அக்டோபர் 12 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
இது ஆம்பளைங்க சமாச்சாரம் : துர்நாற்றத்தை தூர வையுங்கள்
- மா சிவகுமார்
Save as PDF | | Printable version | URL |

இது வரை பெண்களுக்கு தனி பத்திரிகை, தனி பிரிவு மற்றும் அவர்கள் பிரச்சனை பற்றி பல பத்திரிகைகள் பிரசுரித்து வந்துள்ளன / வருகின்றன. ஆனால் ஆண்களுக்காக பிரத்யேகமாக ஒரு பகுதி என பெரிய அளவில் இது வரை வந்ததில்லை. அந்த பெரிய குறையை நிவர்த்தி செய்யவே இந்த புதிய பகுதி.

"இது ஆம்பளைங்க சமாச்சாரம்" எழுதுபவர்  திரு. மா சிவகுமார் அவர்கள்.

இதோ இந்த வார சமாச்சாரம் ...


நல்ல வேர்த்து விறு விறுத்து குளிரூட்டப்பட்ட ஒரு அறைக்குள் நுழைந்த நம்முடைய உடலின் வாடை நமக்கே எட்டி விடும். மின்சாரம் நின்று போய், 40 டிகிரி வெயில் அடிக்கும் போது வேர்வையாக ஊற்றும் போது உடலில் நறுமணம் கமழ்கிறதா? உடல் அழுக்கைப் போக்க சோப்பு தேய்த்து குளிக்கிறோம், பல்லில் படியும் அழுக்கைப் போக்க பல் துலக்குகிறோம். எவ்வளவுதான் கவனமாக காலையில் இந்த இரண்டையும் செய்து, சோப்புகளை மாற்றி மாற்றி முயன்றாலும் மாலை வரை துர்நாற்றத்தை தூர வைப்பது சிரமமாகப் போய் விடுகிறது.  என்னுடைய அனுபவத்தில் இந்தத் தொல்லைகளை எப்படி ஒழித்தேன் என்பதைப் பகிர்ந்து கொள்கிறேன். பொருத்தமான இடங்களில் கொடுக்கப்பட்ட சுட்டிகளைப் பின் தொடர்ந்து மேல் விபரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Bad Breathவழக்கமாக பல்லுக்கும் தோலுக்கும் செய்யும் சேவைகளுடன் கூடவே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். வயிற்றில் என்ன இருக்கிறதோ அவையும் இந்த இரண்டையும் பாதிக்கின்றன. ஆங்கிலத்தில் வாய் துர்நாற்றத்தை bad breath (மோசமான சுவாசம்) என்று குறிப்பிடுகிறார்கள். வயிற்றில் கழிவுகள் மக்கிப் போயிருந்தால் (கந்தகப் பொருட்கள்) அதைத் தொட்டு காற்று வாய் வழியாக வரும்போது அந்த நாற்றத்தையும் எடுத்து வருகிறது. உடலெங்கும் சுற்றி வரும் ரத்தத்தில் கழிவுகள் கலந்தால் வேர்வையில் துர்நாற்றம் புகுந்து மேல்தோலுக்கும், வாய்க்கும் வந்து விடுகிறது.

உடலுக்கு வாசநீக்கிகள் (deodarant), வாய்க்கு வாய்மணமூட்டிகள் (mouth fresheners) பயன்படுத்தினாலும் அவற்றின் தாக்கம் மேலோட்டமாகவே இருப்பதால் உள்ளே இருந்து வரும் இயல்பான நாற்றத்தை கட்டுப்படுத்துவது முடியவில்லை.

  1. காலையில் வெறும் வயிற்றில் இரண்டு மூன்று தம்ளர் இளஞ்சூடான நீர் குடிப்பதன் மூலம் வேலைக்குக் கிளம்பும் முன் வயிற்றுக் கழிவுகளை ஓரிரு முறைகளில் முற்றிலும் வெளியேற்றி விடலாம். காலையில் எழுவதற்கும் வேலைக்கு கிளம்புவதற்கும் இரண்டு மூன்று மணி நேரமாவது இருந்தால்தான் இது சாத்தியம். இல்லையென்றால் திண்டாட்டம்தான். முடிந்தால் நன்றாக வியர்க்கும் வரை உடற்பயிற்சி செய்வதும் நல்லது.
  2. அழுக்கான சட்டை, பேன்ட் போட்டாலும் உள்ளாடைகள், காலுறைகளை இரண்டாவது நாள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக காலுறைகளை ஒரு நாள் அணிந்த பிறகு துவைத்து விட வேண்டும்.
  3. தினமும் ஷூஸ் அணியும் வழக்கம் இருந்தால், குறைந்தது இரண்டு சோடி காலணிகளை பயன்படுத்த வேண்டும். ஒரே காலணியை ஆறு நாளும் தொடர்ந்து அணிந்தால், காலணி உறிந்து கொள்ளும் வியர்வை முற்றிலும் வெளியேற இடைவெளி இல்லாமல் துர்நாற்றம் உருவாக ஆரம்பிப்பதோடு காலணியும் சீக்கிரம் கெட்டுப் போய் விடும்.
  4. சாப்பிட்ட பிறகு நன்றாகக் கொப்பளித்து விடும் நமது நல்ல பழக்கம் பல் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகிறது. முடிந்த வரை சாப்பாட்டு வேளையைத் தள்ளிப் போட்டு வெறும் வயிற்றோடு இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மதியம் சாப்பிடவில்லை என்றால் நான்கு மணிக்கெல்லாம் வயிற்றின் உள்வாசனைகள் எல்லாம் வாய் வழியே வெளிவர ஆரம்பித்து விடுகின்றன.
  5. நாள் முழுவதுமே சரியான இடைவெளிகளில் போதுமான தண்ணீர் குடிப்பது வாயில் சேரும் நுண்கிருமிகளை அகற்றி வயிற்றையும் ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். வறண்ட வாயும், வெறும் வயிறும் நாற்றத்தை உருவாக்கக் காரணமாகி விடுகின்றன.
  6. விவகாரமான உணவு வகைகள் (பூண்டு, மாமிச உணவு, வெங்காயம், பாலாடைக்கட்டி போன்றவை) செரிக்கும் போது கந்தகப் பொருட்கள் உருவாவது அதிகமாக இருப்பதால், அத்தகைய நாட்களில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
| | | |
oooOooo
                         
 
மா சிவகுமார் அவர்களின் இதர படைப்புகள்.   இது ஆம்பளைங்க சமாச்சாரம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |