத்து வீட்டிற்குள் ஒழுகிய மழைநீரைத் தடுத்தார் அம்மா.

  மின்னல் மின்ன  இடி இடிக்க இன்னும் ஆக்ரோசமான மழை! பக்கத்தில் இருந்த மாமரம்  வீட்டின் மீது விழ ஏற்கெனவே ஈரமாகியிருந்த சுவர் சரியத் தொடங்கியது. சரிந்ததைத் தாங்கிப்பிடிக்க அப்பா முயல அம்மாவும் உதவினார். அப்படியும்  முடியாமல் அம்மா மேல் சுவர் சரிய அம்மா துள்ளி விலகினார். அப்பாவின் மோதிரம் சுவரோடு போய்விட்டது. கூரையும் சரிய எல்லோரும் வெளியே ஓடிவந்து தப்பித்தோம். புயல் விளையாடிக் களைத்தது.

  அதன்பின் காலச்சக்கரம் உருண்டோடியது. 1979ம் வருடம். எனக்கு 8வயது. எனது 4 வயது தங்கை விளையாடிக் கொண்டிருந்தாள். அம்மா என் தம்பியை வயிற்றில் சுமந்து தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தார் மகபேற்றுக்காக! மீண்டும் அதே போன்ற இடி, மின்னல் பெருமழை! நானும் தங்கையும் அழத்தொடங்கினோம். அப்பாவும் பாட்டியும் ஆளுக்கொருவராய்க் கட்டியணைத்து ஆறுதல் சொன்னார்கள். கிருஷ்ணா கிருஷ்ணாவென பாட்டி  இறைவனைத் துணைக்கு அழைத்தார். சிறிது நேரத்தில் இருவரும் தூங்கிப் போனோம். ஆனால் சற்று நேரத்தில் வந்த தந்தி அமைதியைக் கிழித்தது. தம்பியையும் அம்மாவையும் காப்பாற்ற முடியவில்லையாம். மாமா தந்தி கொடுத்திருந்தார். இம்முறை புயல் அம்மாவோடும் தம்பியோடும் கரையைக் கடந்தது.

  என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை மாற்ற சந்தர்ப்பம் கிடைத்தால் நான் இறந்து அம்மாவையும் தம்பியையும் பிழைக்க வைப்பேன்.


  - 'சுபமூகா'

  வில்லங்கமான கேள்வி. நான் என் தர்மப்பத்தினியின் கழுத்தில் தட்டுத் தடுமாறி மூன்று முடிச்சுகள்
  போட்ட அந்தத் தருணம் என்று நான் சொல்லி அகப்பட்டுக் கொள்வேன் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். அப்படி சொன்னாலும் கூட, தட்டுத் தடுமாறாமல் முடிச்சுகள் போட அந்த சம்பவத்தை மாற்றுவேன் என்று மாற்றி விடுவேன்! இதே கேள்வியை என் 'வெகுமதி' இடம் கேட்டிருந்தால், 'சம்பவம் மாத்திரம் மாத்தணுமா? ஆளை மாத்த சான்ஸ் இல்லியா?' என்றிருப்பார்! அவரவருக்கு ஒரு சோகக் கதை!

  ம்ம்.. எதை மாற்றலாம்? பிறந்த அந்தத் தருணத்தையே மாற்றியிருந்தால் இந்த மாதிரி கேள்விக்கெல்லாம் [இது எப்படி இருக்கு?!] பதில் சொல்ல வேண்டியிருக்காது!

  கம்ப்யூட்டர் கனவுகள் பலிக்காமல் ஒரு Travel Agency இல் ஒரு சாதாரண தொழிலாளி ஆன அந்த நேரத்தை சொல்லலாமா? கிடைக்காத விஷயத்தை நினைத்துக் கொண்டு, கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை ஏன் நழுவ விடுவது
  என்று அருமையான முடிவு எடுத்த தருணம் அல்லவா அது!

  இலண்டனில் ஒரு அருமையான அலுவலகத்தில் இருந்து இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு Telephone Operator ஆக என் பயணம் தொடங்கியது. தொடர்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்த உழைப்பில் இன்று கணினி உலகில் உலாவிக் கொண்டிருக்கிறேன். கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் திரைப்படத்தில் இதே மாதிரி ஒரு காட்சி
  வரும். என் கண்கள் கலங்கிப் போகும்.

  சம்பவங்களை எதற்கு நாம் மாற்ற ஆசைப் பட வேண்டும்? அது பாட்டுக்கும் அது நடக்கட்டும். அது நம்மை எந்த விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாக்கட்டும்! நம் தொடர்ந்த விடா முயற்சி இருக்கிற வரை நமக்கு என்றும் நல்லதே நடக்கும். இது என் வாழ்வு எனக்களித்த அருமையான தீர்ப்பு!

  சரி தானே அன்பர்களே!!


  - சித்ரன்

  இந்தக் கேள்வி மிகப் பர்சனலாக இருப்பதாக ஒரு பட்சி சொல்லுகிறது. வாழ்வில் நடக்கிற ஒரு சில சம்பவங்கள் எல்லோரிடமும் சொல்லிக் கொள்கிறபடி இருக்காது என்பதாலேயே அப்படித் தோன்றுகிறது. அது நல்லதோ கெட்டதோ எப்படி இருந்தாலும். ஆனாலும் இந்தக் கேள்வி கடந்தகால வாழ்க்கை  எல்லாவற்றையும் புரட்டிப் போட்ட மாதிரிகூட இருக்கிறது. இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்கிற உந்துதலில் நிறைய மனக் கிளறல்கள் நடந்தன. சர் என்று டைம் மெஷினில் ஏறி பழசுகளுக்கு மனம் ஒரு டூர் அடித்துவிட்டு வந்தது. எத்தனை நிகழ்வுகள்!! நினைவு தெரிந்த நாளிலிருந்து தொடங்கி வலம் வந்தால் இத்தனை அனுபவங்களா என்று புருவம் உயர்கிறது. கொஞ்சம் கவனமாய் திரைக்கதை அமைத்தால் ஒரு சில சம்பங்களை வைத்து ஒண்ணரை மணி நேரத்திரைப்படமோ அல்லது டெலி·பிலிம் அல்லது மக்களை அதிகம் வருத்தாத டாக்குமெண்ட்ரி இப்படி ஏதாவது எடுக்கலாமென்று தோன்றுகிறது.

  வாழ்வில் நல்ல சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன. அவைகளெல்லாம் அந்தந்த பொழுதுகளில் உளமகிழ்வைக் கொடுத்தன என்பதால் அவைகளில் ஒன்றை மாற்றி அமைக்கிற அபத்தத்தை செய்யவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். அப்படி அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். அப்படியெனில் கெட்ட சம்பவங்களில் ஏதாவது ஒன்றைத்தான் தேர்ந்தெடுத்து மாற்ற வேண்டுமா? நல்லது! கெட்டதாய் நடந்தது என்னென்ன என்று அப்படியே கடந்த காலத்துக்கு ட்ராக் பிடித்துப் போனால் மனசு கனத்து விடுகிறது. (எதுக்கு இப்படியெல்லாம் கேள்வி கேக்கறீங்க சார்?). மணிகண்டன் என்று நண்பன் ஒருவன் இருந்தான். படிப்பின் இறுதி வருடத்தில், என்னுடைய ஆட்டோகிரா·ப் நோட்டில், 'சைக்கிள் ஓட்டும்போது பாத்து ஓட்டு' என்றெல்லாம் அட்வைஸாய் என்னன்னமோ எழுதித் தந்தவன் சைக்கிளில் போகும்போது ஒரு லாரியில் அடிபட்டு இறந்தான். (அந்த லாரியின் முகப்பில் "நல்லன எல்லாம் தரும்" என்று எழுதப்பட்டிருந்தது) யோசித்ததும் உடனடியாக இந்த ஞாபகம் வந்ததிலிருந்தே அது என் மனதில் எத்தனை ஆழப்பதிந்திருக்கிறதென்பதை உணர்கிறேன். இதை மாற்றலாமா?

  அல்லது இதே மாதிரி இன்னுமொரு சம்பவம்! என் மனைவியின் பெரியப்பா மகனுக்கு ஏற்பட்டது. ஒகேனக்கல் அருவியில் நண்பர்களோடு குளிக்கப் போனவன் சுழலில் சிக்கி... இரண்டு நாட்கள் கழித்து எடுத்தார்கள். செய்தி கேட்டு அதிர்ச்சியாகி பெரியப்பாவும் மாரடைப்பு ஏற்பட்டு அப்போதே... சரி வேண்டாம். கொடுமை! இதை மாற்றுகிற சந்தர்ப்பம் கிடைத்தது என்றே வைத்துக் கொள்வோம். க்ளைமாக்ஸை எப்படி முடிக்கலாம்? "அருவியில் சிக்கின அவனுக்கு அதிர்ஷ்டவசமாக கையில் ஒரு மரக்கிளை அல்லது ஒரு பாறை கிடைக்க சட்டென்று அதைப் பிடித்து மேலேறினான்." என்று சிம்பிளாக எழுதிவிடட்டுமா? சுபம்! இரண்டு உடல்களை பக்கம்பக்கமாகப் புதைத்த அந்த நடுராத்திரிக் குளிர் நினைவுகளை வேண்டுமானால் "அழி லப்பர்" வைத்து மாய்த்துவிடலாம். மறுபடி சொல்கிறேன். இந்தக் கேள்வி மிகப் பர்சனலாகவும் ப்ளாஷ்பேக்குகளைக் கிளறுவதாகவும் இருக்கிறது. இதற்கு நான் பதில் சொல்லப் போவதில்லை. என்னை என்ன பண்ணச் சொல்கிறீர்கள்? நான் ஆசையாய் வளர்த்த பூனைக்குட்டி அந்த மகாப் பெரிய கிணற்றின் மேல் குறுக்காகப் போட்டிருந்த நீளமான பனை மரத் துண்டின்மீதேறி அப்புறம் பாலன்ஸ் தவறி கிணற்றுக்குள் விழுந்ததைப் பார்த்துக்கொண்டுதானே இருக்க முடிந்தது. அப்புறம் இறந்த அதை பக்கெட் வைத்து எடுத்து எங்கோ புதைத்தோம். இது மாதிரி ஒரு சில நினைத்தாலே கசக்கும் சம்பவங்களை மாற்ற விருப்பம்.

  நிறைய கெட்ட செய்தியாய் சொல்லிவிட்டேனா? மன்னிக்கவும். யாரையும் சோகத்தில் ஆழ்த்துகிற நோக்கமில்லை. இதே கேள்வி முன்பு ஒரு தரம் ஒரு பத்திரிகைப் பேட்டியில் ஒரு பிரபலத்திடம் கேட்கப்பட்டபோது (நீங்கள் மாற்ற நினைக்கிற ஒரு சரித்திரச் சம்பவம் எது?) இந்திராகாந்தியின் மரணம் என்று பதிலளித்ததாய்ப் படித்திருக்கிறேன். இதுகூடப் பாருங்கள் கெட்ட செய்திதான். கெட்டதை நல்லதாக மாற்றுகிற எண்ணம் பிரபலத்துக்கு இருக்கிறதென்பதைக் கவனிக்க. போன சுதந்திர தின சிறப்பிதழாய் வெளிவந்த Out Look வார இதழில் எல்லா கட்டுரைகளுக்கும்கூட இந்த மாதிரிதான் தலைப்பு கொடுத்திருந்தார்கள். (படித்தவர்கள் விளக்கமாய் வலைப்பதியலாம்.) 'கோட்ஸே-யின் தோட்டாக்கள் மகாத்மாவைத் தவறவிட்டிருந்தால் என்னவாயிருக்கும்? ராஜீவ் படுகொலை நடக்காமலிருந்திருந்தால் என்னவாயிருக்கும்?' இது மாதிரி If... If என்று ஆரம்பித்து நிறைய கேள்விகள். அதிகம் நினைவில்லை. இவைகளும்கூட சம்பவங்களை மாற்றி அமைக்கிற கையாலாகாத விருப்பத்தின் காரணமாக எழுபவைதானே? என்னமோ போங்கள்.

  என் பாட்டி இறப்பதற்கு பத்து நாட்கள் முன்பு எனக்கு மகன் பிறந்தான். அவனை ஒரு முறையாவது கண்ணால் பார்த்துவிடவேண்டும் என்று கிழவிக்கு ஆசையிருந்தது. நான் எடுத்துக்கொண்டுபோய் காட்டுவதற்குள்... ம்ஹ¥ம். அது நிறைவேறவில்லை. அந்த சம்பவத்தைத்தான் மாற்றப்போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். அங்கிருந்து இன்னும் கொஞ்சம் பின்னுக்குப் போய் என் பாட்டி நான்கு வருடங்கள் படுத்தபடுக்கையாகி மரிக்க நேரிட்டதற்கு மூல காரணமான அந்த பாத்ரூம் வழுக்கல் சம்பவத்தை மாற்ற இப்போதைக்கு ஆசைப்படுகிறேன். (நிறைய பின்னணிக் காரணங்களுடன்.)

  பின்னொரு நாளில் இன்னும் கொஞ்சம் வரங்கள் கிடைத்தால் செளகரியம்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |