Tamiloviam
அக்டோபர் 11 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : ஆண்கள் உரிமை பாதுகாப்பு சங்கம்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| | Printable version | URL |

ஆண்களின் உரிமைகளை பாதுகாக்கவும், ஆண்களை நியாயம் இல்லாமல் தண்டிக்கும், பெண்களிடம் இருந்து பாதுகாக்கவும் ஆண்கள் உரிமை பாதுகாப்பு சங்கம் என்ற புதிய சங்கம் சென்னையில் துவக்கப்பட்டுள்ளது. முதலில் தமிழகம் முழுவதும் கிளைகளை தொடங்க, முழு வீச்சில் இந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்கள் பாதுகாப்பு சங்கம் துவக்கப்பட்டது தான் தாமதம். ஆண்கள் அடித்தப் பிடித்து ஆர்வத்துடன் இச்சங்கத்தில் தங்களை சேர்த்து கொண்டு வருகிறார்களாம். அதே போல் உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழக ஆண்களும் இச்சங்கத்தில் தங்களை சேர்த்துக் கொள்ளும் படி கோரிக்கைகளையும், தொலைபேசியில் பேசி சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்ளுவோரும் அதிகரித்து வருகிறார்களாம். இதனால் தங்களின் இச்சங்கம் அகில இந்தியாவையும் தாண்டி, உலகம் முழுவதும் கிளை பரப்பி, பிடிக்க முடியாததை எல்லாம் பிடிக்கும் என இச்சங்கத்தை சேர்ந்தவர்கள் பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். இச் சங்கம் குறித்து மாண்புமிகு பொது ஜன திருவாளர்களிடம் கருத்து கேட்ட பொழுது......

எழுமலையான் (அரசு ஊழியர்) :  நாட்டுல யாருக்கு புண்ணியம் கிடைக்குதோ, இல்லையோ ஆண்கள் உரிமை பாதுகாப்பு சங்கத்தை ஆரம்பித்த புண்ணியவான்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். அவங்களுடைய இரண்டு காலையும்  தூக்கி அதில் இருக்கும் செருப்பை கழற்றி விட்டு, அந்த பாதத்தை அப்படியே கண்ணுல ஒத்திக்கணும் போல இருக்கு. பெண்கள் முன்பு மாதிரி இல்லை. சின்ன உதாரணம், அப்துல்கலாம் என்ற ஆண் ஜனாதிபதியாக இருந்த பொழுது, அவரால் எந்தப் பிரச்சினையும், சர்ச்சையும் இல்லாம வாழ்க்கையை ஓட்டிட்டு வந்துவிட்டார். ஆனால் புதிதாக பதவிக்கு வந்த பிரதீபா பட்டீலைப் பாருங்கள். அரசு அலுவலகங்களுக்கும், வெளிநாட்டு தூதரகங்களுக்கும் அவரது ஒரு படத்தை எடுத்து அனுப்ப 200 போட்டோ எடுத்து அதில் எது பெஸ்ட்னு பிரதீபா சொன்ன படத்தைத் மட்டும்  அனுப்பி இருக்காங்க. இது என்ன கொடுமைனு பாருங்க. ஒரு போட்டோவுக்கு 199 போட்டோ எடுக்க வேண்டி இருக்குது. இப்பொழுது எல்லாம் வீட்டில் பெண்களிடம் ஒரு வேலை சொன்னால் ஏன்? எதுக்குனு நியூட்டன் மாதிரி கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகின்றனர். முன்பு எல்லாம் ஆண்கள் தான் பெண்களை ஏமாத்தி திரிந்தார்கள். ஆனால் காலம் மாறிப் போச்சு. ஹெல்மேட் போட்டுக்கிட்டு வந்து பெண் ஒருவர் கொள்ளை அடிக்கிறார். தேனிலவுக்கு கணவனோடு போய், கணவனையே ஒரு பெண் கொலை செய்கிறார். மொத்தத்தில் சிவகாசி ஜெயலட்சுமியில இருந்து நடிகை பத்மா வரை பெண்கள் படு கெட்டியாக இருக்கிறார்கள். குடும்ப பிரச்சினையில பெண்களை லேசா ஒரு தட்டு தட்டினாலும் மகளிர் போலீஸ் ஸ்டேசனை பார்த்து நடையை கட்டி விடுகின்றனர். கணவன் அடித்தான், மாமியார் தூண்டிவிட்டாள், மாமனார் வேடிக்கை பார்த்தார் கொழுந்தனார் பிரச்சினையை கொழுத்திப் போட்டார் என்று கண்ணை கசக்கிக் கொண்டு புகார் கொடுத்து விடுகின்றனர். போலீஸாரும் யார் பக்கம் நியாயம், அநியாயம் இருக்குது என்று விசாரனை எதுவும் பண்ணாமல் குடும்பத்தையே கைது செய்து உள்ளே தள்ளி விடுகின்றனர். இந்த மாதிரி ஆண்களுக்கு பெண்களால், மனைவிகளால் ஏற்படும் பிரச்சினைக்கு இந்த சங்கம் உதவி செய்து ஆண்களின் தன்மானம் காக்க வளர வேண்டும். 
  
ஆனந்தி (பள்ளி மேலாளர்) :  ஆண் வேறு, பெண் வேறு என்பது மாற்ற முடியாத ஒரு நியதி. ஆனால் ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இங்கு வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை, இருப்பதற்கு சாத்தியங்களும் குறைவாகவே உள்ளது. அப்படிப்பட்ட சாத்தியக் கூறுகளை உருவாக்கியவர்களும், உருவாக்க முயற்சி செய்பவர்களும் தோல்வியை பரிசாக பெற்று இருக்கிறார்கள். ஆண்களால் பெண்களுக்கு வாழ் நாள் முழுவதும் துன்பமே என்று சொல்வது எவ்வளவு பொருத்தமற்றதோ, அதே போல் பெண்களால் ஆண்களுக்கு வாழ்நாள் முழுவதும் துன்பம் என்ற வாதம். ஆண்கள் பாதுகாப்பு சங்கம் தேவையற்றது என பெண்கள் அமைப்புக்கள் கருத்து சொல்லி இருந்தாலும், அது தேவை எனச் சொல்லி அதனை ஆரம்பித்து இருக்கிறார்கள். அந்த சங்கம் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால் ஆண்களுக்கு பல சலுகைகளை பெற்றுத் தர வாய்ப்புகள் இருக்கிறது. உதாரணமாக மேலை நாடுகளில் மனைவிகளுக்கு, அவர்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது பேறுகால விடுமுறை இருக்கிறது. அதே விடுமுறை ஆண்களுக்கும் அங்கு உண்டு. ஆனால் இந்தியாவில் அந்த மாதிரியான சலுகை பெண்களுக்கு மட்டுமே இருக்கிறது. ஆண்களுக்கு கிடையாது. அது போன்ற சலுகையை பெற அச்சங்கம் முயற்சிக்கலாம். இது போல் பல ஆக்கப்பூர்வமான செயல்களை அச்சங்கம் செய்தால் நல்லது தானே.

தியாகு (கல்லூரி மாணவர்) :  ஆண்கள் கடந்த தலைமுறையில் கடைபிடித்த கொள்கைகளை தற்பொழுது எல்லாம் கைவிட்டு விட்டார்கள். பெண்களை அனுசரித்து, விட்டுக் கொடுத்து போக ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. பெண்கள் தங்களுக்கு கிடைக்கும்  அதிகாரத்தை அப்படியே காங்கிரட் போட்டு அதை எல்லையில்லாத கோபுரமாக கட்டி விட நினைக்கிறார்கள். சமீபத்தில் வந்த உன்னாலே உன்னாலே என்ற ஒரு திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். பெண்கள் அகராதியில ஒவ்வொன்னுக்கும் ஒரு அர்த்தம் இருக்குது.  ஒரு பொண்ணு சரினு சொன்னால் வேண்டாம் யோசினு அர்த்தம்,  5 நிமிடம் வெயிட் பண்ணச் சொன்னால் அரை மணி நேரம் ஆகும் வேற வேலை இருந்தா போய் பாருனு அர்த்தம், உன் இ~;டம் அப்படினு சொன்னால், நீ சொல்றதை கேட்க மாட்டியானு அர்த்தம், அதுவே புருவத்தை உயர்த்திச் சொன்னால் சொல்லச் சொல்ல கேட்கவே மாட்டியானு அர்த்தம். பரவாயில்லைனு சொன்னா, நீ ஒரு நாள் என்கிட்ட வந்து வசமா மாட்டுவ, அப்ப வச்சுக்கிடதேனு அர்த்தம். தேங்ஸ்னு சொன்னா நீ பண்ணுன உருப்படாத வேலைக்கு இதுவே சாஸ்தினு அர்த்தம் என்று ஒரு காட்சியில் வசனமா வரும். இந்த வசனம் நூற்றுக்கு நூறு உண்மை. ஆண்கள் உள்ளே ஒன்றை நினைத்துக் கொண்டு, வெளியில வேறு ஒன்றை பேச மாட்டார்கள். ஆனால் பெண்கள் இதற்கு எதிர்மறையாக இருப்பார்கள். பெண் பாவம் பொல்லாததுனு சொல்வாங்க. இப்ப ஆண் பாவம் தான் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெண்களுக்கு என்று எத்தனையோ மகளிர் அமைப்புக்கள் இருக்கும் பொழுது ஆண்களுக்கு என்று ஒரு தனியாக பாதுகாப்பு சங்கம் இருப்பதில் எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை. குடும்ப வாழ்க்கையில பெண்களுக்கு சமூகப் பாதுகாப்பு, சமூக அந்தஸ்து என்பது எவ்வளவு முக்கியமோ அதே முக்கியத்துவம் ஆண்களுக்கும் முக்கியம் தான்.
 
சந்திரா (டெல்லி ஹவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியை) :  மனித இனங்கள் முன்பு வாழ்ந்த காலத்திலிருந்து இன்றைய காலக்கட்டம் வரை சூழ்நிலைகள் எப்படி மாறி வருகிறது என பார்த்தீர்களா? பெண்களுக்கு சுதந்திரம், பெண்களுக்கு உரிமை என்று ஒலித்த குரல்கள் அடங்கி, ஆண்களுக்கு உரிமை, பாதுகாப்பு என்று கேட்;கின்ற சூழ்நிலை இன்று உருவாகி விட்டது. ஆண்களின் அதிகாரம் நிறைந்த இன்றைய அனைத்து துறைகளிலும் பெண்கள் நுழையும் பொழுது ஆண்களுக்கு பயம் வருகிறது. இப்பொழுது ஒலித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு விடுதலை என்ற கோ~ம் மறைந்து, ஆண்களுக்கு விடுதலை வேண்டும் என்று போராட வேண்டிய நிலை வந்து விடுமோ என்ற பயத்தின் வெளிப்பாடாக இந்த ஆண்கள் உரிமை பாதுகாப்பு சங்கத்தை சொல்லலாம்.  ஆண்களுக்கு ஒரு சங்கம் என்ற வகையில் இந்த சங்கம் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாது என்பது எனது அடிப்படை கருத்து. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெண்கள் ஒன்று சேர்ந்து, ஒரு சமூக அமைப்பை வழி நடத்த ஆரம்பித்தால் அதில் வெற்றி அடைவர். இது ஆண்களுக்கு பொருந்தாது. அவர்கள் ஒரு சுயநலவாதிகள். சுய வாழ்வுக்கு, சுகத்திற்கு எது தேவையோ அதில் மட்டுமே திறமையாக பணிபுரியக் கூடியவர்கள். விதி விலக்காக சிலர் இருக்கலாம். ஒரு தீ பொறி போல் ஆரம்பித்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள், இன்று மிகப் பெரிய அளவிலான நெட்வொர்க்காக, ஓட்டு வங்கியாக மாறி இருக்கிறது. இதனை ஏன் ஆண்கள் செய்யவில்லை. எத்தனை ஆண்கள் சுய உதவிக் குழுக்கள் இன்று இந்தியாவில் இருக்கிறது? ஆண், பெண் இருவாரில் யார் சிறந்தவர்கள்? கண்டிப்பாக பெண்கள் தான். எந்தப் பெண்களும்  புகை பிடித்து விட்டோ, பீர் அருந்தி விட்டோ அல்லது மது அருந்தி விட்டோ கல்லூரிக்குள் வருவதில்லை. கேளிக்கைகள், ஆடம்பரங்கள் ஆண், பெண்ணிடம் இருந்தாலும் அடிப்படைக் கொள்கையில் அதாவது வாழ்வியல் ஆதாரத்தை உறுதியாக நிலைநிறுத்துவதில் பெண்கள் தான் சிறந்தவர்கள். ராகுல் சாங்கிருத்தியாயன் எழுதிய "வால்கா முதல் கங்கை வரை" என்ற வரலாற்று நூலை படித்தால் ஆணுக்கும், பெண்ணுக்கும் எப்படி, எதனால், ஏன் கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள், ஆதிக்க உணர்வுகள் வந்தது, வருகிறது என்பதை நாம் தீர்மானிக்கலாம். பெண் கொலை செய்கிறாள், கொள்ளை அடிக்கிறாள். ஆட்சியையே பிடிக்கிறாள் என்றால் அது என்ன புதிதாக நடைபெறுகிற அதிசய சம்பவங்களா? அது ஆண்கள் காட்டிய வழி. அதனை சில பெண்கள் கடைபிடித்திருக்கிறார்கள். அவ்வளவு தான், அது எப்படி பெண்களுக்கான வழிகாட்டியாக மாற முடியும்? ஒரு பெண், காவல் நிலையத்தில் கணவனுக்கு எதிராக புகார் செய்யும் பொழுது அங்கு அவளுக்கு முழுமையான நியாயம் கிடைத்து விட வாய்ப்பு கிடையாது. புகார் கொடுக்கச் செல்லும் பெண்ணை காவல் துறையினர் பார்க்கின்ற பார்வை அவ்வளவு அருவருப்பானவை. காவல் துறை ஆண்களின் அதிகாரம் நிறைந்த ஒரு கோட்டை. அந்தக் கோட்டைக்குள் பெண்கள் நுழைந்த உடன் தான் பெண்களுக்கு நேர்மையான நீதிகள் கிடைக்கிறது. மகளிர் காவல் நிலையங்கள் இன்று இல்லாமல் இருந்திருந்தால் ஆண்களின் கோட்டையால் பெரும்பாலான ஆண்கள் காப்பாற்றப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். 

டாக்டர் இளங்கோவன் (சங்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவர்)  : ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் என்பது பெண்களுக்கு எதிரான சங்கம் கிடையாது. இது ஒரு ஆண்களின் உரிமைக்கு குரல் கொடுக்கிற சங்கம். அவ்வளவு தான். இந்த சங்கம் தொடக்கப்பட்ட பொழுது பெண்களும் வந்திருந்து வாழ்த்தினார்கள் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன். இதில் பேசிய பெண்கள் பெண்கள் சட்டத்தை தவறாக பயன்படுத்தி ஆண்களை துன்புறுத்துவதாக ஒப்புக் கொண்டனர். ஒரு பெண் காவல் நிலையத்தில் சென்று 498ஏ பிரிவின் கீழ் புகார் கொடுக்கும் பொழுது புகாரில் கூறப்பட்டுள்ள நபரின் குடும்பமே காவல் நிலையத்திற்கு இழுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு ஒரு சங்கம் தொடங்கப்பட்டு இருக்கிறது என்பதை தெரிந்த உடன் பலர் எங்களை தொடர்பு கொண்டு தங்களின் பிரச்சினைகளை சொல்லி வருகிறார்கள். ஒரு சிலர் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை அழுது கொண்டே சொல்கிறார்கள். அதனை எல்லாம் கேட்கும் பொழுது ஆண்களுக்கு ஒரு அமைப்பு அவசியம் என்பதை உணர்ந்திருக்கிறோம். கண்டிப்பாக இந்த சங்கம் ஆண்களுக்கு ஒரு நல்ல வழி காட்டியாக ஆக்கப்பூர்வமான செயல்களை செய்யும்.

குறிப்பு :

ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தில் சேர நினைப்போர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :-

ஆண்கள் பாதுகாப்பு சங்கம்,
100ஏ, 5 பொன்னம்பலம் சாலை,
கே.கே.நகர்,
சென்னை - 600076.

செல் நம்பர்:-  9381029153, 9385066665

பேக்ஸ் :- 044 24811911

oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |